[ கணையாழி தமிழ் இலக்கிய வரலாற்றில் தனக்கென்றோரிடத்தைப் பதிவு செய்துகொண்ட சஞ்சிகை. அது தொடர்ந்தும் வெளிவரவேண்டும். ஏற்கனவே பல தடைகளைத் தாண்டி வெளிவந்ததைப்போல் இம்முறையும் அது தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். கணையாழிக்கு இன்னுமோர் சிறப்புண்டு. உலகத்தின் பல்வேறு பக்கங்களிலிருந்தும் தமிழ் எழுத்தாளர்களின் பங்களிப்பை அது அவ்வப்போது வெளிப்படுத்தி வந்துள்ளதைத்தான் கூறுகின்றேன். 'கனடாச் சிறப்பிதழ்', 'ஆஸ்திரேலியச் சிறப்பிதழ்' .. போன்ற சிறப்பிதழ்களாகக் கணையாழி வெளிவந்துள்ளது. எனது கட்டுரைகள் சிலவும், சிறுதையொன்றும் கணையாழியில் வெளிவந்துள்ளதை இப்பொழுது நினைத்துப் பார்க்கின்றேன். கணையாழி தொடர்ந்தும் வெளிவருவதை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றேன். - வ.ந.கி, பதிவுகள் -] இது அசோகவனத்தில் சந்தித்து அனுமன் பெற்ற கணையாழியின் கதை அல்ல. இலக்கிய உலகில் தனக்கென சிறப்பான ஒரு இடத்தை உருவாக்கி வைத்துள்ள கலை இலக்கியத் திங்கள் இதழான ‘கணையாழி’ யின் தோற்றம் முதல் இன்றைய வளர்ச்சி வரையிலான ஒரு ‘திரும்பிப் பார்த்தல்’. ‘புது தில்லி பொழுது போகாத ஒரு மாலை வேளையில், நண்பர் ரங்கராஜனுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த போது, பத்திரிகை ஆரம்பிக்கும் யோசனை தோன்றியது.பேஷாகச் செய்து விடலாம் என்று சொன்ன ரங்கராஜன் தன் பங்குக்கு ஒவ்வொரு இதழிலும் எழுதுவதாக உறுதி அளித்தார். தமிழில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகைகளிலிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும். அரசியல், ஆன்மீகம், மருத்துவம், அத்துடன் கொஞ்சம் இலக்கியம் என்று முடிவாயிற்று. ஆங்கிலப் பதிதிரிகைகளின் தரத்தில் அறிவார்த்தமாக இருக்க வேண்டும். ஜோக்குகள் கூடாது. ‘கலைமகள்’ போல் ஒரு தமிழ்ப் பெயராக இருக்க வேண்டும் என்று யோசித்து ‘கணையாழி’ என்று பெயர் வைத்தேன்’ என்று ‘கணையாழி’ பத்திரிகையின் நதி மூலத்தை, அமெரிக்கப் பத்திரிகையான ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையின் தில்லி நிருபராகப் பணியாற்றி வந்த திரு.கி.கஸ்தூரிரங்கன் குறிப்பிடுகிறார்.
டெம்மி அளவில் 24 பக்கம் கொண்டதாக 40 காசு விலையில், ஜூலை 1965 என்று முதல் பக்கத்தில் அச்சடித்து வந்த முதல் ‘கணையாழி’ ஆகஸ்ட் 15ல் வெளி வந்தது. தில்லிக்கு அப்போது வந்திருந்த ஜெயகாந்தனுடன் ஒரு பேட்டி, கலைமகளில் அரசியல் கட்டுரை எழுதி வந்த கே.சீனிவாசன் கட்டுரை, ஒரிரண்டு கதைகள், சினிமா, நாடகம் பற்றிய தகவல்கள் விமர்சனங்கள், ந.பிச்சமூர்த்தி கவிதைகள் பற்றி ஒரு அலசல் என்றெல்லாம் அதில் இருந்தன. அட்டைப் படமாக இந்தியாதேசம், அதற்குள் நேருவும் சாஸ்திரியும் – அதுதான் அட்டைப்படக் கட்டுரையும். தில்லியில் அபோது தமிழ் அச்சகம் இல்லாததால் சென்னை வந்து ஒருமாதம் தங்கி அச்சகமே கதி என்று கிடந்து 2000 பிரதிகள் அச்சடித்து எடுத்துக்கொண்டு போய், பிரதிகளை பாதிக்கு மேல் விற்க முடியாமல், 500 பிரதிகளை இலவசமாக அனுப்பி மிகுந்த சிரமங்களுக்கு ஆளானாலும் படித்தவர்கள் ‘நன்றாக இருக்கிறது, வித்தியாசமாக இருக்கிறது, நல்ல எதிர்காலம் இருக்கிறது’ என்று பாராட்டியதால், உற்சாகம் குறையவில்லை என்று எழுதுகிறார் கி.க. ஆரம்பத்தில் அசோகமித்திரனின் பங்களிப்பு கி.கவுக்குப் பெரிதும் துணையக இருந்தது.கணையாழியின் பொறுப்பாசிரியராக சென்னையிலிலுருந்து அவர் செயல்பட்டார். மிகவும் பொறுப்புடன், பிரதிபலனை எதிர்பாராது மாதாமாதம் ‘கணையாழி’யை அச்சடித்து அனுப்பி வைத்தார்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சந்தாக்கள் வரத் தொடங்கியுள்ளன. விற்பனை உற்சாகம் தராதிருந்தும் எழுத்தாளர்களின் ஆதரவு பெருகியதால் கி.க உற்சகமாகவே தொடர்ந்தார். ‘தில்லி எழுத்தாளர்கள் சுப்புடு,’கடுகு’ என்கிற பி.எஸ்.ரங்கநாதன், பூர்ணம் விஸ்வநாதன், லா.சு.ரங்கராஜன், இ.பா. தி.ஜானகிராமன், என்.எஸ்.ஜகந்நாதன், கே.எஸ்.சீனிவாசன் என்று ஒரு ஐந்து நட்சத்திரத் தரத்தில் படைப்புகள் கணையாழியில் வெளிவரத் தொடங்கின’ என்று பெருமிதப்படுகிறார் கி.க. இளம் எழுத்தாளர்கள் ஆதவன், சம்பத், மாலன், பாலகுமாரன் ஆகியோர் கணையாழி மூலம் முத்திரை பதித்தார்கள். ஞானக்கூத்தன், எஸ.வைத்தீஸ்வரன்,தி.சொ வேணுகோபாலன், சி.மணி முதலான ‘எழுத்து’க்கவிஞர்கள் புதுக்கவிதை எழுதினார்கள்.அசோகமித்திரனின், கதை, சுஜதாவின் கடைசி பக்கம், என்.எஸ் ஜெயின் ‘என்னைக்கேட்டால்’, சுப்புடுவின் சங்கீத வித்வான்கள் அறிமுகம் போன்றவை ஒவ்வொரு இதழையும் சுவாரஸ்யப்படுத்தின.இந்திராகாந்தி,மொராய்ஜி, காமராஜ், அண்ணா, கருணாநிதி, மெரியார் போன்ற பெரிய அரசியல் புள்ளிகளுடன் நேர்முகப்பேட்டிகள் மூலம் ‘கணையாழி’க்கு ஒரு அந்தஸ்து ஏற்படத் தொடங்கியது.பின்னாளில் அரசியல் கைவிடப்பட்டு முழுக்க முழுக்க இலக்கிய ஏடாகப் பரிணாமம் கொண்டது.
முப்பது ஆண்டுகள் நடத்தி பல சாதனைகள் செய்தபின், ‘கணையாழி’யின் பொருளாதாரமும் கி.கவின் உடல் நிலையும் நலிந்துபோன நிலையில் யாரிடமாவது அந்த இனிய சுமையைத் தோள் மாற்றிவிட விரும்பினார். அப்போது தமன்பிரகாஷ், சுவாமிநாதன், ம.ராஜேந்திரன் ஆகிய நண்பர்கள் தங்களது ‘தசரா’ அறக்கட்டளை மூலம் எடுத்து நடத்த முன் வந்தபோது மிகுந்த மகிழ்ச்சியோடு கி.க அவர்களிடம் ‘கணையாழி’யை ஒப்படைத்தார். இதனை மிகுந்த உணர்ச்சிப்பெருக்கோடு, 1996ல் நடைபெற்ற ‘கணையாழி’யின் 31வது ஆண்டு தொடக்கவிழாவின் போது, ‘கணையாழி’யைத் தன் வளர்ப்பு மகளாக வர்ணித்து இந்தக் கல்யாண விழாவில் தான் மகிழ்ச்சியோடு இருப்பதாகவும், கணையாழியின் சஷ்டியப்தபூர்த்தி விழாவையும் தான் ஆவலோடு எதிர் பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். ஆனால் பதினைந்தாண்டுகளுக்கு மேலாக சிறப்பாக நடத்திய பின் 2006ல் ‘தசரா’வும் தொடர்ந்து நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. திரும்பவும் 2011 மே முதல் கவிதா சொக்கலிங்கம் தனது ‘கவிதா பதிப்பகம்’ மூலம் வெளியிடும் பொறுப்பை ஏற்க, தசரா ‘கணையாழி’யை புதிய பாய்ச்சலுடன் நடத்தத் தொடங்கியது. ஒராண்டு வெற்றிகரமாக நடந்த பிறகு தற்போது மே – ’12 முதல் திரு.ம.ராஜேந்திரனின் முழுப்பொறுப்பில் வெளிவருகிறது.
‘கணையாழி’, கி.க பொறுப்பில் வெளியானபோது பல சோதனை முயற்சிகளைச் செய்து சாதனைகள் பல நிகழ்த்தி இலக்கிய ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடத்தைப் பெற்றது. புதிய இளம் எழுத்தாளர்களை ‘கணையாழி’யில் எழுத வைத்து இன்றைய நட்சத்திர எழுத்தாளர்கள் பலரை உருவாக்கியதை முதல் சாதனையாகச் சொல்லலாம். வாசகர் கடிதத்தை இலக்கிய அந்தஸ்க்கு உயர்த்தியதை அடுத்துச் சொல்லலாம். புதியவர்களும் புகழ்பெற்ற மூத்த படைப்பாளிகளும் வாசகர் கடிதம் மூலம் பல சிறப்பான விவாதங்களை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். இலக்கியத்திலும் இட ஒதுக்கீடு கேட்டு கவிஞர் பழமலய் குரலெழப்ப ச.சமுத்திரம் பொன்றவர்கள் வழி மொழிந்ததும், என்.எஸ்.ஜகந்நாதனின் கட்டுரை ஒன்றில் மணிப்பிரவாள நடை பற்றி எழுதிய கருத்துக்களுக்கு தி.க.சி எதிர் வினையாற்றியதும் இன்றும் நினைவில் நிற்பவை.
அடுத்து கணையாழி கதைகளும் கவிதைகளும் தனித் தொகுப்புகளாக வருமளவுக்கு சிறப்பாக இருந்ததைக் குறிப்பிடலாம். கணையாழியில்தான் குறுநாவல்களுக்கு ஒரு இலக்கிய அந்தஸ்து ஏற்பட்டது என்றால் அது மிகை இல்லை. அதிலும் குறிப்பாக ‘தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டிகளி’ல் வெளியானவை அத்தனையும் முத்துக்கள் என்றே சொல்லலாம். மேலும் இந்திரா பார்த்தசாரதி, தி.ஜானகிராமன், அசோகமித்திரன் வண்ணநிலவன் போன்றோரது அற்புதமான தொடர் நாவல்களும் ‘கணையாழி’க்குப் பெருமை சேர்த்தன. ‘கணையாழி’ கிடைத்ததும் முதலில் கடைசிப்பக்கத்தை பார்க்குமளவுக்கு பரபரப்பை ஊட்டியவர் ‘ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்’ ஆக ஆரம்ப காலங்களில் அறியப்பட்ட சுஜாதா அவர்கள். பல சித்திர விசித்திரங்களை சோதனை முயற்சிகளாக மேற்கொண்டு எழுத்தாளனை ஒரு நட்சத்திர அந்தஸ்க்கு உயர்த்திய அவரது சாதனை ‘கணையாழி’யில்தான் நிகழ்ந்தது. புத்திலக்கியத்துடன் பழைய காவிய நயங்களைக் காட்டும் கே.எஸ்.சீனிவாசன் அவர்களது ‘காவ்ய ராமாயாணம்’ தொடரையும் வெளியிட்டது கணையாழி. ‘முஸ்தாபா’ என்ற பெயரில் யார் என்று தெரியாத மர்மத்தில் வாசகரை ஆழ்த்திய கி.க அவர்களது ‘உள்ளது உள்ளபடி..’ ஒவ்வொரு இதழையும் ஆவலுடன் எதிர் பார்க்க வைத்தது. காலஞ்சென்ற அற்புத படைப்பாளி ஜெயந்தன் தனது ‘நினைக்கப்படும்’ நாடகத்தின் மூலம் தன்னை எழுத்துலகம் திரும்பிப் பார்க்கச் செய்தார். ‘கணையாழி’யின் முகத்துக்கு புதியதொரு பொலிவினை இத்தகைய பதிவுகள் கொடுத்தன. கிருஷ்ணன்நம்பியின் புகழ் பெற்ற சிறுகதையான ‘மருமகள் வாக்கு’ ‘கணையாழி’யில்தான் வெளியாயிற்று, மற்றும் இதழ்தோறும் வாசகர்களை ஈர்த்த சுந்தரராமசாமி அவர்களது ‘கேள்வி-பதிலு’ம், கே.சீனிவாசன் அவர்களது கூர்மையான அரசியல் கட்டுரைகளும், திருப்பூர் கிருஷ்ணன் அவர்களது சுவாரஸ்யமான ‘இலக்கிய விசாரமு’ம் குறிப்பிடத்தக்கவை. இன்னும் ‘கணையாழி’க்குப் பெருமை சேர்த்தவர்களும், ‘கணையாழி’யால் வெளிச்சம் பெற்றவர்களும் வழங்கிய அரிய படைப்புகள் பற்றி எழுதி மாளாது.
தில்லியில் கி.க வுக்கு உதவியாக திரு லா.சு.ரங்கராஜன் – அசோகமித்திரன் போலவே கணையாழியின் பொறுப்பாசிரியராக சிறப்பாகப் பணியாற்றினார். கி.க சென்னைக்கு வந்ததும் சி.அண்ணாமலை என்பவர் உதவியாசிரியரகவும் இ.பா கௌரவ ஆசிரியராகவும் கணையாழியை நடத்தினார்கள். இ.பா இன்றுவரை கணையாழியின் சிறப்பாசிரியராகவே தொடர்கிறார்.
கணையாழியின் வெள்ளி விழா ஆண்டில் ‘கணையாழி-25′ என்ற தலைப்பில் கவிஞர் ஞானக்கூத்தனை தொடர் எழுத வைத்த ஆசிரியர் 30 ஆண்டுகள் முடிந்த போது மீண்டும் கணையாழியின் கடந்த காலப் பதிவுகளை நினைவூட்டும் வகையில் ‘கணையாழியின் பரிணாம வனர்ர்ச்சி’ என்ற தலைப்பில் வே.சபாநாயகம் அவர்களை எழுத வைத்தார். 1997 பிப்ரவரியில் ‘கணையாழி’யின் முதல் இதழ் முதல் இணையத்தில் பதிவு செய்து வைக்க, அரவிந்தன்(கனிமொழி) மூலம் கி.க முயன்றார். கொஞ்சம் பதிவானபிறகு ஏனோ அம்முயற்சி கைவிடப்பட்டது. 30 ஆண்டுகாலத்தில் கணையாழியில் வந்த சிறப்பம்சங்களைக் கொண்ட கணையாழி தொகுப்பை ‘தசரா’ கொணர விரும்பியும் அது நிறைவேறாத நிலையில் கி.கவே வே.சபாநாயகம், இ,பா, என்.எஸ்.ஜெ மூலம் நான்கு தொகுதிகளாக ‘கணையாழி களஞ்சியம்’ என்ற தலைப்பில் கலைஞன் பதிப்பக வெளியீடாக பிறகு கொண்டு வந்ததும் கி.க வின் சாதனை எனலாம்.
31ஆவது ஆண்டுமலர் வெளியீட்டை ‘தசரா’ ஒரு விழாவாகவே கொண்டாடியது. இலக்கிய அன்பர்களாலும் படைப்பாளிகளாலும் நிரம்பி வழிந்த அரங்கம், ‘தசரா’வுக்கு கிடைத்த அமோக வரவேற்பைக் காட்டியது. அது ‘தசரா’வுக்கு ‘கணையாழி’யை மிகுந்த உற்சாகத்துடன் தொடர வழி வகுத்தது.
‘தசரா’ பொறுப்பில் வந்த பிறகும் கணையாழிக்குப் பெருமை சேர்த்த அதன் ஆஸ்தான எழுத்தாளர்கள் சுஜாதா. என்.எஸ்.ஜெ, இ.பா. கி.க அசோகமித்திரன் எல்லோரும் தொடர்ந்து கணையாழியில் எழுதி வந்தார்கள். பிறகு ஒரு நாள் சுஜாதா காணாமல் போனார். அவரது கடைசிப் பக்கத்தை தோழர் தியாகு போன்றோர்களின் தொடர்கள் அணி செய்தன. பழைய எழுத்தாளர்கள் ந.முத்துசாமி, பா.செயப்பிரகாசம், சா.கந்தசாமி. இரா.முருகள் பிரபஞ்சன், த.பழமலய், அறிவுமதி, கல்யாண்ஜி, புவியரசு போன்றோரும் தொடர்ந்து எழுதினார்கள். வெங்கட் சாமிநாதன், கே.எஸ் சுப்பிரமணியன், மார்ஸ் போன்றோரின் விமர்சனங்களும் வெளியாயின. பழைய கணையாழியில் துடிப்பான இளைஞர்கள் இடம் பெற்றது போலவே இப்போதும் பின்னாளில் புகழ் பெற்ற புதிய எழுத்தாளர்கள் யூமா வாசுகி, பாப்லோ அறிவுக்குயில், அழகிய பெரியவன். இளம்பிறை, அ.வெண்ணிலா மற்றும் கணையாழியில் இடம் கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டிருந்த நிஷார் போன்ற ஆரம்ப எழுத்தாளர்களும் இடம் பெற்றார்கள். ஈழத்து எழுத்தாளர்கள் கார்த்திகேசுசிவத்தம்பி, அ.முத்துலிங்கம், மாத்தளைசோமு, எஸ்.பொ, தேவகாந்தன் ஆகியோரது படைப்புகளும் தொடர்ந்து இடம் பெற்றன.
இதழ் தோறும் நிறைய புதிய நூல்களின் அறிமுகமும் பிரபஞ்சன், சா.கந்தசாமி ஆகியோர் தாம் படித்த நூல்களை விமர்சித்ததும் வாசகர்களின் வரவேற்பைப் பெற்றன. ‘இந்த நூற்றாண்டின் எனக்குப்பிடித்த சிறந்த கதை’ என்ற தலைப்பில் பல மூத்த எழுத்தளர்கள் எழுதினார்கள். தி.க.சி யின் ‘காலத்தின் குரல்’, தோழர் தியாகுவின் ‘மார்க்சின் தூரிகை’ போன்ற தொடர் கட்டுரைகள் பாராட்டுகள் பெற்றன.
மீண்டும் குறுநாவல் போட்டிகள் மூலம் வெளியான குறுநாவல்கள் இலக்கியத்தரம் வாய்ந்தனவாய் இருந்தன.ஓவியர்கள் ஆதிமூலம், மருது இவர்களுடன் புதியவர்களான புகழேந்தி, செல்வம், மாரிமுத்து ஆகியோர் கணையாழியைத் தொடர்ந்து அழகு படுத்தினர். கி.க வின் ‘எட்டுத்திக்கும்’ அரசியல், கலை, இலக்கியம் ஆன்மீகம் என்று பவ துறைகளைப் பற்றியும் சாரமான தகவல்களைத் தந்தது. ம.ராஜேந்திரன் தலையங்கம் மட்டுமின்றி, ‘நினைக்கப்படும்’ என்ற தலைப்பில் ‘மரன்’ என்ற பெயரில் தொடர் எழுதி வந்தார். மற்றும் ‘படித்துப் பாருங்கள்’ என்று பிரபஞ்சன் பல சிறந்த நூல்களைஅறிமுகப்படுத்தியதும் ‘பார்வை’ என்ற தலைப்பில் ‘பார்வையளர்’ என்பவரின் பதிவுகளும், சினிமா பற்றி அம்ஷ்குமார், எஸ்.சாமிநாதன் ஆகியோரின் ஆக்கபூர்வமான விமர்சனங்களும வாசகர்களுக்கு விருந்தாய் அமைந்தன. வெங்கட் சாமிநாதன் போன்றோரின் நூல்விமர்சனங்களும் குறிப்பிடத் தக்கன. வாசகர் கடிதங்கள் ‘எதிரொலி’, ‘எதிர்வினை’ என்ற பெயர்களில் பாராட்டியும் விமர்சித்தும் ‘கணையாழி’க்கு உற்சாகமூட்டின.
சிறப்பான நேர்காணல்களும், பேட்டிகளும் இக்கால கட்டத்தில் வெளியாயின. முதல் இதழில் பேட்டி காணப்பட்ட ஜெயகாந்தன் ‘தசரா’ போறுப்பேற்றபோதும் மற்றும் கலைஞருடன் ஒரு தடவையும் ஞானபீட பரிசினைப் பெற்றபோதும் என நான்கு முறை பேட்டி காணப்பட்டார். காலம் மற்றும் அவரது முதிர்ச்சிக்கேற்ப ஒவ்வொரு தடவையும் அவரது பேட்டிகள் பல புதிய தகவல்களைக் கொண்டதாய் இருந்தன. மற்றும் மறுபிரசுரம் ஆன ஆர்.சூடாமணி, இந்திரா கோஸ்வாமி ஆகியோரது பேட்டிகளும், புதிய இளம் படைப்பாளிகளான கண்மணி குணசேகரன், இளம்பிறை பொன்றோரது நேர்காணல்களும் கணையாழியின் பாரபட்ச மற்ற பார்வையை உணர்த்தின.
காலஞ்சென்ற முத்திரை பதித்த படைப்பாளிகள் கு.ப.ரா, பு.பி, சி.சு.செ, மௌனி,வையாபுரிப்பிள்ளை என பலரது நினைவு தினங்களையொட்டி அட்டையில் அவர்களது படங்களை வெளியிட்டு அவர்களைப்பற்றிய கட்டுரைகளையும் வெளியிட்டு கணையாழி கௌரவவித்தது. பல்வேறு சிறப்பிதழ்களுடன் மலேசிய, ஆஸ்திரேலிய, கனடா சிறப்பிதழ்களையும் கொண்டு வந்து பாராட்டுக்குரியதாயிற்று.
இக்கால கட்டத்தில் பாவண்ணன். ஜெயமோகன், ம.ந.ராமசாமி, அசோகமித்திரன். பா.செயப்பிரகாசம், ஸிந்துஜா. ம.ரா, விழி.பா இதயவேந்தன்.கீரனூர் ஜாகிர்ராஜா என பல பழைய புதிய எழுத்தளர்களின் கதைகள் பிரசரமாயின. எஸ். வைத்தீஸ்வரன், பழமலய், இளம்பிறை போன்றோர் நிறைய கவிதைகளை எழுதினார்கள். வெங்கட் சாமிநாதன், கே.எஸ், சுப்பிரமணியன், ஆர். நடராஜன் இன்னும் பல திறனாய்வாளர்களது சிறந்த கட்டுரைகள் வெளிவந்தன. பதிப்பாளர் தமன்பிரகாஷ் சட்டசபைத்தேர்தல் பற்றி எழுதிய தொடர்கட்டுரை பலரது பாராட்டுக்கு உள்ளாயிற்று.
ஆசிரியர் பொறுப்பில் இருந்த மய்திலி ராஜந்திரனும் இடையில் சில மாதங்கள் காணாமல் போய் பிறகு மீண்டும் இன்று வரை தோடர்கிறார். அந்த இடைக்காலத்தில் பா.இராம்ஜி என்பவர் பொறுப்பிலும் பின்னர் ஆசிரியர் குழுவின் பொறுப்பிலும் கணையாழி தொடர்ந்தது. யுகபாரதி உதவியாசிரியராக சில ஆண்டுகள் இருந்திருக்கிறார்.
1995 முதல் 2006 வரை பதினாறு ஆண்டுகள் இவ்வளவு சாதனைகளை நிகழ்த்திய கணையாழி 2006 செப்டம்பர் இதழோடு நின்றது, கணையாழி அன்பர்களுக்கும், இலக்கிய படைப்பாளிகளுக்கும் பெரிய ஏமாற்றத்தை அளித்தது. மீண்டும் அது ஏப்ரல் 2011ல் புத்துயிர் பெற்றபோது இலக்கிய உலகுக்குப் பெரும் ஆறுதவ் ஏற்பட்டது.
இந்த ஓராண்டிலும் கணையாழி தனது ஆரம்ப காலத்தை நினைவூட்டுவதாய், நவீன உள்ளடக்கங்களுடன் சிறப்பான பதிவுகளை வெளியிட்டுள்ளது. இ.பா இப்போது சிறப்பாசிரியர் என்பதோடு, சுஜாதா போல கடைசி பக்கங்களில் பழைய இலக்கியங்களிலிருந்த அன்றாட நடப்பை ஒட்டியும் நல்ல விஷயங்களை அளித்து வருகிறார். பாரவி, வாசந்தி, அசோகமித்திரன், சா.கந்தசாமி, எஸ்.சங்கர நாராயண் போன்றோரது கதைகளும், எஸ்.வைத்தீஸ்வரன், நீலமணி, ஈரோடு தமிழன்பன் போன்ற மூத்த கவிஞர்களின் கவிதைகளும், தமிழவன், மு.ராமசாமி, கி.நாச்சிமுத்து, அன்பாதவன் போன்றோரது கட்டுரைகளும் மீண்டும் கணையாழிக்குக் கனம் சேர்த்துள்ளன. நரசய்யாவின் ‘காலம் கொன்ற விருந்து’ அரிய ஆவணங்களை வாசகர் பார்வைக்கு கொண்டு வந்தது. மரன் என்ற பெயரில் ‘நினைக்கப்படும்’ தொடர் எழுதிய ம.ரா இப்பொது நடுப்பக்கத்தில் ‘காணப்படும்’ என்ற தலைப்பில் தான் கலந்து கொண்ட இலக்கிய விழாக்கள் பற்றியும் அங்கு தான் கண்டவை பற்றியும் சுவாரஸ்யமாக எழுதி வருகிறார்.
இப்போது கணையாழிக்கு மறுபடியும் வந்துள்ள சோதனையை ம.ராஜேந்திரன் அவர்கள் துணிவோடு எதிர் கொண்டு, தானே ஆசிரியர் வெளியீட்டாளர் என்கிற சகல பொறுப்புகளையும் ஏற்று மே 2012 இதழ் முதல் கணையாழி மறுபடியும் இலக்கிய அன்பர்களை ஏமாற்றமடையாதிருக்க வேள்வி போன்ற இப்பெரும் பொறுப்பை ஏற்கிறார். இலக்கிய அன்பர்கள் நிச்சயம் அவருக்குக் கை கொடுப்பார்கள்.