1) பதற்ற நிறுவனம்
பழைய பதற்றம் நாளையை நினைத்து தொற்றிக்கொண்டது வானத்தை மேகங்கள் தொற்றிக்கொள்வது போல
கடைசி நாள் எனக்கு கடிகார சுவாச நிறுத்த வைபவம் என்னில்
உறுதியாகிவிட்டது நாளை
'ழ' வை போல உருவாக்கம் அரிது
' அ ' வை போல அழிவு எளிது
உனக்கு தெரியும் கூடவே
புரியாது உனக்கு
2)சோளக்கொல்லை பொம்மைகள்
இளம்சிவப்பு செங்கல்களின் அடுக்குவரிசையால் ஆனதொரு தடுப்பு சுவர்
மணல் மேடை அச்சுவருக்கு அப்பால்
தன் ஒரு காலை சோளக்கொல்லை பொம்மையொன்று மண்ணில் ஊன்றி நீட்டுகிறது மறுகாலை தன் உயரத்திற்கு
மதுபானத்தை தாங்குகிறது அந்த கால்
அந்த சோளக்கொல்லை பொம்மையின் கைதாங்க மற்றுமொரு கால் போன்ற கம்பு
உயிர்பெற்று நிற்கிறது தன் உயரத்திற்கு தன் காலை நீட்டி மடக்கியதில் நனவிலி மனக்கிடங்கில் சோளக்கொல்லை பொம்மை
3)பேச இன்னும் இருக்கிறது
இசையை ரசிக்க மஞ்சள் நிற மாலையில் நானுமில்லாத கடற்கரையில் அமர்ந்திருந்தேன்
குயிலொன்று கூக்கூ என கீச்சிடுகிறது
சங்கொன்று ஒஒஒஒ என சுழலிசையை ரீங்காரமிடுகிறது
கறுப்பு நிற இரவின் பாடல் மட்டும் மீதி
நீலநிற கடலும் தயார்
அமைதியின் கனவுகள் மீதேறி செல்லட்டும் என் காதுகள்
லப்டப் இசைகலைஞன் அமைதியுற்றால் உண்டு தானே உன்னத பேரிசை
நீரோ மன்னனின் இசைக்கு ஆடும் கடலை காணுவேன் வெதுவெதுப்பாய் சாம்பல்கள் மீது ஒலிக்கும் என் இதயக் கொட்டு
இயங்கும் என் உலகம் இசைக்குறிப்பாய் காத்திருப்பேன் காகிதத்தில் என்னை இசைக்கும் கருவிக்காய்
4)வண்ணங்களின் மனம்
நினைவு கபாலங்களின் வழியே வழிகிறது
விதியின் பள்ளத்தை நோக்கி விரைந்தோடுகிறது நீலத் திரவ நினைவுகள்
நிரம்பி வீணாகிறது மறதிமாக்கடலில் கலந்து
திறந்து விட்டிருக்கலாம்தான் மஞ்சள் வண்ண அணைக்கட்டை
மூழ்கியிருக்கலாம் கொஞ்ச காலம் காத்திருந்து
இல்லை இவ்விரண்டும்
உண்டு அவ்வொன்று இவ்வொன்றாய்.
மறதிமாக்கடலின் மேலொரு எறும்புகளின் கட்டுமரம்
கொடுக்குகளில் பார்மலின் ஒழுகும் சதை மடிப்பு
5)இதயத்தின் காளான் பேசுமொழி
அந்தரத்தில் மூளையின் சதைமடிப்புகளை
இலைகளாக கொண்ட விருட்சமொன்றில்
பூட்டு தொங்கி கொண்டிருக்கையில்
அவ்விருட்ச இலைகளே சாவியென பூட்டை
நோக்கிவர
இதயத்தில் காளான் என முளைத்திருந்த
சாவி வேடிக்கை பார்த்தது
திருவிழா கூட்டத்தில் தொலைந்துபோன '
சிறுமி போல.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.