திரு. செல்லையா பொன்னுச்சாமியின் பிரிவு - குரு அரவிந்தன் -
- திரு. எஸ். பி. சாமி -
திரு. எஸ். பி. சாமி என்று பலராலும் அழைக்கப்பட்ட திரு. செல்லையா பொன்னுச்சாமி 19-2-2025 ஆம் ஆண்டு தனது 89 வது வயதில் எங்களைவிட்டுப் பிரிந்து விட்டார். தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகரும், யாழ்ப்பாணம் சென்ரல் மருத்துவ மனை, நொதேன் பீச் ஹேட்டல் போன்றவற்றின் உரிமையாளருமான இவரது மறைவு எங்கள் தமிழ் சமூகத்திற்குப் பேரிழப்பாகும்.
போர்;ச் சூழலில் போராளிகளுக்கும், இராணுவத்திற்கும் இடையே அகப்பட்டு தங்கள் இருப்பைத் தக்க வைப்பது என்பது எவ்வளவு கடினமானது என்பது பலருக்குப் புரியும். அப்படி ஒரு சூழலில் நாங்கள் வாழ்ந்ததால், உயிரையே பணயம் வைக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டோம். இக்கால கட்டத்தில் இவர் புறக்கோட்டை வர்த்தக சங்கம், அகில இலங்கை இந்துமாமன்றம், மற்றும் கருணைப்பாலம் ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றினார். வேலனை கிழக்கு 3 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் யாழ்ப்பாணம் நல்லூரில் வாழ்ந்து வந்தார்.
இலங்கை வங்கியில் அதியுயர் முகாமையாளராகப் பணியாற்றிய (AGM & DGM) எனது மூத்த சகோதரர் கே. சிவகணநாதன் மூலம்தான் முதலில் புறக்கோட்டை வர்த்தக சங்கத் தலைவாக இருந்த இவரது அறிமுகம் கிடைத்தது. இவரது காலத்தில் கொழும்பு வர்த்தகர்கள் கொடிகட்டிப் பறந்தது எனக்கு ஞாபகம் இருக்கின்றது, காரணம் வங்கிகளை நம்பியே வர்த்தகம் இருந்தது. அந்தத் தொடர்பை இவர் சிறப்பாகக் கையாண்டார். இவரை முதலில் சந்தித்த போதே என் மனதில் இடம் பிடித்து விட்டார். காரணம் எனது தகப்பனார் போலவே வெள்ளை ஆடை, நரைத்ததலை, சிரித்த முகம். எனது தகப்பனார் காங்கேசந்துறை நடேஸ்வராக்கல்லூரியில் கனிஸ்டபாடசாலை அதிபராக இருந்ததால் அவரும் வெள்ளை வேட்டி, வெள்ளை முழு நீளநாசனல் சட்டை அணிந்திருப்பார்.