சிறுகதை : ஞானம் - முருகபூபதி -
- ஓவியம் : கிறிஸ்டி நல்லரெத்தினம் ( மெல்பன் ) -
குணவர்தனா, தபாலில் வந்த கடிதத்தை படித்துவிட்டு, வீட்டின் விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். கொவிட் பெருந்தொற்று தொடங்கிய காலத்திலிருந்து அவனும் வீட்டிலிருந்தே வேலை செய்கிறான். மனைவி நிலாந்தி பாடசாலைக்குச் சென்ற மகனை அழைத்துவரச்சென்று திரும்பும்போது, வீட்டு தபால் பெட்டியிலிருந்து எடுத்து வந்த கடிதத்தை அறையை தட்டி தந்துவிட்டு, மகனை குளியலறைக்கு கூட்டிச்சென்றாள்.
“ குணே… உங்கட உபாலியிடமிருந்து கடிதம். திரும்பவும் பணம் கேட்டு எழுதியிருக்கலாம் “ என்று முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு சொல்லியவாறுதான் அகன்றாள் நிலாந்தி.
குணவர்தனாவின் நெருங்கிய நண்பன்தான் உபாலி. அம்பாந்தோட்டையில் ஒரே கிராமத்தில், பிறந்த வளர்ந்து படித்தவர்கள். வீட்டுக்கஷ்டத்தால், கிராமத்து விகாரையிலிருந்த தர்மரத்ன சாதுவின் தூண்டுதலால் தேசத்தை விடுதலை இயக்கத்திடமிருந்து காக்க இராணுவத்தில் சேர்ந்து, இறுதிப்போரில் வலது காலை இழந்து முடமாகத் திரும்பியவன்.
குணவர்தனாவின் குடும்பப் பின்னணி செழிப்பாக இருந்தமையால் படித்து பட்டதாரியாக முடிந்தது, அவுஸ்திரேலியாவில் தொழில்வாய்ப்பும் பெற்று வரக்கூடியதாக இருந்தது.