இன்று ஓகஸ்ட் 10 - பேராசிரியர் நுஃமானுக்கு 78ஆவது பிறந்த தினம்! இலக்கிய உலகம் கொண்டாடும் இந்த ஆளுமையின் கவிதை காலிமுகத்திடலிலும் ஒலித்தது ! - முருகபூபதி -
- இன்று தனது 78ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் பேராசிரியர் எம்.ஏ.நுஃமானுக்குப் 'பதிவுகள்' இணைய இதழும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. -
நூறு நாட்களையும் கடந்து தொடர்ந்த காலிமுகத்திடல் போராட்டம் பல காட்சிகளை கண்டது. அதனை உள்நாட்டினர் மட்டுமல்ல சர்வதேச சமூகமே தினம் தினம் பார்த்தது. குறிப்பிட்ட காலிமுகத்திடல் பேராட்டத்தில் யாழ்ப்பாணத்தில் 1981 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அன்றைய ஆட்சியாளர்களின் மெத்தனப்போக்கினால், அரச கூலிப்படைகளே பொது நூலகத்தை எரித்து சாம்பராக்கியது. 41 ஆண்டுகள் கடந்த பின்னரும் புத்தகப்பிரியர்கள் அனைவரது மனதிலும் அந்த நெருப்பு கனன்றுகொண்டுதானிருக்கிறது. யாழ். பொது நூலக எரிப்பின் பின்னணியில் எங்கள் தேசத்தின் முன்னணிக்கவிஞரும் படைப்பிலக்கிய ஆளுமையும் எனத் பேராசிரியருமான எம். ஏ. நுஃமான் அவர்கள் எழுதிய “ நேற்று என் கனவில் புத்தர் பெருமான்… “ எனத்தொடங்கும் கவிதை உலகப்பிரசித்தம். இக்கவிதை தமிழில் எழுதப்பட்டிருந்தாலும், பின்னர் ஆங்கிலம் – சிங்களம் மொழிகளிலும் பெயர்க்கப்பட்டதை அறிவீர்கள். காலிமுகத்திடல் போராட்டத்தில் யாழ். பொது நூலக எரிப்பும் நினைவுகூரப்பட்டபோது நுஃமானின் குறிப்பிட்ட கவிதையும் பேசுபொருளானது. அந்த அரங்கில் அக்கவிதை மும்மொழியிலும் மக்களால் சொல்லப்பட்டது. இக்காட்சியை அவுஸ்திரேலியாவிலிருந்து நானும் காணொளியூடாக பார்த்துக்கொண்டிருந்தேன். இன்றைய தினம் ஓகஸ்ட் 10 ஆம் திகதி தனது பிறந்த தினத்தை கண்டியில் அமைதியாக கொண்டாடிக்கொண்டிருக்கும் எமது நண்பர் நுஃமானும் அக்காணொளியை பார்த்திருப்பார்.
காலம் கடந்தும் பேசப்படும் அக்கவிதையை எழுதியவரை இன்றைய தினம் தொலைபேசி ஊடாக வாழ்த்திவிட்டு, அவரது ஆளுமைப்பண்புகளை விபரிக்கும் இந்த நனவிடை தோய்தற் குறிப்புகளை எழுதுகின்றேன். நுஃமான் கல்வித்துறையில் எவ்வாறு படிப்படியாக உயர்ந்து இன்று தகைமைசார் பேராசிரியராக விளங்குகிறாரோ அவ்வாறே தாம் சார்ந்த இலக்கியத்துறையிலும் படிப்படியாக உயர்ந்து முன்மாதிரியாகியிருப்பவர் கவிஞர், விமர்சகர், ஆய்வாளர், மொழியியல் அறிஞர், பேராசான், பதிப்பாளர் முதலான பன்முகம் கொண்டவர். இலக்கியப்பிரவேசத்தில் அவர் ஆரம்பத்தில் சிறுகதைகளும் எழுதியிருக்கிறார்.