அண்மையில் மறைந்த தனது மனைவி மேசி ஜெயறோசாவைப்பற்றி எழுத்தாளர் அ.யேசுராசா அவர்கள் தனது முகநூற் பக்கத்தில் மனைவியின் நினைவு மலருக்காக எழுதிய கட்டுரையினைப் பகிர்ந்திருந்தார்.அதனைப் பதிவுகள் தன் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றது. - பதிவுகள்.காம் -
- 13. 06. 2022 அன்று, அன்பு மனைவி மேசியின் 31 ஆம் நாள் நினைவை அனுஷ்டித்தோம். காலையில் புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலியும், பிறகு வீட்டில் வழிபாடும் நடைபெற்றன. உறவினர், நண்பர் வந்திருந்தனர். 36 பக்கங்கள் கொண்ட நினைவு மலரும் வெளியிடப்பட்டது. மேசியின் ஓவியத்தை வரைந்தவர், ஓவியரும் கவிஞருமான ‘யோகி.’ அந்த மலரில் இடம்பெற்ற எனது கட்டுரையை இங்கு தருகிறேன். மலரின் PDF பிரதியைப் பெற விரும்புவோர் உள் பெட்டியில் தொடர்பு கொள்ளலாம். எல்லோருக்கும் நன்றி! - அ.யேசுராசா -
அன்புள்ள மேசி ...!
நான் இருக்கிறேன் ; நீங்கள் இல்லை. பிரெஞ்சுத் தத்துவவாதி ஜீன் போல் சார்த்தரின் புகழ்பெற்ற, Being and Nothingness - ‘இருத்தலும் இன்மையும்’ நூற்பெயர், அர்த்தச் செறிவுடன் அடிக்கடி என் நினைவில் வருகிறது! நீங்கள் இல்லை ; ஆனால், மனவெளியில் உங்களுடன் என் உரையாடல் தொடர்கிறது...
ஒரே ஊரைச் சேர்ந்தவர்களாயினும், உங்களை எனக்கு நீண்டகாலமாய்த் தெரியாது. தபாற் திணைக்களப் பணி காரணமாய் கொழும்பு, பசறை, பேராதனை, கண்டி, மீண்டும் கொழும்பு என வாழ்ந்ததில் ஊரில் பலவற்றை அறியாதிருந்தேன்! விருப்பத் தேர்விலான பணி ஓய்வின்பின் ஊரில் இருந்தபோது, 1989 இல், ‘திசை’ வார வெளியீட்டில், கலாசாரப் பக்கங்களுக்குப் பொறுப்பாக – துணை ஆசிரியராகப் பணியாற்றினேன். ‘திசை அலுவலகம்’ உங்கள் வீட்டுக்கு அண்மையில், மார்ட்டின் வீதி – பிரதான வீதி மூலையில் இருந்தது. காலையில் பணிக்குவந்த சில நாள்களில், அலுவலகத்துக்கு எதிர்ப்புறம், கையில் கோவைகளுடனும் சில புத்தகங்களுடனும் ஓர் இளம்பெண், நகரத்துக்குச் செல்லும் பேருந்துக்காகக் காத்திருப்பதைக் கண்டிருக் கிறேன். எப்படியென்று நினைவில்லை ; அந்தப் பெண் எமது எசெக்கியேல் ஆசிரிய ரின் மூத்த மகளென்றும், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குச் செல்பவ ரென்றும் தெரியவந்தது. ஆயினும், பிறகும் உங்களை நான் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை.
திருமணம் செய்யாது தனியனாக – இந்தியாவில் புதிய இடங்களுக்குப் பயணம்செய்து சுதந்திரமாக வாழும் மனநிலையில் இருந்தேன்; குடும்பத்தில் அம்மாவுக்கும் சகோதரிகளுக்கும் நான் திருமணம் செய்யாததில் மனக்குறை இருந்தது. 1992 இன் இறுதிப் பகுதியில் ஒருநாள், சென். ஜேம்ஸ் ஆண்கள் பாடசாலையில் முன்னர் என்னுடன் படித்த மரியாம்பிள்ளை, எசெக்கியேல் மாஸ்ரரின் மகள் – ரீச்சர் என உங்களைக் குறிப்பிட்டு, ஏன் அவரைக் கலியாணம் முடிக்கக்கூடாது என்று கேட்டார். வீட்டில் இதனைச் சொன்னபோது உங்களை நன்கு அறிந்த எனது இரண்டாவது தங்கை, மிகுந்த மகிழ்ச்சியுடன், கட்டாயம் நான் இந்தக் கலியாணத்தைச் செய்ய வேண்டுமென மீண்டும் மீண்டும் வற்புறுத்தினாள் ; அம்மாவும் விரும்புவதை உணரமுடிந்தது. அம்மாவின் மனக் கவலையைப் போக்கவேண்டுமென்ற உணர்வும் தோன்றியது. என்றாலும், “யோசிக்க வேணும் ; ஒரு மாதத்துக்குப் பிறகு முடிவைச் சொல்லுகிறேன்” என்று கூறிவிட்டேன்.
உங்கள் அப்பா எங்கள் பாடசாலையில் கற்பித்தபோது, அவர்மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தோம். 35 நிமிடப் பாடவேளையில் முதல் 5 நிமிடங்கள் பாடத்தைப் படிப்பிக்காது, நாங்கள் எவ்வாறு நல்ல மனிதர்களாக வாழவேண்டும் ; சமூக அக்கறையுடன் செயற்பட்டு மற்றவர்கள் மதிக்கும்வண்ணம் முன்னேற வேண்டுமென்று, ஒவ்வொருநாளும் போதிப்பார். எண்கணித பாடத்தை விசேடமாகக் கற்பிக்கும் அவர், இலகுவான வழிமுறைகளில், சுருக்கமான செய்முறைகளையும் காட்டித் தந்தார். 1961 இல், சாதாரண தரப் பரீட்சையில் (ஓ/எல்) நான் விசேட (D) சித்தியைப் பெற்றேன். பாடசாலையை விட்ட பிறகு சும்மா வீட்டில் நின்றேன். ஒருநாள் வாசிகசாலையில் என்னைக் கண்டவர், என்ன செய்கிறீர் எனக் கேட்டு, ஏ. எல். படிக்கலாமெனக் கூறி, சிக்மறிங்கம் மாஸ்ரர்மூலம் ஸ்ரான்லி கல்லூரியில் சேர்த்தும்விட்டார். அவர்மீதான நன்றி உணர்வு என்னில் இருந்தது. அதனால் சாதகமான மனநிலையில், உங்கள் கல்லூரி முடியும் நேரத்தில், பாங்ஷால் வீதியில் – இரண்டு நாள்கள் உங்களை அவதானித்தேன். உங்கள் ‘பெரியன்ரி’ மரியாம்பிள்ளை யுடன் இத்திருமணம்பற்றிக் கதைத்துள்ளார். என்னுடன் சிறிது கதைக்கவேண்டுமென நீங்கள் சொன்னதில், உங்கள் உறவினர் நெல்சனின் வீட்டிற்கு நான் வந்தேன். அன்றுதான் முதன்முதலாக உங்களை நேரில் சந்திக்கிறேன். நீங்கள் சிலவற்றை என்னிடம் விசாரித்தீர்கள்; உங்கள் வெளிப்படைத்தன்மை எனக்குப் பிடித்திருந்தது ; அதனைக் குறிப்பிட்டேன். பிறகு இருவீட்டாரின் முடிவின்படி 1992 ஐப்பசி 21 இல், எளிமையாக நமது திருமணம் நடைபெற்றது. நீண்டகாலமாக சமயம், கோவில் என்பவற்றில் ஈடுபாடு இல்லாதவன் நான். நீங்கள் என் நம்பிக்கையில் தலையிட வில்லை ; உங்கள் சமய நம்பிக்கையில் நானும் தலையிடவில்லை! ஆயினும், இளமையில் உருவான கிறிஸ்தவ விழுமியங்கள்பற்றிய பற்றீடுபாடு என்னில் இன்றும் உள்ளது என்பதைப் பின்னர் நீங்களும் அறிவீர்கள். மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவித்தோம். போர்மேகம் கவிந்த சூழலில், மற்றையோரைப் போலவே எமக்கும் கஷ்டங்கள் பல. 1995 பெரும் இடப்பெயர்வில் கிராஞ்சி சென்றோம் ; அந்தவாழ்க்கையில் நீங்கள் சிரமப்பட்டதில் எனக்குக் கவலைதான்.
மாணவர்களாலும் பெற்றோராலும் விரும்பப்பட்ட ஓர் ஆசிரியை நீங்கள் என்பதை அனுபவவாயிலாக அறிந்துள்ளேன் ; நீங்களும் உங்கள் தந்தையைப்போல்தான் என எண்ணினேன். வங்கி, அரசாங்க அலுவலகங்கள், பொது இடங்களுக்குச் செல்கையில் பலர் பணிவுடன் “மிஸ்” எனக் குறிப்பிட்டு, உங்களுக்கு மரியாதை செய்ததைப் பல தடவைகள் கண்டுள்ளேன் ; அதனால், “மேசி, நீங்கள் எலெக்ஷன் கேட்கலாம்” என உங்களைக் கேலிசெய்துமுள்ளேன்.
உங்களின் இரக்க சுபாவத்தினால் பலரின் துன்ப துயரத்தின்போது அவர்களிடம் சென்று, அவர்களின் உணர்வுகளைப் பகிர்ந்து ஆறுதல்படுத்தியுள்ளீர்கள். தேவைக ளுள்ள வசதி குறைந்தோருக்குப் பணம், உடைகள் என உதவியுள்ளீர்கள். கல்லூரி விடுதியில் தங்கியுள்ள வன்னியைச் சேர்ந்த – பெற்றோரை இழந்த வறிய மாணவர் சிலருக்கு, வீட்டில் தயாரிக்கும் விசேட உணவுகளைக் கொண்டுபோய்க் கொடுத்திருக் கிறீர்கள் ; ஞாயிற்றுக் கிழமைகளில் சிலரை வீட்டுக்கு அழைத்தும் உணவளித்துள் ளீர்கள். கடையில் பிஸ்கற் முதலியவற்றை நாம் வாங்கும்போது, அவர்களுக்குமென, மேலதிகமாக வாங்குவீர்கள். “பாவம்... அவங்களுக்கு இதெல்லாம் எங்க கிடைக்கப்போகுது” என்று அனுதாபப்படுவீர்கள்.
எனது பெற்றோரும், சகோதரிகளும் உங்கள்மீது மிகுந்த மரியாதை கொண்டிருந் தனர் ; நீங்களும் அவர்களுடனும் எனது உறவினருடனும் எளிமையாகப் பழகி, உதவிகளும் புரிந்து உங்கள் அன்பை வெளிக்காட்டினீர்கள். சிறுவயதுமுதலே வாசிப்பில் ஈடுபாடுள்ளவன் நான் ; குருநகரிலுள்ள நான்கு வாசிகசாலைகள் எங்களை வளர்த்தன. அரசாங்க சேவையில் 1967 இல் இணைந்த பின், மாதந்தோறும் புத்தகங்கள் வாங்குவேன் ; எனது மகிழ்ச்சிக்கான ஒரே செலவு அதுதான்! எனது சேகரிப்பு நான்காயிரத்துக்கும் மேல்! திருமணம் புரிந்தபின் புத்தகக் கடைகளில் தேவையானவற்றைக் கண்டால், சிலவேளைகளில் ஏழாயிரம் எட்டாயிரம் ரூபாவுக்கும் வாங்கியுள்ளேன். காசு குறைவாயுள்ளபோது மற்றவற்றை எடுத்து வைத்துவிட்டு வீட்டுக்கு வந்து உங்களிடம் சொன்னால், “காசு இருக்கா?” எனக் கேட்டுத் தேவைப்படும் தொகையைத் தருவீர்கள். நீங்கள் விஞ்ஞான ஆசிரியை என்பதால், தமிழில் வந்துள்ள – பொது வாசிப்பிற்குரிய - விஞ்ஞான நூல்கள் பலவற்றை உங்களுக்காக வாங்கிச் சேகரித்துமுள்ளேன். நீங்கள் ஓய்வுள்ள வேளைக ளில் பலவற்றை வாசித்து, மாணவர்களும் பயன்பெறச் செய்துள்ளீர்கள். இடை யிடையே மாணவருக்குப் பரீட்சை வைத்து, கூடிய புள்ளிகள் பெறும் மாணவர் இருவருக்குப் புத்தகப் பரிசு தருவதாகச் சொல்லி ஊக்கப்படுத்தியுள்ளீர்கள். பாரதியார் கவிதைகள், திருக்குறள், அறிவியல் கேள்வி பதில்கள், அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகள் என வந்துள்ள, நல்ல மலிவுப் பதிப்பு நூல்களை நான் தேடிவாங்கி, உங்களுக்கு உதவியுள்ளேன். அந்த நூல்களைக்காணும் ஏனைய மாணவர்கள் தங்களுக்கும் வாங்கித் தரும்படி பணம் தந்து உங்களை வற்புறுத்தும் போது, இருபது முப்பதெனப் புத்தகங்களை என்னை வாங்கச் செய்து உதவியுள் ளீர்கள். ‘அறிவிசை’ என்னும் தரமான அறிவியல் இதழின் 75 வரையிலான பிரதிகளை, இரண்டு மாதங்களுக்கொருமுறை மாணவர் மத்தியில் விநியோகித்து உதவியதை, அதனை வெளியிட்ட நண்பர்கள் இன்னும் நன்றியுடன் நினைவு கூர்கின்றனர்!
திருமணத்துக்கு முன் நான் எழுதிய இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளேன் ; ஆனால், திருமணத்தின்பின் எட்டுப் புத்தகங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் இரண்டைத் தவிர ஏனைய ஆறும் என்னால் வெளியிடப்பட்டவை. அந்த ஆறு புத்தகங்களும் வெளிவந்ததில் உங்களின் பங்களிப்பும் இருக்கிறது. 2001 இல் வெளியான ‘தூவானம்’ நூலை ‘அன்பு மனைவி மேசிக்கு...’ என உங்களுக்கே சமர்ப்பணம் செய்தேன். தவிர, அவற்றின் வெளியீட்டு நிகழ்வுகளில் வருகை தருவோரை உபசரிப்பதில், உங்களின் தோழியர், எனது சகோதரிகள் ஆகியோரை இணைத்துச் சிறப்பாகச் செயற்பட்டீர்கள். அச்செயற்பாட்டில் ஈடுபடுவதால் நிகழ்வின் உரைகளை முறையாகச் செவிமடுக்க முடிவதில்லை என்ற மனக்குறையும், உங்களுக்கு இருந்தது ; பொறுப்பை மற்றையோரிடம் கொடுத்துவிட்டு சபையில் அமர்ந்து, நிகழ்ச்சியில் பங்கெடுங்கள் என்று நான் கூறியதுண்டு. ஆனால் நீங்களோ, நமது அழைப்பை ஏற்று வருபவர்களை நாம் திருப்தியாக உபசரிக்க வேண்டும் எனக்கூறி, அதிலேயே ஈடுபடுவீர்கள்!
இலண்டனிலுள்ள நீண்டகால நண்பர் பத்மநாப ஐயரின் ஒழுங்கமைப்பினால், 2001 இல், நான்கு மாதங்களுக்கான பல்தடவை நுழைவு விசா (Multiple Entry Visa) பெற்று இலண்டன் சென்றேன். அங்கிருந்து பிரான்ஸ், யேர்மனி, நோர்வே, நெதர்லாந்து, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கும் சென்று வந்தேன். ஊர் திரும்பிய பின்னர் பயணம் பற்றிய ஏக்கம் உங்களிடம் இருந்ததை உணர்ந்தேன். எனவே அடுத்த ஆண்டில், வேளாங்கண்ணி முதலிய புனித ஸ்தலங்களுக்கும் ஏனைய இடங்க ளுக்குமாக தமிழகப் பயணம் செல்லலாமென உங்களைத் தூண்டி, ஒரு மாதப் பயணம் சென்றோம். திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவில் சென்று, புனிதர் தேவசகாயம் பிள்ளையின் நினைவிடமான காற்றாடிமலை, வேளாங்கண்ணி, பாண்டிச்சேரி, திருநெல்வேலி, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், சென்னை, மாமல்லபுரம் எனப் பல இடங்களுக்கும் சென்றோம். பல இடங்களில் சுந்தர ராமசாமி, ரவிக்குமார் முதலிய முக்கிய எழுத்தாளரின் வீடுகளில் தங்கினோம் ; இன்னும் பல எழுத்தாளர் களையும் சந்தித்தோம். இலங்கையைச் சேர்ந்த உறவினர், நண்பர்களின் வீடுகளிலும் தங்கி முக்கியமான இடங்களைச் சுற்றிப் பார்த்தோம்; நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தீர் கள் ; அவ்வாறே எனது உறவினரின் உதவியால், 2016 இல் கனடாவில் இரண்டு மாதங்களைக் கழித்தோம். 2018 இல், ஜெருசலேம் புனித யாத்திரையில் சென்று வந்தீர்கள். அதே ஆண்டு நடுப்பகுதியில் பிரான்ஸ், யேர்மனி, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளுக்குச் செல்லும் நமது பயண ஒழுங்குகள், அக்காலத்தில் உங்களுக்கு வந்த இதய நோயினால் தடைப்பட்டன. அடுத்த ஆண்டு, 2020 இல் அவுஸ்திரேலியாவில் மூன்று கிழமைகளையும், சிங்கப்பூரில் ஒரு கிழமையையும் பயன்மிக்கதாக மகிழ்ச்சியுடன் கழித்தோம். இப்பயணங்கள் புதிய அனுபவங்களை எமக்குத் தந்தன.
எமது குடும்ப வாழ்வில் இடையிடையே சில நெருடல்களும் ஏற்பட்டதுண்டு ; ஆனால், யதார்த்த வாழ்வில் அவை இயல்பானவைதான். ஆதாரமாகப் பரஸ்பர அன்பும் அக்கறையும் எம்மிடையே இருந்ததால், அவற்றைக் கடந்துவந்தோம். ஆனால், தொடர்ச்சியாக – நீண்டகாலமாக உங்களுக்கு மனக்கவலையைத் தந்த பிறிதொரு நிலைமையும் இருந்தது ; அதனால் பலதடவைகள் கண்கலங்கியும் இருக்கிறீர்கள். ஓம், உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவர், வன்மங்கலந்த ‘பிறழ் மனநிலை’ யில் தொடர்ந்து செய்துவந்த “சின்னத்தனமான செயல்களால்தான்”, அவ்வாறு கவலையடைந்தீர்கள் ; கோபமடையும் என்னை அமைதியாக இருக்கும் படியும் ஆற்றுப்படுத்தினீர்கள். அவருடன் தொடர்புள்ள இங்குள்ள உறவினர் அவரைக் கண்டித்துத் திருத்தவில்லை என்ற ஆதங்கமும், உங்களிடம் இருந்தது. அதே “நபர்”, திடீரென உங்கள் மரணவீட்டில் “அதீத உறவுரிமை” காட்டி ஆடிய “நாடகம்”, பைபிளில் வரும் “வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்” என்ற சொல்லை நினைவூட்டி எரிச்சலையும் கோபத்தையும் எழுப்பியபோதிலும், மரணவீட்டின் கௌரவத்துக்காக அமைதி காத்தேன்.
உங்கள் வாழ்வின் இறுதிக் கட்டத்தில், வைரஸ் காய்ச்சலின் பின் பலவீன மடைந்தீர்கள். தொடர்ந்து வயிற்றின் இடது கீழ்ப்புறத்தில் நோவினால் அவஸ்தைப் பட்டீர்கள். மூன்று வாரப் பரிசோதனைகளின் பின்பே, சிறுநீரகத்தில் கட்டி உள்ளதெனக் கண்டுபிடிக்கப்பட்டு, சத்திரசிகிச்சைக்கு நாள் குறிப்பிடப்பட்டது. இந்நிலைமையில் அச்சமடைந்திருந்தீர்கள். பராமரிப்பில் உதவிய சகோதரியும், யாழினியும், நானும் உங்கள் அச்சத்தை நீக்கும் முயற்சியில் மாறிமாறி ஈடுபட்டதில், சத்திரசிகிச்சையன்று உறுதியான மனநிலையில் இருந்தீர்கள். ஆறு மணிநேர சத்திரசிகிச்சையின் பின், திருப்தியான சத்திர சிகிச்சை என மருத்துவர்கள் தெரிவித்தனர். அன்றும் மறுநாளும் அவசர சிகிச்சைப் பிரிவில் (EU) நீங்கள் நன்றாகவே இருந்தீர்கள். ஆனால், மறுநாள் இரவு பத்துமணிபோல், பராமரிப்புச் சகோதரியின் கையை இறுக்கிப் பிடித்தபடி, “போகவேண்டாம் சிஸ்ரர் ... எனக்குப் பயமா இருக்குது...” என்று வலியுறுத்தினீர்கள். “பயப்பிட வேண்டாம் அம்மா. நாங்கள் உங்களுக்காகச் செபிக்கிறோம்... நீங்களும் செபம் சொல்லி உறுதியாக இருங்க... எல்லாம் நல்லபடி நடக்கும்.” என்று அவர் சொல்லிச் சென்றார். அடுத்த நாள் காலை, அவருக்குக் “குட் மோணிங்” சொன்னீர்கள். உங்களை அவர் சுத்தப்படுத்தி விசாரித்த போது, நல்லாயிருப்பதாகக் கூறினீர்கள். “நோகுதா?” என்று கேட்டபோது, “மருந்து போடுவதால் நோகயில்ல” என்றீர்கள். பின்னர் பால் மாவைப் பருக்கியபோது, பச்சை நிறமாகச் சத்தி எடுத்தீர்கள். பராமரிப்புச் சகோதரியை ஒருவிதமாகப் பார்த்தீர்களாம். அவர் “அம்மா ... அம்மா ...” என அழைத்தபோதும் நீங்கள் பதிலேதும் கூறவில்லை யாம். அந்தவேளை ... சகோதரியின் கை உங்களைத் தாங்கியிருக்க, காலை 7.1௦ மணிக்கு உங்களின் உயிர் திடீரெனப் பிரிந்திருக்கிறது! அமைதியான நல்மரணம். மேசி...! நீங்கள் “இன்மை”க்குள் சென்றுவிட்டீர்கள் ; நாங்கள் “இருக்கிறோம்.” ஆனால் இந்த “இருத்தல்”, உங்களை இழந்த துயரில் நனைந்து ஊறியிருக்கிறது!
௦௦
சத்திரசிகிச்சை செய்த மருத்துவரில் ஒருவர், “எதிர்பாராத மரண”மெனக் கவலைப்பட்டார் ; சிறிதான இதயத் தாக்குதல் அல்லது ‘புளொக்’ ஏற்பட்டிருக்க லாமென்றார். நீங்கள் மரணமடைந்த நான்கு நாள்களின் பின்னர், கனடாவிலிருந்து கவிஞர் சேரன் கதைத்தார். அவரை உங்களுக்கும் தெரியும். கனடாவில் நாம் நின்றவேளை ஒருநாள், தனது வீட்டிற்கு அழைத்து, நமக்கு இரவு விருந்து அளித்தார். உங்கள் நோய், மரணம் பற்றி விபரம் கேட்டபோது சொன்னேன். உங்களைப்போலவே அவருக்கும் இதய வியாதிக்காக இரண்டு ‘ஸ்ரென்ற்’ (stent) வைக்கப்பட்டுள்ளது. தனது அனுபவம், இதுபற்றித் தான் திரட்டிய அறிவின்படி – துக்கம், மிகையான மகிழ்ச்சி, பயம் என்பவற்றில் ஏதுமொரு காரணியால் மன அழுத்தம் (stress) ஏற்படும்போது, மாரடைப்புக்குச் சாத்தியமுண்டு என்று சொன்னார். மருத்துவர் கூறியதையும் இணைத்துப் பார்க்கையில் உங்கள் பயம்தான் மரணத்துக் குக் காரணமாக இருந்துள்ளது! ஆரம்பத்தில் பயந்து பிறகு தேறித் திடமான பின்னர், சத்திர சிகிச்சைக்குப் பிறகு நல்ல நிலையில் இருந்தும், மறுபடியும் உங்கள் மனதுக் குள் பயம் உருவாகியுள்ளது. அவசர சிகிச்சைப் பிரிவின் வித்தியாசமான கருவிகளும் தனிமைச் சூழலும் பயத்தைத் தூண்டியிருக்கலாம் ; சாதாரண விடுதியில் தங்கவிடப் பட்டிருந்தால், பயமற்று, சாதாரண மனநிலையில் நீங்கள் இருந்திருக்கலாம் என்றவா றெல்லாம் மனம் அல்லாடுகிறத! என்றென்றைக்குமாக உங்களை இழந்துவிட்டோம்! ; பேரியற்கை என்றும் மரணத்தின்மூலம் மனிதனைத் தோற்கடிக்கிறது! நம் வீட்டில் ஒருநாள் தங்கிய - உங்களுக்கும் பழக்கமான – கவிஞர் சண்முகம் சிவலிங்கத்தின்,
“’போகட்டும் ... இன்று முதல் கசப்புகளை வாங்கிப் புசிக்கிறேன்.” என்ற கவிதை வரிகளும் ஏனோ, நினைவுக்கு வருகின்றன!
நன்றி: எழுத்தாளர் அ.யேசுராசாவின் முகநூற் பக்கம்