வசிகரனின் நோவிலும் வாழ்வு - கலாநிதி சு. குணேஸ்வரன் -
வசிகரன் எழுதிய ‘நோவிலும் வாழ்வு’ என்ற கவிதைத்தொகுதி ஆக்காட்டி வெளியீடாக வந்துள்ளது. வசிகரன் இலக்கியச் செயற்பாட்டாளராகவும் சூழலியல் மற்றும் சமூகச் செயற்பாட்டாளராகவும் இருக்கின்றார். தொண்டைமானாற்றையும் அதனை அண்டிய பிரதேசங்களையும் பகைப்புலமாகக் கொண்டமைந்த மரபுரிமைச் சின்னங்கள் தொடர்பான 'கரும்பவாளி' என்ற ஆவணப்படம் ஒன்றையும் தயாரித்திருக்கிறார். அவர் எழுதிய ‘நோவிலும் வாழ்வு’ என்ற கவிதைத்தொகுதி போருக்குப் பிந்திய தலைமுறையினர் வாழ்வைப் பார்க்கும் கோணத்தைப் பேசுவதாக அமைந்துள்ளது.
அன்பு, காதல், இரக்கம், தனிமை, ஏமாற்றம், துயரம் முதலான அகவுணர்வுகள் விரவிய வகையில் இக்கவிதைத்தொகுதி அமைந்துள்ளது. கவிதையில் அவர் எடுத்தாளும் சொற்கள் மரபுவழியிலிருந்து வேறுபட்டு விரிவதைக் காணலாம்.
வியக்க வைக்கும் வானவில்லாகவும் பூக்களாகவும் அன்பின் நேசம் இருந்தது. இவ்வாறு துருத்திக் கொண்டுநிற்கும் அன்பின் திரள் பேரழிவின் முன்னான நகர்வாக இருக்கிறது. அன்பிருந்தால் அதன் பின்னர் ஓர் அழிவும் இருக்கும் என்பதை கவிஞர் தன் வாழ்வனுபவங்களில் இருந்து கூறவருகின்றார்.
'நினைக்காத கள்ளு' என்ற கவிதையில் அன்புக்குரியவளைக் காணச் செல்லும் தெரு நீண்டதாக இருக்கிறது. அவளின் ஞாபகங்கள் எவ்வளவு நீண்டனவோ அதேபோல என்று பாடுகிறார். ஆனால்
'கள்ளைப்போல் புளித்து
நம் காதல் மணம் வீசும்'
என்று பொதுப்புத்தியில் அர்த்தப்படுத்தப்படுவதை இங்கு மாறாகச் சொல்கிறார். விருப்பமில்லாத செயல் காதலர்களுக்கு இங்கு விருப்பமானதாக மாறுகிறது.