சமுதாயவியல் சார்ந்த பண்பாட்டுச் சிந்தனை! - கலாநிதி புட்பா கிறிட்டி, கனடா -
- எழுத்தாளர் புஸ்பா கிறிஸ்ரி என்று அறியப்பட்ட புட்பா கிறிட்டி அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் (கனடா) முதுகலை பட்டம் பெற்றவர். பின்னர் தமிழகத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் (சிதம்பரம்) 'மறையியல் வளர்ச்சிக்கும், தமிழியல் வளர்ச்சிக்கும் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் பங்களிப்பு' என்னும் தலைப்பில் முனைவர் பட்டப்படிப்பை முடித்தவர். அவருக்கு எம் வாழ்த்துகள். -
முன்னுரை
பண்பாடு என்றால் என்ன எனும் கேள்விக்கு விடை தேடினால், அது மக்கள் தமது சமூக வரலாற்று வளர்ச்சியைத் தோற்றுவிக்கும் பெளதீகப் பொருட்கள், கருத்துக்கள், மத நம்பிக்கைகள், சமூகப் பெறுமானங்கள் என்பனவாகும். பண்பாடு இல்லையெனில் பாரதம் இல்லை என்பது தமிழரின் வாக்கு. மக்களின் தொழில் நுட்ப வளர்ச்சி, உற்பத்தி முறைமை, கல்வி, விஞ்ஞானம். இலக்கியம், கலைகள், நம்பிக்கைகள் அனைத்துமே பண்பாட்டினுள் அடங்குவன
தமிழரின் நாகரிகம் பழமை வாய்ந்தது. முன்னர் சிந்து நாகரிகம், ஆரிய நாகரிகம் சிறந்தது எனச் சொன்னவர்கள், கீழடியின் நாகரிரீகம் கண்டு, திகைத்துள்ளனர். தமிழர்தான் நாகரிகவாதி என்கின்றனர். தமிழைச் சர்வதேச மட்டத்தில் வைத்து பார்க்க, முன்னின்ற மேற்குலகத் தொடர்பு காரணமாகத் தமிழ் சர்வதேச நிலைப்படுத்தப்பட்டது. முதலில் தமிழைக் கற்று, அதன் மேன்மை கண்டு, அதனை உலகறியச் செய்தனர் மேற்குலகினர். இப்போது உலக நாடுகள் எங்கும், குறிப்பாகத் தமிழர்கள் செல்கின்றனர். நமக்குள் நமது புகழைப் பேசிக்கொள்ளாமல், தமிழை, தமிழ்பண்பாட்டை உலகப் பொதுமேடையில் பேசி, மற்றவற்றுடன் ஒப்பிட வேண்டிய ஒரு தேவை இன்று ஏற்பட்டுள்ளது. இதற்காக ஆராய்ச்சியாளர் சங்கங்கள், ஆய்வுக் கழகங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதிலும் வள்ளுவரை பல கட்டங்களில் ஆராய்கின்றனர். வள்ளுவத்தை உலகப் பொதுமறையாக்க முனைகின்றனர். திருவள்ளுவர் தந்த திருமறை வாழ்வின் நெறிகளைக் கற்றுத் தருவது தனிமனித ஒழுக்கத்தை, சமுகத்திற்குக் கற்றுத் தந்தவர் வள்ளுவர்.
“வள்ளுவன் தன்னை உலகினுக்குத் தந்து வான்புகழ் கண்ட தமிழ்நாடு” என்னும் பாரதி வாக்கு, திருக்குறளை உலத் தரத்திற்கு உயர்த்தி வைத்தது. பாரதி பாடிய அன்றே இந்தூல் உலகெங்கும் பரவி விட்டது எனலாம்.