- எனது சிறு பராயத்தில் கைதடி, தச்சன்தோப்பிற்கருகே உள்ள கோவிலாக்கண்டி என்ற சிற்றுரில் கிடைத்த அனுபவங்களின் வெளிப்பாடே இக்கவிதையின் தளம்.= குருஜி நித்தி கனகரத்தினம் -
கிராமத்து வீடே
கிளறுகின்றாய் என் நினைவுகளை.
தென்னங்கீற்றும், இளநீரும் பசுக்கன்றும்,
என்னை வா என்கின்றன..
வரவேற்கின்றன.
வைக்கோல் பட்டடைக்குள் ஒளித்த நாட்கள்
வேர்வையில் கலந்த கூலத்துத் தினவகற்ற
வயற்கிணற்றினிற் குளித்த நாட்கள்
வரம்புகளில் தடுக்கி விழுந்த நாட்கள்
கிராமத்து வீடே
கிளறுகின்றாய் என் நினைவுகளை.
தென்னங்கீற்றும், இளநீரும் பசுக்கன்றும்,
என்னை வா என்கின்றன..
வரவேற்கின்றன.
நுங்குடன்;, ஜயாத்துரை
பனை வடலிக் குடிலிற்குள்
நுரைக்க நுரைக்க ஒளித்துவைத்த
கள் மொந்தையில் வாய்
நனைத்த நாட்கள்
நெஞ்சிலின்றும்
கிராமத்து வீடே
கிளறுகின்றாய் என் நினைவுகளை.
தென்னங்கீற்றும், இளநீரும் பசுக்கன்றும்,
என்னை வா என்கின்றன..
வரவேற்கின்றன.
வயட்காட்டில் வண்டிச்சவாரிகள்
எத்தனை எத்தனை?
வரம்புகளில் புல் அரிகையில்
விரலையும் அரிந்து,
வாய் எச்சிலை அரிவாள்களில் அரைத்து,
வாய்மூடி
வெட்டுகட்கிட்ட நாட்களும்
கண்ணில்.
கிராமத்து வீடே
கிளறுகின்றாய் என் நினைவுகளை.
தென்னங்கீற்றும், இளநீரும் பசுக்கன்றும்,
என்னை வா என்கின்றன..
வரவேற்கின்றன.
குரும்பைகள் அடுத்த வளவில்
களவெடுத்த நாளும,;
குஞ்சியப்புவின் அடியுடன்
வாங்கிய பேச்சும,;
அஞ்சாது அடுத்தநாளே
அயல்தோட்டமொன்றில்,
ஆருமறியாமல் சீனிவத்தாழை பிடுங்கி
அங்கிருந்த கினற்றிற்குள் ஒழிந்திருந்து – பசி
ஆறிய நாளும் என் நினைவில்
கிராமத்து வீடே
கிளறுகின்றாய் என் நினைவுகளை.
தென்னங்கீற்றும், இளநீரும் பசுக்கன்றும்,
என்னை வா என்கின்றன..
வரவேற்கின்றன.
அம்மன்கோவிற் தேரடியில், பூசாரி
அம்பலம், பலாசிலையில் தந்த சர்க்கரை,
வெண்பொங்கல்தனை
அள்ளி அருந்தியதும்,
கடலலையில் கை கழுவியதும்
கோவிற் காணிக்குள் நிற்கும்
பலாசமர இலையில்
பீடி சுருட்டி புகைத்ததுவும்
ஆலம் விழுது ஊஞ்சலில்
ஆடிக்களைத்து அயர்ந்ததுவும்
அன்று.
கிராமத்து வீடே
கிளறுகின்றாய் என் நினைவுகளை.
தென்னங்கீற்றும், இளநீரும் பசுக்கன்றும்,
என்னை வா என்கின்றன..
வரவேற்கின்றன.
வற்றிய வயலிலே சப்பத்தனும்,
யப்பான் குறளியுடன்
விராலும் பிடித்துப்
காவோலையிற் சுட்ட நாட்களும்
விம்மும் மனதிலின்றும்.
வாடிக்கை மீன் எடுக்க
கடற்கரை போகையில்
கடலோரம,; செம்பாலும்,
கடுக்காய் நண்டுகளும் அடித்து
கங்குமட்டையிற் சுட்டதும்,
கிராமத்து வீடே
கிளறுகின்றாய் என் நினைவுகளை.
தென்னங்கீற்றும், இளநீரும் பசுக்கன்றும்,
என்னை வா என்கின்றன..
வரவேற்கின்றன.
கயிற்றில் தென்னங்
குருத்தோலை கோர்த்து
கடலிற்குள் கூட்டாக இழுத்து
காலால,; சேற்றிற்குள்
தனைப்புதைத்த
திரளி மீன் பிடித்த
காலத்தை நோக்குகின்றேன்.
கிராமத்து வீடே
கிளறுகின்றாய் என் நினைவுகளை.
தென்னங்கீற்றும், இளநீரும் பசுக்கன்றும்,
என்னை வா என்கின்றன..
வரவேற்கின்றன.
கடைசியாக, ஊர்விட்டு வருகையில்
கொட்டனும், புல்லும் கொண்டு
கிட்டி அடித்து
ஓடும்போது
“ஈச்சுக்கட்டிளைச்சுகட்;
இலவனை பொருத்திக்கட்
டாச்சுகட் டம்புகட்”; என
மூச்சுவிடாது ஓடியது
மனதில் இண்றும் ஓடுகின்றது
வாயும் அதனை
முணுமணுக்கின்றது.
ஏன் மூத்தவர்கள்,
கந்தசாமியும்,நாதனும், யோகனும்,
இந்திரனும்,ஆனந்தனும்,
செல்வராசாவும், பாலசுப்பிரமணியமும்
என் வயதொத்த
கனகசிங்கமும், விமலநாதனும்
கண்முன்னே சுழலவர,
கிராமத்து வீடே
நீ இடிந்துபோனாய் என
என் ஊரிற்குப்போனவர் சொன்னார்.
அம்மன் கோவிலும் அநாதியாய்- மக்களும்
அனாதையாம.;
வயல்காட்டில் மீன் பிடித்து பொரிக்கவும்
வத்தாளங்கிழங்கு களவெடுத்து அவிக்கவும்
பொடிசுகளும் இல்லையாம்.
தென்னங்கீற்றும், இளநீரும், பசுக்கன்றுகளும்
அறியாத பொருட்களாம்.
எண்ணங்களை எப்படி மறப்பேன்
;எப்போ அங்கு வருவேன்?
சொல்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.