கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனைக் கவர்ந்த 'கட்டோடு குழலாட ஆட' - வ.ந.கிரிதரன் -
'பெரிய இடத்துப் பெண்' ஆர்.ஆர்.பிக்சர்ஸின் வெற்றிப்படங்களிலொன்று. ஆர்.ஆர்.பிக்சர்ஸ் டி.ஆர்.ராஜகுமாரி தனது சகோதரர் ராமண்ணாவுடன் இணைந்து ஆரம்பித்த திரைப்படத் தயாரிப்பு நிறுவனம். குலேபகாவலி, பாசம் , பறக்கும் பாவை போன்ற திரைப்படங்களைத் தயாரித்த நிறுவனம். இப்படத்தில் எம்ஜிஆருக்கு இரட்டை வேடம். கிராமத்தவனாக வரும் எம்ஜிஆருக்கு மச்சாள்மாருடன் இணைந்து பாடும் சுவையானதொரு பாடல் 'கட்டோடு குழலோடு ஆட' பாடல். எனக்குப் பிடித்த பாடல்களிலொன்று. பாடல் வரிகள், இசை, நடிப்பு, ஒலிப்பதிவு எல்லாமே பிடித்திருக்கும் பாடல்களிலொன்று இப்பாடல். மச்சாள்மார்களாக மணிமாலா, ஜோதிலட்சுமி இருவரும் நடித்திருப்பார்கள். நடிகை ஜோதிலட்சுமியின் நடிப்பில் வெளியான முதற் திரைப்படம் 'பெரிய இடத்துப் பெண்' என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜோதிலட்சுமி, மணிமாலா இருவரும் இப்பாடற் காட்சியில் மிகவும் சிறப்பாக ஆடி, நடித்திருப்பார்கள். இசை மெல்லிசை மன்னர்கள். பாடல் வரிகள் கவிஞர் கண்ணதாசன். பாடியவர்கள்: டி.எம்.எஸ், பி.சுசீலா & எல்.ஆர்.ஈஸ்வரி. 'மாட்டுக்கார வேலன்', 'சகலகலா வல்லவன்' போன்ற பின்னாளில் வெளியான இரட்டை வேடப் படங்கள் பலவற்றுக்கும் தூண்டுகோலாகவிருந்த படம் 'பெரிய இடத்துப் பெண்'.
இப்பாடல் எனக்குப் பிடித்துப் போனதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. ஒரு முறை முகநூலில் இப்பாடலைக் கேட்டு இரசித்துக்கொண்டிருந்தேன். என் முகநூல் நண்பர்களிலொருவரான கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் அவர்கள் நான் பதிவு செய்திருந்த இப்பாடலைக் கேட்டு இரசித்த பின்னர் முதன் முறையாக இப்பாடல் பற்றிய தனது கருத்துகளை அறியத்தந்திருந்தார். நான் ஆச்சரியமடைந்தேன். அன்று முதல் எப்பொழுது இப்பாடலைக் கேட்டாலும் எனக்கு அமரர் வெங்கட் சாமிநாதன் நினைவில் தோன்றுவார். அவர் இப்பாடல் பற்றிய கருத்துகள் நினைவுக்கு வரும். வெங்கட் சாமிநாதன் அவர்கள் 'பதிவுகள்' இணைய இதழ் மேல் பற்றும் , மதிப்பும் வைத்திருந்தார். இறுதிவரை 'பதிவுகள்' இணைய இதழுக்குத் தனது படைப்புகளை அனுப்பிக்கொண்டிருந்தார்.