ஆய்வு: ஞானக்கூத்தன் கவிதைகளில் படிமங்களும் பிற உத்திகளும்புதுக்கவிதைகளின் படைப்பு முறை உத்திகளில் படிமம் ஒன்றாகும்.  ‘Image’ என்னும் சொல்லில் இருந்து உருவெடுத்தது இதுவாகும். கவிஞர் எஸ்ரா பவுண்டு புனைவியக்கக் கொள்கையினை எதிர்த்த இளம் கவிஞர்களை ஒன்று திரட்டி ஒரு அமைப்பை நிறுவினார். பிற கவிஞர்களிடமிருந்து அவர்களை பிரித்துக் காட்டுவதற்காக படிமக் கவிஞர்கள் (Imagist) எனப் பெயர் சூட்டினார். படிமக் கவிஞர்களின் கொள்கையாக பின்வருவனவற்றை வெளியிட்டார். இக்கொள்கை படிமத்தின் இயல்பினை வரையறைகளை விளக்கும் வகையில் அமைகின்றது.

“1. பேச்சு வழக்குச் சொற்களும் கவிதையில் இடம்பெற வேண்டும், கவிதைக்கு அலங்கார சொல்லைவிட சரியான சொல்லே தேவை.
2. ஒரு கவிஞன் தனது தனித்தன்மையை மரபைவிடக் கட்டற்ற கவிதையில்தான் சிறப்பாக வெளிப்படுத்த முடியும் என்று நம்புகிறோம். எனவே, யாப்பிலக்கண அடிப்படையில் எழுப்பப்படும் சந்தங்களைவிட கருத்துத் தொனியின் அடிப்படையில் எழுப்பப்படும் சந்தங்களே சிறந்தவை. அவையே கவிஞனின் மனநிலையைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.
3. கடினமாக இருந்தாலும், சரியாக எழுதப்படும் கவிதையில் தெளிவின்மையோ, கருத்துறுதியற்ற தன்மையோ இருக்காது”

என்பது படிம இயக்கத்தின் முக்கியமான கோட்பாடுகள் ஆகும். தமிழ்ப் புதுக்கவிதைகளில் படிமம், அங்கத உத்திகளுக்கு அடுத்து அதிகமாக கையாளப்படும் உத்தியாக அமைகின்றது. ஞானக்கூத்தன் கவிதைகளில் இடம்பெறும் படிமங்களை பின்வரும் நிலையில் பிரிக்கலாம்.

1.இயற்கைப் படிமங்கள்
2.செயற்கைப் படிமங்கள்
3.காட்சிப் படிமங்கள்
4.சர்ரியலிசப் படிமங்கள்


என்று வகைப்படுத்தி ஆராயலாம். பிற உத்திகளாக குறியீடும், முரண்களும், இருத்தலியமும் அமைந்திடுகின்றன.

இயற்கைப் படிமங்கள்
கவிஞர்கள் தங்களது சிந்தனையை, கருத்தை மனத்தில் காட்சியாகக் கண்டு இயற்கை வடிவங்களைக் கவிதையாக வடிந்திடும் போக்கினை இயற்கைப் படிமங்கள் எனலாம். கவிஞர் ஞானக்கூத்தன் ‘கனவு’ என்னும் கவிதையில் பூதலத்தின் குறும் பற்களாக மலைகளையும், மரங்களை கொக்குகள் போன்று காலூன்றி நிற்பதாகவும், நடக்கத் தெரியாத தடுமாறும் மனிதனாக கடல் அலைகளையும் படிமப்படுத்துகின்றார்.

“மலைகள் என்னும்
குறும்பற்கள்
முளைத்திராத
பூதலத்தின்
கொக்குப் போலக்
காலூன்றி
நிற்கும் மரங்கள்
அதற்கப்பால்
எழுந்து வீழ்ந்து
தடுமாறும்
நடக்கத் தெரியாத கடலலைகள்”


என்று மலைகளையும், மரங்களையும், கடல் அலைகளையும் படிமப்படுத்துகின்றார். நிலத்தின்மீது இருக்கும் வயல்பரப்பினை வில்லைத் தகர எழுத்துக்களால் வெட்டப்பட்ட விளம்பரம்போல இருப்பதாக ‘காலைநடை’ கவிதையில் காட்டுகின்றார்.

“வில்லைத்தகர எழுத்துக்களால்
வெட்டுப்பட்ட விளம்பரம்போல்
நிலத்தின்மீது வயல்பரப்பு”


என்று வயல்பரப்பு காட்சி வெட்டப்பட்ட வில்லைத்தகர எழுத்துக்களோடு இணைத்து படிமப்படுத்தப்படுகின்றது. வேரிலிருந்து தோன்றும் செடியில் மலர்ந்துள்ள பூக்களின் கால்கள் காம்பிலிருந்து இருந்து உருவாகுதலால் மண்ணில்படாமற் இருப்பதாகக் காட்சிப்படுத்துகின்றார்.

“என் கால்சுவடுகள் மண்ணில் படாதவை
தண்ணீரில் நான் பிறந்ததால்”


என்று பூக்களின் வேர்க்கால்கள் தண்ணீரில் பிறந்ததால் மண்ணில் தோயாதவையாக இருப்பதாக ‘பூ’ கவிதையில் கற்பனை செய்கின்றார். பூக்களின் கால்வண்ணம் படிமம் ஆக்கப்படுகின்றது.

‘சூரியனுக்குப் பின்பக்கம்’ என்னும் கவிதையில் எல்லாம்வல்ல இராட்சசர்கள் சூரியனைப் பாறைக்கொண்டு தூளாக்கி பாளங்களாக அறுத்து உணவிற்காக எடுத்துச் செல்கின்றனர். அப்போது சூரிய பாளங்களைத் தூக்கிச் சென்ற காட்சியினை நெல்மணிகளை எறும்புகள் தூக்கிச் செல்லும் காட்சியோடு ஒப்பிட்டு படிமப்படுத்துகின்றார்.

“உடம்பும் பொலிவும் ஒருசேரச்
சோரும் அந்தச் சூரியனை
அள்ளிக்கொண்டு பலர் சென்றனர்
நெல்லைத் தூக்கும் எறும்பைப்போல”


என்று உடைந்து நொறுங்கிய சூரியக்காட்சி படிமம் ஆக்கப்படுகின்றது.

கிராமத்து எல்லைக் காட்சியில் ஊர்ப்புறத்து நீர்நிலைக் கரைகளில் வைக்கப்பட்டு இருக்கும் சிறுதெய்வங்களின் வாகனமான பொம்மைக் குதிரைகள் உண்மைக் குதிரைகளாக மாறுவதற்கு ஆசைபட்டுக் கனைக்கின்றன. இதனால் அதன் வர்ணங்கள் உதிர்ந்து வெளுத்துப்போன பலன்களே அதற்கு கிடைப்பதாகக் ‘காட்சி’ கவிதையில் சித்திரிக்கின்றார்.

“பொம்மைக் குதிரை
ஆசைப்பட்டுக் கனைச்சு
வர்ணம் உதிர்ந்து போச்சு”


என்று பொம்மை குதிரைகளின் நிறமிழத்தலுக்கு புதிய படிமத்தை உருவாக்கிக் காட்டுகின்றார். ‘துஷ்ட சூரியோதயம்’ என்னும் கவிதையில் பின்னிரவில் நட்சத்திரங்கள் தண்ணீர்க் குடம் ஏந்தி தங்கள் நாட்டுக்கு மீள்வதாகவும். இரவின் திருநீறு திரை புலர் காலை சூரிய உதயத்தின் கதிர்கரங்களால் அழிக்கப்பட்டு விண்ணில் புது ஒளி பாய்வதாகவும், தாமரை, நாணி மலர்வதாகவும் படிமக் காட்சிகளாக விவரிக்கின்றார்.

“பின்னிரவின் நட்சத்திரப் பொன்மக்கள்
தண்ணீர்க் குடமேந்தி
தங்கள் திருநாட்டுக்கு மீள்கிறார்கள்!
இரவின் திருநீறு காலைச் சிறுகையால்
மெல்ல அழிபட்டு
விண்ணில் வியப்பொன்று சேர்கிறது
நாணி மலர்கிறது தாமரை. பக்கத்தில்
நெளியும் அலைமீதில்
ஏதும் அறியாப் புது மொட்டு”
என்று பின்னிரவிலிருந்து சூரியோதயம் வரை தோன்றும் இயற்கை நிகழ்வுகள் படிமமாகக் காட்சிப்படுத்தப்படுகின்றன.
வெறிநாய்கடிகளுக்கு ஊசி போடுவதற்காக அரசு மருத்துவமனைகளில் நாய்க்கடிப்பட்ட மனிதர்கள் காத்திருக்கின்றனர். மருத்துவமனை ஆயா தட்டில் வெண்டைக்காய் நிரப்பினாற்போன்று நீளமான ஊசிகளைக் கொண்டு வைத்திடுவதாக படிமப்படுத்துகின்றார்.
“தட்டில் நிறை வெண்டைக்காய்கள்
நிரப்பினாற் போல ஊசித்தட்டை
ஹாஸ்பிட்டல் ஆயா வைத்துச் செல்கையில்
வரிசையில் சலனம்”

என்று வெண்டைக்காயின் நீளத்தோடு நாய்க்கடி ஊசிகளின் நீளம் தொடர்புபடுத்தப்பட்டு படிமமாக்கப்படுகின்றது. ‘மணல்கோடுகள்’ என்னும் கவிதையில் காவிரியாற்றின் கோடை மணலில் காதலி பெயரை எழுதி மல்லிகை இலைகளை வட்டமாக வைத்து, நாணல் பூக்களை நான்குபுறம் தூண்களாக வைத்து அலங்காரம் செய்கின்றார். அப்போது காற்று வந்து அலங்காரங்களைக் கலைத்து விடுகின்றது. காதலியின் பெயரைக் கலைத்த காற்றின் படிமக் காட்சி ஞானக்கூத்தனால் வருணிக்கப்படுகின்றது.

“அப்போது வந்தது காற்று.
மயானத்தில் திருடிய ஊதுவத்தி
புகையுடன் கையுடன் மற்றும்
கைகால் முறிந்த ஒப்பாரி வரிகளுடன்
வேகமாய் வந்தது காற்று
நாணல் கம்பங்கள் விழுந்தன
மல்லிகை வட்டம் கலைந்தது.
துடைக்கும் துணிபோல் நீல மலர்களும்
தொலைவில் புரண்டு சென்றன
கொம்பும் காலும் சுழியும் உள்ள என்
காதலியின் பெயரைக் காற்று கலைத்தது”


என்று காற்றின் அழிவு செயல்பாட்டுத் தன்மைகள் படிமக்காட்சியாக நம்முன் தெரிவிக்கப்படுகின்றது.

செயற்கைப் படிமங்கள்
மனிதனால் உருவாக்கப்பட்டவைகளைச் செயற்கை பொருள்கள் எனலாம். இத்தகைய செயற்கை பொருள்களும் ஞானக்கூத்தன் கவிதைகளில் படிமமாக ஆளப்பட்டு உள்ளன. ‘தலையணை’ என்னும் கவிதையில் அதன் குணங்களும், செயல்பாடுகளும் அங்கத படிமமாக ஞானக்கூத்தனால் கையாளப்பட்டுள்ளன.

“விழுவதால் சேதமில்லை
குலுக்கினால் குற்றமில்லை
மூலைகள் முட்களல்ல
உருவமொர் எளிமையாகும்.
வாழ்க்கையில் மனிதன் கண்டு
பிடித்ததில் சிறந்ததாகும்
தலையணை. அதற்குள் ஒன்றும்
பொறி இயற் சிக்கல் இல்லை”


என்பதுமூலம் பாயில்லை என்றாலும் தலையணை மட்டும் இருந்தால் தூங்கிவிடலாம் என்கின்றார். ‘கல்லும் கலவையும்’ என்னும் கவிதையில் மனிதர்களால் சாவிப் பொத்தல் போன்று கட்டப்படும் பாலம் படிமம் ஆக்கப்படுகின்றது.

“கல்லும் கலவையும் கொண்டு
கரணையால் தடவித் தடவி
சாவிப் பொத்தல் மாதிரித் தெரியும்
ஆட்கள் சிலரால் கட்டப்பட்டாலும்
கட்டிடம் இல்லை பாலம்
முன்னாளெல்லாம் பாலம்
தியானித்திருக்கும் நீருக்கு மேலே
இந்நாளெல்லாம் பாலம்
நிலத்திலும் உண்டு அதன் முதுகெலும்பு”


என்பதன் மூலம் நீரின்மீது கட்டப்பட்ட பாலத்தின் இயல்பும், தற்போது நிலங்களில்கூட முதுகெலும்பு போன்று கட்டப்படும் பாலங்களும் கவிஞரால் சுட்டப்படுகின்றது. மனிதர்களின் கூட்ட நெருக்கடிகளைக் குறைக்கக் கட்டப்பட்ட பாலங்கள் என்னும் கதை மாறிப்போய் மனிதர்களையே பாலங்களாக உருமாற்றி அவர்கள் மீது நடக்கப்போகிறார்கள் என்று எச்சரிக்கையும் செய்கின்றார்.

‘தொலைக்காட்டிக் கல்’ என்னும் கவிதையில் மைல்கல்லைத் தெய்வமாகக் காட்சிப் படிமமாக வருணிக்கின்றார். மைல்கல்லின் நன்மைகள் ஞானக்கூத்தனால் பட்டியல் இடப்படுகின்றன.

“மைல்கல்லே மைல்கல்லே
நீற்றுப்பட்டையும் சந்தனப் பொட்டும் விளங்கும்
தேக்குக் கடவுளைக் காட்டிலும்
துதிக்கப்பட்ட எலுமிச்சைப்
பழத்தைப் பலிகொண்டு
முதலோட்டம் தொட்ட கார்க்கடவுளைக் காட்டிலும்
நல்ல தெய்வம் நீ.  அல்லவோ?
திண்டுக்கல் எத்தனை தூரமென்று
செங்கல்பட்டில் தெளிவாய்க் கூறும்
உனது
தீர்க்கதரிசனம் பரதெய்வம் காணுமோ?”

என்று தொலைக்காட்டிக் கல்லைத் தீர்க்கதரிசனம்மிக்க கடவுளாக படிமப்படுத்துகின்றார்.

காட்சிப் படிமங்கள்
கவிஞர்கள் தாங்கள் கண்ட காட்சிகளை, அதனால் உருவான எண்ணங்களை சொல் ஓவியமாக்கி காட்டுவது காட்சி உத்தியாகும். சித்திரக் கவியின் மறுவடிவமே காட்சி படிமம் என்றும் கூறலாம். ஞானக்கூத்தன் ‘கடற்கரையில் சில மரங்கள்’ என்னும் கவிதையில் மரத்தை சாய்த்துப் பிளந்து துண்டு துண்டாக்கி காட்டுதலைச் சொற்களைப் பிளந்து பயன்படுத்துவதன் மூலம் காட்சி படிமத்தை உருவாக்குகின்றார்.

“அம் ம
ரத்திலொன்றை இன்று நி லைகுலையச் சாய்த்து
தொடர்ந்து பி
ளந்து தொ
டர்ந்து வா
ளாலறுத்
துத் துண்
டு துண்
டு துண்
டு துண்
டாக்கிக் கி
ளை மு
றித்துப் பூ
சிதறி இ
லை சிதறி
எங்கும் அம்மணம் இளவெயிலில் துலங்க
கோடரி குதிக்கத் தூள் தூள் எழுப்ப
நெடுகக் கிடந்த அம்மரப் பெருமையைக்
காற்றுக் கூறக்
கடற்கரையில் சில
மரங்கள்

மை குழம்பிய நீள் இமை சோரும்”

என்று கடற்கரையில் மரங்கள் வீழ்த்தப்பட்டுத் துண்டிக்கப்பட்டக் காட்சியைச் சொற்களைத் துண்டித்துக் காட்டி நேரடியாக கவிதையில் அதனைத் தரிசனம் செய்திட வைத்திடுகின்றார்.

சர்ரியலிசப் படிமங்கள்
ஞானக்கூத்தன் கவிதைகளில் சர்ரியலிச பமடிங்களும் கையாளப்பட்டு உள்ளன. சர்ரியலிசம் அதிர்ச்சியூட்டலையும், புதிரான பதிவுகளையும் மையமிட்ட இலக்கியக் கோட்பாடாகும்.

ஞானக்கூத்தன் ‘எட்டுக் கவிதைகள்’ என்னும் தலைப்பில் ஐந்தாவதாகச் சொல்லப்பட்ட கவிதை சர்ரியலிசபாணி படிமக் கவிதைக்குச் சான்றாகும். திகைப்பூட்டலையும், புதிரானச் செயல்பாட்டையும் மையமிட்டு படைக்கப்பட்டுள்ளது. ஆடைகளற்ற தாயின் உடலில் இருக்கும் மார்பகங்களையும், பிறப்பு உறுப்பினையும் தனயர்களும், தந்தையும் பிட்டு உண்பதாகக் காட்சிப்படுத்துகின்றார்.

“அப்பாவும் பிள்ளைகளும்
உட்கார்ந்தார்கள்
உடுப்புகளைப் புறம்போக்கிப்
படுத்துக் கொண்டாள்
வள்ளிக்கிழங்கின்
பதமாக
வெந்துபோன
அவள் உடம்பைப்
பிட்டுத் தின்னத்
தொடங்கிற்று
ஒவ்வொன்றாக
அவையெல்லாம்”


என்று வள்ளிக்கிழங்கின் வெந்துப்போன தாயின் உடலையே மாமிச பட்சிணிகளாக உண்ணும் செயல்பாடு சர்ரியலிசப் படிமமாக மாற்றிக் காட்டப்படுகின்றது.

குறியீடு
ஞானக்கூத்தன் கவிதைகளில் குறியீட்டுக் கவிதைகளை அதிகம் காணமுடிவதில்லை. சில குறியீடு சார்ந்த கவிதைகளும் அவரால் படைக்கப்பட்டுள்ளன. அங்கத உத்திக்கு தரும் முக்கியத்துவத்தை ஞானக்கூத்தன் பிற உத்திகளுக்கு குறைவாகவே தந்திடுகின்றார்.

நவீன இயந்திர உலகில் பணிச்சுமை காரணமாக மனஅழுத்தத்திற்கு ஆட்படுவோர் அநேகம். ஞானக்கூத்தன் ‘விடுமுறை தரும் பூதம்’ என்னும் கவிதையில் வேலையினைத் தரும் முதலாளியைப் பூதமாகக் குறியீடு படுத்துகின்றார்.

“ஞாயிறுதோறும் தலை மறைவாகும்
வேலை என்னும் ஒரு பூதம்
திங்கள் விடிந்தால் காதைத் திருகி
இழுத்துக் கொண்டு போகிறது.
வயிற்றுப்போக்கு தலைவலி காய்ச்சல்
வீட்டில் ஒருவர் நலமில்லை
என்னும் பற்பல காரணம் சொன்னால்
ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
வாரம் முழுவதும் பூதத்துடனே
பழகிப்போன சிலபேர்கள்
தாமும் குட்டிப் பூதங்களாகிப்
பயங்கள் காட்டி மகிழ்கின்றார்.
தட்டுப் பொறியின் மந்திரகீதம்
கேட்டு கேட்டு வெறியேறி
மனிதர் பேச்சை ஒரு பொருட்டாக
மதியாதிந்தப் பெரும் பூதம்”


என்று பணியிடத்தில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் உருட்டல், மிரட்டலுக்கு அஞ்சியே வேலை செய்ய வேண்டியிருப்பதைக் கவிஞர் காட்டுகின்றார். அதிகார நிர்வாகிகள் இயந்திரங்களாக மாறிப்போய் பூதங்களாக பரிணாமம் பெற்று மிரட்டுவதாகவும் குறியீடுபடுத்துகின்றார்.

“எனக்குக் கொஞ்சம் சோற்றைப் போடேன்” என்னும் கவிதையில் சோற்றுக்காக உடல் உழைப்பு செய்திடும் சப்பட்டை மனிதர்களைக் குறியீடாகக் காட்டுகின்றார். அவர்களைச் சமூகம் எப்படி வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்வதை அங்கதக் குறியீடாகச் சுட்டுகின்றார்.

“எனக்குக் கொஞ்சம் சோற்றைப் போடு
பலவிதமாக பயன்படுவேன்
கதவில்லாத உன் குளியலறைக்கு
மறைப்பு போல நான் இருப்பேன்
வேண்டுமென்றால் என்னைக் கிடத்திப்
பொருள்கள் உலர்த்தலாம் நடுப்பகலில்
அதுவும் இல்லை பெருங்காற்று
வீசும் மாலைக் காலங்களில்
உடம்பின் நடுவில் பொத்தலிட்டுக்
காற்றாடியாகச் சுற்றலாம் நீ
என்றான் அந்தச் சப்பட்டை”

என்று சப்பட்டை மனிதர்கள் குறியீடு மூலம் சுரண்டலுக்கு ஆளாகிடும் உடல் உழைப்பு சார்ந்த மனிதர்களின் அவலநிலையினைக் குறியீடாகப் பதிவு செய்திடுகின்றார்.

முரண்
புதுக்கவிதைகளில் முரண்களும் உத்தியாகக் கையாளப்பட்டு வருகின்றன. ஞானக்கூத்தன் கவிதைகளில் முரண் உத்திகளும் இடம்பெறுகின்றன.
ஞானக்கூத்தன் ‘யாரிடம் சொல்ல’ என்னும் கவிதையில் சிறுவயதிலிருந்து முதுமை வரை குறைகளையே மையப்படுத்தி வாழ்ந்திடும் முரண்பாடான வாழ்வியலைக் காட்டுகின்றார்.

“சிறுவனாக இருந்தபோது நான்
இளைஞர்களைக் குறை சொன்னேன்
இளைஞனாக இருந்தபோது நான்
வயோதிகர்களைக் குறை சொன்னேன்
அப்புறம் எனக்கு வயதாயிற்று நான்
எவரையும் குறை சொல்வதில்லை”


என்று குறைகளின் வாழ்வியல் முரண்பாடுகளைப் பதிவு செய்திடுகின்றார்.

‘யெதிர்ரெதிர் உலகங்கள்’ என்னும் கவிதையில் பிரம்மாவும், விசுவாமித்திரனும் போட்டி போட்டு உயிர்களைப் படைத்ததால் படைப்பு உருவாக்கத்தில் எதிரிடை முரண்பாடுகள் இருந்திடுவதாகக் காட்டுகின்றார்.

“அன்றுமுதல் பிரம்மாவும் விஸ்வாமித்ர
மாமுனியும் படைத்தவைகள் அடுத்தடுத்து
வாழ்ந்துவரல் வழக்காச்சு, எடுத்துக்காட்டு.
மயிலுக்கு வான்கோழி புலிக்குப் பூனை
குதிரைக்குக் கழுதை குயிலுக்குக் காக்கை
கவிஞர்களுக் கெந்நாளும் பண்டிட்ஜீக்கள்”


என்று முரண்பாடுகள் என்பது உயிரினங்களிலும் இடம்பெற்று இருப்பதை எடுத்துக்காட்டி மரபுவாதிகளுக்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கின்றார்.
‘வந்தனம் என்றான் ஒருவன்’ என்னும் கவிதையில் ஒருபொழுதில் வருதல் மறுபொழுதில் மறைதல் என்னும் இயல்பில்லா முகிலைப் பார்த்து வணக்கம் செலுத்திடும் முரண் இயல்பைக் காட்டுகின்றார்.

“வந்தனம் என்றான் ஒருவன்
இளங்காலைக் கதிரைக் கண்டு
நன்றென்றான் ஒருவன் இரவில்
முகிழ்கிற நிலவைக் கண்டு
அவன் நின்றான் கால்கள் ஊன்றி
ஒருபோதில் வருதல் மற்றப்
போதிலே மறைதல் என்னும்
இயல் பில்லா முகிலைப் பார்த்து”


என்று முகிலுக்கு வணக்கம் செலுத்திடும் புதிய முரண்பாட்டினை பதிவாக்குகின்றார். ‘எங்கெங்கும் போவேன்’ என்னும் கவிதையில் நியாயம் என்னை கேள்வி கேட்க முடியாத நிலையில் கவிஞர் இருந்திடும் முரண்பாட்டினைக் காட்டுகின்றார்.

“எங்கெங்கும் போவேன் என்ன
வேண்டுமென்றாலும் பார்ப்பேன்
எங்கெங்கும் போவேன் யாரை
வேண்டுமென்றாலும் பார்ப்பேன்
காலரைப் பிடித்துக் கொண்டு
எங்கெங்கு போனாய் என்று
கேட்குமா நியாயம் என்னை”


என்று யாரும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் கட்டற்ற சுதந்திரத்தை அனுபவித்திடும் முரண்பாட்டுச் செயலை எடுத்துரைக்கின்றார்.

இருத்தலியம்
வாழ்க்கையின் இருத்தல் குறித்த கேள்விகள் மானுட மனங்களில் தொடர்ந்து எழுப்பப்பட்டே வருகின்றன. இத்தகைய வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் என்பது புரியாத புதிராகவே தொடர்கின்றது. ஞானக்கூத்தன் ‘அன்று வேறு கிழமை’ என்னும் கவிதையில் வாழ்வின் நிலையாமை அபதத்தைப் பதிவு செய்கின்றார். பாடையின் கீழ் பதுங்கிச் சென்ற நாயின் விலகல் இல்லாத்தன்மை இருத்தலியலின் மையக் கேள்வியாகக் கவிதையில்  அமைந்திடுகின்றது.

“இடக்கால்கள்
எட்டா நிலையில் மையத்தில்
பதுங்கிப் போச்சு நாய்ஒடுக்கி
நான்கு பேரும் இடக்காலை
நடுவில் நீட்டப் பெரும்பாடை
நழுவித் தெருவில் விழுந்துவிட
ஓட்டம் பிடித்து அவர் மீண்டும்
பாடைதூக்கப் பாடையின் கீழ்
பதுங்கிப் போச்சு நாய் மீண்டும்”

 


என்று வாழ்வின் நிலையாமை அபத்தநிலை கவிஞரால் முன்வைக்கப்படுகின்றது.

ஞானக்கூத்தன் கவிதைகளில் இயற்கை, செயற்கை, காட்சி, சர்ரியலிசம் ஆகிய படிமங்கள் பதிவாகி உள்ளன. குறியீட்டு உத்தியும் அவர் கவிதையில் அங்கத முறையில் இடம்பெறுகின்றன. முரண் உத்தியில் வாழ்வியலின் முரண்பாடுகள் மையப்படுத்தப்படுகின்றன. வாழ்வியலின் இருத்தலியம் பற்றிய மானுடக் கேள்விகளும் ஞானக்கூத்தன் கவிதைகளில் இடம்பெறுகின்றன.

துணை நின்ற நூல்
முனைவர் மு. சுதந்திரமுத்து   
தமிழ்ப் புதுக்கவிதைகளில் படிமங்கள்
தி பார்க்கர், சென்னை.
பதிப்பு – 2001.


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

கட்டுரையாளர்: * - முனைவர் மு. அருணாசலம், தமிழ் இணைப்பேராசிரியர் ,பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி(த), திருச்சிராப்பள்ளி – 620 023 -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R