ஏதோ நேர்த்திக்காக
வளர்ந்திருக்கும் ஆட்டை
எப்போது வேண்டுமானாலும்
வெட்டிவிடலாம் எனும்
முனைப்போடு
நமது நட்பின் தலையில்
மஞ்சள் நீரை
தெளித்து விடுகிறார்கள்.
உன்னை கெடுப்பதே
நானென்று உன் வீட்டிலும்
என்னைக் கெடுப்பதே
நீ என்று என்வீட்டிலும்
நாளாந்தம்
அர்ச்சனை செய்கிறார்கள்
நமது நட்பைக் கடவுளாக்கி.
உனக்கான
திட்டுதல்களை நானும்
எனக்கான
திட்டுதல்களை நீயும்
தாங்கிக் கொள்கின்ற
அவமான நிமிஷங்களில்
சுமைதாங்கிக் கல்லாகிறது
நமது நட்பு.
கையில் காசில்லா காலங்களிலும்
நெஞ்சில் சுமையில்லாக் கோலங்களோடு
சந்தோசங்களுடன்
வானவில் பறவைகளாய்
அழகாகும் நமது நட்பின்
மகத்துவத்துக்கு
நாம் பகிர்ந்து கொண்ட
துண்டு பீடி சாட்சி.
உன்னால் ,
என்னால் இந்த இரண்டும்
நம்மால் என்று ஆன
நமது நட்பின் கரங்களில்
மலர்கள் கொடுக்காத
முற்களுக்கு ஒருபோதும்
புரிவதில்லை
நட்பின் பூக்களில்
விஷங்கள் வழிவதில்லை
என்னும் உண்மை.
துயரங்களை பங்குவைத்து
தோள் சாயும்
தோழமை இல்லா வாழ்க்கை
சாகரத்தின் நடுவே
துடுப்பிழந்த தோணியாய்
வா நண்பனே
நம்மை கத்தரிக்கும்
கற்பனைகளுக்கு முன்னே
தனித்தனியே இருப்பதால்
வலுவில்லை
ஒன்றானால் பயமில்லை
என்னும் வேதாந்தத்தை
உணர்த்தும்
ஒரு கத்தரிக்கோலின்
இரண்டு துண்டுகளாய்
ஒன்றிணைந்து செயலாகுவோம்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.