எழுத்தாளர் தேவகாந்தனைச் சிறுகதையாசிரியராக, நாவலாசிரியராக நாமனைவரும் அறிவோம். ஆனால் அவரது இதழியற் பங்களிப்பு பற்றி அதிகமாக இலக்கியச்சூழலில் கதைப்பதில்லை. ஏன்? தெரியவில்லை. தமிழ் இலக்கியச் சூழலில் அவரது இதழியற் பங்களிப்பு முக்கியமானது.
கனடாத் தமிழ் இலக்கியச் சூழலில் அவரது ஆண்டிதழான கூர் முக்கியமானது.அதேபோல் அவர் இந்தியாவில் இருந்தபோது தொண்ணூறுகளில் அவரை ஆசிரியராகக் கொண்டு வெளியான 'இலக்கு' சிற்றிதழ் முக்கியமானது. 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்!' என்பதைத்தாரக மந்திரமாகக்கொண்டு வெளியான இதழ்.
அதிக எண்ணிக்கையில் வெளிவந்திருக்காவிட்டாலும் , வெளிவந்த அனைத்து இதழ்களும் காத்திரமான இலக்கியச்சிறப்பு மிக்கவை. புதுமைப்பித்தன் மலர், பாரதியார் மலர், நா.பார்த்தசாரதி மலர், டானியல் மலர், பேராசிரியர் க.கைலாசபதி மலர்கள், ஆண்டு மலர், தி.ஜானகிராமன் மலர் என தரமான , இலக்கியச்சூழலில் நிலைத்து நிற்கக்கூடிய சிற்றிதழ் மலர்கள்.
எஸ்.பொ. நாரண துரைக்கண்ணன், நந்தி போன்ற எழுத்தாளர்களுடனான நேர் காணல்கள், கோ.கேசவன் (பாரதியார், பேராசிரியர் க.கைலாசபதி பற்றிய கட்டுரைகள்) , பேராசிரியரகளான கா.சிவத்தம்பி (எழுத்தாளர் விந்தனின் இலக்கிய இருப்பிடம் பற்றிய கட்டுரை), சி.சிவசேகரம் (அரசியலும், அழகியலும் கட்டுரை) , ஞானி (மார்க்சியமும், தலித் இலக்கியமும், மார்க்சியமும் இலக்கியமும் கட்டுரைகள்), நூல் விமர்சனங்கள் (லதா ராமகிருஷ்ணனின் டானியலின் பஞ்சகோணங்கள் நாவல் பற்றிய விமர்சனம் போன்ற கட்டுரைகள்), கவிதைகள், சிறுகதைகள், இலங்கைத் தமிழ் நாவல் பற்றிய கட்டுரைகள் (ஆசிரியரின் பெயர் குறிப்பிடவில்லை. ஆனால் தேவகாந்தன் என்பதை உணரமுடிகின்றது.), திகசி கட்டுரைகள், பேராசிரியர் நா.சுப்பிரமணியனின் கவிஞர் மஹாகவியின், எழுத்தாளர் டானியலின் படைப்புகள் பற்றிய கட்டுரைகள், அந்தனி ஜீவாவின் 'மலையகத் தமிழ் நாவல்கள் பற்றிய கட்டுரை . .. என ஆக்கபூர்வமான ஆக்கங்கள் நிறைந்த இதழாகக் காணப்படுகின்றது 'இலக்கு'.
வெளியான இலக்கு இதழ்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு நூலாக ஆவணப்படுத்தப்படுவது முக்கியமானது என்னும் எண்ணம் இவ்விதழ்களை வாசித்தபோது தோன்றியது.
இலக்கு இதழ்களை வாசித்தபொது ஒன்று மட்டும் நன்றாகத்தெரிந்தது. அது: எழுத்தாளர் தேவகாந்தனின் இதழியற் பங்களிப்பும் அவரது ஏனைய இலக்கியப் பங்களிப்புகளைப்போல் முக்கியத்துவம் மிக்கது. பெருமைப்படத்தக்கதும் கூட.
'இலக்கு' இதழ்களை நூலகம் தளத்தில் வாசிக்க