'விடியல்' பதிப்பகத்தின் மூலம் மார்க்சிய நூல்கள் (மொழிபெயர்ப்பு நூல்களுட்பட) பதிப்பித்து வந்தவர் தோழர் 'விடியல்' சிவா என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வந்த கோயமுத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் உப்பிலிப்பாளையத்தைச் சேர்ந்த சிவஞானம் அவர்கள். ஆரம்பத்தில் நக்சல்பாரி இயக்கத்தில் முழுநேர ஊழியராகச் செயற்பட்டவர் இவர். அண்மைக்காலமாகவே புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவர் இன்று, ஜூலை 20, 2012, காலை 10.30மணிக்குக் காலமானார். இவரது இழப்பு தமிழ் இலக்கிய உலகுக்கு, குறிப்பாக முற்போக்குத் தமிழ் இலக்கிய உலகுக்கு மிகப்பெரிய பேரிழப்பே. அவரது பிரிவால் வாடும் தோழர்கள், குடும்பத்தவர்களுக்குப் பதிவுகள் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது. அத்துடன் இணையத்தில் அவரது மறைவு பற்றி வெளியான செய்திகளையும் மீளப்பிரசுரித்துத் தன் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறது. - ஆசிரியர் -
அருண் (தமிழ் ஸ்டுடியோ) : பதிப்புலகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு
தன்னுடைய விடியல் பதிப்பகம் சார்பாக மார்சியம் சார்ந்த பல புத்தகங்களையும், தமிழில் வெளிவர வாய்ப்பில்லாத பல புத்தகங்களையும் பதிப்பித்த நல்ல மனிதர் தோழர் சிவா. இவரது புத்தகங்களே எனக்கு ரஷ்ய போராளிகளின் வரலாறு தெரிய மிக முக்கிய காரணம். அவர் இன்று இயற்கை எய்திவிட்டார். கேன்சர் அவரை இனியும் விட்டுவைக்க விரும்பவில்லை போலும். அவரது உடல் கோவை அரசு பொது மருத்துவமனைக்கு கொடுக்கப்பட்டது என்று நண்பர் ரமேஷ் சொன்னார். மரணம்தான் எத்தகைய கொடியது.
இனியொரு.காம் தளத்திலிருந்து: மானுட விடுதலைக்கான விடியலை எதிர்வு கூறும் வகையிலான படைப்புகளை, மொழிபெயர்ப்புகளை வெளியிட்ட 'விடியல்' சிவாவின் மறைவு பேரிழப்பு.
விடியல் சிவா இந்திய நேரப்படி இன்று காலை 10.30 க்கு காலமானார். விடியல் பதிப்பகத்தை நிறுவனரும் செயற்பாட்டாளருமான தோழர் சிவஞானம், ஆரம்பத்தில் நக்சல்பாரி இயக்கத்தில் முழு நேர ஊழியனாகச் செயற்பட்டவர். பல மார்க்சிய நூல்களை மொழிபெயர்த்து பதிப்பித்து வெளியிட்டவர் தோழர் சிவஞானம். தோழர் விடியல் சிவாவின் இழப்பின் துயரத்தை அறிவுலகின் ஏனையோரோடு இனியொருவும் பகிர்ந்துகொள்கிறது.
'குளோபல் தமிழ் நியூஸ்' தளத்திலிருந்து... விடியல் சிவாவுக்கு அஞ்சலி குளோபல் தமிழ்ச் செய்திகளும் யமுனா ராஜேந்திரனும்-
- 30 ஜூலை, 2012 - தமிழகத்தின் கோயமுத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தைக் கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டை என்பார்கள். அந்த ஊருக்கு வந்து பொதுக்கூட்டத்தில் பேசியிராத இந்திய கம்யூனிச இயக்கத்தின் முதுபெரும் தலைவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்த ஊரின் முகவரியோடு தமிழகத்தின் முக்கியமான பதிப்பகம் ஒன்றும் இயங்கி வந்தது. அந்தப் பதிப்பகத்தைத் தோற்றுவித்தவர் சிவஞானம். தோழர் சிவா எனவோ விடியல் சிவா எனவோ அவரது நண்பர்களாலும் தோழர்களாலும் அழைக்கப்பட்டவர். இடதுசாரி அரசியலில் நம்பிக்கையுள்ளவர்கள் அனைவருக்கும் அவரையும் அவர் பதிப்பித்த நூல்களையும் நிச்சயம் பரிச்சயமிருக்கும். தனது அரசியல் வாழ்வின் ஆரம்ப நாட்களில் பெரியாரியத்தினால் ஆகர்ஷிக்கப்பட்ட தோழர்.சிவா பிற்பாடு மாவோயிச அரசியலில் ஈடுபாடு கொண்டு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியில் செயல்பட்டார். அந்த அமைப்பின் கருத்தரங்குகளில் மாவோவின் தொகை நூல்களை விற்பவராகவும் கட்சிப் பிரசுரங்களை விற்பவராகவுமே எனக்கு அவரது அறிமுகம் அமைந்தது.
சிவா உருவாக்கிய விடியல் பதிப்பகம் தமிழின் உதாரணமான பதிப்பகம் எனலாம். கிளாசிக் மாரக்சிய நூல்கள் எனச் சொல்லாத் தகும் மாவோ, டிராட்ஸ்க்கி போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றோடு அவர் மொழியாக்கிப் பதிப்பித்த சே குவேராவின் நூல்கள், பெனான், வால்ட்டர் பெஞ்சமின் போன்றோரது நூல்கள் தமிழ் பேசும் உலகிலுள்ள எந்த இடதுசாரி வாசகனதும் வீட்டு நூலகத்தில் இடம்பெறும் நூல்களாக இருந்தன.
அவரது மொழிபெயர்ப்புத் தேர்வுகள் மிகுந்த சமகால உணர்வுடன் இருந்தன.
தலித்தியம், ஈழதேசியம் தொடர்பான கோட்பாட்டு நூல்களையும் புனைவுகளையும் அவர் பதிப்பித்தார். இருபத்தி ஐந்து ஆண்டுகால தமிழ் அறிவுலக வரலாற்றை, நடந்த விவாதங்களை விடியல் பதிப்பகத்தைக் குறிப்பிடாமல் எவரும் எழுதமுடியாது. ஈழவிடுதலைப் போராட்டத்தில் அதி ஈடுபாடு கொண்டவர் விடியல் சிவா. ஈழப் பெண் போராளிகளின் கவிதைகளையும் போராளிகளின் சிறுகதைகளையும் அவர் வெளியிட்டார்.
தமிழகம் சென்ற தருணங்களில் எல்லாம் அவரைச் சந்தித்திருக்கிறேன். அரசியல் முடிவுகளில் உணரச்சிகரமானவர் அவர். எமது சந்திப்புகள் எதுவும் பிணக்குகள் இன்றி முடிந்ததில்லை. மாவோவின் மீது என்றும் எனக்கு வழிபாட்டு உணர்வு இருந்தது இல்லை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பாலான அவரது எதிர்மறைப் போக்கிலும் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. சில வேளைகளில் எமக்கு இடையில் இருந்த தூரம் மற்றும் கால இடைவெளியும், பரஸ்பரம் கொண்டிருந்த முன்மதிப்பீடுகளும் கூட எமக்கிடையிலான கருத்து மாறுபாட்டுக்குக் காரணமாக அமைந்திருக்கலாம்.
கசப்பான அனுபவங்கள் கடந்த காலத்துக்கு உரியவை. அவரது நினைவுகளுடன் அனைத்தும் புதைந்து போக வேண்டும் எனவே அவரது சமூகப் பங்களிப்பை உணர்ந்தவர் கருதுவர்.
கடந்த பல மாதங்களாக கடுமையான உடல் சுகவீனத்துடன் போராடிவந்த தோழர். சிவா 30.07.2012 திங்கள் கிழமை இந்திய நேரம் மதியம் 02.00 மணி அளவில் கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இயற்கை எய்தினார். தனது இறுதி ஆசைகளில் ஒன்றாகத் தனது உடலை கோவை மருத்துவக் கல்லூரிக்கு வழங்குமாறு கோரியிருந்தார் விடியல் சிவா.
அவர் பதிப்பித்த புத்தகங்களின் பக்கங்களைப் புரட்டும்போது அவரது நினைவுகள் நமக்குள் மெல்ல விரிந்து கொண்டேயிருக்கும். திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து மறைந்த தோழர் சிவாவுக்கு அவர்களது தோழர்களும் நண்பர்களும்தான் உறவுகள். தமிழ் கலாச்சார அரசியல் உலகுக்கு அவர் விட்டுச் சென்றிருக்கும் அரிய பங்களிப்பு விடியல் பதிப்பகம்.
அவருக்கு எமது தலைசாய்ந்த அஞ்சலி.
'தமிழ் காமிக்ஸ் உலகம்' தளத்திலிருந்து... விடியல் பதிப்பகம் தோழர் சிவா - ஒரு காமிரேட்டின் இறுதி அஞ்சலி
காமிரேட்ஸ், இன்று மதியம் உணவு உண்ண ஆரம்பிக்கும்போது ஒரு தொலைபேசி அழைப்பு. ஓரிரு முறை மட்டுமே பேசியுள்ள அந்த நண்பர் அழைக்கும்போதே ஏதோ முக்கியமான விஷயம் என்று தெரிந்து கொண்டேன். ஒரே வாக்கியத்தில் முடித்து விட்டார் "விடியல் பதிப்பக தோழர் சிவா இஸ் நோ மோர்" என்பதே அந்த தகவல். வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை என்றாலும் கூட முயற்சிக்கிறேன்: வெய்யில் தகிக்கும் ஒரு மதிய நேரத்தில் நிழலில் இளைப்பாற வந்தவனின் தலையில் ஒரு பெரிய ஐஸ் கட்டியை எடுத்து வைத்தால் எவ்வளவு வலிக்குமோ, அவ்வளவு வலி (More of a pain in the Mind, than in the Body). இத்தனைக்கும் சிவா சாருக்கும் எனக்கும் அந்த அளவுக்கு பழக்கம் கூட கிடையாது. ஒரு எட்டு அல்லது பத்து முறை சந்தித்தது இருக்கிறேன், அவ்வளவுதான். ஆனால் ஒவ்வொரு சந்திப்புமே சிறு வயதில் பள்ளி விடுமுறை நாட்களில் சாப்பிட்ட நாவல்பழத்தின் சுவை எப்படி இன்றும் நாவில் தங்கி இருக்கிறதோ, அப்படி நினைவில் தங்கி இருக்கிறது, Such was his Presence.
விடியல் பதிப்பகம் - ஒரு அறிமுகம்: தீவிர வாசிப்பிற்கும் எனக்கும் கடந்த எட்டு ஆண்டுகளாகவே ஏழாம் பொருத்தம். ஆகையால் அந்த தளத்தில் என்ன நடக்கிறது என்பதை பிறர் சொல்லி தெரிந்து கொள்வேனே ஒழிய நேரிடை பழக்கம் கிடையாது. தமிழ்க் கடவுள் முருகன் அப்படி "என் நாடு, என் மக்கள், எனக்கென்று ஒரு உலகம்" என்று அமைத்துக் கொண்டாரோ அப்படியே நானும் 2008-ம் ஆண்டு தமிழ் காமிக்ஸ் உலகம் என்றொரு சிறிய இணையதளத்தை துவக்கினேன்.அங்கொன்றும், இங்கொன்றுமாக ஓரிரு பதிவுகளை இட்டுக்கொண்டு இருக்கும்போதுதான் பல காமிரேட்டுகள் அறிமுகம் ஆயினர். பலர் மறக்கவே முடியாத நண்பர்களாகவும், பலர் மறக்க வேண்டிய நபர்களாகவும் மாறி இருக்கும் இந்த சூழலில் ஒரு நாள் காமிரேட் கனவுகளின்காதலன் ஷங்கர் விஸ்வலிங்கம் அவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும்போது அவர் ஒரு புத்தகத்தை குறிப்பிட்டு, அந்த புத்தகம் Any-Indian.com என்கிற தளத்தில் விற்பனைக்கு கிடைப்பதாகவும், அது ஒரு தமிழ் மொழிமாற்று ஃகிராபிக் நாவல் என்றும் அறிமுகப்படுத்தினார். அப்போது அந்த புத்தகத்தை உடனடியாக வாங்க இயலவில்லை. சுமார் ஆறு மாதங்கள் கழித்து கோவை நகருக்கு சென்றபோது அங்கேதான் அவர் குறிப்பிட்ட அந்த புத்தகங்களை வாங்க முடிந்தது. இவையே அந்த புத்தகங்கள்:
அதுவரை மர்ஜானே சத்ரபி பற்றி கேள்விப்பட்டு இருந்தும், அந்த படத்தின் டிவிடி இருந்தும், ஆங்கில புத்தகம் கைவசம் இருந்தும் (நன்றி இயக்குனர் மிஷ்கின்) ஏனோ படிக்கவே தோன்றவில்லை. ஆனால் தமிழில் வந்துள்ளது என்பதால் பரிட்சார்த்த முயற்சியாக சில பக்கங்களையாவது படிக்கலாம் என்று நினைத்து பயண களைப்பு ஆளை அசத்தும் ஒரு கோவை இரவில் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் அந்த கதையின் நேர்த்தி என்னை இரண்டு பாகங்களையும் அதே இரவில் படிக்க தூண்டியது (இந்த கதையின் தமிழாக்கம் குறித்து இப்போதும் எனக்கு மாற்றுக்கருத்தே உண்டு என்பதையும் இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன்).
மறுநாள் காலையில் வேறு அலுவலக வேலைகள் இருந்தும், கோவையில் இருக்கும் என்னுடைய நண்பரும், வழிகாட்டியுமான யாழ் நூலக தோழர் துரை அவர்களை சந்தித்து இந்த விடியல் பதிப்பகம் பற்றியும், அதன் பதிப்பாளரைப்பற்றியும் விசாரித்தேன். அவரை சந்திக்க நான் ஆவலாக இருக்கிறேன் என்பதை தெரிந்து கொண்ட துறை அவர்கள் அன்று மாலையே அவரின் வெற்றிக்கு அழைத்து சென்றார். காமிரேட் கோவை பிரகாஷ் அவர்களின் வீட்டிற்கு அருகாமையில் இருந்த அவரின் வீட்டிற்கு சென்றது ஒரு அற்புதமான விஷயம்
பெ. சிவஞானம் என்று மற்றவர்களாலும், தோழர் என்று உரிமையோடு சக காம்ரேட்டுகளாலும், சிவா என்று வெகு சிலாராலும் அழைக்கப்பட அந்த எளிமையான மனிதரைப்பற்றி அன்றுதான் முழுமையாக தெரிந்து கொண்டேன். காமிக்ஸ் மற்றும் சித்திரக் கதைகள் மேலுள்ள என் காதலால் கவரப்பட்டு அவரது கனவு ப்ராஜெக்ட் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
விடியல் பதிப்பகம் சிவா சாரின் கனவு: ஜப்பானிய மாங்கா பற்றி நிறைய பேர் அறிந்து இருப்பீர்கள். நம்ம ஊரில் காமிக்ஸ் / சித்திரக் கதை என்று எப்படி நாம் பெயரிட்டு அழைப்பதைப்போல ஜப்பானில் சித்திரக் கதைகளை மாங்கா என்று அழைப்பார்கள். எழுத்தாளர் எஸ். ரா ஒருமுறை அவரது தளத்தில் ஒசாமு தெசுகா பற்றி குறிப்பிட்டு இருப்பார். அந்த அற்புதமான படைப்பாளியின் மாஸ்டர் பீஸ் என்று பலராலும் கருதப்படும் புத்தரின் கதையாகிய புத்தாவை தமிழில் வெளியிடுவதுதான் சிவா சாரின் கனவு. தன்னுடைய ஆசையை தெசுகாவின் எஸ்டேட்டிற்கு தெரிவித்து, முறையாக அதன் உரிமையையும் பெற்றார்.
ஒரு மழைக்கால மாலை நேரப் பொழுதில் சிவா சாரின் வீட்டில் இந்த மாங்காவை தமிழில் எப்படி கொண்டு வருவது என்று சிவா சார், துறை சார், பயங்கரவாதி டாக்டர் செவன் மற்றும் அடியேனும் விவாதித்தோம். ஏற்கனவே மர்ஜானே சத்ரபியின் புத்தகங்களை தமிழில் வெளியிட்டு பண அளவிலும், மன அளவிலும் நொந்து இருந்த சிவா சாரிடம் இந்த தொகுப்புகளை தமிழில் வெளியிட்டால் ஆகும் செலவையும்,அதற்க்கான சந்தையாக்கத்தையும் பற்றி பல மணி நேரங்கள் பேசினோம். பின்னர் புத்தரை தமிழில் பதிப்பிக்க இது உகந்த நேரமல்ல என்று முடிவெடுத்து,அதன் படி இந்த கனவு ப்ராஜெக்டை தற்காலமாக தள்ளி வைத்தோம் (INR 3500 is the Cost per set). அதன் பின்னர் வேறு சில தமிழ் காமிக்ஸ் குறித்த விஷயங்களையும் மற்ற பதிப்பக விஷயங்களையும் கலந்து பேச சிவா சார் எப்போதுமே தயங்கியதில்லை.
சென்ற ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியின்போது கிழக்கு பதிப்பகம் பத்ரியிடம் கூட இந்த ப்ராஜெக்டை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். இந்த ஆண்டு உடல்நிலை சரியில்லை என்று சிவா சார் புத்தக கண்காட்சிக்கு ஓய்வு கொடுத்தார். சமீபத்தில் தெசுகாவின் அதி தீவிர வாசகர் இயக்குனர் மிஷ்கின் அவர்களிடம் இந்த ப்ராஜெக்டை கூறியவுடன், அவரும் முகமூடி படம் முடிந்தவுடன் இதைப்பற்றி பேசுவோம், குறைந்த பட்சம் ஒரு லிமிடெட் எடிஷன் அளவிற்காவது கொண்டு வருவது என்றெல்லாம் ஆலோசித்தோம். பின்னர் மார்ச் மாதம் கூட அவரிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருக்கும்போது இந்த விஷயத்தை கூறியவுடன் நுரையீரல் புற்று நோயால் தாக்கப்பட்டு, மரணத்துடன் போராடி வரும் நிலையிலும் உற்சாகத்துடனே பேசினார்.
ஒவ்வொரு முறை கோவை செல்லும்போதெல்லாம் அவரை சந்திப்பதையோ / அவருடன் பேசுவதையோ வழக்கமாக கொண்ட நான், கடந்த இரண்டு தடவையும் நேரமின்மை மற்றும் பணிச்சுமை காரணமாக சந்திக்க முடியாமல் திரும்பி விட்டேன். துரை சாரின் மகன் திருமண நேரத்தில்கூட சிவா சாரைப்பற்றி விசாரிக்கையில் நுரையீரல் புற்று நோய்க்கு கீமோதெரபி சிகிச்சை பெற்றுவருவதை தெரிந்துக்கொண்டேன். உடல்நலம் கவலைக்கிடமாக இருந்தவேளையில் ஒருமுறை அவரிடம் தொலைபேசியில் பேசும்போதுகூட தெளிவாகவும், அன்புடனுமே பேசினார். என்ன இருமல் தான் அவரை அதிகம் பேசவிடாமல் தடுத்தது. ஆனால் அந்த உரையாடல்தான் எங்களின் கடைசி உரையாடல் என்றோ அல்லது அவரை நான் அதற்க்கு பிறகு சந்திக்கவே முடியாது என்பதோ அப்போது எனக்கு தெரியாது.
நுரையீரல் புற்று நோயால் தாக்கப்பட்டு, கீமோதெரபி சிகிச்சை பெற்றுவந்த சிவா சார் கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சற்றே கவலைக்கிடமான நிலையிலேயே இருந்தார். திரவ உணவையே உட்கொண்டு வந்த அவருக்கு, கடந்த ஒரு வாரமாக அந்த திரவ உணவே அவரது வயிற்றில் திடமாக மாறி பிரச்சினைக்கு ஆளானார். அப்போதுகூட இப்படி ஒரு முடிவு வருமென்று தோணவில்லை.
தனிப்பட்ட முறையிலோ, அவரது தீவிர இலக்கிய, வாசக முறையிலோ பழக்கப்படாத அவர் பல வகையில் என்னை கவர்ந்தவர். இதுவரையில் யாரின் மறைவுக்கும் இறுதி அஞ்சலி செலுத்த செல்லாத எனக்கு இவரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல ஆசைப்பட்டாலும், அலுவலக பணி நிமித்தம் காரணமாக மும்பை செல்லவிருப்பதால் அந்த எண்ணம் ஈடேறவில்லை.
ஆனால் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ் நூலகம் திரு துரை அவர்களால் ஒரு இரங்கல் கூட்டம் ஒழுங்கு செய்யப்படுவதாக தகவல். கண்டிப்பாக அதற்காகவேனும் கோவை செல்ல முடிவெடுத்துள்ளேன். மேற்கொண்டு விவரங்களை இரங்கல் கூட்டம் ஊர்ஜிதம் ஆனவுடன் இங்கு பின்னூட்டத்தில் தெரிவிக்கிறேன்.
சிவா சார், கண்டிப்பாக ஒரு நாள் உங்களின் புத்தர் கனவு நிறைவேறும் நான் நிறைவேற்றுவேன். இது உறுதி. Till then, Rest in Peace.
தோழர் 'விடியல்' சிவா பற்றி...
- ந.சுசீந்திரன் (ஜேர்மனி) -
தோழர் விடியல் சிவா அவர்கள் எனக்கு 1990 களின் நடுவாக்கில் அறிமுகமாகியிருக்கலாம். அவரைத் தோழர் எஸ்.வி.ராஜதுரை அவர்கள் வீட்டில் தான் முதன்முதலில் பார்த்த ஞாபகம். அப்போதெலாம் அதிகாலையிலேயே யாராவது இளந்தோழர்கள் எஸ்.வி.ராஜதுரை அவர்களது வீட்டுக்கு வந்து விடுவார்கள். தலைகுனிந்து கண்களை அரைப்பங்கு மூடியபடி எஸ்.வி. ஆர் பேசத்தொடங்கினால் அது மடைவிட்ட வெள்ளம் போல் ஓடியபடியிருக்கும். அப்படியொரு காலையில் தான் விடியல் சிவா அவர்களைக் கண்டேன். பெரியார் :சுயமரியாதை சமதர்மம் நூலின் பதிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தகாலம் அது. அப்பொழுது அவர் அறியப்பட்ட முற்போக்குப் பதிப்பாளராக இருந்தார். வெற்றிலை போடுவதும், வியர்க்கும் போது அவர் கையில் வைத்திருக்கும் பையொன்றினுள் இருக்கும் துண்டை எடுத்து முகம் துடைத்துக் கொள்வதும், எப்பொழுதும் குமிண்சிரிப்பொன்றைத் தாங்கி நிற்பதும் சிவாவின் அடையாளங்கள்.
அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற தமிழினி மகாநாட்டில் அவரைக் காணும்போது எங்கள் உறவும் நெருக்கமும் அதிகரித்திருந்தது. காரணம் தோழர் தண்டபாணி, தோழர் கல்யாணி ஆகியோரின் ஒரே மகள் சுமித்திரா பெர்லினில் எங்கள் பவானி அக்காவின் மகன் கிருபாவை மணம்புரிந்திருந்திருந்தார். தமிழினியின் தொடக்க நாளில் பாண்டிச்சேரி எம். கண்ணன், வ. கீதா, விடியல் சிவா, நான் மற்றும் கவிஞர் சு.வில்வரத்தினம் ஆகியோர் காலைப்பொழுதொன்றின் மரநீழல் தந்த தரையிலமர்ந்து ஈழ நிலைமைகளை சு.வி அவர்கள் தன் பாணியில் தெளிவுபட விவரித்துக்கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்தோம். பின்னர் நிலாந்தனின் „முல்லைக் காடே, முல்லைக் காடே…“; மு.பொன்னம்பலத்தின் „மார்கழிக்குமரி…; “நீலாவணனின் „ஓ..ஓ..வண்டிக்காரா…“ போன்ற பாடல்களை சு.வியின் அதிசய உணர்குரலிசையில் கேட்டு லயித்திருந்ததையும் விடியல் சிவா அவற்றுக்குத் தலையசைத்து நின்றதையும் இப்பொழுது எண்ணிப்பார்க்கின்றேன்.
அன்றுதான் பாண்டிச்சேரி எம். கண்ணன், விடியல் சிவா ஆகியோர் சு.வியை நேரில் கண்டிருக்கலாம். பின் நாளில் பாண்டிச்சேரி எம். கண்ணன் அவர்களதும் அவர்கள் குடும்பதினரினதும் அன்பு, விருந்தோம்பல், தன் கவிதைப் புத்தகம் வெளிக்கொண்டுவருவதில் எம். கண்ணன், விடியல் சிவாவினது மெய்வருத்தம் பாரா உழைப்பு, நேர்மைத்திறன் போன்றவற்றை மிக்க நன்றியோடு உரக்க நினைவு கூர்ந்தபடி இருந்தார் காலமாகிவிட்ட எங்கள் கவிஞன் சு. வில்வரத்தினம். „பாரதிக்குப் பின் ஓர் அதிசயிக்கத்தக்க ஆளுமை சு.வில்வரத்தினம்“ என்ற வாசகத்தை விடியல் சிவாவிடம்தான் நான் கேட்டிருக்கிறேன்.
தோழர் சிவா, தோழர் தண்டபாணி, தோழர் கல்யாணி ஆகியோர் வீட்டில் நான் ஆகக் குறைந்தது இரண்டு முறையேனும் விருந்தாகியிருக்கின்றேன். கல்யாணியின் கோழி சமையல் தனி ரகம். அச் சமையலைப் போலப் பண்ணிவிட என்னால் இன்னும் முடியவில்லை. கோயம்புத்தூரின் அரசியல், பொருளாதார, தொழிலாளர் வரலாற்றைச் சிவா சொல்லியபடி, நானும் அவரும் இரவுகளில் நடைபோயிருக்கின்றோம். சிவா அவர்கள் வீட்டிலும், கோயம்புத்தூரிலும் தோழர் எஸ்.பாலச்சந்திரன், கோவிந்தசாமி போன்றோருடன் அறிமுகமாகியிருகின்றேன். எங்கள் மேலைத்தேயப் புகலிடவாழ்வின் தார தம்மியங்களை நான் இவர்களோடு உட்கார்ந்து பேசும்போது, „நான் உங்கள் ஊருக்கு வரவே மாட்டேன் என்று சிவா கூறியதும் என் ஞாபகத்தில் இருக்கின்றது. துயரச் செய்தியின் பின் இந்த நினைவுகள் எல்லாம் இப்போது ஓடியோடி வந்து என்னவோ செய்கின்றன.
நன்றி: http://tamilcomicsulagam.blogspot.ca/2012/07/rip.html
விடியல் சிவா
- ஷங்கர்ராமசுப்ரமணியன் -
தமிழில் நவீனத்துவம் கேள்விக்கும் மறுபரிசீலனைக்கும் கடும் விமர்சனத்துக்கும் உள்ளான 90களின் காலகட்டத்தில் தலித்தியம், பின்நவீனத்துவம் தொடர்பான எழுத்துகளை தொடர்ந்து புத்தகங்களாக வெளியிட்டது விடியல் பதிப்பகம். அ.மார்க்ஸ் மற்றும் ரவிக்குமாரின் முக்கியமான நூல்கள் விடியல் மூலமாகவே வாசகர்களுக்கு அறிமுகமானது. அ.மார்க்ஸின் நமது மருத்துவ பிரச்னைகள், உடைபடும் புனிதங்கள் போன்றவையும் ரவிக்குமாரின் உரையாடல் தொடர்கிறது, கண்காணிப்பின் அரசியல் போன்ற நூல்களும் தமிழின் நவீனத்துவ சிறுபத்திரிகை அழகியல், அறம் மற்றும் மௌனங்களை கேள்விக்குள்ளாக்கின. எஸ்.வி. ராஜதுரையின் பெரியார் தொகுப்பும் பரந்த அளவில் தாக்கங்களை ஏற்படுத்திய தொகுப்பாகும். ஒடுக்கப்பட்டோர் அரசியல் மற்றும் படைப்புகளை ஒற்றை படையாக அணுகாமல் அதன் சிக்கலான ஊடுபாவுகளை பல்வேறு மூன்றாம் உலக நாடுகளின் கலாச்சார வாழ்வு பின்னணியில் தேர்ந்தெடுத்து வெளியிடுவதற்கு கூர்மையான நுண்ணுணர்வு விடியல் பதிப்பாளர் சிவாவுக்கு தொழிற்பட்டிருக்க வேண்டும். தீவிர மார்க்சியவாதியான விடியில் சிவாவின் ஒருங்கிணைப்பில் வந்துள்ள நூல்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, அந்த நூல்கள் இன்று ஒரு வலுவான அரசியல் தரப்பாக மாறியிருக்கிறது. புதிய விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. லத்தீன் அமெரிக்க படைப்பாளர்களாக காப்ரீயல் கார்ஸியா மார்க்வெஸ்ஸும் போர்ஹேயும் இங்கே பிரதானப்படுத்தப்பட்ட பின்னணியில், ஆழ்ந்த அரசியல் த்வனியுடன் அந்நிலப்பரப்பை exotic ஆக்காமல், உஷ்ணமான மொழியில் எழுதிய யுவான் ரூல்போ என்ற லத்தீன் அமெரிக்க படைப்பாளியின் சிறுகதைகள் மற்றும் ஒரே நாவலை விடியல்தான் வெளியிட்டது. எரியும் பனிக்காடு மற்றும் சயாம் மரண ரயில் போன்ற நூல்களை வாசிப்பவர்கள், புத்தக வாசிப்பும், வாழ்க்கையும் அத்தனை சௌகரியமானதல்ல என்ற உணர்வை அடைந்துவிடுவார்கள். அவர் வெளியிட்ட சிறு வெளியீடுகளில் எனக்கு தனிப்பட்ட வகையில் பிடித்தது சல்வடார் ஆலன்டே பற்றிய நூல் ஆகும். நிறப்பிரிகை போன்ற சிறுவட்டத்தில் தொடங்கி இன்று தலித் அரசியல் மையநீரோட்டத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளதற்கு விடியல் பதிப்பகத்தின் பங்கும் கணிசமானது. அர்ப்பணிப்பு மற்றும் செயலை மட்டுமே சொல்லாக நினைப்பது, நம்பிக்கைகளில் பிடிவாதம் போன்ற குணங்கள் இன்று 'பழைய தலைமுறை மனிதர்களின்' பண்புகளாகிவிட்டன. செயல் என்பதே சிறந்த சொல் என்று எழுதியவர்கள் இன்று அதிகாரத்தின் அலங்கார பெருங்கதையின் பகுதியாக மாறிவிட்ட காலம் இது. மதுரையிலும் சென்னையிலும் நடக்கும் புத்தக விழாக்களில் மிக அமைதியாகவே விடியல் சிவாவைப் பார்த்திருக்கிறேன். பெரிதாக உரையாடல் எல்லாம் இருக்காது. ஒரு நிமிடம் அவருடன் நின்றுகொண்டிருந்துவிட்டு நகர்வது வழக்கமாக இருந்திருக்கிறது. யுவான் ரூல்போ எழுதிய எரியும் சமவெளி புத்தகத்தையும் பெட்ரோ ப்ரோமோவையும் திரும்பத் திரும்ப தொலைத்து அவரிடம் வாங்கியிருக்கிறேன். அவர் வெளியிட்ட ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம், ஈரான் ஒரு குழந்தைப் பருவம் புத்தகங்களை விரும்பி வாசித்திருக்கிறேன். தபாலிலும் அனுப்பியுள்ளார். இதுதவிர அவருடன் எந்த தொடர்பும் எனக்கு இல்லை. ஆனால் இருபது நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலம் இல்லை என்று கேள்விபட்டபோது சங்கடமாக இருந்தது. இப்போது அவர் மரண செய்தி படித்தபோது மிகவும் துக்கமாக இருக்கிறது. தமிழ் சூழலில் தன்னை முன்னிலைப்படுத்தாமல், சுயலாபங்களைக் கணக்கிடாமல் சமூகமாற்றம் என்ற கனவின் உந்துதலை மட்டுமே கொண்டு தனது செயல்பாடுகளை அமைத்துக்கொண்ட அரிதான ஆளுமைகளில் ஒருவர் விடியல் சிவா.
நன்றி: http://shankarwritings.blogspot.ca/2012/07/blog-post_31.html?spref=fb
'விடியல்' சிவா பற்றிய நினைவுக் குறிப்பு!
- ரவி(சுவிஸ்) -
-ஜூலை 30, 2012 - சென்ற திங்கட்கிழமை இந் நேரம் நாம் கோவை சிறீ ராமகிருஷ்ண மருத்துவமனையில் தோழர் சிவாவை பார்த்துக்கொண்டிருந்தோம். மறுநாள் மீண்டும் கொழும்பு செல்வதற்கான கடைசி விடைபெறலுக்காக நாம் அவரை தழுவியபோது கண்ணீர் விட்டு அழுதார். நாம் கணங்களை கண்ணீரால் கரைத்துக்கொண்டிருந்தோம். ஒருசில வார்த்தைகளை எம்முடன் பரிமாறுதற்காய்; அவர் தனது உடல்நிலையுடன் போராடிக்கொண்டிருந்தார். நானும் றஞ்சியும் பிள்ளைகளும் அவரை மாறிமாறி தழுவினோம். கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் சுமார் பத்து நாட்கள் கோவையிலுள்ள அவரது வீட்டில் முடிந்தளவு அதிக நேரம் செலவிட்டிருந்தேன். விட்டுவிட்டு சில நிமிடங்கள் எப்போதும் அவரால் பேச முடிந்திருந்தது அப்போது. சற்று எழுந்து நடக்கவும் சில நிமிடங்கள் பேசவுமாக முடிந்திருந்த அந்தக் கணங்கள் வலிதருகின்றன. பிள்ளைகளை சதா விசாரித்தபடி இருக்கும் அவர் அவர்களைப் பார்க்க ஆசைப்படுகிறேன் ரவி எனக் கேட்டார். "நிச்சயமாக யூலைமாதம் மீண்டும் வருவேன்... அவர்களும் உங்களைப் பார்க்க வருவார்கள்" என்றேன். அதன்படி இந்த யூலையில் 5 நாட்கள் அவருடன் தங்கியிருந்தோம். ஆனால் அவரை இம்முறை மருத்துவமனையிலேயே பேச முடியாத நிலையிலேயே பார்த்தோம். சென்றமுறை அவரிடம் இருந்த நம்பிக்கைகள் அவரைவிட்டுப் போயிருந்தது. என்னிடமும்கூட.
தான் இன்னமும் 5 அல்லது ஆறு வருடங்கள் உயிர்வாழ்வேன். அதற்குள் இன்னும் சில நல்ல நூல்களை கொண்டுவந்துவிடுவேன் என்றார். தனது சுவாசப்பையைத் தாக்கிய புற்றுநோயை ஒரு அசாதாரண துணிச்சலுடன் அவர் எதிர்கொள்ள எப்படி முடிந்தது என நான் வியந்ததுண்டு. அந்த மனோபலம் எல்லாம் இப்போ அவரிடம் ஒட்டமுடியாதவாறு சிதறிப்போய்க் கிடந்தது. காரணம் புற்றுநோய் அவரது குடற் பகுதியையும் தாக்கி அவரை புழுவாய்த் துடிக்க விட்டுக்கொண்டிருந்தது.
அந்த நோயின் அறிகுறிகள் ஏற்பட்டு ஒரு வருடம். ஈழத் தமிழ் மக்களுக்கான ஒரு மாபெரும் பேரணியை அப்போது அவர் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த காலம். மிக மோசமான இருமல் தொடர்ச்சியாக இருந்தபோதும் இப் பேரணியை நடத்தி முடிக்கும்வரை அவர் மருத்துவப் பரிசோதனையைத் தள்ளிப் போட்டிருந்தார். அதன்பின்னரான மருத்துவப் பரிசோதனை, மருத்துவ உறுதிப்படுத்தலுக்கான இழுபாடுகள் என இறுதியில் அவரது உடலை தாக்கியிருப்பது புற்றுநோய்தான் என உறுதிப்படுத்தப்பட்டபோது அது நிலை நான்கை (ஸ்ரேஜ்-4) எட்டிவிட்டிருந்தது.
எப்போதும் கனவுகளுடன் இயங்கும் மனிதர் அவர். அதற்காய் ஓய்வின்றி உழைப்பவர். எப்போதும் இயங்கியபடி இருப்பவர். பதிப்புலகத்தில் தனிமனிதனாய் விடியலை உயர்த்துவதில் அவரின் உழைப்பு அதிசயிக்கத்தக்கது. அவரின் பதிப்புலகக் கனவு ஒன்று நிறைவேறியதை அவர் கொண்டாட முடியாமல் போய்விட்டது. மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளை ஒன்பது பெருந்தொகுதிகளாக கொண்டுவந்ததுதான் அது. அலைகள் பதிப்பகத்துடன் இணைந்து இந்தத் தொகுதி முடிக்கப்பட்டிருக்கிறது. இதன் வெளியீடு ஆகஸ்ட் மாதம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 15. இப்போ அரது நினைவு அஞ்சலிக் கூட்டத்துடன் அத் தினம் இத் தொகுதியின் வெளியீட்டு நாளாகவும் மாற்றப்பட்டிருக்கிறது.
அவரது நண்பர்கள் அவருடன் எல்லாவகையிலும் ஒத்தாசையாய் இறுதிநேரத்தில் செயற்பட்டது அவரது நேர்மைக்கும், விடாமுயற்சிக்கும், சக மனிதர்களை அரவணைக்கும் போக்குக்கும் நல்ல சாட்சிகளாய் எனக்குத் தோன்றின. சிவாவைத் தாக்கியது புற்றுநோய்தான் என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் இந்த ஒரு வருட காலப்பகுதியில் ஒருமுறை தன்னும் அவரை போய்ப் பார்க்காத (அ.மார்க்ஸ் போன்ற) அறியப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்பதுதான் வேடிக்கை. இதுபற்றி தோழர் சிவாவிடம் நான் கேட்டபோது அவர் புன்சிரிப்பையே பதிலாய்த் தந்தார்.
இதேபோலவே ஜெயமோகன் எஸ்விஆர் க்கு மேல் சுமத்திய குற்றச்சாட்டை -தோழர் சிவாவுக்குத் தெரியாமலே- அவரது பெயரில் பதில் எழுதினார் எஸ்விஆர். இரண்டாவது முறையும் எஸ்விஆர் எழுதிய பதில் கடிதத்தில் சிவாவின் மரணப்படுக்கையை சென்ரிமென்ற் பாணியில் பாவித்திருந்தார். இந்த முறைகேடு சிவாவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது சிவா வருத்தமடைந்தார்.
தன்மீதான இரக்கத்தை அவர் கோரியவரல்ல. தான் இவ்வாறு கடுமையான சுகவீனமுற்றிருந்த விடயத்தை அவர் தொடர்பூடகங்களில் வெளிக்கொண்டு வருவதை ஒருபோதும் விரும்பியவரல்ல. தலித் போராளியாக இருந்து இன்று அசல் அரசியல்வாதியாய் புரளும் ரவிக்குமார், சிவாவை தொலைபேசியில் அப்போலோ மருத்துவமனையில் வைத்து வைத்தியம் பார்க்க அழைத்தபோது, அவர் "உன்னுடைய பணத்தில் வைத்தியம் பார்ப்பதைவிட நான் செத்துப்போகத் தயாராக இருக்கிறேன்“ என்றார்.
தனது எஞ்சிய சிறு சொத்துகளை ஏற்கனவே மக்கள் சொத்தாக எழுதிக்கொடுத்திருக்கிறார். தனது உடலை மருத்துவக் கல்லூரிக்குத் தானமாய்க் கொடுத்திருக்கிறார். எந்தவித விளம்பரமுமன்றி பொதுத்தளத்தில் எப்போதும் இயங்கியபடி இருந்த அவரின் நடைமுறைப் போராட்ட வாழ்வு மசிர்புடுங்கும் விவாதங்களுக்குள் அலைக்கழியாதது. தனது சக்திகளை அவர் ஒருபோதும் இவ்வாறு வீணாக்கியது கிடையாது. ஒரு உண்மை மனிதனின் கதை அவரது. சொந்த வாழ்க்கையில் திருமணம் முடித்தால் தான் இந்தளவு வேலைகளை செய்து முடித்திருக்க முடியாது என்று ஒருமுறை என்னிடம் சொன்னார்.
ஈழத் தமிழ் மக்களின் அவலத்தில், போராட்டத்தில் எப்போதும் ஈடுபாடு கொண்டவரவாகவே இருந்தார்.தனது அரசியல் அனுபவங்களையும் தலித் போராட்டம் சம்பந்தமான அவரது அறிதல்களையும் அவர் உள்ளடக்கி எழுதிக்கொண்டிருந்த அவரது குறிப்புகள் முக்கால்வாசியை எட்டியிருந்தது. அதை எழுதிமுடிப்பதும் அவரது இன்னொரு கனவு என கூறியிருந்தார். இந்தக் கனவு அரைகுறையில் முடிந்திருக்கிறது. அதேபோல் கோவையில் ஒரு மிகப்பெரும் பொதுநூலகத்தை பன்மொழி நூலகமாக நிறுவும் கனவும் அவரிடம் இருந்தது. அதற்கு உறுதுணையாக புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்ரிரியூற்றின் விரிவுரையாளர் இருக்கிறார். இந்தக் கட்டடத்துக்கான நிலமும் வாங்கப்பட்டுவிட்டது. தனது நண்பர்களுடனான கூட்டுவேலையாக அதை வரித்துக்கொண்டார். அதன் கட்டட வேலைகள் ஆரம்பிப்பது பற்றிய பேச்சில் அவர்கள் ஈடுபட்டது என்னளவில் பிரமிப்பாகவே இருந்தது. தனது மரணத்தை எதிர்பார்த்த அவர் விடியல் பதிப்பகத்தை ஒரு ரஸ்ற் ஆகப் பதிவுசெய்துள்ளார். அவரது நண்பர்கள் அவரது பணியை எடுத்துச் செல்ல உறுதிபூண்டுள்னர்.
1996 இல் முதன்முதலில் நான் அவரை புதுச்சேரியில் சந்தித்து அறிமுகமாகியதிலிருந்து தொடர்ச்சியாக உறவில் இருந்தேன். நூல் வெளியீட்டில் எமக்கு எப்போதும் உறுதுணையாக மட்டுமல்ல ஒரு ஊக்கியாகவும் இருந்தார். இலாபநோக்கை குறியாகக் கொண்டு செயற்பட்டவரல்ல அவர். அவசியமான பல மொழிபெயர்ப்பு நூல்களை விடியல் தமிழுக்குக் கொண்டுவந்துள்ளதன் மூலம் பேசப்படும் முக்கிய பதிப்பகமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. தொடர்ந்து ஒழுங்கமைக்கப்பட்ட செயன்முறையில் இந்நூல்கள் காலம் தாழ்த்தாமல் செய்துமுடிக்கப்படுவதில் அவரது செயற்திறனை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். மொழிபெயர்ப்புக்கான ஆட்கள் தெரிவு, அவர்களது மொழிபெயர்ப்பு வேலைநேரம், சொற்தேர்வு, தட்டச்சுக்கான ஆட்கள், நூல்களை பக்குவமாகவும் ஒரு முறைமையுடனும் சேகரித்து வைத்தல், தனது புறூப் பார்த்தலின்றி ஒருபோதும் வெளியிடாமை, நூல் அச்சாகும்போது அச்சகத்தில் அருகில் இருந்து லேஅவுட் உட்பட எல்லாவற்றிலும் கவனம் செலுத்ததல், தொலைபேசி மூலமான நூல் விற்பனை, அவற்றை காலதாமதமின்றிச் செய்துமுடித்தல்... என ஒரு முறைமை அவரிடம் இருந்தது. இந்த உழைப்புத்தான் விடியலை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது.
1996 இல் ஒரு சிறு கொட்டிலுக்குள் இருந்த விடியல் பதிப்பகம் இன்று தமிழ்ப்பரப்பின் திறந்த வெளிக்குள் பரவிப்போய் கிடக்கிறது. 1996 இல் பதிப்பகத்துக்கு பண உதவி செய்ய நான் முன்வந்தபோது அவர் சொன்னார், "ரவி, நான் ஒரு சதம்கூட யாரிடமும் சும்மா வாங்க மாட்டேன். நீங்கள் எனது நூல்களை விற்பனை செய்து உதவமுடியுமா எனப் பாருங்கள். அதுவும்கூட விற்பனை என்ற நோக்கில் வேண்டாம். இந்திய விலைக்கே விற்றுத்தாருங்கள். முக்கியமாக வாசிப்பவர்களிடத்தில் போய்ச சேருவதை கவனத்தில் எடுங்கள்“ என்றார். அந்த அறிமுகம் என்னை இன்றுவரை அவருடன் பயணிக்க வைத்திருக்கிறது. ஐம்பதுகளின் நடுப்பகுதியை மட்டுமே எட்டிப் பிடித்த அவரது வயதை இந்தக் கொடிய நோய் சிதைத்துப் போட்டுவிட்ட கொடுமையை என்னவென்பது! -ரவி (30.7.12)
-முகநூலில் பெறப்பட்ட ரவி(சுவிஸ்)யின் குறிப்புகள் -
நன்றி: 'முகநூல் செய்திகள்'