கட்டுரையாளர்: * - இர.ஜோதிமீனா, முனைவர் பட்ட ஆய்வாளர்  அரசுகலைக்கல்லூரி,(தன்னாட்சி)  கோயம்புத்தூர் - 18. -தமிழகம் நன்கறிந்த பாவலராகவும் தமிழ்வளர்ச்சிக்குப் பாடுபடுபவராகவும் இன்று நம்மிடையே வாழ்ந்து வருபவர்; ம.இலெனின் தங்கப்பா (08.03.1934). பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர், பாவலர், படைப்பாளர், தமிழ்ப்போராளி எனப் பல தளங்களில் பயணிப்பவர். பன்மொழி அறிஞர் இளமையிலேயே தன் தந்தையாரிடம் தமிழ்க்கவிதை பற்றியும், பகுத்தறிவுப் பார்வை பற்றியும் அறிந்து கொண்ட இவர் இன்றுவரை அவற்றைக் கடைப்பிடித்து வருகிறார். உயர்நிலைப்பள்ளியில் பதினான்கு ஆண்டுகள் வரலாறும், ஆங்கிலமும் பயிற்றுவித்த இவர், கல்லூரியில் இருபது ஆண்டுகள் தமிழ்இலக்கியம் கற்பித்தார். இளமைக்காலத்தில் ஆங்கிலத்தை விரும்பிக்கற்றார். இயல்பாகவே இயற்கை எழிலில் மிகுந்த நாட்டம் கொண்டவராதலால் 'ஷெல்லி', கீட்ஸ், வோர்ஸ்வொர்த் ஆகியவர்களின் பாடல்கள் இவரை ஈர்த்தன.

இயற்கை நலம்:

இவரது பாடல்களில் இயற்கை, தமிழர்நலம், சுற்றுச்சூழல், வாழ்வுநலம், விழிப்புணர்வு, மாந்தரிடையே நல்லுறவு பேணுதல் போன்ற சிந்தனைகள் மேலோங்கி காணப்படுகின்றன. இவரது இயற்கை ஈடுபாட்டிற்குச் சான்றாக ஒரு பாடல்,எளிமையும், இனிமையும் இயற்கையழகும் பயின்று வருவதைக் காணலாம். (த.நே.45,g.4,5)

“விரிகின்ற நெடுவானில், கடற்பரப்பில்
விண்ணோங்கு பெருமலையில், பள்ளத் தாக்கில்
பொழிகின்ற புனலருவிப் பொழிலில், காட்டில்
புல்வெளியில், நல்வயலில், விலங்கில் புள்ளில்
தெரிகின்ற பொருளிலெல்லாம் திகழ்ந்து நெஞ்சில்
தெவிட்டாத நுண்பாட்டே, தூய்மை ஊற்றே,
அழகு என்னும் பேரொழுங்கே, மெய்யே, மக்கள்
அகத்திலும் நீ குடியிருக்க வேண்டுவேனே.”- (ப.66)

இயற்கையோடு இயைந்த வாழ்வே உயரியவாழ்வு என்பது இவர் கருத்து. மாணவர்களுக்கு இயற்கை அழகையும், சுற்றுச்சூழலைப் பற்றிய புரிதலையும் உணர்த்தும் முறையில் விடுமுறை நாட்களில் மிதிவண்டியில் மாணவர்களோடு பயணம் மேற்கொண்டார்.

இவரைப் பற்றி இவரது மாணவரான பாவண்ணன் கூறுவதாவது: “மாணவர்கள் வெறுமனே கல்வி கற்கும் எந்திரங்களாக இருக்கக்கூடாது என்பது அவர் எண்ணம். இயற்கையைப் பற்றி நிறைய சொல்வார். ஞாயிறுகளில் பல ஆர்வமுள்ள மாணவர்களை அழைத்துக்கொண்டு சைக்கிளிலேயே புதுச்சேரிக்கு அருகில் இருக்கிற இயற்கை வளம் உள்ள இடங்களுக்கு அழைத்துக் செல்வார்” (த.நே.இ.2, ப.21)

ஆந்தைப்பாட்டு:

தொடக்கக்காலத்தில் பாரதியின் கவிதைகளில் ஈடுபாடு இல்லை எனினும் பாரதியின் குயில் பாட்டைப் படித்தபோது அதன் அழகில் மயங்கினார். அவ்வாறு தானும் ஒரு பாட்டைப் பாடவேண்டுமென்று விரும்பி ஆந்தைப்பாட்டை இயற்றினார். குயிலின் குரல் இனிமையானது. ஆந்தையின் குரல் இனியதன்று. அதன் தோற்றமும் அழகன்று என்பதற்காக ஆந்தையை வெறுக்க முடியாது. அன்போடும் நுண்ணுணர்வோடும் இயற்கை மீது ஈடுபாட்டோடும் நோக்கினால் அதனையும் சுவைக்கலாம். சுடுகாடுகளும், இடுகாடுகளும் நமக்கு எத்தனையோ மெய்ப்பொருள்களையும் உணர்த்துகின்றன. இத்தகைய உணர்வுடையது ஆந்தைப்பாட்டு என்கிறார் தங்கப்பா.

“மன்னும் உயிர் வகையுள் மாந்தர் சிறப்பென்பார்:
பன்னுமுயிர் நாகரிகப்பாங்கில் உயர்வென்பார்:
ஆயினுமென் பட்டறிவால் ஆய்ந்தபடி நான் சொல்வேன்
தீயவர்காண் மாந்தர் செயலால் மிக இழிந்தோர்.
கூனல் நிமிர்ந்து குரங்குநிலை போனாலும்
மானிடரின் கீழ்மை மறைக்குந் தரமாமோ?
காட்டு விலங்கினிலும் கானகத்துப் புள்ளினும்
மேட்டுக் குடிமாந்தன் மிக்க இழிஞனடா”.  (உயிர்ப்பின் அதிர்வுகள், ப.56)

புயற்பாட்டு:

பரமக்குடியில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் பெரும்புயல்காற்று அடித்தது. பள்ளியில் உடன் இருந்த ஆசிரியர் ஒருவர் புயல்பற்றிப்பாட இப்பொழுது ஆசிரியர் அம்பிகாபதி இல்லையே என்று கூறியதைக் கேட்டு நான் இருக்கிறேன் என்பது போல கலிங்கத்துப்பரணியின் பாணியில் புயற்பாட்டைப் பாடினார்.

(புயற்பாட்டு – கடைதிறப்பு)

“வங்கக் கடலின் மிசை எழுந்து
வளரும் அலையில் நடைபயின்று
பொங்கி எழுந்து, தனைவளர்த்த
புரையில் கடல்தனை யும் பகைத்துப்
பாறை உருவித்திசை உருவிப்
பாயும் உரம்சேர் கால் வீசிப்
போரை நாடித் துடிப்பார்; தம்
புயம் கொண்டது அப்புயல் அன்றே:”    (மேலது, ப.88)

இவற்றோடு தொடக்கத்தில் சிறுகதை, புதினம் என்று எழுதிய இவர் படைப்பிலக்கியத்தை தன் வாழ்வின் பணி என வரித்துக்கொண்டார். தங்கப்பாவை பொறுத்தவரை அன்பு, எளிமை, மாந்தநேயம் என்று வாழ்பவர்.

வாழ்க்கை:

கொடுத்தலே வாழ்க்கை என்ற எண்ணம் கொண்டவர். அன்பு மலர்வதற்கு அடிப்படை அமைப்பு குடும்பம் என்கிறார். ‘வாழ்க்கை மீது காதல்கொள்வோம்’ என்று பாடும் இவருக்குள் இருக்கும் காதலைப் புரிந்து கொள்ள முடியும். தமது வாழ்க்கையை காதலித்து மணந்து கொண்டார். இவரது துணைவியார் தடங்கண்ணி அம்மையார். பள்ளி தலைமையாசிரியராகப் பணியாற்றியவர். பள்ளி நிர்வாகத்தில் தேர்ந்தவர். ஆகவே புதிய பள்ளிகளைப் புதுவை அரசு ஏற்படுத்தும் பொழுது அப்புதிய பள்ளியின் நிர்வாகத்தைச் செப்பம் செய்யும் முறையில் அரசு இவரை விரும்பி அனுப்பியது. அந்த அளவுக்கு ஆளுமை திறம்மிக்கவராக விளங்கினார். நல்லாசிரியர் விருதும் இவரைத் தேடிவந்தது. பணி ஒய்விற்குப்பின் புதுவை தாய்த்தமிழ்ப்பள்ளியில் ஊதியம் பெறாத ஆசிரியராகப் பணியாற்றினார். தங்கப்பாவோடு ஒத்த இயல்புடையவராக விளங்கினார்.இருவரும் சமூகப் பற்றாளர்கள். இவர்களது மக்களும் நல்ல தமிழ்ப்பற்றுடையவர்கள்.(ப.10)

மொழிபெயர்ப்புப் பணி:

பள்ளியில் பணியாற்றிய போது தன் நண்பர் கோவேந்தன் மூலம் தென்மொழியோடு தொடர்பு கொண்டார். தென்மொழியில் பாடல்களும் கட்டுரைகளும் எழுதினார். தென்மொழியில் பாக்கள் புனைந்தகாலம் முதற்கொண்டே ஆங்கிலத்திலும் பாடல்கள் எழுதினார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் அதிகமான மொழிபெயர்ப்புகளைச் செய்தார். பாரதி, பாரதிதாசன் பாடல்களைச் சிறப்பான முறையில் மொழிபெயர்த்தார். இராமலிங்கஅடிகளாரின் திருவருட்பாவிலிருந்து அறுபதிற்கும் மேற்பட்ட பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ந்தார்.

சங்கஇலக்கியத்தில் ஒன்றான குறுந்தொகையில் பல பாடல்களைத் தெரிவு செய்து“Love stands Alone”,  “என்னும் பெயரில் மொழிபெயர்த்தார். இந்தநூலைப் பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டது. முத்தொள்ளாயிரத்திலிருந்து பல பாடல்களைத் தெரிவு செய்து கொண்டு Red Lily and frightened Birds என்னும் தலைப்பில் எழுதிய நூலையும் பெங்குவின் வெளியிட்டது. இம்முறையில் படித்த கவிதையை உலகறியச் செய்தவர். நாலடியார் முதலிய நீதிநூல்களிலிருந்து தெரிவு செய்த பாடல்களை ‘Tamil Thoughts’ என்னும் பெயரில் வெளியிட்டார்.

தங்கப்பாவின் மொழிபெயர்ப்பு குறித்து இலக்குவனார் திருவள்ளுவன் கூறுவது:“பாட்டின் பொருண்மை குன்றாமல், அதேபொழுது பாட்டின் கட்டமைப்பின் ஒழுங்கு குறையாமல் இதை மொழிபெயர்ப்பது மெத்தவும் கடினம். ஆயினும் தங்கப்பாவின் மொழிப்பெயர்ப்பில் இது சாத்தியமாகிறது” என்கிறார். (www.akaramuthala.in/modern literature/katturai/ மொழிப்பெயர்ப்பறிஞர்). ம.இலெ.தங்கப்பா. பா.இ.நாள்.22.2.2016

இவரது பத்து நூல்களிலிருந்து தேர்ந்தெடுத்த பாடல்களைத் ‘தங்கப்பா பாடல்கள்’‘உயிர்ப்பின் அதிர்வுகள்’ என்னும் பெயரில் தமிழினி வெளியிட்டது. இதுவரை இவர் எழுதிய பாடல் நூல்கள் 13, குழந்தைகளுக்கான பாடல் நூல்கள் 3, கட்டுரை நூல்கள் 8, தமிழில் மொழிபெயர்த்த நூல்கள் 3, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூல்கள் 4, இவர் எழுதிய ‘சோலைக் கொல்லைப் பொம்மை’, என்ற சிறுவர் இலக்கிய  நூலுக்காக சாகித்திய அகாதெமியின்  விருது கிடைத்தது.

தமிழ்த்தேசியம்:

தமிழர் இன நலனில் பெரிதும் ஈடுபாடும் அக்கறையும் கொண்ட இவர் தமிழ்மக்களின் விடுதலைக்கான தமிழ்த்தேசியத்தை வற்புறுத்துகிறார். தமிழர் ஒருங்கு கூடித் தமிழ்பண்பாட்டைப் பாதுகாத்துப் போரிட வேண்டுமென்றும், தமிழர்களுக்கு இன உணர்வு தேவை என்றும் வலியுறுத்துகிறார். இந்திய தேசியம் தமிழன் உரிமைகளை, தமிழர் நலன்களைக் காப்பதில்லை. எனவே இழிந்த தேசியம் எனச்சாடுகிறார்.

ஈழத்தில் விடுதலைக்காக தமிழ்மக்கள் போராடிய பொழுது அந்தப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டு நிறைய பாடல்கள் எழுதினார். போராட்டத்தை இவர் ஏற்றுக்கொண்டவர் எனினும் அது மக்கள் போராட்டமாக இல்லையே என்று வருந்துகிறார்.

“தமிழுக்கொரு தீங்கெனின் புடைத்தெழும் எம் தோள்!
தமிழ்நலங் காக்கத் தாவும் எம் கால்கள்!
தமிழ்க்குடி புரக்கத் தணலும் எம் நரம்பே
ஊறுங் குருதியும் தமிழெனின் மிகுமே
காதல் எந்தமிழ்க்குச் சாதலெங்கடனே”  (g.1)

தமிழ்ப்பணி:

புதுவையில் திருமுருகனாரோடு இணைந்து தமிழ்ப்பணி என்ற முறையில் ஊர்கள் தோறும் நடைப்பயணம் மேற்கொண்டார். புதுவை அரசு தங்கப்பாவுக்கு ‘தமிழ்மாமணி’ விருது அளித்தது. ஆட்சிமொழி தமிழ் என்று சட்டம் இயற்றிய புதுவை அரசு அதைக் கடைப்பிடிக்கவில்லை. குறைந்த அளவுக்கு அரசு ஊழியர்கள் தம் கையெழுத்தைத் தமிழில் இடுவது பற்றிக்கூட அரசுக்குக்கவலை இல்லை. இந்நிலையில் தமிழ்மாமணி என்ற பட்டத்தை அரசுக்கே திருப்பித்தருவதென்று திருமுருகனாரோடு இணைந்து, ஊர்வலமாகச் சென்று விருதைத் திருப்பியளித்தார். தமிழ்வளர்ச்சி நடவடிக்கைக் குழுவில் இணைந்து புதுவையில் வணிகநிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகை வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

‘தெளிதமிழ்’ இதழில் துணையாசிரியராகச் செயல்பட்ட இவர் திருமுருகனார் மறைவிற்கு பின்னர் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தங்கப்பா தன்னை எவ்வகையிலும் முன்னிலைப்படுத்திக் கொள்ளவில்லை. தன்னை ஆய்வாளர் என்று இவர் கருதிக்கொள்ளவுமில்லை. மாந்தநேயமிக்க மாந்தராயிருப்பதையே குறிக்கோளாகf; கொண்டு வாழ்பவர்.

“யான் ஒர் எளியேன்: எனக்கேன் இந்த
நாகரிகமும் நகைதரும் உடைகளும்?
அறிவு, கல்வி, அலுவல் எனும் இவை
ஒரு வகையில் எனை உயர்த்திக் காட்டினும்
அடியேன் அவற்றால் மகிழ்வதே இல்லை.
மேல்தோல் நீக்கிப் பார்ப்பின் ஒர் ஏழை
நாட்டுப்புறத்தான் மனமே என்மனம்.
நாகரிகமாம் நடையும் தோற்றமும்
எனக்குப் பொருந்துமா?”            ( ப.51)
என்று கேட்கிறார்.

தமிழ்ச்சான்றோராய் புதுவையில் வாழ்ந்துவரும் ம.இலெ தங்கப்பா இயற்கை பற்றியும் மனிதவாழ்வில் அன்பு பற்றியும் நூற்றுக்கணக்கான பாடலை எழுதினார். இவரைத் தற்காலத்தில் ஒரு ‘தமிழ்முனிவர்’ எனப் பாராட்டுவது தகும். சங்கப்பாடல்களை உலகறியச் செய்யும் முறையில் சிறப்பாக இவர் மொழிப்பெயர்த்துள்ளார். இவர் மரபுப்பாடல்களை எழுதுவதில் வெற்றி கண்டவர்.

பேராசிரியர் மருதநாயகம் தங்கப்பாவின் பாக்கள் குறித்து மதிப்பீடு இங்கு எண்ணத்தக்கது “அகவல் பாவிலும் விருத்தப்பாவிலும் தேவைப்பட்டபொழுது குறட்பா, வெண்பாக்களிலும் தம் கருத்துகளை அழுத்தமாகவும் தெளிவாகவும் முருகியல் இன்பம் தரும் வகையில் வெளியிடுவதில் வல்லவர். இது பாரதிதாசனுக்கு விருப்பமான பாடுபொருளானாலும் அவரால் பல முறைகளில் கையாளப் பட்டதாயினும் தங்கப்பா அவற்றின் அடிமைத்தனமான தழுவல்களைத் தாராது தம்முடைய தனிமுத்திரை பதித்த பாடல்களையே தொடர்ந்து எழுதிவருகிறார். அத்துறையில் அவர் பெற்றுள்ள முதலிடத்திற்கு முற்றுமான தகுதி அவருக்குண்டு.” (வள்ளலார் முதல் சிற்பி வரை, ப.188) என்று குறிப்பிடுகிறார்;.

தமிழில் பாரதி, பாரதிதாசன் வழியில் வந்த ஒர் அற்புதமான கவிஞர்.ம.இலெ.தங்கப்பா. தமிழில் இவருக்கு இணையாகச் சொல்வதற்கு இன்னொரு கவிஞர் இல்லை.

பார்வைநூல்கள்:
முதன்மைநூல்:
தமிழ்நேயம் இதழ்.45, ஜுலை,2011. ஆசிரியர் கோவை.ஞானி.

துணைநூல்கள்:
உயிர்ப்பின் நிழல், தமிழினி,சென்னை,2006.
கொடுத்தலே வாழ்க்கை,வானகப் பதிப்பகம், புதுவை,2001.
வள்ளலார் முதல் சிற்பி வரை,கவிதா வெளியீடு, சென்னை,2008.
இணையம்:

www.akaramuthala.in/modern literature/

 

கட்டுரையாளர்: * - இர.ஜோதிமீனா, முனைவர் பட்ட ஆய்வாளர்  அரசுகலைக்கல்லூரி,(தன்னாட்சி)  கோயம்புத்தூர் - 18. -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R