தந்தையர் தினக் கவிதை!
பெற்றிடுவாள் அன்னை பெருதுவப்பார் அப்பா
உற்ற துணையாகி உழைத்திடுவார் அப்பா
கற்பனைகள் நிறைத்து கனவுகாண்பார் அப்பா
காலமெலாம் எம்மைச் சுமந்திடுவார் அப்பா
கைபிடுத்து எம்மைக் குருசேர்ப்பார் அப்பா
கற்பவற்றை கற்க கையணைப்பார் அப்பா
கல்வியென்னும் பயிரில் களையெடுப்பார் அப்பா
கற்றவரின் அவையில் அமருவென்பார் அப்பா
வளர்ச்சியினைக் கண்டு மனமகிழ்வார் அப்பா
தளர்ச்சியினைக் கண்டால் தாங்கிடுவார் அப்பா
விளைச்சலினை நோக்கி அழைத்திடுவார் அப்பா
விகற்பநிலை வந்தால் விலக்கிடுவார் அப்பா
பொய்யென்னும் கருவைப் பொசிக்கிடுவார் அப்பா
பொறாமையெனும் நினைப்பைப் போக்கிடுவார் அப்பா
மெய்யென்னும் கருவை விதைத்திடுவார் அப்பா
மேதினியில் வாழ்வின் விளக்காவார் அப்பா
நல்லநட்பை நாளும் நாடச்செய்வார் அப்பா
நல்லறிஞர் பெருமை நயந்துரைப்பார் அப்பா
எல்லையில்லா அன்பை ஈந்துநிற்பார் அப்பா
இனிமையிலா நட்பை எடுத்தெறிவார் அப்பா
வறியநிலை கண்டால் வதங்கிடுவார் அப்பா
நெறிபிறழ்ந்த வாழ்க்கை நினைவிருத்தார் அப்பா
அறமுரைக்கும் வள்ளுவம் அகநிறைப்பார் அப்பா
அரைக்கணமும் வரம்பைக் கடந்துவிடார் அப்பா
இலக்கியத்தை இங்கிதத்தை எனக்குரைப்பார் அப்பா
இலக்குவிட்டுப் போகாது காத்திடுவார் அப்பா
சமயநெறி தத்துவங்கள் போதிப்பார் அப்பா
சன்மார்க்க வழியினிலே கூட்டிச்செல்வார் அப்பா
நான்விரும்பும் அத்தனையும் செய்திடுவார் அப்பா
தான்விரும்பும் நல்லவற்றை எனக்களிப்பார் அப்பா
வானிறங்கும் மழைபோல வழங்கிடுவார் அப்பா
வாழ்நாளில் தெய்வமாய் விளங்குகிறார் அப்பா
நோய்நொடிகள் அணுகாமல் வைத்தியராய் இருப்பார்
நோய்வந்தால் அதைத்தீர்க்கும் மருந்தாயும் இருப்பார்
உண்ணுகின்ற அத்தனையும் ஒழுங்காக்கி நிற்பார்
உடலுளத்தை மனமிருத்தி ஒழுங்கமைப்பார் அப்பா
வரமாக வாய்த்திட்ட மகவென்று சொல்வார்
வாழ்வினிலே பெற்றிட்ட செல்வமெனப் புகழ்வார்
நிலமீது மலர்ந்திட்ட பெருவாழ்வே என்பார்
நெஞ்சினிலே எனையிருத்தி கொஞ்சிடுவார் அப்பா
பட்டம் நான்பெற்றேன் பலபதவி வகித்தேன்
பலபேரும் மதித்திடவே பாங்குடனே வாழுகிறேன்
பக்குவமாய் என்னை பாதுகாத்தார் அப்பா
பக்கத்தில் இல்லாமல் படமிருந்தே பார்க்கின்றார்
அப்பாக்கள் அனவருக்கும் அருமருந்து ஆவர்
அவரிழமை அத்தனையும் அர்ப்பணித்தார் எமக்கு
அப்பாக்கள் வாழ்வினிலே ஆண்டவனே ஆவார்
அவரன்பை அவர்பணியை அகமிருத்தி வாழ்வோம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.