- பண்டாரக்குளம் கட்டடச்சிதைவுகளுடன்
(எண்பதுகளின் ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்.) -
அருண் அம்பலவாணர் (நட்சத்திரன் செவ்விந்தியன்) தனது முகநூற் பக்கத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பண்டாரக்குளம் அபகரிக்கப்படுவதாகப் பின்வரும் செய்தியினைப் பதிவிட்டிருந்தார்:
"நல்லூர் பண்டாரக்குளம் வேலிபோட்டு அபகரிக்கப்படுகிறது. Attention: மேயர் மணிவண்ணன். இது நல்லூர் சங்கிலியன் வீதியிலுள்ள பிரசித்தமான பண்டாரக்குளம். இக்குளத்தைப்பற்றி எழுத்தாளர் எஸ். பொ தன்னுடைய நூல்களில் சிறப்பாக எழுதியுள்ளார். இன்று பட்டப்பகலில் இக்குளம் வேலிபோட்டு அபகரிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தின் பல அபகரிக்கப்பட்ட குளங்களை மீட்டு புனரமைத்த மேயர் மணிவண்ணன் பண்டாரக்குளம் சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்காது இருப்பது ஏன்? "
அருண் அம்பலவாணர் குறிப்பிடுவது பண்டாரக்குளத்துக்கு அருகிலுள்ள சிறு பகுதியை. நிலஅளவைத்திணைக்கள வரைபடங்களைப் பார்த்தால் இக்காணித்துண்டின் காணிப்பெயரினை அறிய முடியும். அதன் மூலமும் இதன் பூர்விகம் பற்றி ஊகிக்க முடியும், அப்பகுதியில் வசிக்கும் முதியவர்களிடமிருந்தும் இது பற்றி விரிவான தகவல்களைப்பெற முடியும். பண்டாரக்குளத்திற்கு மிகவும் அருகில் இருப்பதால் ஒரு காலத்தில் பண்டாரக்குளம் இப்பகுதியையும் உள்ளடக்கி இருந்திருப்பதற்கான சாத்தியங்களுள்ளன. காலப்போக்கில் பண்டாரக்குளத்தின் பகுதிகள் அபகரிக்கப்பட்டிருக்கக்கூடும். அதன் விளைவுதான் பண்டாரக்குளத்தின் இன்றுள்ள நிலையென்றும் கருதவும் இடமுண்டு. ஆய்வுக்குரிய விடயம்.
பண்டாரக்குளம் பற்றி எனது நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூலிலும் குறிப்பிட்டுள்ளேன். முத்திரைச்சந்தையை மையமாக வைத்துப் பார்க்கும்போது அதன் வடமேற்குப் பகுதியில் அரச முக்கியத்துவம் வாய்ந்த பல பகுதிகள் உள்ளதை அவதானிக்கலாம். அரசவைக் கவிஞர், மந்திரிமார் பற்றிய முக்கியத்துவம் மிக்க பகுதிகளையும் அப்பகுதி உள்ளடக்கியுள்ளதை அவதானிக்கலாம். இப்பகுதியில் பண்டாரமாளிகை, பண்டாரக் குளம் ஆகியவை உள்ளன. இதில் குறிப்பிடப்படும் பண்டாரம் என்பது தமிழ் அரசர்களைக் குறிக்கும் என்பது வரலாற்றாய்வாளர்களின் கருத்து. முதலியார் குல சபாநாதன் புவிராஜபண்டாரத்தைக் குறிக்குமென்பார். பண்டாரம் என்று முடியும் தமிழ் மன்னர்கள் இருந்திருக்கின்றார்கள். அவ்வகையில் பண்டாரக்குளம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
எழுபதுகளின் இறுதியில் , எண்பதுகளின் ஆரம்பத்தில் அக்குளத்தைப் பார்வையிட்டபோது கட்டடச்சிதைவுகள் காணப்பட்டன. என்னைப்பொறுத்தவரையில் நல்லூர் ராஜதானி அமைந்திருந்த முழுப்பகுதியில் வரலாற்று முக்கியத்துவம் மிக்கவை. பாதுகாக்கப்பட வேண்டியவை. மேலதிக ஆய்வுகளை நாடி நிற்பவை. என் ஆய்வின்படி நல்லூ ராஜதானியானது முத்திரைச்சந்தையை மையமாகக்கொண்ட, வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு என்னும் பிரதான வீதிகளால் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட பகுதி (வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு & தென்மேற்கு). ராஜதானியைச் சுற்றிச் சதுர வடிவில் மதிலிருந்தது. நான்கு திக்குகளில் நான்கு பிரதான வாசல்கள் அமைர்ந்திருந்தன. வடக்கு வாசலுக்கு அண்மையில் ,வெளிப்புறத்தில் சட்டநாதர் ஆலயம், தெற்கில் கைலாசநாதர் ஆலயம், மேற்கில் வீரமாகாளியம்மன் ஆலயம் & கிழக்கில் வெயிலுகந்த பிள்ளையார் ஆலயம் ஆகியன அமைந்திருந்தன.
- பண்டாரமாளிகை வளவில் காணப்பட்ட தூண் -
(எண்பதுகளில் எடுக்கப்பட்ட புகைப்படம்)
தெற்கில் அநுராதபுரம் , பொலனறுவை போன்ற நகர்களைப் பாதுகாப்பதைப்போல் , நல்லூர் ராஜதானியும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகப் பிரகடனப்படுத்தப்பட்டு , பாதுகாக்கப்பட வேண்டும். இங்குள்ள படத்தில் பண்டாரக்குளத்தையும், அதன் கட்டிலுள்ள கட்டடச்சிதைவையும் காணலாம். பண்டார மாளிகை வளவில் காணப்பட்ட தூணையும் காணலாம். இத்தூண் பழமையானதல்ல, ஆனால் அந்த வளவின் பெயரைக் குறிப்பதால் முக்கியத்துவம் மிக்கதாகவுள்ளது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.