தமிழர்களின் அடையாளத்தைக் காத்து வைத்துக் கொண்டிருக்கின்ற பெட்டகமே சங்க இலக்கியங்கள். சங்க இலக்கிய காலத்தில் நிலவிய வேட்டைநிலை, உணவு பயிரிடும் நிலை, பண்டமாற்று மூலம் வாணிப நிலை ஆகியவற்றைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய திணைகளில் காண முடிகிறது. உலக இலக்கியங்களில் நடப்பியம் சார்ந்த முதல் இலக்கியம் சங்க இலக்கியமாகத்தான் இருக்க வாய்ப்புண்டு என்பர் ஆய்வர். இயற்கையின் எழில் காட்சியையும், இயற்கையுடன் இயைந்த வாழ்வு வாழ்ந்த மாந்தரின் பெருமையையும், மனிதகுலத் தோற்றத்துக்கும், செழுமைக்கும், நிலைத்தன்மைக்கும் ஆணிவேரான அன்பையும் காதலையும், பல்லுயிர்க்கும் இரங்கும் பாச மனதையும், மனிதகுலம் போர்க்காயம் படாமல் பூவாசத்தை மட்டுமே நுகரவேண்டும் என்ற கவிஞர்களின் குரலையும் நமக்கு அறிவிக்கிற இலக்கிய வரலாற்று ஆவணமாகத் திகழ்வது சங்க இலக்கியமே.
சங்ககாலப் பெண்டிர்
மனமொத்த கிழவனும் கிழத்தியும் கருத்தொருமித்து ஆதரவுபட்ட இன்பத்தைப் பண்டைய தமிழர் ஊக்குவித்தனர். தலைவிக்குத் துணையாக இருக்கும் தோழி அவளுடைய காதலுக்குத் தூதாக மட்டுமின்றி, விரைவில் காதலர்களின் திருமணத்தை நடத்தச் செவிலியிடமோ தாய் தந்தையரிடமோ எடுத்துரைத்து முனைந்த காட்சிகளைச் சங்க இலக்கியம் பதிவு செய்திருக்கிறது. உடன்போக்கு செல்வதை வெறுக்காமல் வாழ்த்திய நெஞ்சங்களைக் காட்டும் வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது கலித்தொகை.
வீட்டைத் துறந்து தலைவனோடு சென்று விடுகிறாள் தலைவி. தேடி வருகிறாள் செவிலி. எதிர்வரும் அந்தணரிடம் என் மகள் பிற ஆடவன் ஒருவருடன் சென்றதைக் கண்டீர்களா எனக் கேட்கிறார்.
‘என்மகள் ஒருத்தியும் பிறன்மகன் ஒருவனும்
தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர்
அன்னர் இருவரைக் காணீரோ பெரும”
எனக் கேட்கும் செவிலிக்கு அந்தப் பெரியவர் விடை சொல்கிறார் இப்படி.
‘ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதாம் என்செய்யும்?
சூழுங்கால் நும்மகள் நுமக்குமாங்கு அனையளே எனவாங்கு
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்
சிறந்தானை வழிபடீச் சென்றனள்
அறந்தலை பிரியா வாறுமற்று அதுவே”1
பலவுறு நறும்சாந்தமும் அதைப் பயன்படுத்துவோர்க்கே பயன்தரும். யாழில் பிறக்கும் இசை கேட்பவர்க்கே பயன்தரும். அதுபோல நும்மகள் சிறந்ததோர் காதலனைத் தேடிச் சென்றனள். அவர்க்கே அவள் உரிமை. எனவே அமைதிகொள் என்கிறார் அவ் ஆன்றோர்.
சங்க காலப் பெண்டிர் வாழ்வைச் சுவைபட வாழ்ந்தனர். காதல் மணம் அனுமதிக்கப்பட்டிருந்தது. பெற்றோர் சம்மதம் கிடைக்காதபோது காதலனுடன் ‘உடன்போக்கு” சென்று கடிமணம் புரிதலும் நிகழ்ந்திருக்கிறது.
கடலில் பெண்டிர் நீந்தி விளையாடிய நிகழ்வை,
‘துறையாடு மகளிர்க்குத் தோட்டினை யாகிய
பொருபுன றரூஉம் போக்கரு மரபின்”2
எனச் சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகிறது. குளங்களில் பாய்ந்து நீராடியதை,
‘நுரைத்தலைக் குரைப்புனல் வரைப்பகம் புகுதொறும்
புனலாடு மகளிர் கதுமெனக் குடைய”3
எனப் பொருநராற்றுப்படை விளக்குகிறது. குறிஞ்சிப்பாட்டும்,
‘அவில்துகில் புரைய மவ்வெள் ளருவித்
தவிர்வில் வேட்கையேந் தண்டா தாடிப்
பளிங்குசொரி வன்ன பாய்சுனை குடைவழி
நளிபடு சிலம்பிற் பாயம் பாடி”4
என மகளிரின் புனல் விளையாட்டை அழகியல் ததும்பப் பாடுகிறது. இசையிலும் நடனத்திலும் சிறந்து விளங்கினர் மகளிர்.
‘கழைபாடு இரங்க பல்லியம் கறங்க
ஆடுமகள் நடந்த கொடும்புரி நோன்கயிற்று”5
என நற்றிணை கூறுவதிலிருந்து மகளிர் கழைக்கயிற்று நடனம் ஆடியது புலனாகிறது.
கொடை
‘ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று” (புறம் 204)
என ஈகையைப் போற்றிய மனிதர் வாழ்ந்த காலம் சங்ககாலம்.
‘செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே”6
எனச் செல்வம் படைத்ததன் பயனே பிறருக்குக் கொடுத்தல்தான் என்பதை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் வலியுறுத்துகிறார்.
‘வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயிலோயே
.....................
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே”7
எனப் பரிசில் தரக் காலம் தாழ்த்திய அதியமான் நெடுமான் அஞ்சியை நோக்கி ஒளவையார் பாடுகிறார். எங்கு செலினும் கொடையுள்ளம் படைத்த மன்னர்களே இருப்பர் என ஒளவையார் கூறுவது அந்தநாள் மன்னர்களின் கொடையுள்ளத்தின் மாண்பைக் காட்டுகிறது.
வறுமையில் வாடிய புலவர்கள் மன்னர்களிடம் திரும்பத் திரும்பச் சென்றாலும் மனங்கோணாது பரிசில் நல்கிய கொடையுள்ளம் படைத்தவர்களைப் புறநானூறு இனம்காட்டி நிற்கிறது. பிட்டங் கொற்றனின் கொடையுள்ளத்தைப் பாடவந்த காரிக்கண்ணனார்,
‘இன்று செலினும் தருமே; சிறுவரை
நின்று செலினும் தருமே; பின்னும்
முன்னே தந்தனென் என்னாது, துன்னி
வைகலும் செலினும் பொய்யலன் ஆகி
யாம் வேண்டியாங்கு எம்வறுங்கலம் நிறைப்போன்”8
என வியந்து பாடுகிறார்.
அதியமானின் கொடையுள்ளத்தை ஒளவையார் பாடும்போது, பலநாட்கள் தொடர்ந்து பரிசில் வேண்டிச் சென்றாலும், பலர் புடைசூழச் சென்றாலும் முதல்நாள் கண்டது போலவே மகிழ்ந்து மனம்கோணாது பரிசில் தருவான் எனப் பாராட்டுகிறார்.
‘ஒருநாள் செல்லலம்; இருநாள் செல்லலம்
பலநாள் பயின்று, பலரொடு செல்லினும்,
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ”9
பரிசில் உறுதி எனப் பாடிப் பரவுகிறார் ஒளவையார்.
வள்ளல் பாரியின் கொடையுள்ளத்தைப் பாட வந்த கபிலர் மழையும் பாரியைப் போல வள்ளல்தானே என முரண்சுவைபடப்,
‘பாரிபாரி என்று பல ஏத்தி
ஒருவற் புகழ்வர், செந்நாப் புலவர்;
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு; ஈண்டு உலகு புரப்பதுவே”10
எனப் பாடி மகிழ்கிறார்.
செல்வமானது நல்ல பண்புடையவர்களிடம்தான் தங்கும். எனவே செல்வந்தர்கள் தன் நிலையிலிருந்து தாழ்ந்து போகாமல் இருக்கும்படி,
‘........................... நாளும்
பலரே, தகைய‡து அறியா தோரே
அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது
இன்னும் அற்றுஅதன் பண்பே; அதனால்
நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை”11
என சங்கவருணர் பாடுகிறார்.
குமண மன்னனின் கொடைத்திறத்தைப் பெருஞ்சித்திரனார் வியந்து போற்றுகிறார். தம்பியின் சூழ்ச்சியால் அரசிழந்து காட்டிலிருந்த வள்ளல் குமணன், தனை நாடிப் பரிசு வேண்டி வந்த பெருந்தலைச் சாத்தனாரிடம், தம்பி இளங்குமணன் தன் தலையைத் தருவார்க்குத் தகுந்த பொருளைத் தருவதாக அறிவித்ததை நினைவு கூரச் செய்வதோடு,
‘கொன்னே
பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல்என்
நாடு இழந்ததனினும் நனி இன்னாது”12
என வாளெடுத்துத் தன் தலையை வெட்டிக் கொண்டு செல் எனக் கொடுத்த குமணனின் கொடைத்திறம் மானுடநேயத்தின் மணிமுடியில் வைத்து எண்ணத் தக்கதாம்.
குமணனின் கொடையுள்ளத்தை விஞ்சும் அளவு பெருஞ்சித்திரனாரின் விரிந்த மனமும் நம்மை வியக்க வைக்கிறது. பெற்ற பரிசிலைத் தன்வீடு, தன்பெண்டு, தன்மக்களுக்கு மட்டும் வைத்துக் கொள்ள எண்ணாமல் சுற்றம், நட்பு எல்லோர்க்கும் பகிர்ந்து கொடுக்கவேண்டும் எனத் தன்மனைவியிடம் கூறுகிறார் அப்புலவர்.
‘நின் நயந்து உறைநர்க்கும், நீநயந்து உறைநர்க்கும்
................................
இன்னோர்க்கு என்னாது, என்னொடும் சூழாது
வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி - மனை கிழவோயே”13
என்ற பாடல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலையாய பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் மனச்செழுமையைக் காட்டுகிறது.
விருந்தோம்பல்
தமிழர்களின் தலையாய பண்பு விருந்தோம்பல் ஆகும். விருந்து புறத்திருக்கச் சாவாமருந்தே கிடைத்தாலும் தனியாக உண்ணாத தகைமைக்குரியோர் தமிழர்கள் எனச் சங்கப் பாடல்கள் சுட்டும்.
‘உண்டால் அம்ம இவ்வுலகம் - இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே”14
எனப் புறநானூறு (180) போற்றுவதைக் காண்கிறோம்.
சிறுகுடிகிழான் பண்ணனைப் பாராட்டிச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பாடிய புறப்பாடலில்,
‘பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
முட்டை கொண்டு வன்புலம் சேரும்
சிறுநுண் எறும்பின் சில்ஒழுக்கு ஏய்ப்ப
சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்”15
காட்சியைக் காட்டுகிறார். அப்பசிப்பிணி மருத்துவனாம் பண்ணனை ‘யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய” எனப் பாவலர் பாடுகிறார்.
விருந்தினரைப் பேணாத வாழ்க்கை செம்மை இல்லாத வாழ்க்கை ‘விருந்துண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை”16 எனப் பாடுகிறார் பெருங்குன்றூர்க்கிழார்.
சங்ககாலப் பெண்டிர் விருந்தினர்க்கு உணவளித்து மகிழ்ந்து வாழும் பயனுறு வாழ்வை, ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியைப் பாடும் புறப்பாட்டில் வியந்து போற்றுகிறார்.
‘அமிழ்து அட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசைஇல் வாழ்க்கை
மகளிர்...”17
என மகளிர் மாண்பைப் பாராட்டுகிறார் புலவர்.
சங்ககாலக் குலமகளிர், தன்னிடம் உள்ள உணவு மிகக் குறைவாக இருப்பினும், விருந்தினர் பலராய் வரக்கண்டும், கவலைப்படாமல், அனைவரையும் முறையாக வரவேற்றுப் பகிர்ந்து விருந்தோம்புவர் என்பதை,
‘தவச்சிறிது ஆயினும் மிகப்பலர் என்னாள்
நீள்நெடும் பந்தர் ஊண்முறை ஊட்டும்
இற்பொதி மகடூஉப் போல”18
என உறையூர் முதுகூத்தனார் பாராட்டி மகிழ்கிறார்.
விருந்தினரைக் கண்டால் தலைவியின் முகம் நெய்தல்மலர் போல மலர்கிறது என்பதை,
‘வைகறை மலரு நெய்தல் போலத்
தகைபெரி துடைய காதலி கண்ணே”19
என்ற ஐங்குறுநூற்றுத் தலைவன் கூற்று அறிவிக்கிறது.
ஆற்றுப்படை நூல்களில் பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை ஆகிய நான்கு ஆற்றுப்படைகளும் புரவலர்களின் கொடைத் தன்மையைப் போற்றிப் புகழ்கின்றன. கரிகாலன் கொடையை பொருநராற்றுப்படையும், நல்லியக்கோடனின் வள்ளல் தன்மையைச் சிறுபாணாற்றுப்படையும், இளந்திரையன் மாண்பைப் பெரும்பாணாற்றுப்படையும் பாராட்டிப் பாணர்களை ஆற்றுப்படுத்துகின்றன.
ஒய்யாநாட்டு நல்லியக் கோடனின் விருந்தோம்பல் பண்பை, தானே முன்னின்று உண்ணச்செய்யும் கனிவை,
‘இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
விளங்கு பொற்கலசத்தில் விரும்புவன் பேணி
ஆனா விருப்பின் தான்நின்று ஊட்டி”20
என்ற வரிகள் புலப்படுத்தும்.
தம்மை நாடிவந்த பாணர்களைக் கண்டதும் உள்ளம் மகிழ்ந்து முதலில் அவர்கள் நடந்துவந்த களைப்புத் தீரத் தேறல் வழங்கினான் மன்னன் என்ற செய்தியை,
‘காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇப்
பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கி”21
என்ற சிறுபாணாற்றுப்படை வரிகள் புலப்படுத்தும்.
‘பசியோடு செல்லும் பாணருக்கு அவர்கள் தொண்டைமானின் நாட்டைச் சார்ந்த பாணர் என்று கூறினால் தெய்வத்திற்குத் தேக்கு இலையில் உணவு படைத்துத் தருவர்” என்ற செய்தியை,
‘செவ்வரை நாடன் சென்னியம் எனினே
தெய்வ மடையின் தேக்கிலைக் குவைஇநும்
பைதீர் கடும்பொடு பதம்மிகப் பெறுகுவீர்”22
என்ற பெரும்பாணாற்றுப்படை வரிகள் விளக்கும்.
கல்வி
இந்த மானுடம் உயர்வடைய வேண்டும் எனின் அறியாமை இருள் அகற்றும் கல்வியைக் கற்றாகவேண்டும் என்பதில் அந்நாட்புலவர்கள் உறுதியாக இருந்தனர்.
‘நல்லவையுள் மேம்பட்ட கல்வி”23
என்று முதுமொழிக்காஞ்சி (பா.8) உணர்த்தும்.
‘கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு”24
என்று நாலடியார் (26) உரைக்கும்.
‘பிச்சைபுக் காயினும் கற்றல் மிக இனிதே
நாளும் நவைபோகான் கற்றல் மிக இனிதே
கற்றார்முன் கல்வி உரைத்தல் மிக இனிதே
கற்றறிந்தார் கூறும் கருமப்பொருள் இனிதே”25
என இனியவைநாற்பது கூறும்.
‘குலத்துப் பிறந்தவன் கல்லாமை இன்னா
கல்லார் உரைக்கும் கருமப் பொருளின்னா”26
என இன்னாநாற்பது உரைக்கும்.
‘இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்”27
என நான்மணிக்கடிகை நவிலும்.
‘இளமையில் கல்” என்றார் ஒளவையார்.
சங்ககாலத்தில் கல்விக்குச் சிறப்புக் கொடுத்தமையைப் பல புலவர்கள் பாடியுள்ளனர்.
‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
.............
வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே”28
எனக் கல்வியின் சிறப்பையும் கற்றவனுக்கு இந்தச் சமுதாயம் தரும் மதிப்பையும் பற்றி பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடியுள்ளார்.
இறைவனை வேண்டுவோர் பொன், பொருள், தன் குடும்பநலம் வேண்டி வணங்குதலே உலக இயல்பாகப் போய்விட்டது. ஆனால் பரிபாடலில் நல்லந்துவனார் முருகனிடம் அருள், அன்பு, அறம் ஆகிய மூன்றை மட்டும் வேண்டி இறைஞ்சுகிறார்.
‘...... அன்னோர் அல்லது இன்னோர்
சேர்வார் ஆதலின், யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல் நின்பால்
அருளும், அன்பும், அறனும், மூன்றும்
உருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே”29
என்று அழிந்து போகும் செல்வம் வேண்டாது என்றும் அழியாத மனிதநேய மலர்களை வேண்டுகிறார்.
தலைவியை நேசித்து நலம் நுகர்ந்த பின்பு தலைவியை மறந்துவிட்டு பார்க்கவராத தலைவனைக் கண்டு அறிவுறுத்தத் தோழி செல்கிறாள். ‘தீம்பால் உண்பவர் உண்டபின் அப்பாத்திரத்தை நீக்கிவிடுதல் போல, நீயும் என் தலைவியின் நண்ணுதல் நலனுண்டு துறத்தல் தகாது” எனக் கூறி பற்பலவாய் அறிவுரைகளையும் கூறுகிறாள்.
கலித்தொகை காட்டும் தோழியின் மானுடநேயச் சிந்தனை, உலக இலக்கியம் அனைத்திலும் காணக் கிடைக்காத ஒன்றாய் நம்மைக் களிகொள்ளச் செய்கிறது.
‘ஆற்றுதல் என்பது ஒன்று அலர்ந்தவர்க்கு உதவுதல்;
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை;
பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுதல்;
அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை;
அறிவெனப் படுவது பேதையார்சொல் நோன்றல்;
செறிவெனப் படுவது கூறியது மறாஅமை;
நிறையெனப் படுவது மறைபிறர் அறியாமை;
முறையெனப் படுவது கண்ணோடாது உயிர்வெளவல்;
பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்”30
எனத் தோழி கூறும் செறிவுரைகள் அனைத்துலகோர்க்கும் அனைத்துத் தரப்பினர்க்கும் வேண்டிய ஒன்றாய் உள்ளதை வியந்து பார்க்கிறோம்.
சான்றெண்விளக்கம்
1. கலித்தொகை, ப.11
2. பத்துப்பாட்டு, சிறுபாணாற்றுப்படை, ப.37
3. பத்துப்பாட்டு, பொருநராற்றுப்படை, ப.30
4. பத்துப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, ப.113
5. நற்றிணை, பாடல் 95, ப.172
6. புறநானூறு, பாடல் 189, ப.89
7. மேலது, பாடல் 206, ப.96
8. மேலது, பாடல் 171, ப.82
9. மேலது, பாடல் 101, ப.53
10. மேலது, பாடல் 107, ப.55
11. மேலது, பாடல் 360, ப.152
12. மேலது, பாடல் 165, ப.79
13. மேலது, பாடல் 163, ப.23
14. மேலது, பாடல் 182, ப.87
15. மேலது, பாடல் 173, ப.83
16. மேலது, பாடல் 266, ப.119
17. மேலது, பாடல் 10, ப.10
18. மேலது, பாடல் 331, ப.140
19. ஐங்குறுநூறு, பாடல் 188, ப.43
20. பத்துப்பாட்டு, சிறுபாணாற்றுப்படை, ப.40
21. மேலது, சிறுபாணாற்றுப்படை, ப.40
22. மேலது, பெரும்பாணாற்றுப்படை, ப.49
23. முதுமொழிக்காஞ்சி, பாடல் 8, ப.11
24. நாலடியார், பாடல் 26
25. பதிணென்கீழ்கணக்கு நூல்கள்-தொகுதி 2, இனியவை நாற்பது,
பாடல் 1, ப.555, பாடல் 3, ப.556, பாடல் 16, ப.560,
பாடல் 32, ப.565
26. மேலது, இன்னாநாற்பது, பாடல் 19, ப.545, பாடல் 15, ப.544
27. மேலது, நான்மணிக்கடிகை, பாடல் 94, ப.532
28. புறநானூறு, பாடல் 183, ப.87
29. பரிபாடல், பாடல் 5, ப.16
30. கலித்தொகை, பாடல் 133, ப.130
பயன்பட்ட நுல்கள்
1. சங்க இலக்கியத் தொகுதி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை 98
2. பதிணென்கீழ்கணக்கு நூல்கள்-தொகுதி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை 98
* கட்டுரையாளர்: - முனைவர் த. அமுதா, கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), வேலூர்- 2 -
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.