அஞ்சலிக்குறிப்பு : கரிசல் இலக்கிய பிதா கி. ராஜநாராயணன் ( 1922 -2021 ) விடைபெற்றார் ! வாழும்போதே பலராலும் கொண்டாடப்பட்ட இலக்கிய ஆளுமை ! மழைக்கும் பாடசாலைப்பக்கம் ஒதுங்காதிருந்து பல்கலைக்கழக விரிவுரையாளரானவர் ! - முருகபூபதி -
கலை, இலக்கிய, சினிமா, அரசியல் துறைகளைச்சேர்ந்தவர்களாலும் வாசகர்கள், இலக்கிய மாணவர்களாலும் பெரிதும் கொண்டாடப்பட்ட கி. ரா என்ற கி. ராஜநாராயணன் மறைந்தார் என்ற செய்தி கவலையை தந்தாலும், அவர் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து, நூறாண்டுகளை அடைவதற்கு இன்னமும் ஒருவருடம் இருக்கும் நிலையில் தமது 99 வயதில் எம்மிடமிருந்து விடைபெற்றிருப்பது சற்று தேறுதலைத்தருகிறது. சில வருடங்களுக்கு முன்னர் அவரது பிறந்த தினத்தின்போது தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்துக்கூறியபோது, அவரது அருமை மனைவி கணவதி அம்மாவும் இருந்தார்கள். அந்த அம்மையாரும் கடந்த 2019 ஆம் ஆண்டு மறைந்துவிட்டார். இருவரையும் முதல் முதலில் 1984 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் ஒரு கோடை காலத்தில்தான் அவர்களின் இடைசெவல் கிராமத்து இல்லத்தில் சந்தித்தேன்.
அவரது கிடை குறுநாவலை 1970 களில் ஶ்ரீமதி லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி தமது வாசகர் வட்டத்தின் வெளியீடாக வரவாக்கிய அறுசுவை நூலில் படித்திருந்தேன். அன்று முதல் எனது பிரியத்திற்குரிய படைப்பாளியானவர் கி.ரா. அவர்களைத் தேடிச்சென்ற அனுபவம் பசுமையானது. சிலவருடங்களுக்கு முன்னர் பிறந்ததின வாழ்த்துக்கூறியவாறு பேசியபோது, “ உங்கள் வயசு என்ன..? “ என்று கேட்டார். சொன்னேன். உடனே அவர், “ சரிதான் இன்னுமொரு திருமணம் செய்யிற வயசுதான் “ என்றார். இவ்வாறு கேலியும் கிண்டலுமாக பேசவல்லவர் அவர். திருநெல்வேலி பிராந்திய எழுத்தாளர்கள் அனைவருக்கும் மட்டுமல்ல பொதுவாக அனைத்து எழுத்தாளர்களுக்குமுரியது இந்த இயல்பு.