இன்று கவிஞர் திருமாவளவனின் நினைவு தினம். அவரது நினைவாக அவரது கவிதைகளிலொன்றான 'தமிழ்க்கனேடியனும் நானும்' என்னும் கவிதையினை இங்கு எமது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.- ப்திவுகள் -
இருப்பு நிரந்தரமானதல்ல. இருக்கும் மட்டும் பலர் இதனை உணர்வதில்லை. மனிதர் உருவாக்கிய அமைப்பானது பொருளுக்கு முதலிடம் தருகிறது. அதுதான் இருப்பின் பயன் என்பதாக இருப்பினைச் சித்திரிக்கிறது. விளைவு? பொருள் தேடுவதே வாழ்க்கையாகப் பலருக்குப் போய் விடுகிறது. அதிலும் பொருள்மயமான மேற்குலகு நாடுகளின் சமுதாய அமைப்பு மானுட இருப்பினை அந்த அமைப்பின் சிறைக்கைதியாகவே ஆக்கி விடுகிறது. உழைப்பது இருப்புக்கு என்பதாக மாறி விட்டது. அவ்விதம் இருக்க விரும்புவோர், அதுதான் இருப்பின் நோக்கம் என்போர், அதுவே இருப்பின் பயன் என்போர் அவ்விதமே இருந்து விட்டுப் போகட்டும். அது அவர்தம் உரிமை. ஆனால் உண்மைக்கலைஞர்கள், இலக்கியவாதிகள் இருப்பினை இவ்விதம் எண்ணுவதில்லை. இவர்களை பொருள்மயமான இருப்பு என்றுமே சிறைப்பிடிப்பதில்லை. இந்த இருப்பினை இவர்கள் தம் இருப்புக்கேற்றபடி மாற்றிவிடுவதில் வல்லவர்கள்.
இவர்களைச்சுற்றி இருப்பவர்களுக்கு இவர்களைப்பார்த்தால் பரிதாபம். இவர்களைப்பார்க்குபோதெல்லாம் 'இந்தக் கலை, இலக்கியமெல்லாம் சோறு போடுமா? இவற்றால் எவ்வளவு உழைக்கிறாய்?' என்பதாகவே அவர்களது கேள்விகள், அனுதாபங்கள் மற்றும் ஆலோசனைகளெல்லாமிருக்கும்.
எனக்குத்தெரிந்த பலர் இங்கு வந்து பொருளியல்ரீதியில் உயர்ந்து தொழிலதிபர்களாக விளங்குகின்றார்கள். இன்னும் பலர் சொத்துகளைச்சேர்ப்பதிலேயே குறியாகவிருக்கிறார்கள். அவ்விதமிருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியினைத்தருகிறது. மகிழ்ச்சி! ஆனால் அவ்விதம்தான் எல்லாரும் இருப்பார்களென்று அவர்களெண்ணுவதுதான் நகைப்புக்கிடமானது.
மிகுந்த வேடிக்கை என்னவென்றால் தாம் உண்மையான கலை, இலக்கியவாதிகளாகத்தம்மை வெளிக்காட்டிக்கொள்ளும்பலர் கூடத்தம் சொந்த வாழ்வில் இவ்விதம்தானிருக்கின்றார்கள். இவ்விதமான நகல் கலை, இலக்கியவாதிகள் அசல் கலை, இலக்கியவாதிகளைச்சந்திக்கும்போது கலை, இலக்கியம் பற்றி உரையாடுவதில்லை. பொருள் பெருக்குவது பற்றியதாகவே அவர்களும் உரையாடலைத்தொடங்குவார்கள்.
இவர்களில் பலர் என்னைச்சந்திக்கும்போதும் 'பதிவுகள்' இணைய இதழைப்பற்றி ஆர்வமாகக் கேட்பார்கள். அப்படி என்ன ஆர்வமாகக் கேட்கின்றார்கள் என்கின்றீர்களா? அவர்களது கேள்வி இதுதான்: "பதிவுகள் நடத்துவதால் உங்களுக்கு எவ்வளவு வருமானம் வருகிறது?"
இந்நிலையினை வெளிப்படுத்தும் வகையில் அமரர் திருமாவளவன் தனது கவிதையொன்றில் விபரித்திருக்கின்றார். கவிதையின் பெயர்: 'தமிழ்க்கனேடியனும் நானும்'.
கவிதை: தமிழ்க் கனேடியனும் நானும்!
- கவிஞர் திருமாவளவன் -
உடல் உழைத்து
களைத்துச் சோர்ந்த
துளிப்பொழுது அமைதியை
அழித்து
அலறுகிறது தொலைபேசி.
எதிர்முனையில் அவன்.
தீர்மானமாக மறுதலித்தேன்
உன்னுடன் பேசுவதில்
கிஞ்சித்தும்
இசைய மறுக்கிறது
மனது.
முன்னொரு நாளில்
கவிதை பற்றிப் பேசினேன்.
ஒரு கவிதைக்காய்
எவ்வளவு பணக் கிடைக்குமென்றான்
பூக்களின் அழகில் வியந்தேன்
மாலை தொடுத்தால்
பெருந்தொகை
பெறுமென்றான்
காலாற நடந்த
மாலை பொழுதொன்றில்
தேனீர்ச்சாலையுள் நுழைந்தோம்
விலைப்பட்டியலில் குறியாயிருந்தான்
வாழ்வின் இருப்புப் பற்றி
விவாதித்தோம்
ஆயுட்காப்புறுதி செய்து விட்டாயா?
வினாவினான்.
உலகின்
ஒவ்வொரு துளியையும்
பருகத்துடிக்கும் கவிஞன் நான்.
இன்னும் இவனுடன் பேச
என்ன இருக்கிறது?