- எழுத்தாளர் புஸ்பா கிறிஸ்ரி என்று அறியப்பட்ட புட்பா கிறிட்டி அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் (கனடா) முதுகலை பட்டம் பெற்றவர். பின்னர் தமிழகத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் (சிதம்பரம்) 'மறையியல் வளர்ச்சிக்கும், தமிழியல் வளர்ச்சிக்கும் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் பங்களிப்பு' என்னும் தலைப்பில் முனைவர் பட்டப்படிப்பை முடித்தவர். அவருக்கு எம் வாழ்த்துகள். -
முன்னுரை
பண்பாடு என்றால் என்ன எனும் கேள்விக்கு விடை தேடினால், அது மக்கள் தமது சமூக வரலாற்று வளர்ச்சியைத் தோற்றுவிக்கும் பெளதீகப் பொருட்கள், கருத்துக்கள், மத நம்பிக்கைகள், சமூகப் பெறுமானங்கள் என்பனவாகும். பண்பாடு இல்லையெனில் பாரதம் இல்லை என்பது தமிழரின் வாக்கு. மக்களின் தொழில் நுட்ப வளர்ச்சி, உற்பத்தி முறைமை, கல்வி, விஞ்ஞானம். இலக்கியம், கலைகள், நம்பிக்கைகள் அனைத்துமே பண்பாட்டினுள் அடங்குவன
தமிழரின் நாகரிகம் பழமை வாய்ந்தது. முன்னர் சிந்து நாகரிகம், ஆரிய நாகரிகம் சிறந்தது எனச் சொன்னவர்கள், கீழடியின் நாகரிரீகம் கண்டு, திகைத்துள்ளனர். தமிழர்தான் நாகரிகவாதி என்கின்றனர். தமிழைச் சர்வதேச மட்டத்தில் வைத்து பார்க்க, முன்னின்ற மேற்குலகத் தொடர்பு காரணமாகத் தமிழ் சர்வதேச நிலைப்படுத்தப்பட்டது. முதலில் தமிழைக் கற்று, அதன் மேன்மை கண்டு, அதனை உலகறியச் செய்தனர் மேற்குலகினர். இப்போது உலக நாடுகள் எங்கும், குறிப்பாகத் தமிழர்கள் செல்கின்றனர். நமக்குள் நமது புகழைப் பேசிக்கொள்ளாமல், தமிழை, தமிழ்பண்பாட்டை உலகப் பொதுமேடையில் பேசி, மற்றவற்றுடன் ஒப்பிட வேண்டிய ஒரு தேவை இன்று ஏற்பட்டுள்ளது. இதற்காக ஆராய்ச்சியாளர் சங்கங்கள், ஆய்வுக் கழகங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதிலும் வள்ளுவரை பல கட்டங்களில் ஆராய்கின்றனர். வள்ளுவத்தை உலகப் பொதுமறையாக்க முனைகின்றனர். திருவள்ளுவர் தந்த திருமறை வாழ்வின் நெறிகளைக் கற்றுத் தருவது தனிமனித ஒழுக்கத்தை, சமுகத்திற்குக் கற்றுத் தந்தவர் வள்ளுவர்.
“வள்ளுவன் தன்னை உலகினுக்குத் தந்து வான்புகழ் கண்ட தமிழ்நாடு” என்னும் பாரதி வாக்கு, திருக்குறளை உலத் தரத்திற்கு உயர்த்தி வைத்தது. பாரதி பாடிய அன்றே இந்தூல் உலகெங்கும் பரவி விட்டது எனலாம்.
சமுதாயம் என்பது மனிதகுலத்தின் ஒரு கூட்டுச் சேர்ந்த குடும்பம் ஆகும். ஆக ஒரு வீட்டினுள் இருக்கும் உறவுகள், பலரே, அவை, பல வீடுகளாகி, அவை ஒரு கிராமமாகி, நகரமாகி, நாடாகி, உலகமாகிப் பல்கிப் பெருகுகின்றது. இந்தப் பெரும் சமுகத்திற்கு ஒவ்வொரு தனிமனிதரும் தன் பங்களிப்பைத் தரவேண்டும் என்பது உலக நியதி. ஆக சமுக வளர்ச்சியில் மனிதரின் பங்களிப்புக்கள் பற்றிக் கூறும் வள்ளுவரின் கருத்துக்கள் ஏராளமாகக் குவிந்து கிடக்கின்றன. அவற்றில் ஒரு சில கருத்துக்களை இங்கு உற்று நோக்குவோம்.
ஒருவன் பொருள் சேர்க்கும் போது, பொதுப் பழிக்கு அஞ்சி சேர்த்துச் செலவு செய்யும் போது, அதனைப் பிறருடன் பகுந்து உண்பதை மேற்கொண்டால், அவ்வாழ்க்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை என்கிறார் வள்ளுவர்.
குறள் 44
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல
பிறர் நலம் கருதி வாழும் வாழ்வு, உலகில் மிகவும் உயர்ந்த வாழ்வு என்பதை நாம் இக்குறளின் மூலம் அறிகிறோம். இன்னொருவர் நலம் காக்கும் தியாகமும் சீலமும் எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை எங்கிறது ஒரு சினிமாப்பாடல்.
பழி வருமே என அஞ்சிப் பொருள் சேர்த்து, அந்தப் பொருளைப் பிறருடன் பகுத்து உண்ணும் பண்பு, ஒருவனுக்கு இருக்குமானால், அவனது வாழ்வில் எப்போதும் குறைவு தெரியாது. அறத்துடன் வாழ்ந்து பாவம் இல்லாது வாழ்ந்து பழிக்கு அஞ்சாது அவன் மேன்மை நிலையையே அடைவான் எனக் கூறுகிறார். வாழும் வாழ்வு பிறருக்கு என வாழ்ந்து சென்ற பல தியாக உள்ளங்களை நாம் கண்டிருக்கிறோம். காண்கிறோம். இன்னும் காண்போம்.
விருந்தோம்பும் பண்பு தமிழர்க்கே உரிய ஒன்றாகும். அப்படித் தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றும் ஒருவனின் வாழ்க்கை துன்பத்தால் வருந்திக் கெடாது என்னும் கருத்துடன் கீழ்வரும் குறளைச் சொல்கிறார் வள்ளுவர்.
குறள் 83
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று
இதனைப் பல இடங்களில் நாம் ஏற்கனவே வரலாற்றில் கண்டிருக்கிறோம். ஆகவே விருந்தினரைப் போற்றி வாழும் ஒருவனின் வாழ்வில் எந்தத் துன்பமும் வராது என எண்ணி வாழ்வோமாக. நாள் தோறும் பிறரை எண்ணி, அவர்க்கு உதவு, உனது வாழ்வு மேன்மை பெறும் என்றார் வள்ளுவர்.
இதனை அகநானூற்றுப் பாடல் ஒன்றில் காண்போம்.
"அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் முல்லை சான்ற கற்பின் மெல்இயற் குருமகள் உறைவின் ஊரே" (அகம் -311)
இரவு நேரத்தே விருந்து வரினும் உவப்பவள் என் தலைவி. அவள் என் சொற்கேட்டு இல்லிருந்து நல்லறம் செய்யும் கற்பினையும், மென்மையான இயல்பையும் இளமையையும் உடையவள் ஆவாள். அத்தகைய காதலி தங்கியிருப்பதும் பொய்யாத வருவாயுடையதுமான ஊர் காட்டகத்தே அமைத்து
வாழ்பவள். அவளுக்கு எந்தக் குறையும் வராதே.. என்பது காதலனின் பாடல்.
என் தாயார் ஒரு விவசாயி, அவர் வயலில் வேலைக்கு இறங்கும் முன்னர் தன் தொழிலாளர், உண்டனரா, குடித்தனரா எனப் பார்ப்பார். அதன் பின் அவர்கள் உண்ணவில்லை என்றால் அவர்க்கு உண்ணக் கொடுத்து அதன் பின் வயலில் இறக்குவார். அது போல், தனக்குக் களைப்பு வந்தால், அனைவரையும் வயலை விட்டு மேலேற்றி, ஓய்வு எடுக்கச் செய்த பின்னர் தான் மீண்டும் வேலை வாங்குவார். இது போல வேலைக்கு ஒருவர் வரவில்லை என்றாலும், அவருக்குரிய கூலியை எங்களிடம் தந்து கொடுத்து வரச் சொல்வார். அவருக்கோ அல்லது குழந்தைக்கோ நோய் வந்திருந்தால் எனும் முன்னேறாடு காரணமாக இதனைச் செய்வார். இதன் பலனை அவர் நோயுற்றுப் படுக்கையில் இருந்த போது கண்டார்.
வயோதிபர் மடத்திற்கு போக விரும்பாதவரை, ஒரு குழந்தையாக கழுத்திலும், கால்களிலும் கைபோட்டுத் தூக்கி உடை மாற்றி நான் பாதுகாத்தேன். அவருக்கெனச் சேவை செய்ய வந்த அத்தனை வைத்தியர்களும், அவரை அன்பு செய்து, பரிவுடன் பரிசோதித்து, முத்தமிட்டு, ஆசி வாங்கிச் செல்வார்கள். மேலும் நாம் சொல்லும் சொல்லில் நல்லவை கூற வேண்டும் என சமுதாயத்திற்குச் சொல்லும் குறளாக இதனைக் காண்கிறேன்.
குறள் 100
இனிய உளவாக இன்னாத கூறல்
கனி இருப்பக் காய்கவந் தற்று
மரத்திலே பழம் பழுத்து இருக்க நாம் புளித்த காயை அடித்து வீழ்த்திப் பறிப்பதால் என்ன லாபம்? அதை உண்டால், பல் கூசும், இனிய சுவை இராது. அதை உண்ட திருப்தி இருக்காது ஏதோ கட்டாயத்திற்கு உண்ட ஒரு நிலை உருவாகும். அது போன்று தான் இனிய சொற்கள் இருக்கும் போது, அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது எங்கிறார். நாம் பேசும் ஒவ்வொரு நல்ல வார்த்தையும் நம்மை, நமது பிறப்பை, நமது வாழ்வை, நமது பண்பைப் பிறர்க்குப் பறைசாற்றிப் பிறர் முன் எமக்கு வேண்டிய மதிப்பைப் பெற்றுத் தருவன. எனக்குத் தெரியாது எனக் கூறி கண்டபடி கூறும் வார்த்தைகள் எம்மை எங்கும் எடுத்துச் செல்லாதவை. எனவே தான் நாம் நல்லன பேசி நல்லவராக வாழ்ந்து, நல்ல வழியில் நடக்கச் சொல்கிறார்.
ஜேர்மனிய அறிஞர் அல்பிறட் சுவைசர், கூறுகிறார். உலகின் சிந்தனைக் கருவூலகங்களில் முதலிடம் திருக்குறள் ஆகும். திருக்குறளுக்கு இனம் மொழி, சாதி, மதம், என எல்லை கடந்து காலத்தைக் கடந்து, எந்த நூற்றாண்டுக்கும் அமைவாக உயரிய அறிவார்ந்த சிந்தனைகளுடன் வென்று நிற்கிறது.
இதே போன்று ஒருவன் செய்த நன்மையை மறத்தலாகாது என்பதற்கும் ஒரு குறளைக் காணலாம்
குறள் 108
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது அறம் அன்று. அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம் எனச் சொல்கிறது
வள்ளுவம். அடுத்த குறளில், அவர் நமக்குச் செய்த நன்மையை நினைத்து, அவரின் தீமை மறக்கவும் செல்கிறது. நாம் பிறர் செய்த நன்மையை மறந்த போது, நிச்சயம் நம் நெஞ்சில் நெருடல் பிறக்கும். ஆக என்றும் நன்றியை நினைவில் கொள்ள வேண்டும். அதே வேளை, பிறர் செய்த தீமை, அவரின் ஆற்ற முடியாத ஒரு செயலால் விளைந்திருக்கலாம். எனவே அதனை உடனே மறந்து விட வேண்டும். அதனை ஞாபகத்தில் வைத்து, உழலும் மனது, வீண் மன அழுத்தம் கொண்டு, அதுவே நாளடைவில் நமக்கு பல நோய்களைக் கொண்டும் வரலாம். அந்த நோய நமக்கு மரண வாசலில் எம்மைக் கொண்டு வந்து விட்டு விடும். இதனையே ஒளவையாரும் ஆத்திசூடியில் நன்றி மறவேல் (ஆத்தி சூடி 21) எனப் பாடி உள்ளார்.
இன்னுமொரு குறளில், பயனுள்ள சொற்களை மட்டுமே சொல்லும் படி சொல்கிறார் திருவள்ளுவர்.
குறள் 200
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்
சொல்லும் சொல்லில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்ல வேண்டும். பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது என்கிறார். ஆம். சொல்வடை ஒன்றுள்ளது, நாம்இழந்த நேரம், வாயால் விழுந்த சொல், வயலுக்கிறைத்த நீர் என்பவற்றை மீண்டும் பெற இயலாது என்பது. நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் அறிந்து ஆராய்ந்து சொல்லப் பழகிடுவோம்.
என்னை, ஒருவர், தன் வாய்மொழியால் வஞ்சித்தார் என்றால், அவருடன், கோபப்படாமல், அவரிடம் பேசாமல் கொஞ்சம் விலகி வாழ்ந்து கொள்வது தான் நாம் அவருடன் பேசி, எம்மைக் காத்துக் கொள்ளப் போராடும் போது, எம்மையும் அறியாமல், வார்த்தை விஷத்தைக் கொட்டி விடுவோம். அது அவர் இதயத்தில் சென்று பசுமரத்து ஆணிபோல் பதிந்து விடும். ஒவ்வொரு தடவையும், அவர் நம்மைக் காணும்போதும், நாம் வீசிய அந்த சொற்கள் அவருக்கு நினைவுக்கு வரும். ஆக அங்கு ஒரு நிரந்தர பகை உணர்வு ஒன்று எம்மிருருவருள்ளும் இருக்கும். எனவே அங்கு சமாதானம் வர சாத்தியம் இல்லாது போய்விடும். ஆக நாம் பேசாமலும், அவரைத் திட்டாமலும் இருந்து விட்டால், எமக்கு உடல் நலம் காக்கப் படும். மனம் சாந்தமடையும். அவரை மன்னிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். அவருள் எம்மைப் பற்றிய ஒரு நல்ல அபிப்பிராயம் உருவாகும். அடுத்த முறை அவருடன் நாம் கதைக்க நேரும் போது, மனம்கூசாமல், சர்வ சாதாரணமாக பேசும் உரிமை உருவாகும். நமக்குள் பகை வந்தது என்ற போராட்டம் நம்முள் இராது அல்லவா. பயனிலாததைச் சொல்லி, நம் பண்பை இழந்து, பாமரராய் வாழது பண்புடன் வாழலாம் என்று வள்ளுவம் கற்றுத் தருகிறது.
குறள் 656:
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும் சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது. ஒரு தாயின் பசியை நிச்சயம் ஒரு நல்ல தனயனால் தாங்க முடியாது. ஆயின், அப்படிக் கூட ஒரு தாயைப் பசி போட நேர்ந்தாலும், சான்றோர் பழிக்கக் கூடிய ஒரு இழிவான செயலை ஒருவன் செய்தல் கூடாது எனத் தெளிவு சொல்கின்றது இக்குறள். பெரியவர்கள் காலைத் தொட்டு வணங்கும் பண்பு எம்மவர் இடையே உண்டு. அதிலும், கிழக்குலக நாடுகளில் இந்தப் பண்பு அதிகமாக உள்ளது. சிறியவர்கள் வெற்றிலை தந்து,பெரியவர்களை வணங்குவர் சிறு குழந்தைகளின் நேற்றியில் கையால் தொட்டு ஆசி கூறுவர் பெரியோர். காலில் விழுந்தவரைத் தூக்கி கட்டி அணைத்து அன்பு காட்டுவர் பெரியவர். எனவே இப்படி பெரியவர்களின் ஆசி பெற்று வாழும் போது, இளையோர் மனத்தில் நம்பிக்கை ஓளி ஒன்று பிறக்கும். அதாவது, தன்னை வாழ்த்திய பெரியவர்கள், தன் வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஆசி கூறுவார்கள். நாமும் வாழ்வில் முன்னேறுவோம். என்ற நம்பிக்கை பிறக்கிறது. எனவே பெரியோரை மதிக்கக் கற்றுக்கொள்வோம் எங்கிறார் வள்ளுவர். இது தமிழர்களின் பண்பாடு தான். ஆகவே நாம் அனைவரும் நல்லவழி வாழ்வதற்கு இந்தப் பண்பாட்டுச் சித்திரம் மூலம் வழி காட்டுகிறார் வள்ளுவர்.
குறள் 782
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர் பேதயார் நட்பு
அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடைத்தது அது போல் அறிவில்லாதவரின் நட்பு, முழுமதி தேய்ந்து பின் செல்வது போன்ற தன்மையுடையது எனத் தன் உரை கூறுகிறார் மு. வ. அவர்கள். இதை நாம் ஒருவிதம் நோக்கினால், நல்ல அறிஞர்களின் நட்பினால், நாமும் ஆற்றல் பெற்று, உலகில் பலர் போற்ற வாழ்வு பெறுவோம். இதே வேளை அறிவில்லாதவரிடம் கொள்ளும் நட்பினால், நாம் நமது பண்பினை இழந்து, அறிவற்று, அல்லலுறும் நிலையே ஏற்படும். எனவே எப்போதும் எம்மைச் சுற்றி, அறிவுள்ளவர்களைச் சேர்த்து வாழ்வது, வாழ்வின் வெற்றிக்கு மிகவும் அவசியம் என்பதையே வள்ளுவப் பெருந்தகை வலியுறுத்திக் கூறுகின்றார்.
நான் ரொரொன்றோ வந்த 1989ம் ஆண்டு காலங்களில் வானொலி, பத்திரிகை வானொலி என ஊடகங்கள் இருக்கவில்லை 1993ம் ஆண்டுகளில் என் கதை, கவிதை, கட்டுரைகள் வழங்கினேன். அதன் பின் இலங்கை மகாஜனாக் கல்லூரி அதிபர். பொ. கனகசபாபதி அவர்கள், , குறமகள் எனும் வள்ளிநாயகி இராமலிங்கம் அம்மா போன்றோரின் தலைமையில் 1993ம் ஆண்டிலிருந்து பல பட்டிமன்றங்கள், கவியரங்குகள், என பங்கு பற்றினேன். வானொலி அறிவிப்பாளராக, செய்தி வாசிப்பாளராக, தொலைக்காட்சிச் செய்தி வாசிப்பாளராக இருந்து , பின் வேலை, சிறு குழந்தைகள், பெற்றோரைப் போணல் என சுமைகள் கூட, நான் இலக்கியத்தை விட்டுவிட்டேன்.
என் தாயாரின் ஊக்கத்துடன் என் முதல் கவிதை நூலை வெளியிட ஓழுங்கு செய்த போது, என்னைத் தெரிந்த அதிபர் கனகசபாபதி ஐயாவிடம் என் நூலுக்கு ஒரு அறிமுக உரை செய்ய கோரி 2013ம் ஆண்டு அவர் இல்லம் சென்ற போது, அவர் என்னிடம் “நீங்கள் எங்கே தொலைந்து போனீர்கள் அம்மா? ஒரு திறமையான ஆளுமை. நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும். வெளியே வாருங்கள்" என்றார். அது போலவே வள்ளிநாயகி அம்மாவும், என்னைப் பாரட்டி, தொடர்ந்து எழுதுங்கள் என்று ஊக்குவித்தார். அவர்களின் ஊக்கமும், ஆர்வமான சிந்தனையும், என் கணவரின் ஊக்குவிப்பும் தான்என்னை மீண்டும் வந்து இப்படிச் சபையேற வைத்தது. இவர்கள் இன்று உயிருடன் இல்லை. ஆனால் என்னுள் அவர்கள் இருந்து என்னை வழிநடத்துகின்றனர்.
பாரதியாரின் "கண்ணன் என் தோழன்' பாட்டில் நமக்கு நயம்பட நண்பன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என விளக்குகிறார்.
நண்பன், நாம் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுபவன் அல்ல. இதமான வார்தை சொல்லி, நம்மை ஆதரிப்பவன் அல்ல. நம்மை வையத்தின் முன் நல்ல மனிதன் எனும் நிலையிலிருந்து தவறிவிடாது, நாம் நம் மனித நிலையை மேலும் வளர்க்க உதவுபவனே எனக் கூறுகிறார்.
இதோ அந்தப் பாடல்..
"உள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில்
ஓங்கி யடித்திடுவான்: - நெஞ்சில்
கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தை சொன் னாலங்கு
காறி யுமிழ்ந்திடுவான்:(கண்ணன் என் தோழன்- பாரதியார்)
குறள் 894
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்
காற்றாதார் இன்னா செயல்
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது என்பதாகும்.
இன்றைய காலகட்டங்களில் நமக்கு அதிகம் நினைவுக்கு வருவது நம் பெரியவர்களே. முன்னைய காலங்களில், பெரியவர் சொல் கேட்டு, அவர்கள் அறிவுரைப்படி வாழ்ந்தவர்கள் நாம். பேரன், தந்தையிடம் அறிவு கேட்பார். தந்தை தன் தந்தையிடம் கேட்பார். இப்படி மூன்று, நான்கு தலைமுறைகளைக் கேட்டு
முன்னேறுவார் இளையோர். ஆனால், இன்று மூத்தோர் வார்த்தை அமிர்தம் என்று சொல்வதற்குப் பதிலாக இன்றைய இளையவர், தம் பெரியவர்களை ஒரு மூலையில் இருக்கச் சொல்லி நடத்துவது நாம் காண்கிறோம். அந்தப் பெரியவரை அவமதிப்பதுடன், அவர்களை மனச் சங்கடங்கட்கு ஆளாக்கியும் விடுகின்றனர். இது தம்மை அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைப்பது போன்ற ஒரு செயல் எனவே நினைக்கலாம்.
குறள் 391
கற்க கசடறக் கற்க கற்றபின்
நிற்க அதற்குத் தக..
நூலைப் படி, கசடின்றிப் படி, கற்கும் தகுதியுடன் படி. கற்ற பின் உன் எதிர்கால வாழ்வில் அந்த கல்வி வழிகாட்டும் பாதையில் நின்று, அதற்குத் தக்கபடி நட என்னும் வள்ளுவரின் வார்த்தையில் எமக்கு வேண்டிய சமுதாய விழுமிங்கள் நிறைந்து காணப்படுகின்றன. கல்வி என்னும் அங்குசத்தால், கல்லா மனிதரான யானைகளை அறிவூட்டி அடக்க வைக்கச் சொல்லித் தருகிறார். இன்றும் பல இடங்களில் இலவசமாக கல்வி அளிப்பது இதுவும் நம் பண்பின் வழிதானே.
மக்களை வழிகாட்டி, நல்வழிப் படுத்த உதவும் கல்வி, நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டும். மனிதனுக்கும் விலங்குக்கும் இடையே வேறுபாட்டைத் தருவது கல்வி.
குறள் 972
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிற்பபொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒன்றே. அவரவர் செய்யும் தொழிலால் உயர்வு தாழ்வு கண்டறியப் படுவதில்லை. இதனை வெகு நேர்த்தியாகக் கூறியுள்ளார் வள்ளுவர். இன்றைய சமூகத்தின் இழிவான ஒரு தேடல் தான் சாதியம். இந்த சாதியத்தால் பாதிக்கப் பட்டவர்கள் பலர். ஆனால் அவர்களின் திறமை வெளிப்பட்டபோது, உயர்குடி மாந்தரும் வெட்கித் தலைகுனிந்து அவரை ஏற்றுக் கொண்ட கதைகள் பலவுண்டு. டாக்டர் அம்பேத்தகார் போன்றவரின் போறாட்டங்கள் எம் நினைவுக்கு வரலாம். அவர்கள் பட்ட துன்பங்கள் எமக்குத் தெரியும். இசை படைக்க வந்தவர்களைக் கூட சாதியததால் ஒதுக்கியவர்கள், இன்று அவர்கல் படைக்கும் இசை கேட்டு, மகுடிக்கு மயங்கிய பாம்பாகி நின்று ஆடி மகிழ்கின்றனர். இது மனித்தத்தை மனிதமாகக காணாத ஒரு மாசுள்ள மனித மனத்தின் பண்பாகும். ஒரு மனிதனின் கடமையாக அவன் பிறரை மதிக்கக் கற்றுக் கொண்டால், பிற மனிதனை ஏற்றுக் கொண்டால், பிறருடன் பணிந்து வாழ்ந்தால், அவனது வாழ்வு மேன்மை பெறும். அவன் பிறரால் போற்றப் படுவான்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா எனும்
புறநானூற்றுப் பாடலான 192ம் பாடல் எல்லா ஊரும் எம் ஊர், எல்லா மக்களும் எம் மக்கள் எனக் கூருகிறது. மக்கள் அடையும் நன்மை தீமை பிறரால் வருவன அல்ல. உன் செயலுக்கு நீயே தான் காரணம் என்றும் கூறுகிறது. ஆக நீ சமுதாயத்தில் உயர்ந்து வாழ நீ தான் பாடுபட்டு உழைக்க வேண்டும் என்பதை நன்கு கற்றுத் தருகிறார் வள்ளுவர்.
குறள் 952
ஒழுக்கமும் வாய்மையும் நாணுமிம் மூன்றும்
இழுக்கார குடிப்பிறந் தார்
இக்குறளில், நல்ல குடியில் பிறந்தவரின் நல்ல பண்பு பற்றிக் கூறுகிறார் வள்ளுவர். உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நாங்கும் நல்ல பண்புகள் என்பர் எனச் சொல்கிறார். அது நிச்சயம் உண்மையாக இருக்கும் அல்லவா! எத்தனை பெரிய குலத்தில் பிறந்தாலும் இப்படியான பண்புகளை மறந்து, பிறர் இகழ வாழ்ந்து, தாம் பெரியவர் எனப் பெயர் எடுப்பார்களோ அவர்களை பண்பாளர் எனக்கூற இயலாது என்பதை இந்தக் குறள் மூலம் அறியலாம்.
நல்லொழுக்கமில்லாதவரென்று இகழப்படுவதல்லாமல் நரகத்துக்குச் செல்லும் வழியில், ஒழுக்கம் அறிந்தவர் பிறருடைய மனையாளும், கட்குடிப்பதும், களவு செய்தும், சூதாடுவதும், கொலை செய்வதும் மனத்தாலும் நினையார் என ஆசாரக்கோவை பின்வரும் பாடலில் இழிந்து பேசுகிறது.
பிறன்மனை கட்களவு சூது கொலையோ
பிறனறிந்தா ரிவ்வைந்து நோக்கார்- திறனிலரென்
றெள்ளப் படுவதூஉ மன்றி நிரயத்துச்
செல்வழி யுய்த்திடுத லால் (37-ஆசாரக்கோவை)
குறள் 963
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
அடுத்து இந்தக் குறளில் செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பண்பு வேண்டும், செல்வம் குறந்து, வறுமை கூடும் காலத்தில், பணியாத உயர்வான நிலை கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார். அதாவது செல்வம் இல்லாக் காலத்தில் பிறரிடம் கையேந்தித் தன்னை அவன் தாழ்த்தல் ஆகாது என்பது இக்குறள் மூலம் அறியக் கிடக்கின்றது. எத்தனை பணம் இருக்கிறதோ அத்தனை தூரம் கெளரவம் கொண்ட மனிதர்களை இன்று காண்கிறோம்.
என் நண்பியின் தந்தை, எங்கள் முன்னிலையில் தன் வேலையாளைத் திட்டினார். அதன்பின எங்களிடம் மன்னிப்புக் கேட்டார். “ அம்மா. எனக்கு கோபம் வந்து விட்டது. அவரைத் திட்டினேன். ஆனால் நீங்கள் என் விருந்தாளிகள். உங்களை நான் துன்புறுத்தி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்றார். இது பணிவின் மேன்மை நிலை. அந்தப் பெரியவர், தன் மகளின் நண்பிகளான எங்களை மதித்ததனால் தான் அந்த மன்னிப்பைக் கேட்டார் என அன்று பிரியவில்லை. இன்று இக்குறளைக் கற்றுத் தெளிவுறும் போது புரிகிறது.
செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவருக்குப் பண்பு வேண்டும். அதுபோல் செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்திலும் பணியாத உயர்வு வேண்டும் ஆன்றோர் செல்வம் இருக்கும் போது தான் பிறர் எம்மை மதிப்பர். செல்வம் இல்லாத போது எம்மை மதியாதவரிடம் நாம் பணிந்து போகாத உயர்வைக் கொண்டிருத்தல் வேண்டும் எனக் கூறும் இக்குறளின் கருத்துக்கு நாம் ஈடு கொடுத்து வாழப் பழகுவோம்
குறள் 969
மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்
தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர் என மு. வ. உரை கூறும் இக்குறள் எனக்கு ஒரு நல்ல பாடம் கற்றுத் தந்தது.
ஒரு வயதான பாட்டனார், தன் தொண்ணூற்று நான்கு வயது வரை வாழ்ந்தவர். கடைசி வரை யாருக்கும் அடிபணியாது, காணி பூமியுடன் வாழ நினைத்தவர், மகனும் மருமகளும் அவரை ஏமாற்றி, முன்னரே அவரிடமிருந்து அவரது சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்டனர். ஆயினும் தன் வாழ்வில், யாரிடமும் கைநீட்டிக் கையேந்தி உண்ணக் கூடாது எனும் வைராக்கியத்துடன் வாழ்ந்திட்ட அவர், பாய், பெட்டி, பின்னி தன் மகனிடம் கொடுத்து விற்று வரும் பணத்தை மருமகளிடம் தன் உணவுக்கெனக் கொடுத்து உண்டு வந்தார். அது போல் அவர் வீட்டில் இருக்கும் நேரங்களில், பேரக் குழந்தைகட்குப் பாடம் சொல்லித் தருவார், அடுத்து கிடங்கு கிண்டி வாழை மரம் நட்டு, நீர் பாச்சுவார். அதில் வரும் கனிகளை வீட்டார் விற்றுப் பணம் பெற்றனர். இப்படி வாழ்ந்த போது, கடைசி ஒரிரு நாட்கள் அவர் படுக்கையில் நிரந்தரமாக கிடக்க வேண்டி வந்தது. அவரைக் கவனிக்க யாரும் அருகில் இருக்கவில்லை. கூப்பிட்ட குரலுக்கும் ஒருவரும் வருவதாக இல்லை. மன வேதனை கொண்டவர், தன் இயலாமையை எண்ணி மனம் வருந்தியபடியே தனது படுக்கையிலேயே இறந்து போனார். ஆக வாழும் காலங்களில் மதிப்புடன் வாழ்ந்தாலும் மானம் இழந்த பின் வாழ்வதில் அர்த்தம் இல்லைத்தானே
குறள் 999
நகல்வல்லார் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்
வள்ளுவர் கூறும் கருத்து, மிகவும் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். இன்று மனிதன் பல மனச்சிக்கல்களுக்குட் சிக்குப் பட்டுச் சீரற்ற வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறான். இப்படியான சூழலில், அவனுக்கு ஆறுதல் தர ஒரு சில உறவுகள், நட்புகள் மிகவும் அவசியமாகும். தனித்து வாழும் மனிதன் தான், தன்னை வெறுத்து, தன் நிலையை வெறுத்து, தனிமையில் ஆட்கொள்ளப்பட்டு, ஈற்றில், மனஅழுத்தங்களால், ஆக்கப் பட்டு, வாழ்வின் கடைநிலையை அடைகிறான்.ஆகவே பிறரோடு கலந்து, பழகி, மகிழ வேண்டும் அப்படிக் கலந்து, மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகமானது, ஒளியுள்ள பகற்காலத்திலும் இருண்டு கிடப்பது போன்றதாக இருக்கும் எங்கிறார்.
குறள் 1021
கருமம் செயலொருவன் கைதூவேன் என்னும்
பெருமையிற் பீடுடைய தில்
இந்தக் குறளில், குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்கு சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை எங்கிறார் வள்ளுவர். தான் எடுத்த கருமம் எதுவோ அதற்கு எத்தனை தடைகள் வந்தாலும், அவற்றையெல்லாம் எதிர்த்து நின்று வெற்றி காண்பது பெருமையைத் தரும். சமுக முன்னேற்றத்தில் தன்ன ஈடுபடுத்தும் ஒருவனுக்கு மேலான பெருமை நிச்சயம் உருவாகும். இதனை அடுத்த தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டி வாழவேண்டும்.
நாமும் சமுகத்துச் செய்யும் உதவியினால் நமது வாழ்வையும் முன்னேற்றிச் சமுகத்தையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல உறுதி கொள்வோம்.
இந்தக் குழுமத்தில் என் கட்டுரை தான் முதலில் வந்தது என தாமரை அம்மா சொல்லி என்னை ஊக்குவித்தார். அவருக்கு நன்றி. நான் பெருமைப் படுகிறேன். சுமார் 133 கட்டுரைகள் அங்கு வந்து குவிந்தது தாமரை அம்மாவின் செயலாற்றும் திறன் தானே.
குறள் 1022
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்
நீள்வினையன் நீளும் குடி
இந்தக் குறளில் கருத்தை முயற்சி, நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும் என்கின்றனர் உரையாசிரியர்கள். . நல்ல மனிதனாக வாழ்வதற்கு, ஒருவனுக்கு நிச்சயம் முயற்சி இருக்கவும் வேண்டும். அத்துடன் அவன் நிறைந்த அறிவு கொண்டவனாகவும் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். மனிதன் நலமோடு, வளமோடு, அறமோடு வாழக் கற்பித்தவர் வள்ளுவர். அவரின் குறளடிகளை உணர்ந்து படிக்கும் போது, நாம் நிச்சயம் நல்ல வாழ்வைத் தொடர்ந்து வாழலாம் என்பது திண்ணம்.
குறள் 1025:
குற்றம் இலனாயக் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு
இங்கு நாம் காணும் கருத்தில், குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர். என்கிறார். அதாவது பிறர் நம்மைச் சுற்றமென மதிக்க வேண்டும் என்று வள்ளுவரின் வாக்குக்கு ஒப்ப நாம் வாழ விழைவோம்.
வாயாவும், வருத்தமும் ஈன்றக்கால் நோவும்
கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தா அங்கு
அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன்
கேலிரைக் காணக் கெடும் (நாலடியார் - 201)
கருக்கொண்ட காலத்தில் உண்டாகும் மசக்கை நோயும், அது பற்றி வரும் துன்பமும் பேறு காலத்தில் குழந்தையைக் கண்டு தாய் மறப்பதுபோல், தளர்ச்சியால் தான் உற்ற துன்பம் எல்லாம் நலம் விசாரிக்கும் சுற்றத்தாரைக் காணின் நீங்கும். என நாலடியார் கூறுகிறது.
முடிவுரை
வையத்துள் வாழ்வாங்கு வாழ்வபர் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
என்னும் குறள் மூலம் மண்ணுலகில் மனிதனை தெய்வமாக்கிக் காண்கிறார் வள்ளுவர். அவரின் ஆவலை நாம் சமுகப் பிராணிகளாக உள்ளவர்கள் வாழத் தலைப்படவே பல குறள்களை இங்கு தந்துள்ளார். ஆக நாம் வாழும் தெய்வீக வாழ்வினால், நாமும் வாழ்ந்து, நமது சமுகமும் வாழ உதவுவோமாக.
வாழ்க்கை இனிதாக வாழ வேண்டிய ஒன்றாகும். அது சுகமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். அது சுமையாக இருக்கிறது என்றால், நாம் எங்கோ தவறு செய்துள்ளோம் எனபதை உறுதிப்படுத்திக் கொள்வோமாக. துயரங்களைக் களைந்து, துன்பங்களை விலக்கி வாழ முற்படுவோம். தினசரி எழுந்ததும், திகதியைக் கிழித்துப் புதிய நாளொன்றைக் காண்பது போல், நமது பழைய எண்ணங்கள், பகைமைகள், சோகங்கள், சுமைகளைக் கிழித்து எறிந்து விட்டுப் புதிய சிந்தனைகளுடன், நமது நாளைத் தொடங்குவோம். மகிழ்ச்சி தன்னாலே நம் வாழ்வில் வந்து ஒட்டிக்கொள்ளும். இருள் சூழ்ந்த நம் வாழ்வில் ஒளியேற்றுவதுடன், பிறர் வாழ்வுக்கும் ஒளியாக, வழியாக நின்று வாழ்வோமாக.
நிறைவாக ஒரு மொழி வாழ உதவுவது இலக்கணங்கள். ஒரு சமூகம் வாழ உதவுவது, இலக்கியங்களே. ஓர் இனம் வாழ உதவுதவது மனிதரின் வாழ்வை எப்படி வாழ வேண்டும் என்னும் தத்துவங்களே. அந்தத் தத்துவங்கள், என்ணற்ற கருத்துகள், திருக்குறள் பெட்டகத்தில் பொக்கிடமாக 2000 நூற்றாண்டுகளுக்கு முன்னர் வைத்துக் காக்கப் பட்டு, அது எக்காலத்திலும் பொருந்தி நிற்கக் கூடியதாக வைக்கப்பட்டு, அவை என்றும் எடுத்துரைக்கப் படுகின்றன. மண்பதைக்கு உயிரை விட மேலானது ஒழுக்கமும் பண்பாடும். அந்த வகையில் அவை திருக்குறள் முழுவதும் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை எடுத்துக் கொண்டு நம் வாழ்வை திறம்பட வாழ்ந்து வெற்றி கொள்வோம்.
நூற் பட்டியல்
1. புறநானூறு
2. ஆத்திசூடி
3. அகநானூறு
4. ஆசாரகோவை
5. பாரதியார் பாடல்( கண்ணன் என் தோழன்)
6. நாலடியார்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.