- விழிப்பு' வாசிக்கையில் மனத்தைத் தொடும் சிறுகதைகளிலொன்று இச்சிறுகதை. வாசிக்கும்போது மிகச்சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை உணரமுடிகின்றது. இச்சிறுகதையில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் உயிர்த்துடிப்புடன் படைக்கப்பட்டுள்ளன. மண் வாசனையுடன் கூடிய சிறுகதை. நடை வாசிக்கையில் இதயத்தை வருடிச் செல்கின்றது. வாசித்துப் பாருங்கள். - ஆசிரியர், பதிவுகள்.காம் -
- தெலுங்கு மூல ஆசிரியர் : பி.அஜய் ப்ரசாத் -
தெலுங்கு மூல ஆசிரியர் : பி.அஜய் ப்ரசாத்
பி.அஜய் ப்ரசாத் (முழு பெயர் - பாதர்ல பிரசன்ன அஜய் ப்ரசாத்) ஆந்திரமாநிலம், குண்டூர் மாவட்டம், நகரிகல்லு கிராமத்தில் ஜூன் 9இ 1972இல் பிறந்தவர். 2005ஆம் ஆண்டு முதல் தெலுங்கில் சிறுகதைகளை எழுதி வருகிறார். இவரின் கதைத் தொகுதி 2018ஆம் ஆண்டு “லோயா மற்றும் சில கதைகள்” என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. இவரின் இரண்டாவது கதைத் தொகுதி “காலி பொரலு” ஆகும். இவரின் கதைகள் ஆங்கிலம், இந்தி, பெங்காளி மொழிகளில் வெளிவந்துள்ளன.
மொழிபெயர்ப்பாளர்: க.மாரியப்பன்
பொருநை க.மாரியப்பன், திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் ஏப்ரல் 4, 1976இல் பிறந்தவர். ஆந்திரமாநிலம், திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர், இலக்கிய விமர்சகர். சமீபத்தில் ஏப்ரல் 23, 2022 இல் இவரின் தெலுங்கு சிறுகதைத் தொகுப்பு மொழிபெயர்ப்பு நூல் ‘மஹாவித்துவான்’ வெளிவந்தது.
மேற்கே சூரியன் மலையிலிருந்து இறங்கியவுடன் கிழக்கே பௌர்ணமிச் சந்திரன் கீழிருந்து மேல் எழுந்தது. பகல்முழுவதும் வெயிலில் காய்ந்த மரங்கள் சாய்ந்தரம் குளிர்ந்த காற்றுக்கு தலையசைத்து நின்றன. கருப்புக் காடைகள் சிறகுகளை விரித்து வட்டமிட்டு சுற்றிக் கொண்டு கூடுகளை அடைந்தன.
இருட்டும் வரை பகல் எல்லாம் பிச்சைக்கு ஊரெல்லாம் சுற்றி, பையை நிறைத்து எப்பொழுதும் போல தாரோட்டிலிருந்து ஊர் எல்லை வரை செல்லும் ஒற்றையடிப் பாதையை நோக்கி நடந்தார் பைராகி. அவரின் உடல் மீது இருக்கிற காவியாடை கசங்கி, அழுக்காகி, மண் நிறத்திற்கு மாறியிருந்தது. கருப்பாக, ஒல்லியாக, காய்ந்து போன குச்சியாக இருந்தார் அவர். வியர்வையில் நெற்றி மீதிருந்த விபூதி, குங்குமம் அரித்துப்போய் இருந்தது. கருப்பும் வெள்ளையுமாகக் கலந்திருந்த நீளத் தாடி, சாய்ந்திர வெயிலில் அவரின் நிழலோடு கூட வந்து கொண்டிருந்தது.
பகல்முழுவதும் மக்கள் ஓர் ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு நடந்து போகிற ஒற்றையடிப்பாதை பொழுதாகப் பொழுதாக ஆள் ஆரவாரம் இன்றி நிசப்தமாய் கொண்டிருந்தது. பைராகி ஒற்றையடிப்பாதையைத் தாண்டி, ஊர் எல்லையில் புதருக்கு நடுவில் பாதி சிதலமடைந்திருந்த வீட்டிற்குள் நுழைந்தவுடன் முழுவதுமாகப் பொழுது இருட்டியது.
எப்பொழுதாவது புதியவர்கள், வெளியூர் செல்லும் பாதசாரிகள் அந்த ஒற்றையடிப்பாதையில் நடந்துகொண்டே சிதலமடைந்த அந்த வீட்டை விந்தையாகப் பார்ப்பார்கள். ஓருசில சமயம் வேலைவெட்டியில்லாத சோம்பேறிகள், குட்டிச்சுவர் நிழலில் அமர்ந்து ஆடுபுலி ஆட்டம் ஆடுவார்கள். புதியவர்கள் எவர் வந்தாலும் பைராகி அவர்களைக் கண்டுகொள்ள மாட்டார். அங்கே வந்தவர்கள் ஓர் இரு நாள்களிலேயே அந்த அமைதிக்கு அலுத்துப்போய் சென்றுவிடுவார்கள்.
அந்தப் பாழாய்போன வீட்டில் அவர் எவ்வளவு காலமாக வசித்துவருகிறாரோ யாருக்கும் தெரியாது. பல நாட்களாகத் தனியாகவே இருப்பார். முதுகைச் சுவரில் சாய்த்துக்கொண்டு வெற்றிடத்தைப் பார்த்துக்கொண்டு அமைதியாக நேரத்தைக் கடத்துவார். ஒரு சில சமயங்களில் தனக்குத்; தானே பேசிக்கொண்டு உள்ளங்கையை நீட்டி விரல்களில் முத்திரை நிறுத்தி விசித்திரமாகக் கத்தி, கைகளைப் பின்னால் இழுத்துக்கொள்வார். அந்த சேஷ்டைகளைப் பார்த்தால் அவர் ஒரு விசித்திரமான சாது என்று சொல்லிக்கொள்வார்கள்.
பைராகி வீட்டுக்குள் நுழைந்தவுடன், மண்ணென்ணெய் விளக்கை ஏற்றி, அறையின் ஓரத்தில் இருந்த கூடைக்கு அடியில் இருந்த புறாவை வெளியே எடுத்து, அதற்கு முன்பாகத் தினையைத் தூவினார். அதன் பிறகு வெளிப்புறத்தில் சருகுகளைக் கொண்டு அடுப்பைப் பற்ற வைத்து, உலை வைத்து, உள்ளே வந்து கிழிந்தபாய்மீது படுத்தார். அறையின் உட்பகுதியில் பாதிக்கு மேல் சுருங்கிய வைக்கோல் கூரை உள்பக்கம் அமுங்கியிருந்தது. இருட்டுக்கு, வெளியே திறந்தால் வாசல்நிலையில் எட்டிப் பார்க்கும் திரிசென (வாகை மரம்) மரக் கிளைகள் உள்ளே எட்டிப்பார்த்தன. யார்யாரோ கரியால் வரைந்த கிறுக்குத்தனமான கோடுகள் குட்டிச்சுவர் முழுவதும் படர்ந்திருந்தது. காற்றுக்கு எப்பொழுதோ அணைந்த அடுப்பில் கொஞ்சநேரத்தில் மெல்லிய புகை வந்து அணைந்துபோனது.
“அதுக்குள்ளவே படுத்துட்டீங்களா சாமி!” என்ற சத்தத்தைக் கேட்டதும் பைராகி தூக்கத்திலிருந்து பதறியடித்து எழுந்து பார்த்தார். வெளியில் வரண்டாவில் திண்ணை மீது குறிகாடு அமர்ந்திருந்தான். அவன் பக்கத்தில் கவணில் அடிக்கப்பட்ட நாரைகள் தாகத்தில் வாயைத் திறந்து மூச்சிறைத்துக் கொண்டிருந்தன. அவைகளின் கால்கள் முறுக்கப்பட்டு சணல் கயிற்றால் கட்டப்பட்டிருந்தன. வாசலின் முன்பு அணைந்த அடுப்பு மீது இருந்த மண்பானையின் மூடி அமைதியாக இருந்தது.
பைராகி வெளியே வந்து, அடுப்பு முன் அமர்ந்து ஊதியவாறு, “படுக்கலடா… அடுப்ப பற்ற வைத்து, கொஞ்சம் சாஞ்சன்” என்றார். அடுப்பில் சருகு படபடவென்று பொறிந்து மெல்லிய புகை மீண்டும் மேலெழுந்தது.
குறிகாடுவும் பைராகி போலவே, வீடு, மனைவி இல்லாத மனிதன். காட்டு விலங்குகளை, காடைகளை வேட்டையாடுவது அவனது தொழில். குறிபார்த்து காடைகளை அடிப்பதில் கெட்டிக்காரன். அதனாலேயே அவனுக்கு அந்தப் பெயர். மாயமர்மம் தெரியாத மனிதன். பல நாட்களாக எங்கெங்கேயோ திரிந்து அந்த நிர்மானுஷ்ய இடத்திற்கு எப்பொழுதாவது அரிதாக வரும் விருந்தாளி.
குறிகாடு உள்ளே வந்து ஒரு மூலையில் ஒடுங்கி அமர்ந்திருந்த புறாவைக் கையில் எடுத்தான். நீண்ட நாட்களுக்கு முன்பு அவனே அதனை அங்கே கொண்டுவந்திருந்தான். கொண்டுவந்த நாளிலேயே அதை அறுத்து சமைக்க எண்ணினான். அந்த நாள், பைராகி தடுக்கமால் இருந்திருந்தால் அது உயிரோடு இருந்திருக்காது. அது பறக்காமல் இருப்பதற்கு இறக்கைகளை மட்டும் பிடுங்கியிருந்தான்.
இப்பொழுது குறிகாடு கையில் புறா இருப்பதைப் பார்த்து, “அது என்னடா! என்னப் பண்ற?” என்றார். அவர் விலகி தூரமாக அமர்ந்திருந்ததால் குறிகாடு செய்த செயல் அவர் கண்களுக்குத் தெரியவில்லை. குறிகாடு தன் இடுப்பில் இருந்து ஊசி நூல் எடுத்துக்கொண்டு, ‘இதை காலையில் கொல்லகம்மு (ஆறு) எடுத்துட்டுபோறேன் சாமி. இந்தப் பெண்புறா எந்த ஆண் புறாவுக்குப் பின்னாடியும் போகாதமாதிரி செய்யுறன். ஆனால், இதெல்லாம் உனக்குத் தெரியாது. நீ சாமியாரில்லய்யா!;” என்று விகாரமாகச் சிரித்தான்.
“எடுத்துட்டுப்போயி?” பைராகி கேள்விக்குறியோடு பார்த்தார்.
“கொல்லகம்முல தினை வீசி வலைபோடுறன். இதை வலை அருகில் கட்டி போடுறன். இதைப் பார்த்து காடைகள் இறங்கி, வலையில மாட்டும்”
அவனின் சிரிப்பு நிற்காமல் விட்டு விட்டுத் தொடர்ச்சியாகக் கேட்டது. சிரிக்கின்றபொழுது அவனின் விலாஎலும்பு நொறுங்கும்படியாகச் சிரித்தான். குட்டிச்சுவருக்கு அப்பால் வட்ட நிலா வருத்தத்தோடு பார்த்துக்கொண்டிருந்தது.
“அடேய்! அது உனக்கு தூண்டில் காடைன்னா, அது எனக்கு வளர்த்த காடை. எனக்கு இருக்கிற ஒரே துணை அது தான். எடுத்துட்டுப் போனது போலவே திரும்ப அதை கொண்டு வா. அது இல்லன்னா எனக்குப் பொழுது கழியாது” என்றார் பைராகி.
பைராகியின் வார்த்தைகள் குறிகாடுக்கு ஆச்சர்யம் அளித்தது. அவனுக்கு ஒருசமயம் பைராகி எவ்வளவோ நெருக்கமாக இருப்பதுபோல் தோன்றியது. ஒருசமயம் யாரிடமும் சம்பந்தம் இல்லாததுபோல் தோன்றியது. பைராகி சொல்லும் ஒவ்வொன்றும் அவனுக்கு அற்புதமாக இருக்கிறது. எவ்வளவு கேட்டாலும் இன்னும் நிறைய மீதம் இருப்பதாகவே தெரிகிறது.
குறிகாடு பேசாமல் இருப்பதைப் பார்த்து, “என்னடா? என்ன ஆச்சு, அமைதியா இருக்குற?” என்றார் பைராகி.
பைராகியைச் சிறிது நேரம் மௌனமாகப் பார்த்து, “ரொம்ப நாளா ஒங்ககிட்ட ஒன்னு கேட்கணும்னு நெனச்சிட்டு இருக்குறன் சாமி…” என்றான் குறிகாடு.
“என்னடா அது?” என்றவாறு பைராகி திரும்பி வந்து குறிகாடுக்கு எதிராக அமர்ந்தார். “நான் மட்டுமில்ல, ஒங்கள பத்தி எல்லாரும் நினைக்கிற ஒரு விசயம் ஒன்னு இருக்கு சாமி! மாணிக்கம் கூட சொல்லிட்டு இருப்பான்;. ஒரு சிலசமயம் தனக்குத் தானே தனியா பேசிட்டு இருக்குறீங்க. விரல்ல எதையோ எண்ணிக்கிட்டு இருக்குறீங்க. கைகளை நீட்டுறீங்க. பின்னாடி இழுத்துக்குறீங்க. இந்த பைத்தியகார சேஷ்ட்டைகள் உங்களுக்கு எப்ப வந்தது சாமி?” என்றான்.
குறிகாடு வாயிலிருந்து மாணிக்கம் என்ற பெயரைக் கேட்டவுடனேயே பைராகியின் முகம் மாறியது. பைராகி குறிகாடுவிடம் ஒருவிதமாக இருந்தால், மாணிக்கத்திடம் இன்னொருவிதமாக இருப்பார். மாணிக்கத்திடம் அதிகம் பேசமாட்டார். அவர்கள் இருவரில் ஒருவர் இருக்கும்போது மற்றொருவர் இருக்கமாட்டார்கள்;. ஒரு சிலசமயம் விருந்தினர் இருவரும் ஒரே நேரத்தில் வருவதும் உண்டு. அப்படிப்பட்ட நேரத்தில் பைராகி முகப்பாவங்களைத் தெரிந்து கொள்வது கஷ்டம். அவர் ரொம்ப சங்கடப்பட்டுக்கொள்வார். வந்த விருந்தினர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அதிகமாகப் பேசிக்கொள்ளாமல் அமைதியாக இருப்பர். இருவருக்குமான நெருங்கிய உறவு மூவருக்குமான நெருங்கிய உறவல்ல.
“இந்தக் குருவிக்காரன்ட்ட பைராகிக்கு என்ன வேலையிருக்கு” என்று நினைத்துக்கொள்வான் குறிகாடு. பைராகியும் மாணிக்கமும் நமக்குத் தெரியறதுக்கு முன்னாடியே அவங்களுக்குள்ளே ஏதோ அறிமுகம் இருக்கும் போல.
குறிகாடு கையில் புறா இருப்பதைப் பார்த்து, “இந்த புறாவைப் பார்க்கும்பொழுது எனக்கு ஒரு சாமி நினைவுக்கு வர்ராருடா” என்று பைராகிப் பேச்சை மாற்றினார்.
“யாரு சாமி?” என்று சொல்லிக்கொண்டே குறிகாடு ஒரு கையில் ஊசியை வைத்துக்கொண்டு மறுகையால் நூலை நுழைத்துக்கொண்டு. அவனின் கூர்மையான பார்வை ஊசியின் துளையில் இருந்தாலும் காதுகள் பைராகியின் வார்த்தைகளைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தது. வாசலின் முன்பு அடுப்பு கங்குகள் நான்கு புறங்களிலும் கனந்து கொண்டிருந்தன. அடுப்பின் மீது சோறு குதுகுதுவென்று வேகிற சப்தம் வந்துகொண்டிருந்தது.
“நான் வீட்டைவிட்டு வெளியே வந்ததும் தலைக்கோணத்தில் ஒரு சாமியாரைப் பார்த்தேன்டா. என்னைவிடப் பெரிய மனிதர். கிட்டத்தட்ட எனக்கு குரு மாதிரி. அவர் எப்பவும் ஒரு வார்த்தை சொல்லுவார். மனிதர்கள் தெரிந்தோ தெரியாமலோ நல்லது, கெட்டது செய்யுறாங்க. காரியம் கண்ணுமுன்னாடி இருக்குற வரைக்கும் தான். கைமீறி போனதும் நம்ம நெனச்சது நடக்காது. அந்தந்த திசை அது அதுக்கு இருக்கு. சிறகுகள் விரித்த புறா அதற்குரிய திசையில் பறக்கும். காற்றுக்குப் பிறந்த அலை கண்ணுக்கு எட்டிய தூரம் தெரிந்து பின் காணாமல் போகும் அதைப் போல இந்தப் புறாவும்…”
பைராகிப் பேசிக்கொண்டு இருந்தவரை அவர் ஏதோ தியானத்தில் இருந்ததுபோல கண்கள் சூன்யத்தில் நிலைக்குத்தியிருந்தது. அவரின் கைகள் பக்கவாதம் வந்தது போல எந்த அசைவும் இன்றிக் கிடந்தன. பைராகி பேசிய அனைத்தையும் கேட்ட குறிகாடு நிம்மதியாக எழுந்து நின்றுகொண்டு புறாவை எங்கிருந்து எடுத்துவந்தானோ அந்த அறையிலேயே விட்டுவிட்டு வெளியே நடந்துகொண்டு, “நீ என்ன சொல்றயோ எனக்குத் தெரியாது சாமி. எனக்குத் தெரிந்ததெல்லாம் எலிகள், நண்டுகள், காடைகள் அடிச்சு சாப்புடுறது…தூங்குறது” என்று பெரிதாகச் சிரித்தான். பைராகி கொஞ்ச நேரம் மௌனமாக இருந்து, அவரும் குறிகாடுவுடன் சேர்ந்து சிரித்தார்.
இறுதியாகக் குறிகாடு கொக்குகளைத் தோள்மீது போட்டுக்கொண்டு, எங்கேயோ செல்வதைப் பார்த்து, “மறுபடியும் எங்க போறடா? சமைச்சிருக்குறன் சாப்பிட்டுப் போடா” என்றார் பைராகி. அடுப்பு மீது உள்ள மூடியைத் திறந்து குச்சியை வைத்து கிளறினார்.
“நான் சாப்பிட்டுத்தான் வந்தேன். நீ சாப்பிடு. நான் மறுபடியும் வர்றன். என்ன இராவான்னாலும் வர்றன். நீ தூங்கு. என்னை எதிர்பார்க்காதே…” என்று சொல்லிவிட்டு, நிலவொளியில் அடர்த்தியான மரங்களின் மத்தியில் மறைந்துபோனான். அவன் கள்ளிறக்கும் இடத்தில் இரவைக் கழித்து பொழுது புலர்ந்ததும் வருவான். அதன் பிறகு நீண்டநேரம் அமைதியாகக் கடந்து போனது. என்றைக்கும் போலவே பைராகி வெளியே திண்ணை மீது விரிந்த கண்களால் சூன்யத்தைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார். அப்படி எவ்வளவு நேரம் கழிந்ததோ தெரியாது. கொஞ்சநேரம் கழித்து உள்ளே வந்து, அறையில் அங்கும் இங்கும் சுற்றி, கடைசியாகச் சோறு உண்டு, தரையில் படுத்து தூங்கிப் போனார். விளக்குத் தீபம் கொஞ்ச நேரம் எரிந்து கடைசியாக இருட்டில் கலந்தது. எங்கோ அறையின் ஒரு மூலையில் இருந்து சுவர்கோழிப்பூச்சி ஒன்று கத்திக் கொண்டிருந்தது. வெளியே குட்டையில் தவளைகள் க்ரக் க்ரக் என்று கத்திக்கொண்டிருந்தன.
நடுசாமம் இருக்கும், “பிச்சைப்பதி… இருக்கயா?” என்று வெளியில் இருந்து எவரோ கூப்பிடுவதைக் கேட்டு, “யார் அது?” என்று பைராகி படுத்துக்கொண்டே கேட்டார்.
“நான், மாணிக்கம்” என்று அப்பாலிருந்து பதில் வந்தது.
“மாணிக்கம்! உள்ளே வா…” என்று படுத்திருந்த பைராகி எழுந்து வெளியே வந்தார்.
வீட்டின் வெளியே மங்கிய நிலவொளியில் நின்றுகொண்டிருந்தான் மாணிக்கம். ஒல்லியான மனிதன், தெரிந்தும் தெரியாமலிருக்கிற கடுக்கன், கழுத்தில் மணிமாலை. மாணிக்கத்தின் பின்னால் முந்தானைப் போர்த்திய பெண். சரியாகத் தெரிந்தும் தெரியாமல் இருக்கும் முகம்.
“இது யாரு?” பைராகி பின் நோக்கி நடந்து கொண்டு கேட்டார்.
“எங்காளுதான்” பைராகி பின்னாடி நடந்து வந்து சொன்னான் மாணிக்கம்.
மாணிக்கம் அவ்வப்பொழுது அங்கே ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு வருவான். ஆனால் ஒரு முறை வருபவர்கள் மறுமுறை வருவதில்லை.
“இன்றைக்கு குறிகாடு வரலையா?” பின்னால் இருந்து மாணிக்கம் வினவினான்.
“இப்பதான் வெளிய போனான். நடுராத்திரி ஆனாலும் வர மாட்டேன்னு சொன்னான்” முள்வேலியைத் தாண்டி ஒருவரைத் தொடர்ந்து மற்றவர் உள்ளே நுழைந்தார்கள்.
பைராகி சுவரில் சாய்ந்து, “நீங்கள் சாப்பிட்டீங்களா? பையில நொய்யி இருக்கு. தேவைன்னா பொங்கிக்கோங்க” என்றார். அவர்கள் இருவரும் கிழிந்த பாயில் அமர்ந்தனர்.
மாணிக்கும் பீடியைப் பற்றவைத்து குப்பென்று புகையை விட்டு, “சாப்பிட்டுட்டு தான் வந்தோம் சாமி. இன்னைக்கு ராத்திரி இங்க இருந்துட்டு காலம்பற போறோம்”என்றான்.
மாணிக்கம் சொன்னதைக் கேட்டு பைராகி அந்தப் பெண்ணைப் பார்த்தார். தரையில் ஊன்றிக் கொண்டிருந்த மண்வளையல் கைகள். வகிடு எடுத்த சுருள் முடி. எந்த முகபாவத்தையும் காட்டாத அப்பாவியான கண்கள். தெரிந்தும் தெரியாதது போன்ற வண்ண மணிமாலை. எந்தக் காலத்தைச் சேர்ந்ததோ என்று தெரியாத அடர்த்தியான மண்நிற சேலை. சேலையின் மடிப்புக்குக் கீழ் மென்மையான பாதங்கள்.
பைராகி அந்தப் பாதங்களில் இருந்து பார்வையை நீக்கி, தனக்குத் தானே, “இந்த பெண், சோர்வால் இப்படி இருக்கிறாள். இந்தப் பெண் அப்படிப்பட்ட பெண் அல்ல” என்று நினைத்துக்கொண்டார். தலையைச் சாய்த்தவாறு எதையும் நினைக்காமல் எதையோ பார்த்து மறுபடியும் தனக்குள், இந்தப் பெண் இங்கு வரவேண்டிய பெண் அல்ல’ என்று முணங்கிக்கொண்டு, ‘எதற்கிப்படி?’ என்று நினைத்து மறுபடியும் அவளைப் பார்த்தார்.
அவள் நீண்டதூரம் பயணித்து வந்ததுபோல் கையில் உள்ள ப்ளாஸ்டிக் பை நிறம் வெளுத்து கைப்பிடி, வியர்வையில் சுருங்கியிருந்தது. “சந்தேகம் இல்லை. இந்த பெண் தலைக்கும் காலுக்கும் சம்பந்தம் இல்லாதது போல், இந்தப் பெண் இறந்தகாலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் சம்பந்தம் இல்லாதவளாக இருக்கிறாள்”; என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டார் பைராகி.
இதற்கு முன்பு மாணிக்கத்தோடு வந்த பெண்கள் பைராகியோடு நகையாடுவார்கள். மாணிக்கத்தைப் பற்றி தனக்கு எல்லாமே தெரிந்துபோல் காட்டிக்கொள்வார்கள்.
“அவர்களுக்கும் இந்தப் பெண்ணுக்கும் எத்தனை வேறுபாடு?” என்று எண்ணினார் பைராகி.
“அவர்கள் மாணிக்கத்தை நம்பவில்லை. இந்தப் பெண் மாணிக்கத்தை முழுவதுமாக நம்புவதுபோலிருந்தது. இதற்கு முன் மாணிக்கத்தோடு வந்த பெண்கள் போல் இல்லை இந்தப் பெண்.
அவள் அரித்துப்போயிருந்த சுவரிலிருந்து எட்டிப்பார்க்கும் எருக்கம் கொம்புகளை, அறையில் அங்கங்கே கிடக்கும் பொருட்களையும் நிலவொளியில் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். தூக்கம் முந்திக்கொண்டு வந்தது போல, அவர்களுக்கு இடையே பேச்சு குறைந்து, இடைவெளி அதிகரித்தது. பைராகி கொட்டாவிவிட்டு கால்களை நீட்டி அப்படியே தரையில் சாய்ந்தார். அவர் சிறிது சிறிதாகப் பொறுமை இழந்து கொண்டிருந்தார். தலை முழுவதும் அளவில்லாத யோசனைகள்.
கண் முன்பு அவளின் அப்பாவியான உருவமே தெரிந்தது. அவர் கவலையில் ஆழ்ந்தார். அவரின் இதயம் படபடத்தது.
“இந்தப் பெண் தனியாக இருக்கும்பொழுது, மாணிக்கத்தை நம்பாதே என்றும், அவனிடம் இருந்து தப்பித்து ஓடி விடு, என்றும் சொல்லவேண்டும்” என்று நினைத்துக்கொண்டார்.
“சொன்னால் நம்புவாளா?”
“நம்பமாட்டாள்” என்று அவர் உறுதியாகத் தனக்குள் நினைத்துக்கொண்டார்.
“அப்புறம் நம்ப வைக்கிறது எப்படி?” அவருக்கு ஆலோசனை வரவில்லை. ‘நம்பி வந்த மனுசி. மாயத்தில் மாட்டின மனுசி. மோகத்தில் விழுந்த மனுசிக்கு என்ன சொன்னாலும் தெளியாது”
பைராகி ஆலோசனையில் இருக்கின்ற பொழுதே இருட்டுக்கு அப்பாலிருந்து குசு குசு என்று சப்தம் கேட்டது. மாணிக்கம் அவள் பக்கத்திற்கு நகர்ந்தது போலிருந்தது.
அவள் மெதுவாகப் பேசிக் கொண்டிருந்தாள். “உனக்குத் தெரியாதா! இரண்டு நாளா தூக்கமில்ல. காய்ச்சல்னு கூடக் கருணைக் காட்டாத மனுசன் நீ”
பதிலுக்கு மாணிக்கம் சிரித்தான்.
பைராகி இந்தப் பக்கம் திரும்பி இருட்டில் கண்களைத் திறந்தார்.
பைராகியின் அசைவைத் தெரிந்து மாணிக்கம் எழுந்து உடல் முறித்து, “படுத்துட்டயா பிச்சைபதி?” என்றான்.
பைராகி இல்லையென்று பதிலளித்தார்.
மாணிக்கம் வெளியில் சென்று திண்ணையில் அமர்ந்து, தீப்பெட்டியைப் பற்ற வைத்தான். வெளியே மஞ்சள் நிலவு. பைராகி எழுந்து வெளியே நடந்தார்.
மாணிக்கம் குப்குப்பென்று புகை இழுத்து பீடிக் குடித்துக் கொண்டிருந்தான். திடிரென்று பைராகி ஏதோ சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டு காற்றில் கையை மேலே தூக்கி, எதற்கோ ஒரு நிமிடம் நின்று தன் கைவிரல்கள் பக்கம் பார்த்துக்கொண்டேயிருந்தார்.
மாணிக்கத்திடம் பைராகி எப்பொழுதும் அதிகம் பேச மாட்டார். கண்களால் பார்த்துப் பேசுவதே அதிகம். தனது அருகில் வரும் தெரிந்தவர்களாகயிருந்தாலும் தெரியாதவர்களாக இருந்தாலும், உள்ளே வைத்துக் கொண்டு வெளியே ஒன்றை பேசமாட்டார். எப்பொழுதும் யாருக்கும் எதற்கும் வளைந்து கொடுக்காத மனிதர். கடைசியாகக் கெஞ்சியவாறு கேட்டார். “விட்டுடு மாணிக்கம். அந்தப் பொண்ணு அந்த மாதரி பொண்ணு இல்ல”
பைராகி சொன்னது ஒரு நிமிடம் மாணிக்கத்திற்குப் புரியவில்லை. புரிந்ததும் பைராகி நோக்கி விசித்திரமாகப் பார்த்தான்.
“அந்தப் பெண் அப்படிப்பட்டவள் இல்லையென்று உனக்கெப்படி தெரியும?;, உனக்குத்தெரியுமா” மாணிக்கம் வாயில் பீடி, சிவந்த நெருப்பில் மெல்லிய புகையை விட்டுக்கொண்டிருந்தது.
“எனக்குத் தெரியாது” பைராகியின் பதில்.
“அப்புறம் உனக்கெப்படி தெரியும்?”
பைராகி தலை குனிந்து கொண்டு கொஞ்ச நேரம் அமைதியாக இருந்து, கடைசியில், “அந்தப் பெண்ணின் பாதம் பார்த்தேன். நீ நினைக்கும் பெண் இல்லை என்று மட்டும் சொல்லமுடியும்” என்றார்.
மாணிக்கம் ஒருமுறை பைராகியை ஏளனமாகப் பார்த்து சிரித்து, “நீ காலு பார்த்து தலை முடியை எண்ணக் கூடியவன் என்று எனக்குத் தெரியும். நீ சொன்னது நிசம் தான் சாமி. இந்தப் பொண்ணுக்காக நான் படாத கஷ்டம் இல்லை. இப்பம் விட்டுவிடுவது நடக்குற காரியம் இல்ல” என்றான்.
அவர்கள் பேசிக் கொண்டே மரங்களின் இடையில் நீண்ட தூரம் நடந்து கொண்டு வந்து, மீண்டும் திரும்பி வாசல் முன் வந்து திண்ணை மீது அமர்ந்தார்கள். மாணிக்கம் தான் எவ்வளவு கஷ்டப்பட்டு அவளை வலைப்போட்டு பிடித்தேன் என்று சொல்லிக்கொண்டிருந்தான்.
பைராகி ஏதோ தீர்மானித்தவாறு எழுந்து, “கொஞ்சம் தண்ணிகுடிச்சுட்டு வர்றன் தாகமா இருக்கு மாணிக்கம்” என்றார் உள்ளே நடந்தவாறு.
மாணிக்கம் எதுவும் சொல்லவில்லை. பைராகி உள்ளே நடந்து வாசல்படியில் நின்றுவிட்டார். இருட்டு நிழலின் மத்தியில் மரக் கிளைகள் பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தன. தரை மீது இலையின் நிழல்கள் காற்றில் அங்குமிங்கும் அசைந்துகொண்டிருந்தன. கொஞ்ச நேரம் கழித்து நின்றுகொண்டு உடல் முறுக்கி, உள்ளே மெதுவாகச் சப்தமின்றி அடியெடுத்து வைத்தார் பைராகி.
அதுவரை கீச் கீச் என்ற சுவர்க்கோழிப்பூச்சி, அறையில் உள்ளே யாரோ வருவதைக்கண்டு அமைதியானது. வாசலில் இருந்து உள்ளே வந்த பரந்த நிழலைப் பார்த்து விழித்துக்கொண்ட அவள் சட்டென்று எழுந்து அமர்ந்தாள்.
உள்ளே வந்த பைராகி சிறிது முன்னோக்கி வந்து தண்ணீரை எடுத்துக்கொண்டு செல்வதற்காக வந்தவராய், மண்பானை மீதுள்ள மூடியை எடுத்து மறுபடியும் அதை வைத்துவிட்டு முன்னோக்கி நடந்தார். பிறகு அமைதி. சுவர்க்கோழிப்பூச்சி கூட என்ன நடக்கப்போகிறதோ என்று கூர்ந்து எதிர்பார்த்துக்கொண்டிருப்பது போல நிசப்தம்.
“என்ன சாமி இது!” கேட்டும் கேட்காதமாதிரி மெல்லிதாகக் கேட்டாள் அவள். பானையில் நீரின் அசைவு. இருட்டைப் போக்கும் தகதக என்று எரியும் இரண்டு தீபங்கள். மை விழிகள்.
அவளின் கண்களுக்கு பைராகி மங்கலாகத் தெரிந்தார். அந்த நேரத்தில் அவரின் உடல் மீது எப்பொழுதும் இருக்கிற உடை இல்லை. முடியப்பட்டிருந்த கூந்தல் கழன்று தோள்கள் மீது தொங்கிக் கொண்டிருந்தது. அவரின் கண்கள் யாரோ மந்தரித்தது போன்று உள்ளே சூனியத்தை நோக்கி பார்த்துக்கொண்டிருந்தது. அவர் குருட்டுத்துறவி போல இருந்தார். அவர் ஏதோ சொல்வதற்காக முயற்சிப்பது போல அவரின் உதடுகள் திறந்தன.
“மாணிக்கமே உன்கிட்ட போன்னு சொன்னான்”
அவள் நடுக்கத்துடன் இரண்டு கைகளைக் கூப்பினாள்.
“நான் அப்படிப்பட்டவள் இல்லை சாமி”
“எனக்குத் தெ…” என்று சொல்லுகின்ற பொழுதே, பின் பக்கம் இருந்து மாணிக்கம் கட்டையால் அடித்ததால் பைராகி முன்னால் மயங்கி விழுந்து வலியால் கத்தினார். அவர் இரண்டு கைகளால் தலையைப் பிடித்துக்கொண்டு கீழே விழுந்த மறுநிமிடம் அவள் எழுந்து நடுங்குகிற கைகளால் வேகமாகத் தன்னுடைய ப்ளாஸ்டிக் பையை எடுத்துக்கொண்டு, சிதலமடைந்த சன்னல் சுவரைத் தாண்டி இருட்டில் மரங்களுக்கு இடையில் மறைந்தாள்.
மாணிக்கம் முன்னால் விழுந்துகிடந்த பைராகி முதுகின் மேல் கால் வைத்து, கைகளைப் பின்புறமாக வளைத்து இறுக்கினான். அவர் ஒல்லியாக இருந்தாலும் பலமாக இருந்தார். பைராகி வாயில் இருந்து கூக்குரல் வெளியே வந்தது. இருவரின் சண்டையைப் பார்த்து பயந்த பௌர்ணமி நிலவு, வெண்மேகங்களுக்கு இடையில் கவலையுடன் மேல் எழுந்தது.
“அந்த பொண்ணுகிட்ட என்ன சொன்ன நீ?” பைராகியின் கைகளை முறுக்கிக்கொண்டு கேட்டான் மாணிக்கம்.
“எனக்குத் தெரியாது” என்று பலமாக முணங்கினார் பைராகி. பைராகியின் அரைநிர்வாண உடல் நிலைகுலைந்து தரை மீது விழுந்து கிடந்தது. நீண்ட அவரின் அடர்த்தியான முடி கலைந்து வேர்வையில் நனைந்து கிடந்தது.
“அப்புறம் அவ எதுக்கு ஓடிப்போனா?” என்று மாணிக்கம் குரல் கடுகடுத்தது.
பைராகி பக்கத்தில் உருண்டு, தன்னைவிடுவித்துக்கொண்டதால் மாணிக்கம் கீழே விழுந்தான். அவர்கள் புரண்டுகொண்டு புறா இருக்கும் இடத்திற்கு வந்தார்கள். அது பதறி இறக்கைகளை பட பட என்று அடித்துக்கொண்டு ஒரேயடியாகக் காற்றில் எழுந்தது.
புறா இறக்கைகளைப் படபடவென்று அடித்துக்கொண்டு காற்றில் பறந்த மறுநிமிடம், “யாருடா அது?” என்று குறிகாடுவின் குரல் கேட்டது. மரங்களின் இடையில் இருந்து நடந்து வந்த குறிகாடு மாணிக்கத்தைப் பார்த்து சிரித்து, “மாணிக்கமா.. சாமிய மரியாதையா விட்டுரு” என்றான். அந்த நேரத்தில் மாணிக்கத்தைப் பார்த்து அவன் ஒருத்தனால் மட்டும்தான் சிரிக்கமுடியும். அவர்கள் இருவரின் சண்டை அப்படிப் பட்டது. இரண்டு மனிதர்களையும் எளிதாகத் தூக்கி எறியும் பலமான மனிதன்.
குறிகாடுவின் சப்தம் கேட்டவுடன் மாணிக்கம் சுவர் ஏறி குதித்து ஓடிவிட்டான். குறிகாடு மாணிக்கத்தின் பின் ஓடி, நின்று மீண்டும் திரும்பி வந்து பைராகியை மேலே தூக்கி, “என்ன சாமி இது?” என்றான்.
“எல்லாம் நல்லதே நடந்ததுடா. எல்லாம் நினைச்சது போலவே நடந்தது” பைராகிக்குச் சோர்வு குறையவில்லை. அவரின் உடல் பழையநிலைக்கு வராமல் எழுந்து உட்கார முடியாமல் போனது.
“உண்மையிலேயே என்ன நடந்தது சாமி?” என்று தரையில் அமர்ந்து பைராகியை மடியில் வைத்துக்கொண்டான். அந்த நிலையில் பைராகியைப் பார்த்து அவனின் குரல் துக்கத்தால் தழுதழுத்தது.
இறக்கை வெட்டப்பட்ட சடாயுபோல மூச்சிரைத்து கத்திக்கொண்டிருந்தார் அவர்.
“எதுவும் தெரியாத அப்பாவியான பறவை! இது நல்லது, இது கெட்டது என்று எப்படி சொல்றதுடா? ஆடிப் பாடித் திரியும் காடையைக் கட்டிப் போட முடியுமா? மாணிக்கம் பொல்லாதவன் என்று அந்தப் பெண்ணுக்கு எப்படி சொல்றது சொல்லு. அப்படிச் சொன்னாலும் அவளுக்கு எப்படி தெரியும் சொல்லு. சொன்னாலும் மோகத்தில் ஆழ்ந்த பெண் என் வார்த்தையை எப்படி நம்புவாள்? அந்தப் பொண்ணுக்கு மாணிக்கத்தோட சங்கதி தெரியாது. அவன்ட்டயிருந்து காப்பாத்தறதுக்குத்தான் இந்த வேலை பண்ணுனன்…”
என்ன நடந்தது என்று குறிகாடுக்கு கொஞ்சம் கொஞ்சம் புரிந்தது.
பைராகி தரையில் சாய்ந்தே கிடந்தார். இருவருக்கும் இடையில் சிறிதுநேரம் நிசப்தம்.
சட்டென்று குறிகாடு ஏதோ நினைவுக்கு வந்தவனாய் எழுந்து உள்ளே சென்றான்.
“இங்கயிருந்த புறா எங்க சாமி?”
“இறகு வெட்டப்பட்ட புறா, எங்க போயிடபோது? இங்க எங்கயாவது இருக்கும் பாருடா..” என்றார் பைராகி படுத்துக்கொண்டு.
“இறக்கைகள் முளைச்சுட்டா சாமி. நா பார்க்கல”
“எங்கயாவது பறந்திருக்குமோ என்னமோடா?”
“பறந்துபோறதுல எனக்குக் கவலை இல்லை. அதோட கண்ணை தைச்சுட்டேன்…” அவன் குரல் அடைத்துப் பேசியது போல சொன்னான்.
“கண்ணை தைச்சுட்டயா?” பைராகி அதிர்ச்சியுடன் எழுந்து உட்கார்ந்தார்.
“ஆமா சாமி. தைக்காமா இருந்தா எப்படியாகும் சொல்லு? எங்க விட்டாலும் காடை துணையைத் தேடி பறந்து போகாதா. அதுக்காகத் தான் பார்வை இல்லாம ஆக்கி, கண்இமையை ஊசி நூலால தைச்சுட்டேன் சாமி” அவன் புறாவைத் தேடி அறையில் உள்ள பொருட்களைக் கசா முசா என்று எறியத் தொடங்கினான்.
பைராகி செய்வதறியாது தரையைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தார். குறிகாடு தேடித் தேடி, தரையில் குந்திக்கொண்டு பறந்துபோன புறாவைப் பற்றி யோசித்து, “அதோட கண்ண தைக்காம இருந்திருந்தா நல்லா இருந்துருக்குமே” என்று கொஞ்சநேரம் தனக்குள் தானே நிலைகுலைந்து இறுதியில் அது எங்கே போனது? என்று இருட்டை நோக்கிப் பார்த்தான். கண்கள் தைக்கப்பட்டது போன்று ஒரே இருட்டு. அந்த இருட்டுக்கு முடிவில்லை.
அப்பொழுது அவனுக்கு இருளில் மறைந்த அந்தப் பெண் நினைவுக்கு வந்து, “தப்பு செஞ்சிட்டயோ சாமி” என்றான்.
பைராகி புரியாமல் பார்த்தார்.
“அந்தப் பொண்ணுகூட போயிருந்தா மாணிக்கமே மாறியிருப்பானோ என்னமோ. நீ சொல்லியிருக்கல்ல நேத்தைக்கு இருக்குற மனுசன் இன்னைக்கு இருக்குற மனுசன் இல்லன்னு. மனுசன் மாறிட்டே இருப்பான்னு. உண்மையிலேயே அவன் மாறிபோய் தான் இங்க வந்தானோ என்னமோ யாருக்குத் தெரியும்? மாணிக்கத்த நம்பவிடாம செஞ்ச சரி, அந்தப் பொண்ணு உலகத்துல யாரையும் நம்ப முடியாதமாதிரி செஞ்சிட்டயே! என்ன வேலை செஞ்சுட்ட சாமி” என்றான் குறிகாடு.
குறிகாடு என்ன சொன்னான் என்று முதலில் அர்த்தம் புரியவில்லை. கொஞ்சம் கொஞ்சம் அர்த்தம் புரிந்தவுடன் பைராகி வாய்ப்பேச்சற்று செயலற்று போனார். இது இப்பொழுதுவரைக்கும் தனக்கு அனுபவத்துக்கு வராத ஆலோசனை. இப்படியான சத்தியத்தைப் பற்றி குறிகாடு சொல்லுவான் என்று இப்பொழுதுவரைக்கும் கனவிலும் ஊகித்திருக்கவில்லை. பைராகிக்கு உள்ளே ஏதோ கரைந்ததுபோல் இருந்தது. மின்னிக்கொண்டிருந்த கண்களால் அவர் முழுவதுமாகக் குறிகாடுவை நோக்கிப் பார்த்தார்.
ஆனால, குறிகாடு சிந்தனை வேறு எங்கேயோ இருந்தது. இப்படி நடக்கமாயிருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்ல.. நினைத்துக்கொண்டு தனக்கு அறியாமலேயே தன் விரல்களை நோக்கிப் பார்த்துக்கொண்டு, கைகளை நீட்டி நடந்ததை நினைத்து, படார் என்று கைகளைப் பின்னுக்கு இழுத்து ஒரேயடியாகச் சப்தமாகச் சிரித்தான். பைராகிக்கு அந்தச் சிரிப்பு விகாரமாகப் படவில்லை. குறிகாடு தான் எப்பொழுதும் பார்க்காத புதிய மனிதாய் தோன்றினான்.
மேலே ஆகாயத்தில் கார்மேகத்துக்கு இடையில் சந்திரன் கொல்லப்பட்டறையில் கரிக்கு மத்தியில் நெருப்புக்கங்காய் இருந்தான். மர இலைகளுக்குள் ஊடுருவி வந்துகொண்டிருக்கும் வெண்ணிலவு இருளைக் கிழித்துக்கொண்டிருந்தது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.