சிறுகதை : வேலை - கடல்புத்திரன் -
ஒவ்வொரு மாதத்திலும் காயத்திரி தேவதையாகிப் போன நாளில் பிள்ளையார் கோவிலுக்கு போய் வருவதை வழக்ககமாகக் கொண்டிருக்கிறான் . முகத்தில் மஞ்சள் பூசி கட்டிலில் படுத்திருந்ததை மறக்க முடியவில்லை . அன்று அவள் அதிகமாக சோர்ந்திருந்தது போல தெரிந்தது . நித்திரையிலிருந்து தானாக எழட்டும் என வீட்டை துப்பரவாக்குவதில் ஏடுபட்டான் .இடையிடையே வந்து எட்டிப் பார்த்துக் கொண்டுமிருந்தான் . எழுவதைக் காணவில்லை . வழக்கத்திற்கு மாறாக தூங்குறாளோ? ...புன்சிரிப்பு சந்தேகத்தை ஏற்படுத்த மூக்கில் கையை வைத்துப் பார்த்தான் . அனுங்கலையும் காணவில்லை .எப்படியும் அவளிடமிருந்து சிறு சத்தம் வந்து கொண்டிருக்கும் . மூச்சு நின்று விட்டதை உறுதிப்படுத்தவே சிறிது நேரம் எடுத்தது ." என்னடி ஒரேயடியாய் போய் விட்டாயா ? " இலங்கை ராணுவத்தின் முன் நிராயுதபாணியாய் எல்லாத்தையும் இழந்து கையறுயற்று நிற்பது போல , ஒரேயடியாய் தளர்ந்து போனான் . அவளை தூக்கி நிறுத்துகிற ஒவ்வொருவாட்டியும் ஒரு சிரிப்பு சிரிப்பாளே . இனி அதைக் காண முடியாது . அவனுடைய ஆவியும் வெளியேறி காயத்திரியின் கைப் பிடித்து கூட்டிக் கொண்டு மேலே போனால் எவ்வளவு நல்லாய் இருக்கும் . அன்றிலிருந்து மூன்று வருசமாக அவள் சென்ற நாளில் ஒவ்வொரு மாசத்திலும் கோவிலை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறான் . இன்று அவளின் நினைவு நாள் ! .
கொஞ்சநாளுக்கு முதல் சுகன் புதிதாக வாங்கிய வீட்டிற்கு அலைபேசியில் " வா , வா " என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தான் . அது ஞாபகம் வந்தது . அவ்விடத்திற்கு அயலில் கார் சென்ற போது " வீட்டிலா இருக்கிறாய் ? " என்று கேட்டான் . " வா " என்றான் . அலைச்சல் வேலையில் தினமும் ஒரு மூட் . எரிபொருள் விலை ஏறியதில் ...புலம் பெயர் நாடே வேறொரு மாதிரி தோற்றம் காட்டுகிறது . இந்த நாட்டுக்கு வெளிநாட்டுக் கொள்கை கிடையாது . அயலில் உள்ள பெரியவன் என்ன சொல்றானோ ?....பின்னாலே போறவன் . வாழ்க்கைச் செலவு கூடும் . பஞ்சத்தை எட்டிப் பார்க்கும் என்று தெரியும் . இன்றைய தலைவரின் அப்பருக்கு இருந்த தைரியம் ….கிடையாது . என்ன இருந்தாலும் பழசு வலிமையானது தான் . ஊரிலே ஏர் மேடை கட்டி இறைக்கும் முறை , சூத்திரக்கிணறுகள் ...எல்லாவற்றையும் மெருகூட்டி மீள கொண்டு வாருங்கள் . அதை வீழ்த்த இன்று கூட எதுவுமே இல்லை . காந்தி வயதானவராக இருக்கலாம் . அவரது கொள்கைகள் வயதானதில்லை . இந்த தலைவர்களா இயற்கையைக் காப்பாற்றப் போறவர்கள் ? . வாயில் கஞ்சாவை வைத்துக் கொண்டு பேசுறவர்கள் . வெறித்தனமாக சண்டை பிடிக்க ஆயுதங்களை அனுப்பிக் கொண்டு கிடக்கிற பலவீனமானவர்கள் . சரியான மெண்டல்கள் . விடுங்கள் .