இலங்கையில் பேராதனை மிருக வைத்திய துறையில் நாய் பூனைகளுக்கான புதிய வைத்தியசாலை அரசாங்கத்தால் கட்டப்பட்டு மிருக வைத்திய பீடத்திற்கு கையளித்திருக்கிறார்கள். அந்த வைத்தியசாலையில் ஒரு வாரகாலம் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இலங்கையில் மிருக வைத்தியத்துறையில் இருந்து பெற்ற பட்டப்படிப்பு என்னை மெல்பனில் மிருக வைத்தியம் செய்வதற்கு தயார் படுத்தியது. குறைந்த பட்சம் நான் பெற்ற அறிவை சிறிதளவாவது மீண்டும் அங்கு தற்போது பயிலும் மாணவர்களுக்குக் கொடுத்து நான்பட்ட கடனில் சிறிய அளவை தீர்த்துக் கொள்ள நினைத்ததால் இந்த சந்தர்ப்பத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு கண்டி சென்றேன். என்னுடன் முன்னர் படித்த சகாக்கள்தான் அங்கு வைத்திய துறையின் தலைமைப் பொறுப்பில் இருந்ததால் எனது அனுபவம் இனிமையாக இருந்தது.
இங்கே நான் சொல்ல வருவது வேறு ஒரு புது விதமான அனுபவம். நான் அங்கு வைத்தியசாலையின் மேல் மாடி அறையில் இருந்த போது இரண்டு இளம் விரிவுரையாளர்கள் வந்து, “17 வயதான ஒரு நாயின் கால் முறிந்து விட்டது. ஆனால் அதன் எஜமானர் அதற்கு சத்திரசிகிச்சை செய்ய வேண்டாம் என சொல்லிவிட்டார். இந்நிலையில் நாம் என்ன செய்வது.” எனக்கேட்டனர்.
நான் கீழே சென்று பார்த்தேன். ஒரு மத்தியதர வயதுள்ள சிங்களப்பெண் தனது நாயை பிள்ளை போல் தூக்கி வைத்தபடி, ‘கார்க்காரன் அடித்து விட்டு சென்றுவிட்டான். இது வேதனையில் கத்திக்கொண்டு துடிக்கிறது. இதைக் காப்பாற்றுங்கள் ஒபரேசன் செய்தால் இது இந்த வயதில் தாங்காது’ என கண்ணீர் மல்க கூறினார்.
பதினேழு வயதான நாய் என்பது எண்பத்தைந்து மனித வயதிற்கு ஒப்பானது. அவுஸ்திரேலியாவில் இரத்தம், எக்ஸ்ரே பார்த்து, திருப்தி தந்தால் ஒப்பரேசன் செய்வோம். ஒப்பரேசன் செய்யமுடியாது என்றால் கருணைக்கொலைக்கு ஆலோசிப்போம்.
இலங்கையில் கருணைக்கொலை ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. புத்த சமய பிக்குகளும் இதனைப் பிரசாரம் செய்வதால் மக்கள் மத்தியில் கருணைக்கொலைக்கு பெரும் எதிர்ப்புள்ளது. இந்த எதிர்ப்புணர்வினால் அங்கு விசர்நாய்கடியை ஒழிக்க முடிவதில்லை. கட்டாக்காலி நாய்களை கருணை கொலை செய்வதின் மூலம் சீக்கிரமாகவே இலங்கை போன்ற தீவில் விசர்நாய்கடியை ஒழி;த்திருக்க முடியும்.
யாழ்ப்பாணத்தில் அந்தக்காலத்தில் இந்த விசர்நாய்கடி ஒழிக்கும் திட்டத்தில் நாய்களை சுருக்கு கம்பியால் கழுத்தில் சுருக்கு போட்டு இழுத்து வண்டியில் ஏற்றி பண்ணைக்கடலில் வண்டியை மூழ்கடிப்பார்கள். அதன் பின் செத்த நாய்களின் வால்களை வெட்டி வந்து மாநகரசபையில் நாய்பிடிப்பவர்கள் தங்கள் பணத்தை வசூல் செய்வார்கள். இப்படியான மனிதாபிமானமற்ற கொலைகளுக்கு எதிர்ப்பு வந்தது ஆச்சரியமில்லை.
தற்பொழுது இலங்கை அரசாங்கம் பெண்நாய்களை கருத்தடை செய்வதற்கு அனுமதித்ததன் மூலம் வருடத்தில் மூன்னூறு பேர் விசர் நாய்கடிக்கு உட்பட்டு ஏற்படும் இறப்பு தற்பொழுது ஐம்பதாக குறைந்து உள்ளது.
என்னிடம் பரிசோதனைக்கு வந்த விபத்தில் சிக்கிய நாய்க்கு நல்லவேளையாக பின்காலின் கீழ்பகுதிதான் உடைந்திருந்தது. ஆனால் எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்போம் என நினைத்த போது அந்தப் பிரிவில் வேலை செய்பவர்கள் அச்சமயத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
எக்ஸ்ரே எடுக்காமல் ஒபரேசன் செய்யமுடியாது. ஆனால் எலும்பை பொருத்தவேண்டும். அதாவது பதினெட்டாவது நூற்றாண்டுக்கு முன்பு செய்த மருத்துமுறைகளை பாவிக்கவேண்டும் என்ற கட்டாயத்துக்கு நான் தள்ளப்பட்டேன்.
ஆதிகாலத்தில் சாரயத்தை குடிக்கக் கொடுத்துவிட்டு கால்முறிந்தவர்களின் முறிந்த காலை கயிற்றால் கட்டி பலமணிநேரம் தொங்கவிடுவார்கள். அவர்களது உடல் நிறை முறிந்த இடத்தில் உள்ள தசைகளை இழுத்து களைக்கப்பண்ணும். இதன்மூலம் முறிந்த எலும்பை சுற்றி சுருங்கி இருந்த தசைகள் இழுபடுவததால் ஒன்றோடு ஒன்றாக ஏறி இருந்த எலும்பின்பகுதிகள் பழைய இடத்திற்கு வரும். அதன் பின்பு பலகையை போட்டு இறுக்கி கட்டுவார்கள் இதை விட எங்கள் ஊரில் சோற்றை வைத்து துணியால் கட்டினால் காய்ந்து சுருங்கிய சோறு கெட்டியாக காலை பிடித்துக்கொள்ளும் போது முறிந்த எலும்புகளில் அசைவு ஏற்படாது. ஆறு கிழமைகளில் முற்றாக பொருந்திக்கொள்ளும்.
ஓட்டகப்புலத்தாரிடம் புக்கை கட்டுவதும் ஈறப்புலத்தில் புக்கை கட்டுவதும் இந்த வைத்திய முறைதான். இங்கே முறிவு எப்படி இருந்திருக்கும என்ற ஊகத்தில்தான் வைத்தியம் நடப்பது வழக்கம். மேலும் நேரான எலும்புகளுக்கு இந்த முறை பொருந்தி வரும். ஆனால் மூட்டுகளுக்கு அருகில் முறிவு நடந்தாலோ அல்லது மூட்டுக்குள் முறிவு இருந்தாலோ இந்த புக்கை விடயம் சரிவராது.
நானும் இக்கால ஊக அடிப்படையிலான மருத்துவத்திற்கு ஆளாகியிருந்தேன் சிறு வயதில் ஆட்டை துரத்துவதற்காக கிணற்றுக்கட்டல் நடந்து சென்ற கால் தவறி கிணற்றில் விழுந்தபோது எனக்கும் ஒட்டக புலத்தில் ஆறுகிழமை புக்கை கட்டி அதன் பின் ஆறுகிழமை தைலம் போட்டு உருவினதால் எனது முதுகு குணமாகியது.
நாயின் விடயத்துக்கு வருவோம்
கால்முறிந்த நாயின் வலிக்கு மருந்து கொடுக்க வேண்டும் எனச் சொல்லி மயக்க மருந்தை கொடுத்துவிட்டு முறிந்த பின்காலை கயிற்றில் கட்டி நாயை தொங்கவிட்டேன். புக்கைக்கு பதிலாக வைத்தியசாலையில் மனிதர்களுக்கு பரிஸ் பிளாஸ்ரர் பாவிப்பார்கள். ஆனால் நாய்கள் அந்த பிளாஸ்ரரை கடித்து தின்றுவிடும் என்பதால் அவுஸ்திரேலியாவில் நாங்கள் பைபர் காஸ்ட் எனப்படும ஒன்றை பாவிப்போம். அது இலங்கையில் இல்லாததால் கண்டியில் பார்மசியில் இருந்து பரிஸ் பிளாஸ்டரை வாங்கி வரச் சொல்லி, அந்தப் பெண்மணி அதனை வாங்கி வந்தார்
கொதிதண்ணீரில் நனைத்து அந்த நாயின் காலில் பிளாஸ்டரை போட்டுவிட்டு ‘நாய்க்கு வேண்டிய அளவு சாப்பாடு கொடுக்க வேண்டும். இல்லாவிடில் இந்த பிளாஸ்டரை நாய் தின்று விடும்’ எனச் சொன்னேன்.
மலர்ந்த முகத்துடன் ‘மாத்தையாட்ட பின் சித்தவெனவா’ (ஐயாவுக்கு புண்ணியம் கிடைக்கட்டும்) என சிங்களத்தில் சொல்லி விட்டு மீண்டும் அந்த நாயை பிள்ளையைப் போல் தூக்கியபடி அந்தப் பெண் வெளியேறினாள்
இளம் விரிவுரையாளரகிய பெண் ‘ஆறு கிழமையில் என்ன நடந்தது என்பதை அறிவிக்கிறேன்’ என்றாள்
அவுஸ்திரேலியாவில் பணத்துக்காக வைத்தியம் செய்த நான் இன்று இங்கு புண்ணியத்துக்காக வைத்தியம் செய்தேன்’ என்றேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.