சிறுகதை: பொறி! - எஸ் அகஸ்தியர் -
- அன்புடன் சகோதரருக்கு. வணக்கம்! எனது தந்தை எஸ். அகஸ்தியரின் பிறந்த தினத்தை நினைவிருத்தி (29.08.1926 – 08.12.1995) ‘பொறி’ என்ற (1975தாமரை) பிரசுரம் கண்ட அவரது சிறுகதையை அனுப்பி வைக்கின்றேன். நன்றி . - நவஜோதி -
தம்பிமுத்துச் சம்மாட்டியின் இயந்திரப் படகுகள் ஆழ்கடலில் ஓடத் தொடங்கியபின் களங்களில் விரிக்கப்பட்ட தங்கள் படுப்பு வலைகளில் மீன் பிடிபாடு குறைந்துவிட்டதென்ற உண்மை, ஒரு சிலருக்கு அதிக நாட்களுக்குப் பின்பே தெரிய வந்தது.
இவர்கள் தங்கள் படுப்பு வலைகளைக் கட்டுமரங்களில் சென்று பரவைக் கடலில்தான் விரிப்பார்கள்.
இனிமேல் படுப்பு வலைகளை நம்பிக் கட்டுமரங்களில் சென்று ‘சிறுதொழில்’ செய்ய முடியாதாகையால். ‘எத்தனை காலமாக வாய்வயிற்றைக் கட்டிப் பஞ்சம் பட்டினியோடு சீவிக்கிறது’ என்று தொழிலாளர்கள் வெகு நாட்களாகவே நச்சரிக்கத் தொடங்கியபோதும், அவர்களுக்கு இதிலிருந்து மீளவும் சரியான மார்க்கம் தெரியவில்லை.
ஒரே முழிசாட்டம்தான்.
தாங்களும் தம்பிமுத்துச் சம்மாட்டியைப்போல் இயந்திரப்படகு வாங்கிப் ‘பெருந்தொழிலி’ல் இறங்கவேணுமென்று தொழிலாளர்கள் ஒருநாள் கூடித் திட்டம் போட்டும், அந்தத் திட்டம் இன்றுவரை வெறும் வாய்ப் பேச்சில்தான் கிடக்கிறது.
தங்களின் இந்தக் கையாலாகாத் தனத்தையும் அவர்கள் உணர்ந்துதானிருந்தனர். ஆனால், ‘திட்டமிடுவதன்படி ஏன் இயங்க முடிவதில்லை?’ என்பதைப் புரிந்து கொள்ளச் சிரமமாகவேயிருந்தது.
தற்போதைக்கு ஊர்கூடி ஒரு இயந்திரப் படகென்றாலும் வாங்கித் தங்கள் துறைமுகத்துக்குக் கொண்டு வந்துவிட்டால் தம்பிமுத்துச் சம்மாட்டியின் கொள்ளையையும், தனியாதிக்கத்தையும் ஒழித்துக்கட்டி அவனைச் ‘சமன்படுத்தி’ வைத்துவிடுவதோடு, பின் எந்த அலைகடலையும் எதிர்கொண்டு சமாளித்து ஆழ்கடல் சென்று தாங்கள் தொழில் புரியலாம் என்பது அவர்கள் எண்ணம்.