“நீ உன்ரை மகனோடை உக்கார்ந்திருந்து, தனிப்பட்ட பொறுப்புணர்வு பற்றிப் பேசவேணும்.” அவுஸ்திரேலியப் பழங்குடியினர் சமூகச் சிறுவனொருவனின் ‘ஷேர்ட் கொலரைப்’ பற்றிப் பிடித்தவாறு, அவனது தந்தையிடம், அதே சமூகத்துக் காவற்துறை அதிகாரி ஒருவர் இவ்வாறு அலறுகின்றார்! ஒரு ‘பியர்’த் தகரக் குவளையைக் கையில் ஏந்தியபடி மதுபோதையில் நிற்கும் தந்தையோ “அப்பிடியோ …! அவன்ரை பேரென்ன….. அப்ப…?” என்று அந்த அதிகாரியிடம் திருப்பிக் கேட்கின்றார். The Australia என்ற செய்திப் பத்திரிகை இந்த உரையாடலுடன் கூடிய காட்சியைச் சித்திரிக்கும் கேலிச்சித்திரம் ஒன்றைக் கடந்த 04-08-2016 வியாழக்கிழமை வெளியிட்டிருந்தது. அவுஸ்திரேலியாக் கண்டம் இன்று அல்லோல கல்லோலப் பட்டுக்கொண்டிக்க, இந்தச் சின்னஞ்சிறு கேலிச் சித்திரம் காரணமாகிவிட்டது! சர்ச்சைக்குரிய இந்தக் கேலிச் சித்திரத்தை வரைந்தவர் ப்பில் லீக் (Bill Leak) என்பவர். இதனால் ஒரு புறத்தில் கோபத்துடன் கிளர்ந்தெழுந்து, ஆர்ப்பரித்து நிற்பவர்கள் அவுஸ்திரேலியப் பழங்குடியினர். அவர்களுக்கு ஆதரவாகக் குரலெழுப்புபவர்கள் சில அரசியல்வாதிகள், நடுநிலை ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், உள்ளூர் - வெளியூர் பழங்குடியினரின் அடிப்படை உரிமைகளுக்கான அமைப்பினர் - முகவர் நிலையத்தினர் எனப் பலதரப்பட்டவர்கள். இனவெறுப்பாளர்களுடன் மறுதரப்பில் கைகோர்த்து நின்று கள்ள மௌனம் காப்பவர்கள் வெள்ளை நிறப் பெரும்பான்மையினர். இடையில் நின்று இருபக்க மத்தளம் போல அடிபடுவோர் அரசயந்திரச் சாரதிகளும் சங்கூதிகளுமான அரசாங்கத்தினர்!
Cartoons எனப்படும் கேலிச் சித்திரங்கள் அதன் ஆரம்ப காலங்களில் அரசியல், சமூகம், பொருளாதாரம், கலை, பண்பாடு போன்ற அம்சங்கள் குறித்த வர்ணனைகளையும் கருத்துக்களையும் கண்ணோட்டங்களையும் வெளிப்படுத்தும் வரைபடங்களாக இருந்து வந்துள்ளன. அங்கதத்துடனும் நையாண்டியுடனும் நகைச்சுவையுடனும் நுட்பமான விமர்சனங்களை மிகுந்த புத்தி சாதுரியத்துடன் அவை முன்வைத்து வந்துள்ளன.
இந்த வகையில், மேற்கூறப்பட்ட கேலிச்சித்திரத்தை வரைந்த ப்பில் லீக், தனது கேலிச்சித்திரத்தைக் கண்டு, ‘புனிதமான இனிய பறவைகள் வீறிட்டெழுந்துள்ளன’ என்று குறிப்பிட்டிருப்பதுடன், இதன் விளைவாக ஆத்திரம் கொண்ட சமூக ஊடகப் பாவனையாளரிடம், காவல் துறையினர் தம்மைக் கையளிப்பது போன்ற ஒரு புதிய கேலிச்சித்திரத்தையும் தற்போது வெளியிட்டுள்ளார். மேலும், பிரச்சினைக்குரிய அந்தக் கேலிச்சித்திரத்தைப் பிரசுரித்த பத்திரிகையின் ஆசிரியர், தமது செயலை நியாயப்படுத்தி இருக்கின்றார். பழங்குடி இனத்தவரின் அலுவல்களுக்கெனத் தமது பத்திரிகை கணிசமான மூலவளங்களை ஏற்கனவே அர்ப்பணித்துள்ளது எனவும், இந்தக் கேலிச்சித்திரம் அவர்களை இழிவுபடுத்தும் ஒன்றல்ல எனவும் அவர் வாதிட்டிருக்கின்றார்.
ஆயினும் பழங்குடியினர் அலுவல்கள் அமைச்சர் Nigel Scullion, The Greens அமைப்பினர், NSW பழங்குடியினர் நில அலுவல்கள் சபையினர், விக்ரோறியன் பழங்குடிப் பிள்ளைப் பராமரிப்பு முகவர் நிலையத்தினர் போன்ற பல அமைப்புகளது பிரதானிகளிடமிருந்தும் ப்பில் லீக் வரைந்த கேலிச்சித்திரத்திற்கு வன்மையான கண்டனங்கள் மேலெழுந்துள்ளன. உள்ளே கனன்றுகொண்டிருக்கும் இனத் துவேஷத்திற்கு இது எண்ணெய் ஊற்றுகின்றது என்றும், பழங்குடியினர் குறித்து ஏனையோரது வகைமாதிரிப்படுத்தலை இது அடையாளப் படுத்துகின்றது என்றும், பழங்குடியினருக்கு அவுஸ்திரேலிய சமூகத்தில் இடம் இல்லையென இது சுட்டிக் காட்டுகின்றது என்றும், இது அசிங்கமானது, அவமானமானது, தவறானது, பாகுபாடானது, இனவெறித்தனம் மிக்கது, மிகுந்த ஏமாற்றம் தருவது என்றும் பலரும் பலவாறு தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
ப்பில் லீக் தீட்டிய கேலிச்சித்திரம் கிளப்பியிருக்கும் எதிர்ப்பலைகளுக்கு, அது வெளியிடப்பட்டிருக்கும் காலமும் ஒரு முக்கிய காரணமாகும். அவரைப் பொறுத்தவரை, போதாத காலமொன்றில் அது பொதுமக்கள் பார்வைக்கு வந்துள்ளது போலும்! பழங்குடி இளம் சந்ததியினர் சிறையிடப்படுதலின் வீதம் அசுர வேகத்தில் அதிகரித்துக்கொண்டு வருகிறமை குறித்தும், சிறைச்சாலைகளிலும், திருத்த நிலையங்களிலும் அவர்கள்மீது காவலர்கள் மேற்கொண்டுவரும் வன்முறைச் செயல்கள் அத்துமீறிப் போய்க்கொண்டிருக்கின்றமை குறித்தும் பலத்த சர்ச்சைகளும் காரசாரமான விவாதங்களும் இடம்பெற்றுவரும் தருணத்திலேயே, பழங்குடியினரைக் கிண்டல் செய்வது போன்ற இந்தக் கேலிச்சித்திரம் பகிரங்கமாகியிருக்கின்றது.
பழங்குடி இனத்தவரின் இளைஞர்களும் சிறுவர்களும் சிறைச்சாலைகளிலும், திருத்த நிலையங்களிலும் சித்திரவதை செய்யப்படும் காட்சிகளை ABC தொலைக்காட்சி தனது Four Corners என்னும் நிகழ்ச்சியில் கடந்த மாதம் காண்பித்திருந்தது. வளரிளம் பருவத்தினர் கை விலங்கிடப்பட்ட நிலையில் முகத்தை மூடிக்கட்டப்பட்டு, இயந்திரக் கதிரையில் பல மணித்தியாலங்கள் பூட்டி வைக்கப்பட்டுள்ளனர். ஆடை களையப்பட்டவர்களாய் அடித்து, உதைத்து, வதைக்கப்பட்டுள்ளனர். கண்ணீர்ப் புகையடித்துக் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான பல துன்புறுத்தல்களும் சட்டவிரோத செயல்களும் அந்நிகழ்ச்சி மூலம் வெளிச்சத்திற்கு வந்தன. இவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக கடந்த ஜூலை பிற்பகுதியில் மெல்போர்ன், சிட்னி, ப்பிரிஸ்பென் ஆகிய நகர வீதிகளில் பெருந்தொகையான மக்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களில் ஈடுபட்டிருந்தனர். உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றான அவுஸ்திரேலியாவில் இளைஞர்களும் சிறுவர்களும் சிறைச்சாலைகளில் அனுபவித்துவரும் துன்ப துயரங்கள் தமக்கு அதிர்ச்சி அளிப்பதாகப் பிரதமர் Malcolm Turnbull கவலை தெரிவித்தார். ஆனால் இச்சம்பவங்கள் தொடர்பான புலன்விசாரணை ஒன்றுக்கு அவர் உத்தரவிட்டாரே தவிர, விரிவான நாடளாவிய தேசிய அரச ஆணைய விசாரணை ஒன்று நிகழ்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் நிராகரித்திருக்கின்றார்.
ஆவுஸ்திரேலியாவில் பழங்குடி மக்கள் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக, பலவித இன்னல்களை அனுபவித்து வருகின்றனர் என ஐ. நா. அமைப்பு நீண்ட காலமாகக் குற்றம் சாட்டி வந்துள்ளது. 2009 ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட ஐ. நா. அறிக்கை ஒன்றில், அன்றைய அரசு பழங்குடி மக்களது சனத்தொகையைக் குறைப்பதற்கென மேற்கொண்டுவரும் கடுமையான நடவடிக்கை பாகுபாடானது என்றும், மனித உரிமைகள் மற்றும் பழங்குடியினர் உரிமைகள் தொடர்பான அனைத்துலகக் கடப்பாடுகளையும் அவுஸ்திரேலிய அரசு மீறி வருகின்றது என்றும் அதில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அன்றைய அரசின் கடுமையான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட பழங்குடியினர் தாம் சொந்த நாட்டுச் சட்டங்களாலேயே ஒதுக்கப்பட்டிருப்பதால், தம்மை அகதிகளாகப் பிரகடனப்படுத்துமாறு ஐ.நா.விடம் கோரிக்கை விடுத்திருந்தனர். 1910 முதல் 1970 வரை இன ஒருங்கிணைப்பு என்ற பெயரில் பழங்குடியினப் பெற்றோரிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்ட 10 முதல் 30 சதவீதமான ‘திருடப்பட்ட தலைமுறையினருக்கு’ (Stolen Generation) அவுஸ்திரேலிய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டது.
தென்கிழக்கு ஆசியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தவர்களெனக் கருதப்படும் பழங்குடியினர், ஐரோப்பியர்களது வருகைக்கு முன்னர் சுமார் 60,000 ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வருவதாகச் சில ஆய்வுகளும், சுமார் 30,000 – 45,000 ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாக வேறுசில ஆய்வுகளும் கூறுகின்றன. இவ்வாறக நீண்ட காலம் அங்கு வாழ்ந்து வரும் ஆதிவாசிகளின் எண்ணிக்கை இன்று சுமார் 460 ஆயிரமாக - நாட்டின் மொத்த சனத்தொகையில் 2 சதவீதமாக – குறைந்திருக்கின்றது. இந்த ஆட்குறைப்புக்கென வெள்ளை இனத்தவரால் மேற்கொள்ளப்பட்ட தந்திரமான வழிமுறைகள் பலவும் மிகக் கொடூரமானவை. மேலும் 1788 – 1868 காலப் பகுதியில் பிரித்தானிய அரசினால் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, அவுஸ்திரேலியாவின் தண்டனைக்குரிய குடியேற்றங்களில் (Penal Colonies) குடியமர்த்தப்பட்ட 162,000 பிரித்தானியக் குற்றவாளிகளே இன்று பெரும்பான்மையினருள் பெரும் பகுதியினராய் இருந்து பழங்குடியினரின் எண்ணிக்கையை நிட்டூரமாகக் குறைத்து வருகின்றனர் - உரிமைகளைப் பறித்து வருகின்றனர் என்பது இன்னொரு வேடிக்கையான தகவல். இன்றைய அவுஸ்திரேலியப் பழங்குடியினர் மத்தியில் வேலைவாய்ப்பின்மை, போதைப்பொருட் பாவனை, குடும்ப வன்முறை என்பன அதிகரித்துக் காணப்படுவதற்கும், இவர்களது சராசரி ஆயுட்காலம் ஏனைய அவுஸ்திரேலியர்களை விட 17 வருடங்கள் குறைந்து காணப்படுவதற்கும் நாட்டில் வேரூன்றியிருக்கும் இனவெறியும், காலாகாலமாக அரசு இவர்கள் மீது காண்பித்துவரும் மாற்றான் தாய் மனோபாவமும் அடிப்படைக் காரணங்கள் என மனிதவுரிமைகள் அமைப்புகள் கருதுகின்றன.
இத்தகையதொரு கசப்பான அரசியல் வரலாற்றுப் பின்னணியில் வாழ்ந்துவரும் அவுஸ்திரேலியப் பழங்குடியினரது தன்மானத்துக்கு, ப்பில் லீக் தீட்டிய கேலிச்சித்திரம் ஒரு சவாலாக அமைந்தமை ஒன்றும் புதினமல்ல. விளைவாக, அவர்கள் தமக்கேற்பட்ட அவமானத்தை வெளிப்படுத்துவதிலும், தமது எதிர்ப்பைத் தெரிவிப்பதிலும் தீவிரம் கொண்டுள்ளனர். அதன் ஓர் அங்கமாகப் பழங்குடியினர் குடும்பங்களும் தந்தையரும் தமது படங்களையும் குடும்ப நினைவுகளையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். நல்ல தந்தையராய் வாழ்ந்திருந்த தமது அனுபவங்களை #IndigenousDads hashtag எனும் அடையாளக் குறியீட்டின் கீழ் பிரசுரித்து வருகின்றனர். அன்பின் நினைவுகளையும் பழங்குடியினர் பண்பாட்டின் பெருமைகளையும் படங்களூடாகவும் குறிப்புகளூடாகவும் வெளியிட்டு, ப்பில் லீக் வரைந்த கேலிச்சித்திரத்தில் பிரதிபலிக்கும் நையாண்டியைக் கேள்விக்குள்ளாக்கி வருகின்றனர். துணிச்சலோடு எழுந்து நின்று தமது உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வருகின்றார்கள்.
குவாண்ரனாமோ ப்பே (Guantanamo Bay) தடுப்பு முகாமில்கூட, அரசியல் கைதிகள் கழுத்திலும், இடுப்பிலும், கைகளிலும், பாதங்களிலும் சங்கிலியால் கட்டப்பட்டு, ஓரளவேனும் நடமாடும் வகையில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அதனைவிட மோசமான முறையில், முகத்தையும் தலையையும் மூடிக்கட்டி, அசைவின்றிக் கதிரையில் பூட்டிக் காவலில் வைக்கப்படும் கொடுமை நவீன முதலாளித்துவ உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றான அவுஸ்திரேலியாவில், பழங்குடி மக்களது இள வயதினர்க்கு நடந்தேறியுள்ளமை அதிர்ச்சியூட்டும் தகவல்! இவர்களைக் கட்டி வைத்துத் தண்டிப்பதற்கு இவர்களது கட்டாக்காலித்தனமே காரணம் எனக் கூறுவது வெறும் கண்துடைப்பு!
உலகெங்கும் ஒதுக்கப்பட்டு வாழ்ந்துவரும் பழங்குடி மக்களதும், விளிம்புநிலை மக்களதும் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வதிவிடவசதி, அரசியல் பிரதிநிதித்துவம் போன்ற துறைகளில் காண்பிக்கப்படும் ஓரவஞ்சனை மிக்க புறக்கணிப்பே இப்பிரச்சினைக்கான தோற்றுவாய் என்பதை ஏனையவர்கள் முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும்! இதற்கு மாற்றுப் பரிகாரமாக ஓரங்கட்டல், சுரண்டல், அதிகாரப் பறிமுதல், பண்பாட்டு வல்லாதிக்கம், வன்முறை ஆகிய ஒடுக்குமுறையின் ஐந்து கோர முகங்களது முகமூடிகள் அகற்றப்பட வேண்டும்! சகல மக்களுக்கும் சமத்துவமான முறையில் நீதி வழங்கப்பட வேண்டும்! அது நிறைவேற்றப்படாவிடத்து, அவுஸ்திரேலியாவில் மட்டுமல்ல எந்தவொரு நாட்டிலும் உண்மைச் சனநாயகத்துக்கான சாத்தியம் இல்லை என்பது சத்தியம்!
உசாத்துணை:
ABC News, Aug. 06, 2016
BBC News, Aug. 08,
BBC News, July 26, 27, 30, 2016
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.