எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் பிறந்ததினம் ஜூன 27!
தமிழினை முதலாய்க் கொண்டு
தரணியைப் பார்க்க வைத்த
உரமுடை டொமினிக் ஜீவா
உவப்புடன் என்றும் வாழ்க
அளவிலா ஆசை கொண்டு
அனைவரும் விரும்பும் வண்ணம்
தெளிவுடன் எழுத்தை ஆண்ட
தீரனே வாழ்க வாழ்க !
சொல்லிலே சுவையை ஏற்றி
சுந்தரத் தமிழைக் கொண்டு
மல்லிகை இதழைத் தந்த
மாதவன் ஜீவா வாழ்க
தொல்லைகள் பலவும் கண்டும்
துவண்டு நீ இருந்திடாமல்
மல்லிகை இதழை நாளும்
மலர்ந்திடச் செய்தாய் நன்றாய் !
தோளிலே சுமந்து சென்றாய்
சுகமுடன் பணியைச் செய்தாய்
ஆதாலால் அந்த மல்லி
அனைவரின் வசமாய் ஆச்சு
சிறு கதை மன்னனாக
சிறந்து நீ விளங்கினாலும்
பெரு மனங் கொண்டதாலே
பிரபலம் ஆகி விட்டாய்
சரிவெலாம் வந்த போதும்
சலிப்பிலா உள்ளங் கொண்டு
நிலைபெற உறுதி பூண்ட
நீயென்றும் நிலைத்து வாழ்க
கண்ணீரைக் கொண்டு நீயும்
கதைபல எழுதி நின்றாய்
தண்ணீரைக் காட்டித் தானே
தகைவுடை பரிசைப் பெற்றாய் !
உண்மையாய் உழைத்து நின்றாய்
ஊருக்கு வேரும் ஆனாய்
உன்னலம் துறந்து நின்றாய்
உயர்ந்து நீ இருக்கின்றாயே
விண்ணிலே நிலவாய் நின்று
வெளிச்சத்தை காட்டி நாளும்
மண்ணிலே எழுத்தை ஆண்டு
மதிப்பினைப் பெற்று விட்டாய் !
மல்லிகையை வளர்த் தெடுத்த
வல்லவனே நீ வாழ்க
நல்லதமிழ் எழுதி நிற்கும்
நாயகனே நீ வாழ்க
எல்லையிலாப் புகழ் பெற்று
என்றுமே நீ வாழ்க
எழுத்துலகில் ஜீவா நீ
என்றுமே வாழ்க வாழ்க !
நடந்தலைந்து நீ தந்த
நல்ல தமிழ் ஏடெமக்கு
நல்விருந்தாய் இருந் தமையை
நாம் மறக்க மாட்டோமே
தெரிந் தெடுத்து வைத்தபெயர்
சிறந் தோங்கி நிற்கிறது
வரம் பெற்ற ஏடாக
மல்லிகையும் மணக்கிறது !
மல்லிகைப் பந்தல் போட்டு
வளர்த்தனை பலரை நாளும்
கள்ள மில் செயலினாலே
கற்றவர் புகழ நின்றாய்
நல்லதோர் ஏடாய் நாளும்
மல்லிகை வளரச் செய்தாய்
நாட்டிலே உள்ளார் நெஞ்சில்
நாயகன் ஆகி விட்டாய் !
மல்லிகை மணக் கிறது
மன மெல்லாம் மகிழ்கிறது
செல்லு கின்ற இடமெல்லாம்
ஜீவாவைப் பார்க் கின்றோம்
நல்ல தொரு ஏடுதந்த
நற்ற மிழன் ஜீவாவே
எல்லை யிலா இன்பமுடன்
என்றுமே நீ வாழ்க !
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.