பொன்னியின் செல்வன் : படித்தது அல்ல , பார்த்தது ! தலைமுறை தாண்டியும் பேசப்படும் வரலாற்றுப் புனைவு !! - முருகபூபதி -
சில மாதங்களுக்கு முன்னர், நியூசிலாந்திலிருந்து ஊடக நண்பர் சத்தார், மெய்நிகரில் என்னை பேட்டி கண்டபோது, “கல்கியின் பொன்னியின் செல்வனை நான் இதுவரையில் படித்ததில்லை “ என்று சொன்னதும், அவர் ஆச்சரியமுற்றார். அதன்பிறகு, எனது மனைவி மாலதி, “ பொன்னியின் செல்வனை படிக்காத நீங்களும் எழுத்தாளரா..? “ எனக்கேட்டார். “ ஆம், பொன்னியின் செல்வனைப் படிக்காதமையால்தான் நான் எழுத்தாளனாக இருக்கின்றேன். அந்தத் தொடர்கதையை கல்கியில் படித்தவர்கள் பல ஆயிரம்பேர் இருக்கலாம். அவர்கள் எல்லோரும் எழுத்தாளர்களாகிவிட்டார்களா.. ? “ எனக்கேட்டேன். “ இது குதர்க்க வாதம் “ என்றார் மனைவி.
மணிரத்தினத்தின் இயக்கத்தில் ஜெயமோகனின் வசனத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன், நான் வதியும் ஆஸ்திரேலியாவில் மெல்பன் திரையரங்கிற்கு இம்மாதம் 30 ஆம் திகதி வந்ததும், அதனை கதையாக இதுவரையில் படித்திராத, அதனை எழுதிய எழுத்தாளர் கல்கி பற்றி எதுவித குறிப்புகளும் அறியாத 1980 இற்குப்பின்னர் பிறந்த எனது இரண்டு மகள்மாரும் மற்றும் இரண்டு பெறாமகள்மாரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்ப்பதற்காக என்னை தனித்தனியாக அழைத்தனர். இதில் என்ன ஆச்சரியம் என்றால், நான் மெல்பனில் வசிக்கும் புறநகரமான மோர்வெல் பிரதேச திரையரங்கில், இதற்கு முன்னர் எந்தவொரு தமிழ்த் திரைப்படமும் காண்பிக்கப்படவில்லை. அந்தப்பிரதேசத்தில் வசிக்கும் மருத்துவரான ஒரு பெறாமகள், “ அங்கிள், பொன்னியின் செல்வன் பார்ப்போம் வாருங்கள் “ என்றார். “ மெல்பன் நகருக்குள் வசிக்கும் எனது மூத்த மகள் அழைத்துவிட்டாள், அவளுடன் மெல்பனில் பார்க்கச்செல்கிறேன் “ என்றேன். இவ்வாறு பொன்னியின் செல்வன் திரைப்படம் எங்கள் குடும்பத்திற்குள் கொண்டாடப்பட்டது.