1. முத்தமிழ் வித்தகர் !
மட்டுநகர் வாவியிலே மீன்கள் பாடும்
மகளிரது தாலாட்டில் தமிழ் மணக்கும்
கட்டளகர் வாயிலெல்லாம் கவி பிறக்கும்
களனிகளில் நெற்பயிர்கள் களித்து நிற்கும்
இட்டமுடன் கமுகு தென்னை ஓங்கிநிற்கும்
இசைபாடிக் குயில்களெங்கும் மயக்கி நிற்கும்
எத்திக்கும் இயற்கைவளம் தன்னைப் பெற்ற
எழில் பெற்ற இடமே கிழக்கிலங்கையாகும் !
ஈழத்தின் கிழக்காக இருக்கின்ற காரைதீவில்
ஞானமாய் வந்துதித்தார் நம்துறவி விபுலாநந்தர்
துறவியாய் ஆனாலும் தூயதமிழ் துறக்காமல்
அமைதியாய் பணிசெய்து அவருயர்ந்து நின்றாரே !
விஞ்ஞானம் படித்தாலும் விரும்பியே தமிழ்படித்தார்
நல்ஞானம் அவரிடத்தில் நயமோடு இணைந்ததுவே
சொல்ஞானம் சுவைஞானம் எல்லாமும் சேர்ந்ததனால்
செல்லுமிட மெல்லாமே சிறப்பவர்க்குச் சேர்ந்தனவே !
ஈழத்தில் பிறந்தாலும் இந்தியா அவர்வாழ்வின்
கோலத்தை மாற்றியதால் குன்றேறி அவர்நின்றார்
பண்டிதராய் இருந்த அவர் பல்கலைக்கழகம் தன்னில்
பலபேரின் பாராட்டால் பதவியிலே உயர்ந்துநின்றார் !
பேராசிரிராய் பெருமையுடன் பணி ஆற்றி
ஆராத காதலுடன் அவர்தமிழை வளர்த்தாரே
தீராத பசியோடு தினமுமவர் தமிழ்கற்று
யாருமே தொட்டிராத யாழ்தொட்டு நூல்செய்தார் !
பலமொழிகள் தெரிந்தாலும் பற்றெல்லாம் தமிழ்மீது
அவர்கொண்டு இருந்ததனால் அறிஞரெலாம் போற்றினரே
இயலிசை நாடகத்துள் என்றுமவர் இணைந்ததனால்
முத்தமிழ் வித்தகராய் எத்திக்கும் திகழ்ந்தாரே !
துறவியாய் மாறினாலும் தமிழினைத் துறக்கவொண்ணா
அறிவுசால் ஆசானாகி அருந்தமிழ் வளர்த்தே நின்றார்
துறைபல கற்றுணர்ந்து தூயநற் பணிகள் ஆற்றி
கறையிலா நெஞ்சங்கொண்டார் கருநிற அண்ணல்தாமும் !
ஆசானாய் அதிபராகி அதியுயர் பதவிபெற்று
மாசறு குணத்தனாக மாண்புறு மனத்தைப் பெற்று
பாசமாம் வினையைப் போக்கும் பக்குவகுருவமாகி
தேசமே போற்றும்வண்ணம் திகழ்ந்தனர் விபுலாநந்தர் !
2. தினமுமே மகிழ்ந்திடலாம் !
அளவுடனே உணவுண்டால்
ஆரோக்கியம் அமைந்துவிடும்
அளவுமீறி ஆகிவிடின்
அனைத்துமே அழிந்துவிடும் !
வாழ்வதற்கும் பணந்தேவை
பணம்மட்டும் வாழ்வல்ல
பணமெண்ணி வாழ்ந்துவிடின்
பாழாகும் வாழ்க்கையது !
படிக்கவேணும் வாழ்க்கையிலே
பலவற்றை யாவருமே
பட்டம்மட்டும் வாழ்வல்ல
பண்பும்சேர்ந்து வரவேணும் !
கோவிலுக்குப் போகவேணும்
குறைசொல்லல் தவிர்க்கவேணும்
பாவம்பற்றி எண்ணாமல்
பலருக்கும் உதவவேணும் !
மூத்தோரை வாழ்க்கையிலே
முதலிடத்தில் வைக்கவேணும்
ஆத்திரத்தை அடக்கிவிடின்
அமைந்துவிடும் நல்லவாழ்வு !
பொய்யென்னும் வார்த்தையினை
பொசுக்கிவிட்டு வாழவேணும்
மெய்யாக வாழ்ந்துவிடின்
மேதினியே மகிழ்ந்துவிடும் !
முன்னோர்கள் மொழிந்தவற்றை
பொன்னாகக் கொள்ளவேணும்
எம்மாலே இயன்றவரை
எல்லோர்க்கும் உதவவேணும் !
யார்மனதும் நோகாமல்
நாமிருந்தால் நலன்பயக்கும்
ஊருலகம் பழிப்பவற்றை
ஒதுக்கிவிட்டால் உயர்வுவரும் !
அப்பாவை அம்மாவை
அழவிடுதல் முறையல்ல
அவராசி கிடைப்பதுவே
அனைவருக்கும் வாழ்வாகும் !
மனம்மகிழ வாழ்வதற்கு
வழிகள்பல இருக்கிறது
தேர்ந்தெடுத்து வாழுங்கள்
தினமுமே மகிழ்ந்திடலாம் !
3. இப்போதும் எண்ணுகின்றேன் !
தப்பேதும் வாராமல்
எப்போதும் காப்பாற்றி
முப்பொழுதும் எமைக்காக்கும்
அப்பாவை அடிதொழுவோம் !
பிடிவாதம் பிடித்தாலும்
பிழைகள்பல செய்தாலும்
கடிவாளம் போடாமல்
கனிவாகக் கடிந்திடுவார்
துணிவாக நடவென்பார்
தூய்மையாய் இருவென்பார்
பணிவாக இருப்பதுவே
பண்பென்பார் அப்பாவும் !
நான்வளர வேண்டுமென்று
தானினைப்பார் எபொழுதும்
தான்வளர நினையாமல்
தானீய்வார் அத்தனையும்
தேன்வண்டாய் பலதேடி
தினம்தருவார் அப்பாவும்
நான்நினைக்கா விட்டாலும்
அவர்நினைப்பே நானாவேன் !
படுக்கையிலே இருக்கையிலே
பக்கத்தில் வந்தமர்ந்து
தலைதடவி முகம்தடவி
தனைமறந்து அவரிருப்பார்
நானுறங்கி விட்டாலும்
என்னருகில் அவரிருப்பார்
எனையணைக்கும் அவரன்பை
இப்போதும் எண்ணுகின்றேன்!
அம்மாவை இழந்தாலும்
அனைத்துமே அப்பாதான்
அம்மாவாய் அப்பாவாய்
அவரன்பில் நான்வளரந்தேன்
அவர்மார்பில் நானுறங்க
அவர்மடியில் தலைதடவ
அவ்வாழ்வை எனக்களித்த
அப்பாதான் என்தெய்வம் !
அப்பாவை நினைக்கின்றேன்
அவர்முகத்தைக் காணவில்லை
எப்போதும் இருந்தவர்தான்
எங்கேயே சென்றுவிட்டார்
தப்பேதும் செய்யவில்லை
தவறாகச் சொல்லவில்லை
அப்பாவோ சென்றுவிட்டார்
அழுதழுது தேடுகிறேன் !
4. எமைப்பார்த்து நகைத்துவிடும் !
இலக்கியங்கள் இலக்கணங்கள் எவ்வளவு படித்தாலும்
தலைக்கனங்கள் போகாமல் தடுமாறி நிற்கும்பலர்
இருக்கின்றார் எம்மிடத்தில் எனநினைக்கும் வேளையிலே
இலக்கியமும் இலக்கணமும் எமைப்பார்த்து நகைத்துவிடும் !
பட்டங்கள் பலபெற்றும் பண்புதனைப் பறக்கவிட்டு
துட்டகுணம் மிக்கோராய் தூய்மையற்று நிற்குமவர்
பட்டங்கள் அத்தனையும் வட்டமிட்டு வானில்செல்லும்
காகிதப் பட்டங்களாகவன்றோ கண்ணுக்குத் தெரிகிறது !
பாடுபட்டுப் படிக்கின்றார் பலபதவி வகிக்கின்றார்
கூடுவிட்டுப் பாய்வதுபோல் குணம்மாறி நின்கின்றார்
கேடுகெட்ட செயலாற்றி கிராதகராய் மாறுமவர்
பாடுபட்டுப் படித்ததெல்லாம் பயனற்றே போகிறதே !
படிப்பறியார் பலபேர்கள் பண்புணர்ந்து வாழ்கின்றார்
பட்டம்பெற்ற படித்தவர்க்கோ பண்புபற்றிக் கவலையில்லை
மனம்போன போக்கிலவர் வாழவெண்ணி நிற்பதனால்
நயமான கல்வியினை நாசம்பண்ணி நிற்கின்றார் !
கீதையொடு குறள்படித்தும் பாதை தடுமாறுகின்றார்
போதையிலே நாளுமவர் புரண்டுமே உழலுகின்றார்
காதிலெவர் சொன்னாலும் கவனமதில் கொள்ளாமல்
மோதியே மிதிப்பதையே முழுமையாய் நம்புகின்றார் !
கற்றதனால் பயனென்ன எனக்கேட்ட வள்ளுவனார்
கண்திறந்து பார்த்தவர்க்கு கருத்துரைக்க வந்ததாலும்
கற்றகல்வி பட்டங்கள் காற்றிலவர் பறக்கவிட்டு
காசையே அணைத்தபடி கண்ணியத்தை பாரார்கள் !
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.