- எழுத்தாளர் யமுனா ராஜேந்திரனின் முகநூல் பக்கத்திலிருந்து -
1. நிஜமான சிறைச்சாலை
- கென் சரோ விவா -
ஒழுகும் கூரையல்ல
ஈரம் கசியும் அசுத்தமான சிறைச்சுவருமல்ல
பாடும் கொசுவின் ரீங்காரமும் அல்ல
சிறைக் கொட்டகையும் அல்ல
உன்னைத் தள்ளிக் கம்பிகளின் பின் அடைக்கும்
காவலாளியின் சாவிச் சத்தமும் அல்ல
மனித ஜீவராசிக்கோ மிருகத்துக்கோ
சகிக்க முடியாத நாற்றமடிக்கும்
ரேசன் சாப்பாடும் அல்ல
இரவின் வெறுமையில் மூழ்கும்
நாளின் சூன்யமும் அல்ல
இதுவல்ல
இதுவல்ல
இதுவல்ல
தலைமுறையாக உனது காதுகளில்
பறையடிக்கப்பட்டு வரும் பொய்தான் அது
ஒரு வேளைச் சோற்றுக்காக
கொலைகாரக் கட்டளைகளாயினும்
சொல்வதைச் செய்யும்
பாதுகாப்பு அதிகாரியின் ஓட்டம்தான் அது
சரியானது அல்ல எனத் தெரிந்திருந்தும்
தீர்ப்பெழுதிக் கொண்டிருக்கும்
நீதிபதியின் புத்தக எழுத்துக்கள்தான அது
அறங்களின் அழிவு
மனசாட்சியை அடகுவைத்தல்
சர்வாதிகாரத்துக்குத் தலையாட்டி
அங்கீகாரம் தருவது
பணிவென்கிற போர்வையில் அயோக்கியத்தனம்
கேவலப்பட்ட ஆன்மாவிலிருந்து ஒளிந்து கொள்வது
அது-
பயத்தினால் நனைந்த கால் சராய்கள்தான்
எமது சிறுநீரைச் சுத்தப்படுத்தக் கூடத்
துணிவற்றிருக்கிறோம்
இதுதான்
இதுதான்
இதுதான்
அன்பான நண்பர்களே, நமது சுதந்திர உலகை
பாழுஞ்சிறைச்சாலை ஆக்குவது இதுதான்
2. எனது புன்னகையைக் கேட்காதே
- அகஸ்டினோ நெட்டோ -
*
எனது
மகோன்னதங்களைப் பற்றியேதும் கேட்காதே
போர்க்களக் காயங்களின் வலியால்
இன்னும் நான் துயருற்றிருக்கிறேன்
எனது
பெருமையைப் பற்றியேதும் கேட்காதே
மனிதகுலத்தின்
அடையாளமற்ற போராளி நான்
வெகுமதிகளும் பெருமைகளும்
தளபதிகளுக்குப் பொருந்தலாம்
எனது வெற்றி
எனது நோக்கத்திற்குக் கிடைத்த வெற்றி
என்னிலிருந்து நான் கொணர்ந்த வெற்றி
எனது புன்முறுவல்கள் அனைத்தும்
எனது கதறல்களில்; இருந்து
நான் அடைந்தது
எந்த வெற்றியின் பின்னும்
புன்னகைகள் இல்லை
உறைந்து இறுகிய முகம் இருக்கிறது
கரடுமுரடான பாறைகளைச் சமப்படுத்தியவன் அவன்தான்
துயரம் தோய்ந்த முகம்
விடாப்பிடியான கடுமையான வேலையின் பின்
அந்தி நோக்கிய உழைப்பின்
பயனற்றுப் போன முயற்சியினால்
வெளிப்படும் துயரம் தோய்ந்த முகம்
எனது சிரசில்
வாகைப்பூக்கள் சூட்டப்படவில்லை
எனது பெயர்
மகத்தான மனிதர்களின் பட்டியலில்
இதுவரை இல்லை
வாழ்க்கையில்
இன்னும் என்னை நான் அடையாளம் கண்டுபிடித்துவிடவில்லை
அடர்ந்த கானகங்களுக்கிடையில்
நான்
போக வேண்டிய பாதைகளுக்கிடையில்
இன்னும் என்னை நான்
அடையாளம் கண்டுபிடித்துவிடவில்லை
நான் வீரர்களைக் கண்டுபிடிக்க வேண்டும்
என்ன விலை கொடுத்தேனும்
நானவர்களைத் தொடர வேண்டும்
பிற்பாடு
அந்தப் புதிய பெயர்ப் பட்டியலில்
என் முகம் பார்க்கலாம்
பனையோலைகள் சூடி-
அதன் பின் உங்களுக்குப் புன்னகைப்பேன்
நீங்கள் கேட்டபடி நான்-
3. நீக்ரோ பாடகன்
- லாங்க்ஸ்டன் ஹூக்ஸ் -
*
என் உதடுகள்
விசாலமாயச் சிரித்துக் கொண்டிருப்பதால்
என் மூச்சுக்குழலின் அடியாழம் வரை
இசை நிறைந்திருப்பதால்
நான் படும் வதையை
நெடுங்காலமாய் நான் சுமந்துவரும் வலியை
ஒரு போதும் உன்னால்
நினைத்துப் பார்த்திருக்கவே முடியாது
என் உதடுகள்
விசாலமாய்ச் சிரித்துக் கொண்டிருப்பதால்
என் அடிமனதின் அழுகையை
ஒரு போதும் உன்னால் கேட்கவே முடியாது
என் பாதங்கள் களி ததும்ப நடனமிடுவதால்
நான் செத்துக் கொண்டிருப்பதை
உன்னால் ஒரு போதும் அறிய முடியாது