ஆய்வு: ஆண்டாள் பாசுரங்களில் அழகியல்நடை - முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை.
முன்னுரை
“வேதமனைத்துக்கும் வித்து“ என்று போற்றப்படுவது ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை. இனிமையான பக்தி சுவை மிக்க பாசுரங்களைக்கொண்டது. கண்ணன் மேல் ஆண்டாள் கொண்டிருந்த எல்லையற்ற அன்பினைப் பாசுரங்கள் வழி பாய்ந்தோடச் செய்வன. கண்ணனை அடையும் பொருட்டு ஆண்டாள் மேற்கொண்ட நோன்புதான் “பாவை நோன்பு“.பாவை நோன்பிற்காத் தனது தோழியர்களை அழைத்தல், விடியலை அறிவித்தல், இயற்கை வர்ணனை என்று ஆண்டாள் தனது உணர்வுகளை புலப்படுத்தும் விதமே அழகியல் தன்மையுடையது. மனித மனத்தின் ஆழமும், பரப்பும் அறிய முடியா இயல்பும் பொதுவாக கவிதைகளில் மிளிர்வதைக் காணலாம். அழகியல் என்பது படைப்புகளை ஆராய்ந்து ஒற்றை வரியில் இது அழகானது, இது அழகற்றது என்று சொல்லிவிடுவதல்ல. ஒரு படைப்பின் முழுமையை அறிந்து, அப்படைப்பின் படைப்புத்தன்மையில் உள்ள கலைத்துவத்தை அப்படியே வெளிப்படுத்துவது. இவ்வகையில் ஆண்டாள் பாசுரங்களில் காணப்படும் அழகியலை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
உவமை நடை
செய்யுளுக்கு அணி சேர்ப்பதே உவமை. தெரியாத ஒன்றை தெரிந்த ஒன்றோடு ஒப்பிட்டு விளக்குவது.
“உவமம் என்பது ஒரு பொருளோடு ஒரு பொருளினை ஒப்புமை கூறுதல்“ என்பது பேராசிரியர் தரும் விளக்கம். (தொல்.பொரு.ப.57)
சிறுபெண்ணான ஆண்டாள் மழை எங்ஙனம் பொழிய வேண்டும் என்ற அறிவியல் கோட்பாட்டினை, ஆன்மீகத்தோடு ஒப்பிட்டு அழகாக நமக்குக் காட்சிப்படுத்துகிறார். கடல் நீரானது ஆவியாக மேலே சென்று மேகமாக மாறுகிறது. அங்கு குளிர்ந்த காற்றுப்பட்டவுடன் அது மழையாகப் பொழிகின்றது. இந்த அறிவியல் உண்மைக்கு அழகானதொரு அறிமுகத்தொடு விளக்கவுரை தருகிறார். அதாவது,
”ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைய பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்“ (திருப்.4)