முல்லைத்திணையைப் பாடுவதிலும் புனைவதிலும் வல்லமை பெற்றவர் பேயனார். முல்லை நிலம் காடும் காடுசார்ந்த பகுதிகளையுமுடையது. காடு சார்ந்தது முல்லை நிலமாதலால், இங்குப் பல்வகை மரம், செடி, கொடி ஆகிய தாவரங்கள் பசுமையோடும், செழிப்போடும் காணப்படும். இம்முல்லை நிலத்தின் வருணனைகளைப் படிக்கும்பொழுது, நிலத்தின் செழுமையும், வளமிக்க மலர்கள் மலர்ந்திருத்தலும் காட்சியளிக்கும். ஐங்குறுநூற்றில் இடம்பெற்றுள்ள இம்முல்லை நிலமானது மலர்களால் சூழப்பட்ட புறவாகக் காட்சிப்புனைவுகளுடன் அமைந்துள்ளது. பல்வேறு சொல்லாட்சிகளில் முல்லை நிலம் சார்ந்த வருணனைக்காட்சிகள் குறைந்த அளவே காணப்படுகின்றன. குறைவான அளவில் முல்லைபற்றிய காட்சிகள் இடம்பெற்றாலும், வருணனைகள் உரிப்பொருள் விளக்கத்திற்கு துணைநிற்கின்றன. எனவே, ஐங்குறுநூற்றில் இடம்பெற்றுள்ள முல்லை நிலம் பற்றிய வருணனைகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
முல்லை நிலம்
முல்லை நிலமானது, 1.புறவு, 2.கானம், 3.கான், 4.மென்புலம், 5.முறம்புகண், 6.வறந்த ஞாலம், 7.செந்நிலம், 8.வன்புலம், 9.புன்புலம், 10.இருநிலம் என்னும் பத்துச் சொல்லாட்சிகளில் பொருட்கூறுகளோடு பேயனரால் வருணிக்கப்பெற்றுள்ளன என்பதை ஆய்விற்குச் சேகரிக்கப்பட்ட தரவுகளிலிருந்து அறியமுடிகின்றது.
முல்லை நிலமாகிய ‘புறவு’ என்பது ‘புறவு’ என்னும் பெயரில் ஐங்.முல்.404:3-4; 405:2-4; 406:3-4; 411:1-2; 412:1-3; 413:1-4; 414:1-4; 415:1-4; 416:1-5; 417:1-3; 418:1-2; 419:1-4; 420:1-3; 421:1-2; 424:1; 462:5; 485:4; 494:1-2; 495:1-2 ஆகிய பத்தொன்பது (19) பாடல்களில் ‘நறும்பூந்தண்’புறவு, ‘பூஅணி கொண்டன்றால்’ புறவு, ‘நறுந்தண்’புறவு, ‘மணம்கமழ்’புறவு, ‘கவினிப்’புறவு, ‘கார்கலந்தன்றால்’புறவு, ‘அழிதுளி தலைஇய’ புறவு, ‘நன்னலம் எய்தினை’ புறவு, ‘நறும்பூம்’ புறவு, ‘முகைஅவிழ்’புறவு, ‘மலர்அணிப்’புறவு, ‘தண்கமழ்’புறவு என்னும் அடைகளுடன் வருணனைக்காட்சியாக இடம்பெற்றுள்ளது.