அறம்பொருள் இன்பம் வீடு
அகத்தொடும் வாழ்வுங் கூடல்
சிறந்திடும் காதற் பூக்கள்
சிந்திடும் மழலைத் தொட்டில்
நிறைந்திடும் உலக முற்றும்
நீந்துதல் அமுத மாகும் !
மறந்திடும் துன்ப வாழ்வே
மானிடம் வகுப்ப தாமே !
பறந்திடில் பதரும் போகும்
பளிங்கிலும் அதரம் தேயும்
கிறங்கிடில்; கீர்த்த னைக்;கும்
கீறிடும் இசைத்தட் டாகும்
இறங்கிய மனித நேயம்
இற்றுளி யாக்கும் காயம்
நொருங்கிய மனிதத் தின்பால்
நிழலிலும் முட்கள் தோன்றும்!
மதங்களில் மதமே தோன்றும்
மனங்களில் விசரே யாக்கும்
சிதையொடும் நாற்றம் காணும்
சிந்தையிற் தெய்வம் கோடும்
விதையினிற் கந்த கத்தின்
வேரொடும் புகைக்கண் போகும்
கதைகளைப் போல வொண்ணாக்
கற்பனைக் காலம் பாடும்!
இன்தமிழ் யுகத்தின் ஈரம்
இயற்கையின் மறையா கட்டும்
மன்புகழ் அரசே காட்டும்
வான்புகழ் நிறையா கட்டும்
தொன்புகழ்க் காப்பி யம்செய்
தூரிகைத் துயிலா கட்டும்
அன்பிலே சமுதா யத்தின்
அரங்கமே வீடா கட்டும்!
நாளைய உலகம் பொன்செய்
நானிலம் தமிழா கட்டும்
வாளினில் அரக்கம் மேயும்
வஞ்சினம் போய்மா ளட்டும்
தோளினைத் தட்டி வாடா
தொன்தமிழ் அறமா கட்டு;ம்
கோளினைப் படைக்குஞ் செவ்வாய்க்
குவலயம் அறம்வா ழட்டும்!
நீதியின் பூக்கள் நீந்தும்
நெஞ்சிலும் தென்றல் மாந்தும்
சாதியொன் றாகச் சொல்லும்
சரித்திரம் நிலமா கட்டும்
பாதியில் அழிதல் போலும்
பட்டறை தமிழாய் வேண்டாம்
சோதியே அமுதே மண்ணின்
சிந்தனை வரமா கட்டும்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.