ஆய்வு: வாடாமல்லி சிறுகதை வெளிப்படுத்தும் வாழ்வியல்நெறி! - பேரா. செ. நாகேஸ்வரி, தமிழ்த்துறை, இலொயோலா கல்லூரி, வேட்டவலம் -
ஆய்வுச் சுருக்கம்
தமக்கென்று வாழாது பிறர்க்கென்று வாழும் உண்மையானச் சான்றோர்கள் வாழ்வதால் தான் இந்த உலகம் இன்றளவும் அழியாமல் இருக்கின்றது. மனிதன் தாம் வாழும் காலங்களில் பல்வேறு ஒழுக்க நியதிகளைக் கடைபிடித்து வாழ்கின்றான். இத்தகைய ஒழுக்க நியதிகளையே பண்டையத் தமிழர் பண்பாடு என்று போற்றிப் பேணிக்காத்தனர். இது தமிழர்களுக்கு மட்டுமல்ல. இவ்வுலகத்தில் தோன்றிய மாந்தர் அனைவருக்கும் பொருந்துவனவாகும் என்பதை அனைத்து மக்களும் உணர்ந்து போற்றி ஒழுக வேண்டும். அதிலும் குடும்ப வாழ்வு என்பது சமூகத்தின் அடிப்படை அலகு. அத்தகைய குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வாழ்வியல் நெறிகளின் ஒன்றான, விட்டுக்கொடுத்தலை பின்பற்றினால் மட்டுமே அமைதி நிலவும். தனக்கென வாழாது தன் துணையின் இன்ப துன்பங்களையும் உணர்ந்து புரிதலுடன் வாழ வேண்டும். அத்தகைய வாழ்க்கை முறையே நமது பண்பாட்டின் வேர். என்பதைத் தற்காலத்தில் உள்ள நவீன இலக்கியமான கண்மணி குணசேகரன் சிறுகதையின் வழி அறியலாகிறது.
முன்னுரை
சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம். கணவனும் மனைவியும் இணைந்து வாழ்தல் என்பது அவர்கள் இருவரின் வாழ்க்கை நலனைச் சார்ந்தது மட்டுமல்ல. ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியை உள்ளடக்கியது. சமூகத்தில் அன்பும், அறனும் விளையக் அத்தகையக் குடும்பமே ஆதாரமாக திகழ்கின்றது என்பதை வள்ளுவர்,
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. 1
இல்வாழ்க்கை என்னும் அதிகாரத்தில் தனிமனிதன் சமுதாயத்திற்கு இயற்ற வேண்டிய பணிகளையும் கோடிட்டுக் காட்டுகிறார். இத்தகைய இல்லற வாழ்வில் மனிதநேயத்துடன் கூடிய வாழ்வியல் முறையை கடைப்பிடித்தால் மட்டுமே குடும்பமும் சமூகமும் சிறக்கும் என்பதை மண்வாசத்தோடு தனக்கென்ற ஒரு பாதையை உருவாக்கி, மக்கள் வாழ்வில் நடைபெறும் வாழ்வியல் நெறிகளை, உண்மை நிகழ்வின் அடிப்படையில் தனது படைப்பாற்றளின் வழி பல்வேறு இலக்கியங்களை கொண்டு சித்தரித்துக் காட்டுபவர் படைப்பாளர் கண்மணி குணசேகரன். இப்படைப்பாளரின் சிறுகதைகளின் வழி மனித நேயத்திற்கான அடித்தளம் குடும்பத்திலிருந்தே இடம்பெறுகிறது. குடும்பமே மக்களைப் பிறப்பித்துச் சமுதாயத்தில் உலவவிடுகிறது என்பதை எடுத்துக்காட்டி மக்களை நெறிப்படுத்துவதே இவ்வாய்வின் நோக்காகும்.
விட்டுக்கொடுத்து வாழ்தல்
குடும்பம் என்ற அமைப்பில் ‘விட்டுக்கொடுத்து வாழ்தல்’ என்ற பண்பு அரண் போன்றது. இத்தகைய பண்பு குடும்பத்தில் வாழும் அனைவரிடமும் நிறைந்திருக்க வேண்டும். அப்போழுது தான் முழுமையான இன்பத்தை நுகருவதற்கு ஏதுவாக இருக்கும். அதிலும் கணவன், மனைவியிடையே மிகச் சிறந்த புரிதல் இருந்தால் மட்டுமே இல்லற வாழ்க்கை மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும். இல்லற வாழ்வில் தனது இணையின் கடந்த கால வாழ்க்கையின் கசப்பான நிகழ்வுகள் தெரிய வந்தாலும் அதனைப் பற்றி ஆய்ந்தறியாமல் நிகழ்காலத்தை மட்டுமே பங்கிட்டு வாழ்வதே சிறப்பானதொன்றாகும். இவ்வாறு வாழும் போது மட்டுமே, ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு நிறைந்து, இருவருக்குள்ளும் ஆன்ம பினைப்பு உருவாகி, உருகுலையாத பந்தத்தை வாழ்நாள் முழுதும் ஏற்படுத்தும். விட்டுக்கொடுப்பதால் நம் உறவை வலிமைப்படுத்துகிறோம். மற்றவர்களை உறவாக்கிக் கொள்கிறோம். மற்றவர்களின் பகைமையை விரட்டுகிறோம். விட்டுக்கொடுத்தல் விவேகம் நிறைந்தது. நமது வாழ்க்கையை வளமாக்கும் வழியுமாகும். இதனைக் குறுந்தொகைப் பாடலொன்றில் அன்றில் பறவைகளின் புனிதமான அன்பை சிறைக்குடி ஆந்தையார்,