எழுத்தாளர் க.நவம்“அழுதேன்….! அவனையும் அவனது தாய் தந்தையரையும் நினைத்து, உண்மையில்…. நான் வாய்விட்டு அழுதேன்!”
ஒன்ராறியோவின் ஸ்றத்றோய் (Strathroy) என்னுமிடத்தில், ஆரன் ட்றைவர் (Aaran Driver)  என்னும் வாலிபன் காவல் துறையினரால் கொல்லப்பட்ட செய்தி கேட்டு, தற்போது பிரான்ஸில் குடிபெயர்ந்து வாழ்ந்துவரும் முன்னாள் கனடியக் குடிமகளான கிறிஸ்ரியான் ப்பூட்ரோ (Christianne Boudreau)  இப்படித்தான் சொல்லியழுதாள்! ஆரன் ட்றைவரின் கொலையின் மூலம் பெருந்தொகையிலான உயிர்ச் சேதங்களும் பொருட் சேதங்களும் தவிர்க்கப்பட்டமை கனடியர்களுக்கு ஒரு நல்ல செய்தி! ஆனால் இருவருடங்களுக்கு முன்னர், சிரியாவில் இஸ்லாமியதேச தீவிரவாதக் குழுவொன்றுடன் இணைந்து போராடி உயிரிழந்த, தனது 22 வயது மகனான டேமியன் கிளயமனைப் (Damian Clairmont) பறிகொடுத்த தாயான கிறிஸ்ரியான் ப்பூட்ரோவைப் பொறுத்தவரை, ஆரன் ட்றைவரின் கொலை அவளுக்கு இன்னொரு அவலச் செய்தி! “என்னையும், எனது மகனையும் குடும்பத்தையும் போலவே, ஆரன் ட்றைவரையும் அவனது குடும்பத்தையும் கனடிய அரசு அனாதரவாகக் கைவிட்டுவிட்டது!” வளரிளம் பருவத்துச் செல்வங்கள் பலவும், வழி தவறிப்போய் மாண்டழிவதற்குக் கனடிய அரசின் கையாலாகாத்தனமும் அதிகாரிகளின் அசமந்தப் போக்கும் ஒருவகையில் காரணங்கள் என அத்தாயானவள் முன்வைக்கும் வாதங்கள் வெறுமனே அலட்சியம் செய்யப்படக் கூடியனவல்ல!

24 வயதுடைய ஆரன் ட்றைவரது தந்தையார் ஒரு வான்படை அலுவலராகப் பணியாற்றியவர். தந்தையாரது பணியின் நிமித்தம் ஆரன் ட்றைவர் ஒன்ராறியோ, அல்பேர்ற்ரா ஆகிய மாகாணங்களில் வசித்தவர். 2014இல் கனடியப் பாராளுமன்றில் தாக்குதல் நடத்திய மைக்கல் ஸேய்ஹஃப் ப்பிப்போவையும் (Michael Zehaf-Bibeauv) பயங்கரவாத நடவடிக்கைகளையும் சமூக ஊடகங்களில் விதந்து பாராட்டியவர். தம்மை ஓர் இஸ்லாமியராகச் சுய பிரகடனம் செய்தவர். இஸ்லாமியதேச தீவிரவாதிகளை ஆதரித்து, அவர்களோடு தொடர்பில் இருந்தவர். விளைவாக, 2015இல் கைதுசெய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர், கணினியோ கைத்தொலைபேசியோ பாவிக்கக்கூடாதென்ற நீதிமன்ற உத்தரவுடன், கண்காணிப்பின் கீழ் காலம் கழித்தவர்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்றத்றோயிலுள்ள தமது இருப்பிடத்தின் நிலக்கீழறையில் இரகசியமாக வெடிகுண்டு ஒன்றைத் தயாரித்து, சனசந்தடி மிக்க ஒன்ராறியோ நகர் ஒன்றில் அதனை வெடிக்க வைக்கவென ஆரன் ட்றைவர் ஆயத்தமாயிருந்தார். தனது நோக்கத்தை வெளியிடும் காணொளி ஒன்றையும் பதிவுசெய்தார். இத்தகவலை அறிந்த அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறையினர் (FBI), கனடிய ஆர்சியெம்பியினருக்கு (RCMP) இதனைத் தெரியப்படுத்தினர். ஆகஸ்ட் 10, 2016 புதன்கிழமை ஆரன் ட்றைவர் தமது குண்டுத் தாக்குதற் திட்டத்தை நிறைவேற்றப் புறப்பட்ட தருணம், ஒன்ராறியோ காவல் துறையினருடன் இடம்பெற்ற மோதலில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். வழக்கம் போல ஆழ்ந்த உறக்கத்தில் அமைதியாகக் கிறங்கிக் கிடந்த கனடாவை ஆன் ட்றைவரின் கொலை தட்டி எழுப்பியது. அரச தரப்பினரும் காவல் துறையினரும் பாதுகாப்புப் படையினரும் துயில் கலைந்து கண்விழித்துக் கொண்டனர். பீதியால் நிலைகுலைந்த மக்கள் தற்காலிகமாக, அதிர்ஷ்டம் தம்மைக் காப்பாற்றிக் கொண்டதாக நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆயினும் வெறும் அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி, எப்படி வாழமுடியும் எனவும், எப்போதோ ஒரு நாள், எங்கோ ஓரிடத்தில் அந்த அதிர்ஷ்டம் காலை வாரக்கூடும் எனவும் எண்ணி அவர்கள் அச்சத்தில் உழல்கின்றனர். “கனடிய மண்ணில் இன்னும் ஏராளம் ஆரன் ட்றைவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் எல்லோரையும் எப்போதும் கண்காணிக்க முடியாது. சிலவேளைகளில் எமது அதிர்ஷ்டம் எம்மைக் கைவிடும்போது, எம்மில் ஏராளம் பேர் கொல்லப்படலாம்” என்று லோர்ன் டாசன் (Lorne Dawson) எனும் வாட்டர்லூ பல்கலைக்கழக சமூகவியலாளர், மக்லீன் (McLean) சஞ்சிகைக்குத் தெரிவித்திருக்கும் அபாய அறிவிப்பைப் புறக்கணிக்க முடியாமல் மக்கள் தடுமாறுகின்றனர். தீவிரவாதத் தாக்குதலச்சம், கனடா முழுவதும் காட்டுத் தீயாகப் பரவிக்கொண்டுள்ளது!

தீவிரவாதம் என்றால் என்ன?
தீவிரவாதம் என்பது மிதமானதும், விட்டுக்கொடுப்பு மிகுந்ததுமான கொள்கைகளை நிராகரிக்கும் ஓர் அரசியல் கருத்தாக்கமாகும். அது தாராண்மை வாதத்தின் மறுதலை. ஒரு சமூகத்தின் தார்மீக நியமங்களை மீறி, அச்சமூகத்தின் அரசியல் மையத்தைப் புறந்தள்ளும் போக்கினைக் கொண்டது. சமூகப் பொதுநடத்தையிலிருந்து மாறுபட்டது. அச்சமூகத்தின் பொதுவிருப்புக்கு எதிராக, வன்செயலைப் பிரயோகிப்பதில் பொதுவாக நாட்டமுடையது. இத்தகைய குணாம்சங்களைக் கொண்ட தனிநபர்களை அல்லது குழுக்களை தீவிரவாதிகள் என்பர். இயல்பு நிலைக்கு மாறான அரசியல் நடவடிக்கைகளில் விருப்பங்கொண்டவர்கள் என இவர்களைக் குறிப்பிடுவர். தீவிர இடதுசாரிகளும் தீவிர வலதுசாரிகளும் இந்தத் தீவிரவாதிகள் எனும் வகைக்குள் அடங்குவர்.

தீவிரவாதம் அல்லது தீவிரவாதி என்பன பிறரால்  இவர்கள்மீது திணிக்கப்பட்ட பதங்களே அன்றி, இவர்கள் தமக்குத் தாமே சூட்டிக்கொள்பவை அல்ல. பதிலாக, தம்மை அரசியல் மாற்றங்களை விரும்புவோர், போராளிகள் என்றும், தமது செயற்பாடுகளை எதிர்ப்பு நடவடிக்கைகள், போராளிகளின் செயற்பாடுகள், உடல் வலிமைப் பிரயோகம் என்றும் சுட்டிக்கொள்ளவே இவர்கள் விரும்புவர்.

கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து, மத்திய கிழக்கில் எரியும் பிரச்சினையாக கனன்றுகொண்டிருக்கும் பலஸ்தீனிய – இஸ்ரேலிய பிரச்சினையில், ஹமாஸ் போராளிகளும் யூத அடிப்படைவாதிகளும் பொருது மோதிவரும் இரு தீவிரவாதப் போராளிக் குழுக்கள். இவ்விரு குழுக்களையும் உதாரணமாகக் கொண்டு, தீவிரவாதிகளின் அடிப்படைப் பண்புகளை இனங்காண்பது சுலபம். இருதரப்பினரும் தேசியவாதிகள்; எதிரிகளைப் பிசாசுகளாகப் பார்ப்பவர்கள்; எதிர்த் தரப்பினரோடு உடன்பட மறுப்பவர்கள்; தத்தமது நிலைப்பாட்டைத் தீர்க்கமாகத் தெரிந்து வைத்திருப்பவர்கள்; முழு இலக்கும் தமக்கே உரியது என்பதில் பிடிவாதமாக உள்ளவர்கள்; இலக்கை எய்துவதற்கு வன்செயலைப் பயன்படுத்தத் துணிந்தவர்கள்; தத்தமது அணிக்குள் மாற்றுக் கருத்தை அடியோடு வெறுப்பவர்கள்.

இதேவேளை, தீவிரவாதம் எனும் கருத்தியலானது அகவயமானது; அரசியல் நோக்கம் சார்ந்தது. ஒரு அரசியல் நடவடிக்கையானது ஒருவரது விழுமியங்கள், தார்மீக எல்லைகள், அரசியல் நோக்கு, அந்நடவடிக்கையில் ஈடுபடுபவருடனான உறவு என்பவற்றின் அடிப்படையிலேயே அது அறம்சார் செயல் என்றோ, ஆபத்துசார் செயல் என்றோ தீர்மானிக்கப்படுகிறது. இதன்படி, ஒருவருக்குச் சுதந்திரப் போராட்டமாகத் தெரிவது, இன்னொருவருக்குப் பயங்கரவாதமாகத் தெரிகிறது.

தீவிரவாதத்தைத் தீர்மானிப்பதில் காலமும் முக்கிய பங்கு வகிக்கிறது. தென்னாபிரிக்காவின் நிற ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம் ஒருகாலத்தில் உலக நாடுகளால் தீவிரவாதம் எனத் தூற்றப்பட்டது; பின்னொரு காலத்தில் விடுதலைப் போராட்டம் எனப் போற்றப்பட்டது; ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஒரு விடுதலைப் போராட்ட இயக்கமாகவும், அதன் சூத்திரதாரியான நெல்ஸன் மண்டெலா ஒரு விடுதலைப் போராளியாகவும் ஏற்றிப் போற்றப்பட்டமை வரலாறு.

ஒருசமூகத்தின் அல்லது ஒரு இனத்தின் அதிகாரபலம் குன்றியோரும், சிறுபான்மையினரும், விளிம்புநிலையினரும் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கெனத் தீவிரவாத நடவடிக்கைகளிலும் வன்செயல்களிலும் இயல்பாகவே ஈடுபடுவர். இலங்கையில் நடந்துமுடிந்த இனவிடுதலைப் போராட்டமும், அதற்கு முன்னரான வடபுலத்துச் சாதியப் போராட்டமும் இதற்கான சான்றுகள். அதேவேளை, இவ்வாறான போராட்டங்களை அழித்தொழிப்பதற்கென அதிகாரபலம் மிக்க அரசும், பெரும்பான்மையினரும், மேட்டுக்குடியினரும் தீவிரவாத நடவடிக்கைகளையும் வன்முறைகளையும் பயன்படுத்துவர் என்பதற்கும் மேற்கூறிய இரண்டும் சாட்சியங்கள்.

தீவிரவாதக் குழுக்களுக்குள்ளும் அதிதீவிரப் போக்குடையோரும், சற்றே தீவிரம் குறைந்தோரும் இருப்பதுண்டு. பலஸ்தீனிய விடுதலையை மட்டுமே இலக்காகக் கொண்ட போராளிகளுக்குள், பலஸ்தீனிய விடுதலை அமைப்பு, ஹமாஸ், இஸ்லாமிக் ஜிஹாத் என்றவாறான பிரிவுகளுக்கு, தீவிரத் தன்மையின் வேறுபாடே காரணமாகும்.
இனி, தீவிரவாத அமைப்புகளெல்லாம் வன்செயலில் நாட்டம் உடையன என்று முடிவுகட்டவும் முடியாது. அந்நாளைய பிரித்தானியர்களுக்கு மஹாத்மா காந்தி ஒரு தீவிரவாதிதான்; அந்நாளைய அமெரிக்கர்களுக்கு மார்ட்ரீன் லூதர் கிங் ஒரு தீவிரவாதிதான். இவர்கள் வன்செயலுக்குப் பதிலாக அகிம்சையைக் கடைப்பிடித்தவர்கள். தீவிரவாதம் என்பது எப்போதும் மக்கள் சமூகத்துக்கோ, அரசுக்கோ, அல்லது ஏனைய அமைப்புகள், நிறுவனங்களுக்கோ அச்சுறுத்தலாக இருக்கும் என்பதில்லை.
தீவிரவாதத்தினால் கவரப்படுவோர்

தீவிரவாத நடவடிக்கைகளில் ஒரு குறிப்பிட்ட இனத்தவரோ, மதத்தவரோ, நிறத்தவரோ, மொழியினரோ, நாட்டவரோ அல்லது பிரதேசத்தவரோதான் இந்நாட்களில் ஈடுபட்டு வருவதாக விரல் சுட்ட முடியாது. உலகின் சகல வகைப்பட்டவர்களையும் சிக்கெனப் பீடித்திருக்கும் ஒரு சீனி வியாதியாக இன்று இது வியாபித்துவிட்டது. இவ்வாறு தீவிரவாதத்தினால் கவரப்படுவோரை வசதிகருதி நான்கு பிரிவினராக வகைப்படுத்தலாம்.

1.தாம் வாழும் சமூகத்தின் மீது அதிருப்தி கொண்டவர்கள் முதற் பிரிவினர். பெரும்பாலும் இவர்கள் புதிய வாழிடங்களின் பண்பாடுகளுக்கு இசைவாக்கம் பெறுவதில் சவால்களை எதிர்நோக்கும் இளம் குடிவரவாளர்கள். வேலைவாய்ப்பின்மை, உள்வீட்டு முரண்பாடுகள் போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள். நீதியற்ற - சமநிலையற்ற சமூக நடமுறைகளினால் விரக்தி அடைந்தவர்கள். இவற்றிலிருந்து விடுபட வன்முறையே ஏற்ற வழிமுறை என நம்புபவர்கள்.

2.தமது இலட்சியத்திற்காக உயிர் துறக்கவும் துணிந்தவர்கள் அடுத்த வகையினர். இனம், மதம், மொழி போன்ற அடையாள வெறியர்கள். இவ்வடையாளங்களின் அடிப்படையில் இலகுவாக மூளைச் சலவை செய்யப்பட்டு, வன்செயல்களில் ஈடுபடத் தூண்டப்படுபவர்கள்.

3.எந்தவிதத் தீவிரவாதத்தினாலும் இலகுவாகக் கவரப்படுபவர்கள் மூன்றாவது வகையினர். அராஜகம், நவ-நாஸிசம், சுற்றுச்சூழல் தீவிரவாதம் போன்றவற்றில் நாட்டம் உடையவர்கள். ’நடைமுறை மாத நறுமணச் சுவையாக’ (The Flavour of the Month) இஸ்லாமிய தீவிரவாதத்தைக் கண்டு வெறி ஆறிக்கொள்பவர்கள்.

4.மனக்கோளாறுகளால் ஆட்கொள்ளப்படுபவர்கள் இன்னொரு வகையினர். போதைப் பொருட்களுக்கு இலகுவில் அடிமையாகக்கூடியவர்கள். குறிப்பிட்ட ஒரு மதத்தினால் அல்லது நம்பிக்கையினால் ஆட்டிப்படைக்கப்படுபவர்கள்.

இவர்கள் அனைவரும் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக, தாம் வாழும் சமூகத்திற்கு வேண்டப்படாதவர்களாக, இலகுவில் பாதிக்கப்பட்டவர்களாக, ஓரங்கட்டப்பட்டவர்களாக, உதாசீனம் செய்யப்பட்டவர்களாகத் தம்மைத் தாமே கருதுபவர்கள். இதனால் தமக்குள் விரிந்து கிடக்கும் வெற்றிடத்தை நிரப்புவதற்கும் தமது இலக்கை எய்துவதற்கும் தீவிரவாதமே உகந்த புகலிடம் என்றும், அதனோடு இணைந்த வாழ்வு ஒரு நோக்கத்தை - ஒரு அர்த்தத்தைத் தரும் என்றும் நம்புகின்றவர்கள்.

உலகளாவிய தீவிரவாதம்
சிரியா, ஈராக், துருக்கி போன்ற நாடுகளில் களத்தில் நின்று போராடிவரும் இஸ்லாமியதேச தீவிரவாதக் குழுக்களே உலகின் கவனத்தை இன்று பெரிதும் தம்பக்கம் திருப்பிவைத்து வருகின்றன. இக்குழுக்களுடன் இணைந்து போராடவென 2011 முதல் இற்றைவரை உலக நாடுகளிலிருந்து சிரியாவுக்கு மட்டும் 36,500 போராளிகள் சென்றுள்ளனர். ஐரோப்பிய வல்லரசுகளான பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளிலிருந்து பெருந்தொகையானோர் இஸ்லாமியதேச தீவிரவாதக் குழுக்களுடன் இணைந்து போராடி வருவதுடன், மேலும் ஏராளமானோர் நிதி சேர்ப்பு, ஆட்சேர்ப்பு, பிரசார முன்னெடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். பிரிட்டனின் கிழக்கு லண்டன் பகுதியிலிருந்து இளம் பெண்கள் பலரும் ஜிஹாடி மணப்பெண்களாக (Jihadi Brides) தம்மை அர்ப்பணிப்பதற்கென கடந்த ஆண்டு சிரியா சென்றுள்ளனர். இப்பெண்களது சர்ச்சைக்குரிய இந்நடவடிக்கையினால் இவர்களது குடும்பத்தவர்களும், அரச அதிகாரிகளும், பாதுகாப்புப் பிரிவினரும் அங்கு பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

மேலும், நவீன தொடர்பாடற் தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியை, தீவிரவாதக் குழுக்களும் அவற்றின் ஆதரவாளர்களும் அனுதாபிகளும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருவதாக, பிரிட்டனின் பாராளுமன்றத்தின் உள்நாட்டலுவல்கள் தெரிவுக்குழுவின் அறிக்கை ஒன்று கூறுகின்றது. இணையத் தளத்தினூடாக தீவிரவாதிகள் திரட்டப்படுதல் பிரிட்டனில் ஒரு சிக்கலான பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும், தீவிரவாதிகளை வளர்த்தெடுப்பதில் சமூக ஊடகங்களின் கண்காணிப்பற்ற - சட்டதிட்டமற்ற நடைமுறைகள் கைகொடுத்து உதவி வருவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது. Google, Facebook, Twitter, YouTube போன்ற சமூக ஊடகங்கள் பில்லியன் கணக்கான டொலரை வருமானமாகப் பெற்று வருகின்றன. ஆயினும் இணையத்தளத்தினூடான தீவிரமயமாதலைத் தடுக்கவெனப் போதுமான  நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இந்நிறுவனங்கள் அசிரத்தையாக நடந்துகொள்கின்றன என்றும், தீவிரவாதத்தை ஊக்குவிப்போரைக் கண்காணிக்கவென மேலதிக பணியாட்களை நியமிக்க இவை தவறி வருகின்றன என்றும், இது சமூக ஊடகங்களின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்துகின்றது என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.

இந்த அறிக்கை குறித்து Google மௌனம் சாதித்து வருகின்ற போதிலும் Facebook, Twitter, YouTube ஆகியன இதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கின்றன. குறிப்பாக, வன்செயலையும் தீவிரவாதத்தையும் தமது தளத்திலிருந்து அகற்றுவதற்குத் தாம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதன் பிரகாரம் 2015 நடுப்பகுதியிலிருந்து தமது நிறுவனத்தின் கொள்கைகளை மீறிய குற்றத்திற்காகச் சுமார் 360,000 கணக்குகளை இடைநிறுத்தி வைத்திருப்பதாகவும் YouTube தெரிவித்துள்ளது. இதையொத்த நடவடிக்கைகளைத் தாமும் மேற்கொண்டு வருவதாக Facebook, Twitter நிறுவனங்களும் கருத்து வெளியிட்டுள்ளன. இதேவேளை, பயங்கரவாதிகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட வேண்டும் என்ற  பொதுமக்கள் அழுத்தத்திற்கு அவ்வூடகங்கள் இசைந்து வருவதாக லண்டன் கிங்ஸ் கல்லூரியின் தீவிரவாதக் கற்கை நெறிக்கான அனைத்துலக நடுவத்தின் பணிப்பாளர் பீற்றர் நியூமன் (Peter Neumann) கூறுகின்றார். ஆனால் சகபாடிகளுக்கிடையிலான இரகசிய ஊட்டாட்டங்கள் வழியாகவே பிரிட்டன் மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலிருந்து பெருமளவில் தீவிரவாதப் போராளிகள் சிரியா போய்ச் சேர்ந்திருக்கிறார்கள் என்பதை உணராமல், சமூக ஊடகங்களையும் இணையத் தளங்களையும் மட்டும் குற்றம் சாட்ட முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கனடாவில் தீவிரவாதம்
சமகால வரலாற்றின் அடிப்படையில் மக்கள் சுதந்திரத்துடனும் சமத்துவத்துடனும் சகோதரத்துவத்துடனும் வாழ உகந்த ஓர் அமைதியான நாடாகக் கனடா கணிக்கப்பெற்று வருகின்றது. கியூபெக் பிரிவினைக் கோரிக்கையின் பின்விளைவாக நடந்தேறிய சில வன்செயல்களைத் தவிர, பாரிய அளவிலான தீவிரவாத அச்சுறுத்தல்களோ அல்லது வன்செயல்களோ அண்மைக்காலக் கனடிய வரலாற்றில் இடம்பெற்றதில்லை. ஆனால் இன்று உலகளாவிய ரீதியில் நிகழ்ந்து வரும் தீவிரவாதச் சம்பவங்களின் தாக்கங்கள் கனடிய மண்ணிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தத் தவறவில்லை.

கடந்த பழமைவாதக் கட்சியினரின் ஆட்சிக் காலத்தின்போது கனடாவின் உள்ளும் புறமும் கனடியர்களால் மேற்கொள்ளப்படும் தீவிரவாதத் தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் கசியத் துவங்கின. 2013இல் அல்ஜீரியாவில் இடம்பெற்ற எரிபொருள் நிலையத் தாக்குதலைத் தொடர்ந்து, கனடிய தீவிரவாதிகளால் கனடாவிற்கு உள்ளேயும் வெளியேயும் அபாயம் காத்திருப்பதாகக் கூறப்பட்டது. 2013 முதல் சுமார் 200 கனடிய இளைஞர்கள் தீவிரவாதக் குழுக்களுடன் இணைந்துகொள்வதற்கென சிரியா சென்றிருப்பதாகவும், இவர்களுள் சுமார் 25 பேர் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாகவும் அறியக் கிடக்கின்றது. இவ்வாண்டு (2016) மார்ச் மாதம் மட்டும் கனடாவிலிருந்து சிரியா, ஈராக், துருக்கி போன்ற நாடுகளைச் சென்றடைந்து, 180 இளைஞர்கள் தீவிரவாதக் கொதிகலனுக்குள் தாமாகவே குதித்திருப்பதாகப் புதிய அறிக்கை ஒன்று கூறுகின்றது. இவர்களுள் 20 சதவீதமானோர் பெண்கள் என்றும், 60 பேர் மீண்டும் கனடா வந்து சேர்ந்திருக்கிறார்கள் என்றும், புதிய போராளிகளைத் திரட்டுவதிலும் நிதி சேகரிப்பதிலும் பிரசார நடவடிக்கைகளிலும் இவர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள் என்றும் அதே அறிக்கை கூறுகின்றது. இப்புள்ளிவிபர எண்ணிக்கைகள் நிலையானவை அல்ல - இவை அவ்வப்போது ஏறியிறங்கக்கூடியவை என கால்ரன் பல்கலைக்கழகப் பேராசிரியரும் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகருமான ஸ்ரெஃபனி கார்வின் (Stephanie Carvin) தெரிவித்திருக்கின்றார்.

கனடாவில் இந்நாட்களில் ஆங்காங்கே இடம்பெற்றுவரும் தீவிரவாதச் சம்பவங்கள் மக்கள் மனதைக் கிலிகொள்ளச் செய்து வரும் நிலையில், இன்றைய அரசாங்கமும் அரச இயந்திரக் கருவிகளான பாதுகாப்புத் துறையும் புலனாய்வுத் துறையும் தற்போது ஓடிவிழித்து உசாரடைந்துள்ளன. அதன் ஓர் அங்கமாக, இன்றைய அரசு முன்னெடுக்கத் தீர்மானித்திருக்கும் செயற்றிட்டங்கள் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரால் க்கூடேல் (Ralph Goodale) அவசரச் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். உலகளாவிய ரீதியில் தீவிரவாதத்தைத் தடைசெய்யும் மகத்தான பணிக்குக் கனடா தலைமை தாங்க வேண்டும் என்றும், இதன் பொருட்டு ஒரு தேசிய அலுவலகம் கனடாவில் நிறுவப்பட இருக்கின்றது என்றும், தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தி, அதற்கு இரையாகிப் போகும் இளைஞர் சமுதாயத்தை ஆக்கபூர்வமான வழியில் திசை திருப்பும் முயற்சிக்கென அரசு 500 மில்லியன் டொலரை ஒதுக்கீடு செய்திருக்கின்றது என்றும் அமைச்சர் அதில் குறிப்பிட்டிருக்கின்றார்.

மேலும் மறைகுறியாக்கப்பட்ட (Encrypted) தொடர்பாடல் தொழில் நுட்பம் ஒரு பலத்த சோதனையாக அமையக்கூடும் எனவும் அரசு அச்சம் தெரிவித்திருக்கின்றது. மறைகுறியாக்கம் மூலமாக அரசாங்கமும் தனிநபர்களும் வியாபார – வர்த்தக நிறுவனங்களும் உணர்திறன் மிக்க முக்கிய தகவல்களைப் பரிமாறிப் பயன்பெற்று வருகின்றன. ஆயினும் இதே தொழில்நுட்ப வசதியைத் தீவிரவாதக் குழுவினரும் இரகசியமாகப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர். இந்நிலையில் கனடியச் சட்ட அமுலாக்கமும் கனடியப் புலனாய்வு அதிகாரமும் இணைந்து, கனடிய மக்கள் உரிமைகளைப் பாதிக்காத வகையில் - சமநிலை பேணி -நடவடிக்கை எடுப்பதில் உள்ள சவால்கள் குறித்தும் அரசு ஆராய்ந்து வருகிறது.

இதேசமயம் தற்போது வெளிவந்துள்ள 2016ஆம் ஆண்டுக்கான பொது மக்கள் பாதுகாப்பு அறிக்கையானது கனடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஓர் எச்சரிக்கையாக நோக்கப்படுகின்றது. பேர்பெற்ற பாரிய பயங்கரவாத அமைப்புக்களால் கனடாவில் தாக்குதல்கள் நிகழ்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் தென்படாத போதிலும், தீவிரவாதக் கருத்தியலினால் கவரப்பட்ட சிறு குழுக்களாலும், ‘ஒற்றை ஓநாய்கள்’ (Lone Wolfs) எனச் சுட்டப்படும் தனிநபர்த் தீவிரவாதிகளாலும் கனடிய மண்ணில் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான அபாயம் அதிகரித்து வருவதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. தீவிரவாதக் கருத்தியலினால் கவரப்படுபவர்களும் தீவிரவாதக் குழுக்களினால் வழிநடத்தப்படுபவர்களும், குறைந்த பாதுகாப்பு ஏற்பாடுள்ள அல்லது அறவே பாதுகாப்பற்ற, சனநெருக்கடி மிக்க பொது இடங்களையும் போக்குவரத்து நிலையங்களையும் குறிவைத்துத் தாக்குதல்களை நிகழ்த்தவும், இத்தாக்குதல்களால் பாரிய உயிர்ச்சேதங்களுடன் மிக மோசமான பொருளியல், உளவியல் பாதிப்புக்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புண்டு என அவ்வறிக்கை கூறுகின்றது. கனடிய அரசு, தேசிய பாதுகாப்புக் கட்டமைப்பை மீளாய்வு செய்யத் திட்டமிட்டு வரும் தருணத்தில், இவ்வாறான புதிய தகவல்கள் அடங்கிய இவ்வாண்டுக்கான பொதுமக்கள் பாதுகாப்பு அறிக்கை வெளிவந்துள்ளமை மிகுந்த கவனிப்புக்குரியது!

ஓர் அன்னையின் அழுகுரல்!
கனடாவிலும் தீவிரவாதிகள் எந்நேரமும் தாக்குதல்களை நிகழ்த்தக்கூடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் கடந்த பல வருடங்களாகப் பரவி வந்துள்ளமை உண்மைதான். அண்டை நாடான அமெரிக்காவிலும் ஐரோப்பிய நேசநாடுகளிலும் அண்மையில் நடைபெற்ற தாக்குதல்கள் அதனை மென்மேலும் உறுதிசெய்கின்றன. இத்தகையதொரு பீதி கலந்த சூழ்நிலையிலேயே ஆரன் ட்றைவரின் சம்பவம் நடந்து முடிந்திருக்கின்றது. கனடியப் பாதுகாப்புத் துறையினரும் புலனாய்வுத் துறையினரும் தக்க தருணத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளால் பாரிய அழிவுகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இவ்வகையில் இன்றைய அரசு எடுக்கவிருக்கும் தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கைகள் விதந்துரைக்கப்பட வேண்டியன. பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தவென கடந்த அரசினால் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளையும், Bill C-15 பயங்கரவாதச் சட்டத்தையும் ‘புனருத்தாரணம்’ செய்வதற்கு இன்றைய அரசு எடுத்துவரும் எத்தனங்கள் பாராட்டுக்குரியன! ஆயினும், கெட்ட குணம் கொண்ட இரட்டையர்களான தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் செயலிழக்கச் செய்வதற்கென அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து, இன்னமும் கனடிய மக்கள் மனதில் பூரண நம்பிக்கை ஏற்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியே!

அதன் ஒரு பிரதிபலிப்பாகவே டேமியன் கிளயமனின் தாயான கிறிஸ்ரியான் ப்பூட்ரோவின் ஆவேசக் குரல் ஓங்கி ஒலிக்கின்றது! “இரண்டு வருடங்களாக என் மகனைக் கண்காணித்து வந்த கனடியப் புலனாய்வுத் துறையினரால், என்னை அணுகி ஏன் எச்சரிக்க முடியாமற் போயிற்று? வழிதவறிச் சென்றுகொண்டிருந்த அவனைத் திசை திருப்பி, ஏன் நல்வழிப்படுத்த முடியாமல் போயிற்று? அவன் ஆபத்தை நெருங்கிக்கொண்டிருந்ததைத் தெரிந்திருந்தும், இவர்களால் ஏன் அதனைத் தடுத்து நிறுத்த முடியாமற் போயிற்று? சிரியாவின் அலெப்போ நகரில் அவன் கொல்லப்படும்வரை, இவர்களால் எப்படித் தமது மௌனத்தைக் கலைக்க முடியாமற் போயிற்று? ஆரன் ட்றைவரின் உயிர் பறிக்கப்பட்டதை அறிந்தபோதும், இதே கேள்விகள் எழுந்து அந்தத் தாய் மனதை அலைக்கழித்திருக்கின்றன!
”தீவிரவாதச் சிந்தனைக்குள் சிக்கித் தவிக்கும் சின்னஞ் சிறிசுகளுக்கும் அவர்களது குடும்பத்தவர்களுக்கும் ஆதாரமளிக்க ஏராளம் வழிமுறைகள் உள்ளன. இருந்தும், கனடிய அரசினரோ, பாதுகாப்பு அதிகாரிகளோ, புலனாய்வு முகவர்களோ அவற்றை நடைமுறைப்படுத்த வலுவற்றவர்களாக வாழாதிருந்துள்ளனர். இளைஞர்கள் தீவிரவாதத்திற்கு இரையாகுதல் இந்த நாட்டின் ஒரு பாரிய பிரச்சினை என்ற உண்மையைக் கண்டுகொள்ள மறுத்து, இவர்கள் மணலினுள் தலை புதைத்து மறைந்து கிடக்கின்றமை, எனது இதயத்தைச் சுக்குநூறாக உடைத்தெறிந்துவிட்டது!” 

தனையனைப் பறிகொடுத்த அந்தத் தாயானவள் இவ்வாறு அழுது புலம்புவதைக் காதில் போடாமல் கடந்து செல்வது அவ்வளவு சுலபமல்ல! இந்த அவலம் கனடாவின் எந்தத் தாய்க்கும், எந்தக் கணத்திலும் ஏற்படலாம்!

உசாத்துணை:
Global News, Aug 19, 2016
Huffington Post, Aug 14, 2016
Andrew Potter, National Post, August 12, 2016
Angela Mulholland, CTV News, January 16, 2015
க. நவம், ’பூபாளம்’ இதழ், பெப்ரவரி 2013

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R