நான் ஏன் பிறந்தேன்? என்னைப் படைத்தது யார்? இப்படிப் படைப்பதற்கான காரணம் என்ன? இறைவன் உண்டா? இல்லையா? இறைவன் தான் என்னைப் படைத்தான் என்றால் இத்தனைத் துன்பங்களை ஏன் படைக்கவேண்டும்? இவ்வாறாக வாழ்க்கைக்கு அடிப்படையான கேள்விகளை உள்ளடக்கியது மெய்யியல்.
தத்துவம் என்ற சொல் மெய்யியல் என்பதற்கு நிகரான சொல் இல்லை. தத்துவம் என்பது அது நீ, நீயே பிரம்மம். என்று பொருள் தரும் வடசொல். மெய்யியல் என்பது இதிலிருந்து வேறுபட்டது. வாழ்வின் அடிப்படை என்ன? மனித துயரங்களுக்கு எது காரணம்? என்று ஆராய்வது. வள்ளுவர் கூறுவது போல 'எப்பொருள் எத்தன்மைத்தாயினும்' (355) – 'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது' (423) - மெய்யியல். மெய்ப்பொருளியல் என்பதன் சுருக்கம் மெய்யியலாகும்.
மேற்கத்திய மெய்யியலாளர் மெய்யியல் என்பதை நான்கு கூறுகளாகப் பகுக்கின்றனர். 1. நுண்பொருளியல் (meta pshyics), 2. அளவையியல் (logic), 3. அறவியல் (ethics), 4. அழகியல் (esthetics) என்பனவாகும். வாழ்வின் அடிப்படை எது என்று ஆராய்வது நுண்பொருளியல். ஆய்வுக்கான தர்க்கம் பற்றியது அளவையியல். அறவியலும், அழகியலும் வாழ்வின் பிற கூறுகள். மேற்கத்திய மெய்யியல் கூறுகள் இவை என்றால் இந்திய மெய்யியலையும் இதே கூறுகளை உள்ளடக்கி ஆய்வு செய்யமுடியும். இவ்வகையில் தமிழ் மெய்யியலையும் ஆய்வுசெய்யலாம்.
தமிழ் மெய்யியல் கருத்துகள் பழந்தமிழிலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. இவை பெரும்பாலும் உலகாய்த சிந்தனைகளைக் கொண்டுள்ளதை இனங்காணமுடியும். உலகாய்தமாவது 'கடவுள், மாயை, பிறவிசுழற்சி, ஆன்மா போன்ற சமய நம்பிக்கைகளையும் மீவியற்கை விளக்கங்களையும் இது மறுக்கிறது. உலகாய்தம் இவ்வுலக வாழ்வில் நம்பிக்கையும், உலக உடன்பாட்டுச் சிந்தனையும் கொண்டது. இந்தச் சிந்தனை வாழ்வில் வீடு காண்பதை விட இன்பத்தை முதன்மைப்படுத்துகிறது' (உலகாய்தம், வீக்கிப்பிடியா). இவற்றை முன்வைத்து இவ் ஆய்வு அமைகிறது.
தொல்காப்பியரிடம் இடம் பெறும் தமிழ் மெய்யியலை முதலில் காண்போம். தொல்காப்பியருக்கு வாழ்வில் இன்பம் என்பது அடிப்படை நோக்கம். 'எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வருஉம் மேவற்றாகும்' (தொ.பொரு.29) என்பார். தொல்காப்பியருக்கு இறைவன் தான் முதற்பொருள் என்பதில் உடன்பாடில்லை. முதற்பொருள் என்பது நிலமும் பொழுதும். இவற்றின் அடிப்படையில் தோன்றும் கருப்பொருளில் ஒன்று தெய்வம். தெய்வம் என்பது முழுமுதற் பொருளன்று. மனிதன் படைத்துக்கொண்ட கருப்பொருளில் ஒன்று தெய்வம். தெய்வம் தான் நமக்கான இன்ப துன்பங்களை வகுத்தது என்பது தொல்காப்பியருக்கு உடன்பாடன்று.
உலகத்து உயிர்களின் பரிணாம வளர்ச்சி பற்றிப் பேசும் தொல்காப்பியர்,
'ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அதனொடுநாவே
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
ஆறறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே!' (தொ.பொ.மர.1526)
என்று விளக்கியுள்ளார். ஆறறிவு கொண்ட மனிதன் மனம் உடையவர் என்கிறார். மனம் இருப்பதினால் தான் கேள்விகள் எழுகின்றன. கேள்விகளில் பெரும்பகுதி மெய்யியல் சார்ந்தது. இத்தகைய சிந்தனைகளைக் கொண்ட தொல்காப்பியரை உலகாய்தர் என்று சொல்வது தகும்.
சங்க இலக்கியத்தின் புறநானூற்றில் காணப்படும் பாடல். பக்குடுக்கை நன்கணியார் பாடியது. இவர் தொல்காப்பியருக்கு முற்பட்டவராக இருக்கக்கூடும். எல்லாவற்றுக்கும் கடவுளைக் காரணங்காட்டிப் பேசும் வைதீகர்களை இவர் அடியோடு மறுக்கிறார்.
'ஓர் இல் நெய்தல் கறங்க ஓரீல்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதலுண்கண் பணிவார்பு புறையப்;
படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன்
இன்னாதம்ம இவ்வுலகம்
இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே' - (புறம் 194)
ஒரு வீட்டில் சாப்பறையும், இன்னொரு வீட்டில் மணப்பறையும் முழங்குவதாகிய நிலையை இவர் கேள்விக்குட்படுத்துகிறார். இப்படி வாழ்வைப்படைத்தவன் இறைவனாக இருக்கமுடியாது என்கிறார். உலகம் துன்பமயமானது. இந்நிலையில் 'இன்னாத தம்ம இவ்வுலகம் இனிய காண்கிதன் இயல்புணர்ந்தோரே' என்பதில் வாழ்வின் இயல்பைப் புரிந்து கொண்டு துன்பமயமான இவ்வுலகில் இன்பத்தைக் காண்பதே அறிவுடைமை. கடவுள் மறுப்புபையும், வாழ்க்கையில் இன்பத்தையும் முதன்மைப்படுத்தும் பக்குடுக்கை நன்கணியார் உலகாய்ராக இருக்கமுடியும் என்பது தெளிவாகிறது.
மேலும் ஒரு பாடலில் இடம்பெறும் தமிழ்மெய்யியலைச் சிறிது காணலாம். கணியன் பூங்குன்றனாரின் பாடல். 'தீதும் நன்றும் பிறர் தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோரன்ன' என்கிறார். வாழ்வில் நமக்கு வரும் இன்பங்களுக்கும் துன்பங்களுக்கும் நாமே தான் காரணம். இதற்கு தெய்வமோ வேறு பிறரோ காரணமில்லை. வாழ்க்கை என்பது காட்டாற்று வெள்ளம் போலப் பரவிச் செல்கிறது. வெள்ளத்தில் அகப்பட்ட ஒரு புணை மேட்டிலும் பள்ளத்திலும் அடிபட்டுச் செல்லும். இது போன்றது தான் மனித வாழ்வு. இந்த வாழ்க்கையில் பெரியவரைப் புகழ்தலும் இல்லை. சிறியவரை இகழ்தலும் இல்லை என்கிறார். ஒருவனை உயர்ந்தவன் என்றும் இன்னொருவனைத் தாழ்ந்தவன் என்றும் சொல்வது தவறு. பக்குடுக்கை நன்கணியாரைப் போலவே இவரும் வாழ்க்கைத் துன்பமயமானது என்கிறார். துன்பத்திற்கு இடையில் நாமாக இன்பத்தைத் தேடிக்கொள்ள வேண்டும்.
இதற்கிடையில் கடவுள் என்பவரை உள்ளே சிலர் கொண்டு வருகிறார்கள். இதை முற்றாக தமிழ்ச் சான்றோர் மறுக்கின்றனர். குறுந்தொகையில் ஒரு பாடல் (262). காதலித்தவன் திருமணம் செய்யாமல் காலங்கடத்துகிறான். தலைவி துன்புறுகிறாள். உடல் இளைத்த நிலையில் தலைவியை செவிலித்தாய் வேலனிடம் அழைத்துச்செல்கிறாள். அவன் தெய்வகுற்றம் காரணமாக இருக்கலாம் என்ற அடிப்படையில் மறியை அறுத்து முருகனுக்குப் பலியிடுகிறான். தோழி நயமாகக் கேட்கிறாள். இந்தப் பலி தலைவனைச் சேருமோ? சேராது என்று கருதுகிறாள். அதாவது தலைவியின் துயருக்கு முருகன் காரணமில்லை. தலைவன் தான் காரணம். வேலனுக்கு வெறியாடுவது மூடத்தனம். வாழ்வின் துயருக்கு முருகன் காரணமில்லை என்பது தோழியின் கருத்து. முருகனை வைத்து வேலன் பிழைப்பு நடத்துகிறான். முருகன் வாய்பேசுவான் என்றால் வேலன் இப்படிச் செய்யமுடியாது. முருகன் என்பது இங்குத் தெய்வமில்லை. சங்க இலக்கிய பாடல்களில் உலகாய்த போக்கே முதன்மையாகத் தெரிகிறது. உலகம் தான் உண்மை. வாழ்க்கை தான் உண்மை. இன்ப துன்பங்களுக்கான காரணத்தை வாழ்வுக்குள் வைத்துத்தான் கண்டறியவேண்டும்.
சங்க இலக்கியங்கள் இவ்வாறு சொல்ல அடுத்து வரும் இலக்கியங்களினுள்ளும் இப்போக்கைக் காணமுடியும். வள்ளுவரைக் பொறுத்தவரை தெய்வம் என்பது இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ்ந்தவர். இறந்த பின் தெய்வமாகிறான் என்கிறார்.
'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.' (50)
வள்ளுவர் ஆதிபகவன் பற்றிப் பேசுகிறார். துன்பங்கள் தீர இறைவனை வழிபட வேண்டும் என்கிறார். இறைவன் பற்றற்றவன். பற்றற்ற நிலையில் துன்பமில்லை. காமம், வெகுளி முதலிய பற்றுகளை நீக்கியவருக்குத் துன்பமில்லை. இங்கு என்ன காண்கிறோம், மனித துயருக்கு இறைவன் காரணமில்லை. துயரத்திற்கும் துயரம் நீங்குவதற்கும் நாமே தான் காரணம். இறைவன் என்பவனை ஒப்புக்கொள்வோமாயின் நமக்குத் துயரம் வரக்கூடாது.
'இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்' (1062)
என்கிறார். ஒருவன் பிச்சையெடுக்க வேண்டுமென்று அவனுக்கான விதியை வகுத்தவன் இறைவன் என்றால் அவனும் பிச்சையெடுத்து அலைந்த திரியட்டும் என்கிறார். எல்லாம் வல்லவன் இறைவன் என்றால் இப்படி ஒருவனை பிச்சையெடுப்பவனாக விட்டிருக்க வேண்டாம். பிச்சையெடுக்க வேண்டாம் என்ற சிக்கல் உலகியல் சார்ந்தது. கடவுளுக்கும் இதற்கும் தொடர்பில்லை.
'தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொள்
தாமரைக் கண்ணான் உலகு.' (1103)
என்ற குறள் தலைவியின் மென்தோளில் உறங்குவதைக் காட்டிலும் தாமரைக் கண்ணாணுலகு இன்பமாகுமா? அன்பான இல்லற வாழ்வே சிறப்பு. இறைவன் இங்குத் தேவையில்லை என்பது வள்ளுவர் கருத்து. வள்ளுவத்தினுள்ளும் உலகாய்தமே மேலோங்கியிருப்பதைக் காணமுடிகிறது. வள்ளுவரை ஒரு பகுத்தறிவாளர் என்று கூறுவது பொருந்தும்.
சிலப்பதிகாரத்தில் நாம் காண்பதும் இதே காட்சிதான். கண்ணகி அக்னி தேவனை அழைத்து மதுரையை எரிக்கச் சொல்கிறாள். அக்னிதேவன் எரிக்கிறான். இங்கு மனிதன் ஆணைக்குத் தெய்வம் கட்டுப்படுகிறது. காவல் தெய்வம் கண்ணகிக்கு எதிரே வர அஞ்சுகிறது. கெஞ்சிக்கேட்டு மதுரையை தொடர்ந்து எரிப்பதிலிருந்து தடுத்துக்கொள்கிறது. இங்குத் தெய்வங்கள் கண்ணகி போன்ற மனிதருக்குக் கட்டுபடுகின்றன. இங்கு மனித ஆற்றலே வலுப்பெறுகிறது. சிலம்பிலும் உலகாய்தர் கொள்கையை பார்க்கிறோம். தெய்வம், விதி, ஊழ், வினை, மேலுலகம், நரகம் என்றெல்லாம் கூறும் வைதீகர் கருத்து இவர்களிடம் எடுபடுவதில்லை.
மணிமேகலையில், வறியவர்க்கு அமுதசுரபியைக் கொண்டு பசிதீர்க்கும் ஆபுத்திரனை மேலுலகத்திற்கு வருமாறு இந்திரன் அழைக்கிறான். மேலுலகில் வறியவர் இல்லை என்று கேட்டவுடன் ஆபுத்திரன் தனக்கு அங்கு வேலை இல்லை என்று சொல்லி மறுத்து விடுகிறான். இங்கும் இவ்வுலக வாழ்க்கையே முக்கியத்துவம் பெறுகின்றது.
வள்ளுவர் காலத்திலேயே வறுமை என்ற கொடுமை பெரிதாக எற்பட்டது. மன்னர்களுக்கிடையில் ஏற்பட்ட ஒயாத போர்கள் இதற்குக் காரணம் இந்நிலையில் மனிதன் வேறு வழியில்லாமல் இறைவனிடம் சரணடைய வேண்டி வந்தது. இறைவனை உண்மையென மக்கள் நம்பத்தொடங்கின . துயரங்களுக்கு விதி காரணம். முன்வினை காரணம். துயரம் தீரவேண்டுமானால் இறைவனைச் சரணடையவேண்டும். சைவம் இவ்வாறு மக்களை ஆக்கிமித்தது.
பெரிய புராணம் இதற்கான சான்று தருகிறது. சிவனடியாரைத் தொழவேண்டும். சிவனடியாரும் சிவனும் வேறுபட்டவரில்லை. இறைவனுக்கான பூசை செய்வதில் குற்றம் நேருமானால் அக்குற்றத்தைக் செய்வோர் தண்டிக்கப்படவேண்டும். இறைவனுக்கு இடும் மலர்களை முகர்ந்த அரசி தன் கணவனான அரசனால் மூக்கறுபடுகிறாள். இறைவனுடைய மகிமை பெரியது. இங்கு மனிதர் சிறுத்து விடுகின்றனர். நாவுக்கரசர், சம்பந்தர் போன்ற சிவனடியார்களைப் பார்க்கிறோம். இவர்கள் நூற்றுக்கு நூறு சிவனை அர்ச்சிப்பவர்கள். வாழ்வுக்கு ஆதாரம் சிவபெருமான் அவனையன்றி பிற எதுவும் உண்மையில்லை. இப்படிச் சமய நெறி முன்னுக்கு வந்தது.
இதற்கிடையில் திருமூலரைப் பார்க்கிறோம். உடம்பை வளர்க்க வேண்டும் என்கிறார். ஏழைகளுக்கு உணவிட வேண்டும். நடமாடும் கோவிலாகிய ஒரு வறியவனுக்கு ஒன்று தரமுடியுமானால் அதுவே இறைவனுக்குப் படைக்கும் படையல் என்கிறார். இறைவனை வழிபட ஒரு பச்சிலை போதும். துதிப்பாடல்களால் ஒரு பயனும் இல்லை என்கிறார். உள்ளத்தில் உள்ளவனே இறைவன். அவனைக் கோவில்களில் தேட வேண்டாம் என்கிறார். இறைவனை ஒப்புக்கொண்டாலும் உலகாய்தம் இங்கும் உயிர்ப்போடுதான் இருக்கின்றது.
திருமூலரிடம் நாம் காணும் மெய்யியல் கூறுகள் உலகாய்தத்திற்கு நெருக்கமானவை. அடுத்து வந்த சித்தர்களிடம் மீண்டும் உலகாய்த நெறி முன்னுக்கு வருகிறது. ஆதி உண்டு அந்தமில்லை. நான்கு வேதங்களுமில்லை. கடவுள் தான் இவ்வுலகைப் படைத்துக் காக்கின்றார் என்பதும் உண்மையில்லை. நட்டக்கல்லில் தெய்வமில்லை. நாதன் உள்ளிருக்கிறான். மறுபிறப்பில் நம்பிக்கையில்லை. இவ்வுலகமே உண்மையானது என்ற கருத்து சித்தர்களிடம் மேலோங்குகிறது. இவர்கள் நெறியில் வந்தவர் வள்ளலார். மனித நேயத்தைப் போற்றியவர். பசித்துன்பம் தீர்ப்பதே தலையாய அறம் என்றவர்.
இவ்வாறு தமிழ் வரலாறு முழுவதும் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. தெய்வத்தின் கை சிலசமயங்களில் மேலோங்குகிறது. (சில சமயங்களில் மட்டுமே) பெரும்பாலான சமயங்களில் மனிதன் தான் முன்னுக்கு வருகிறான். இவ்வாறாக தமிழ் இலக்கியங்களில் உலகாய்தமே வலுப்பெறுகிறது .
பார்வை நூல்கள்:
1.திருக்குறள், உலகத்தமிழ் அறக்கட்டளை,2000.
2.தொல்காப்பியம் தெளிவுரை, ச.வே.சுப்பிரமணியம், மணிவாசகர்,2003.
3.புறநானூறு,
4.குறுந்தொகை
5.திருமந்திரம்
இணையம்: http://ta.wikipedia.org.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
கட்டுரையாளர்: * - இர.ஜோதிமீனா, முனைவர் பட்ட ஆய்வாளர் அரசுகலைக்கல்லூரி,(தன்னாட்சி) கோயம்புத்தூர் - 18. -