அண்ணாவியார் குமுழமுனை நாகலிங்கம் நெல்லிநாதன் - த.சிவபாலு B.Ed.Hons. M.A.Cey. - -
- அண்ணாவியார் குமுழமுனை நாகலிங்கம் நெல்லிநாதன்-
பிறந்தகம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குமுளமுனை என்பது அண்ணாவியார் நாகலிங்கம் நெல்லிநாதன் பிறந்து வளர்ந்து வாழ்ந்துவரும் ஊராகும். இக்கிராமம் வன்னியின் குறுநில மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட கிராமமாகும். சோழராட்சிக்காலத்தில் திருகோணமலையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த வளந்தொட்டுக் குளம் பெருக்கிய மன்னான குளக்கோட்ட மன்னனின் ஆட்சிக்கும் இக்கிராமம் உட்பட்டிருந்தது. தண்ணிமுறிப்புக் குளம் இவன் காலத்தில் கட்டப்பட்டது என்பது வரலாற்றாய்வாளர்களின் துணிபு. இக்கிராமத்தில் ‘வன்னியன் வளவு’ ‘வன்னியன் கிணறு’ ‘யானை கட்டிய புளி’ என்னபன வன்னியர் இக்கிராமத்தில் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கான சான்றுகளாகக் காணப்படுகின்றன. பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்துவரும் இக்கிராமத்தவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை கோலாட்டம், கும்மி, கூத்துப் போன்ற கலைகளில் செலவு செய்துள்ளனர். வெளியிடங்களிலிருந்து அண்ணாவிமாரை அழைத்துவந்து கூத்துக்களைப் பழகி மேடையேற்றி ஆடி வருவது வழமையாக இருந்துவந்துள்ளது.
குடும்பப் பின்னணி
குமுளமுனை சின்னப்பிள்ளை நாகலிங்கம் மற்றும் ஆறும் இரத்தினம்மா தம்பதியினரின். நான்காவது மகவாகப் பிறந்தவர் நெல்லிநாதன். மூத்த சகோதரர் நடனசபாபதி நீர்பாபசனத் திணைக்களத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இரண்டாவது சகோதரர் ஈஸ்வரபாதம் கூத்துக்கலையில் இவரும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இளமையிலேயே மறைந்தவர். அடுத்ததாகப பிறந்த சகோதரி யோகேஸ்வரி திருமணமாகி வேறு பழம்பாசி என்னும் கிராமத்தில் குடியேறியுள்ளார். அடுத்தவர் குகன் என்னும் இளைய சகோதரர், அடுத்தவர் சந்திரகுமாரி திருமணமாகி ஊரிலேயே வாழ்நதவருகின்றார். லலிதகுமாரி ஆசிரியையாக குமுளமுனை ம.வி.யில் கற்பித்துவருகின்றார். திருமணமாகிப் பிள்ளைகளோடு குமுளமுனையில் வாழ்ந்து வருகினறார். நேசமலர் இளைய சகோதரி முள்ளியவளையில் திருமணம் செய்து அங்கேயே வாழந்து வருகின்றார்.
நெல்லிநாதன் சம்மளங்குளத்தைச் சேர்ந்த செல்வரத்தினம், அன்னலட்சுமி தம்பதியினரின் புதல்வி சூரியபவானியைத் தனது வாழ்க்கைத் துணவியாக்கி இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் உள்ளார்.