“செயற்கைப் புலமை” (AI) என்பது இன்று பிரபல்யமான ஒரு வார்த்தையாக உலகத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. அண்மையில், தமிழ் அரசியலில், சக்கைப் போடு கண்டுவிட்ட துவாரகாவின் வரவு கூட செயற்கைப் புலமையுடன் தொடர்பு படுத்தப்பட்டு, அமர்களப்படுத்தப்பட தவறவில்லை. துவாரகாவின் உரை பற்றிக் குறிக்கும் போது பேராசிரியர் கீதபொன்கலன், AIயின் தொடர்புக் குறித்து கருத்து தெரிவித்திருந்த போதிலும், இதற்கு முன்னதாகவே மேஜர் மதன்குமாரிடம் துவரகாவின் உரையானது செயற்கைப் புலமையால் தாயரிக்கப்பட்ட ஒன்றுதானா என்று கேட்கப்பட்ட போது, அக்கேள்விக்கு நேரடியாக பதிலளிப்பதிலிருந்து சாமார்த்தியமாக அவர் விலகிக் கொண்ட செயல் குறிக்கத்தக்கதுதான்.
ஆனால் இக்கட்டுரை விவாதிக்க முற்படுவது, துவாரகாவின் உரையானது செயற்கைப் புலமை கொண்டு தயாரிக்கப்பட்டதா இல்லையா என்பதல்ல. மாறாக இன்று புது வரவாக கருதப்படும் செயற்கைப் புலமை எனும் தொழிநுட்பம், இனி எவ்விதம் உலகில் கோலோச்சப்போகின்றது என்ற கேள்வியேயாகும்.
கிட்டத்தட்ட, பத்து தினங்களின் முன்னர் மோடி அவர்கள் தனது காசி உரையில், பாஷ்னி எனும், AIயின் உதவி கொண்டு உடனுக்குடன் தமிழுக்கு பரிவர்த்தனை செய்தார் எனக் கூறப்பட்டது. இதனை அவர் AIயின் உதவி கொண்டுதான் ஆற்றக்கூடியதாக இருந்தது என்பதும் உலகளவில் இச்செய்தியானது பெரிதும் முக்கியத்துவம் கொடுத்து பரவலாக்கப்பட்ட ஒரு விடயமாயிற்று (19.12.2023).
இதனாலோ என்னவோ ஏட்டிக்குப் போட்டியாக நாங்களும் இருக்கின்றோம் என்று காட்டும் வகையில் மோடி பேசி முடிந்த சில தினங்களிலேயே பாகிஸ்தானின் இம்ரான்கான் சிறையில் இருந்தவாறே AIயை பாவித்துத் தன் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்ததாக செய்தி வந்தது.
ஒருவர் காசியில் இருந்தும் மற்றவர் பாகிஸ்தானின் சிறையில் இருந்தும் உரையாற்ற வெளிக்கிட்டு இருந்தது அவ்வவ் நாடுகள் பின்பற்ற தேர்வு செய்யும் அரசியல் - பொருளியல் விவகாரங்களிலானது அல்லது அவை தேர்வு செய்யும் பூகோள அரசியல் சம்பந்தப்பட்ட ஒரு விடயம் என்பது இங்கு ஒரு புறமிருக்க, இங்கு இரு தரத்தாருமே AIயை பாவிக்க தொடங்கி விட்டார்கள் என்ற மறைமுக அறிவிப்பை விடுக்கும் நிகழ்வாகியது. (இது கிட்டத்தட்ட இந்தியா அணுகுண்டை வெடிக்கச்செய்து சில கணங்கள் அல்லது சில தினங்கள் ஆகும் முன்னரே பாகிஸ்தான் ஏட்டிக்குப் போட்டியாக தன் வசம் மறைத்து வைத்திருந்த அணுகுண்டை வெடிக்கச் செய்தது போன்ற நிகழ்வாகும்.)
ஆனால் இவ்விரு உரைகளும் ஆற்றப்படுதலுக்குச் சில தினங்களுக்கு முன்னதாகவே புட்டின் அவர்கள் தனது வருடாந்த நீண்ட நெடிய கேள்வி – பதில் அமர்வை நிகழ்த்திய போது சாட்சாத் அவரைப் போன்றே தோற்றம் தந்த ஓர் உருவமானது அவரது குரலிலேயே பேசும் வகையில் காண்பிக்கப்பட்ட போது அதிர்ந்து போனார் மனிதர். பின் சுதாகரித்துக் கொண்டு அவர் கூறியதாவது: இது நானல்ல. நான், எப்போதுமே நானாகவே இருப்பேன். ஆனால் உலகமானது அணு ஆயுதங்கள் தொடர்பில் எப்படி ஓர் உடன் படிக்கைக்கு வந்ததோ அவ்வாறே செயற்கைப் புலமை தொடர்பிலும் ஓர் உடன் படிக்கைக்கு வந்தாக வேண்டும் என்றார் (14.12.2023). மொத்தத்தில் செயற்கைப் புலமையானது நினைத்துப் பார்க்க முடியாத நாசங்களை உலகில் உண்டு பண்ணி விடும் என்பதே அவரது கூற்றின் உட்கிடையானது. ஆனால் அவரது உரையின் இப்பகுதி, “அரங்கேற்றப்பட்ட ஒன்றுதான்” என ஒருவர் கருதிக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
சரியாகக் கூறினால் மோடி - இம்ரான் உரைபாகட்டும் அல்லது புட்டின் தந்த அதிர்ச்சி வைத்தியமாக இருக்கட்டும் அல்லது எமது துவாரகாவின் மாவீரர் தின உரை ஆகட்டும் இவை அனைத்துமே உலகு இன்று செயற்கைப் புலமையின் பிடியில் இறுகி சிக்கி விட்டது என்பதை தெளிவுற சுட்டும் விடயங்களாகின்றன. வேறு வார்த்தையில் கூறினால் மனு குலத்தின் தொழிநுட்ப அறிவானது இன்று தனது இரண்டாம் கட்டத்தை எட்டி பிடித்தாகி விட்டது என கூறப்படுவதில் அர்த்தமுண்டு எனலாம்.
அதாவது முதல் கட்ட தொழிநுட்ப வளர்ச்சியானது, துப்பாக்கிகளையும், பீரங்கிகளையும், நீராவி இயந்திரங்களையும் கண்டு பிடித்து கொண்டன என்றால், அக்கண்டுபிடிப்புகளின் மொத்த நலன்களையும், மேற்கின் ஆதிக்க சக்திகள் தத்தமது மூலதனத்திற்கு சாதகமான முறையில் பாவித்துக் கொண்டனர் என்பது வரலாறு (அல்லது தங்களின் மூலதனங்களைக் கட்டுவித்து கொள்ளப் பாவித்து கொண்டனர் என்றும் கூறலாம்)
இந்தியா, ஆபிரிக்கா, இலங்கை, சீனா போன்ற உலக நாடுகளை தமக்கு அடிமைகளாக்கி காலனிகளின் சகாப்தம் உருவாகுவதற்கு இதே தொழிநுட்ப சாதனைகள்தான் அன்று உதவி புரிந்தன. ஆனால் இன்றைய விடயமோ சற்றே வித்தியாசமுற்று காணக்கிட்டுகின்றது. அன்று காணக்கிட்டிய தொழிநுட்ப ரீதியிலான மேற்கின் மேலாதிக்கம் இன்று காணக்கிட்டுவதாயில்லை. அதவாது மேற்கின் தொழிநுட்ப மேலாதிக்கம் அன்று போல் மேற்கின் ஏகபோக சொத்தாக இல்லாமல் நாடுகளிடையே இன்று கிளைபிரிந்து காணப்படுகின்றது.
இதனையே மோடி - இம்ரான்கான் - புட்டின் போன்றோரின் பேச்சுக்கள் சுட்டிக்காட்டுவதாக உள்ளன. இதனுடன் சீனம், ஈரான் போன்றவற்றையும் இணைத்துக்கொண்டால் விடயங்களின் வித்தியாசம் மேலும் விரிந்திட வாய்ப்புண்டு. எனவே இத்தொழிநுட்ப மாற்றங்கள் இன்று உலகைக் கவ்விப் பிடித்து குதறும் தருவாயில் உடன் படிக்கை ஒன்று எட்டப்படாவிட்டால் உலகின் சர்வநாசம் தவிர்க்க முடியாததாகி விடும் என்பது புட்டினின் கருத்தாகின்றது. இன்னும் சரியாக கூறுவதென்றால் செயற்கை புலமையின் நாசகார தாக்கங்கள் தொடர்பில் உலகம் ஓர் உடன்படிக்கையை எட்டா விட்டால் ஹீரோசிமா - நாகசாக்கி போன்ற நாசங்கள் ஏற்படுவது இயல்பானது என்பதே புட்டினது பேச்சின் சாரம் என்றாகின்றது.
II
பின்லாந்தின் கணிப்புப் பிரகாரம் இன்று மறைமுக இரண்டாம் குளிர் யுத்தமானது (second cold war) துவங்கியாகிவிட்டது என்பதாகும். இதற்கான காரணங்களாக சுட்டிக்காட்டப்படும் இரண்டு விடயங்கள்: ஒன்று, கிட்டத்தட்ட, அமெரிக்கவால் கைப்பற்றப்பட்டு இன்று சிறை பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். ரஷ்யாவின் 300 கோடி டாலர் பெறுமதியான ரஷ்யாவின் சொத்துக்கள், இன்று போர் உதவி என்ற பேரில் உக்ரைனுக்கு வழங்கப்பட்டுவிடும் என்னும் விடயமாகும். இரண்டாவாதாக, அமெரிக்கா அதிபர் ஜோ பைடனால் கை சாத்திடப்பட்டுள்ள 2024க்கான பாதுகாப்பு பட்ஜெட் ஆகும் (23.12.2023).
இவ் பட்ஜெட்டின் படி, அமெரிக்காவானது தனது இராணுவத்திற்காக 886.3 கோடி டாலரை அடுத்த ஆண்டில் (2024)இல் செலவிட இருக்கின்றது. இவ் பட்ஜெட் ஆனது இம்மாதத்தின் 13ம் திகதியன்று அமெரிக்கா செனட்டாலும் இதன் மறுதினம் 14ம் திகதி அமெரிக்கா காங்கிரஸ்னாலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்விரு அம்சங்களின் பின்ணனியில் தான் நேட்டோவானது இன்று உக்ரைனுக்கு கு-16 விமானங்களை வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் அதிசிறந்த தாங்கிகள், ஏவுகணைகள், ராக்கெட்டுகள், நவீன ட்ரோன்கள், செய்மதிகள் இவை போக தத்தமது போர் வீரர்களைக்கூட ரஷ்யாவுக்கு எதிரான போரில் களமிறக்கியுள்ள நேட்டோவானது தற்போது F - 16 விமானங்களையும் களமிறக்க யோசித்திருப்பது தர்க்க ரீதியான ஒன்றாகின்றது. இதில் கு-16ன் முக்கிய அம்சம், இவ் விமானங்கள் அணுகுண்டுகளை காவி செல்லும் வகையிலேயே வடிவமைக்கபட்டுள்ளவை என்பதாகும்.
ஆனால் இவை இப்படி உக்ரைனுக்கு வழங்கப்பட்டாலும் கூட இவை ஒருகாலும், அணுகுண்டுகளை ஏந்தப் போவதில்லை என்ற மேற்கின் உத்தரவாதத்திற்கு, சிரித்தப்படி பதிலளித்த, ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் லப்ரோவ், இவை அணுகுண்டுகளை ஏந்தி வரப்போகின்றனவா இல்லையா என்பதனை நாம் பார்த்துக் கொண்டு இருக்கப்போவதில்லை. இதற்குரிய, தகுந்த அமைப்பு முறைகளை (Systems) நாம் ஏற்கனவே ஏற்படுத்தி உள்ளோம். இவ் அமைப்பு முறைகள் இவை அணுகுண்டுகளை ஏந்தி வருகின்றனவா, இல்லையா என்பதனை தம்போக்கில் நுணுக்கமாக கண்டறிந்து, பின், அவை அவற்றுக்குரிய நடவடிக்கைகளை (தன்னிச்சையாக) மேற்கொள்ளும், என்பதனை கூறியாக வேண்டும் என்றார். (இவை அனைத்துமே ஒரு சில நொடிகளில் நடந்து முடிந்து விடும் என்பதனையும் கூறியாக வேண்டும்). அதாவது ரஷ்யாவானது தனது செயற்கைப் புலமை திறனை இத்துறையில் இவ்வகையில் கட்டவிழ்த்து விட்டது என்பதே லப்ரோ கூற வரும் விடயத்தின் சாரம் ஆகும்.
ஆனால், செயற்கைப் புலமையின் இவ்வகை பாவிப்பானது இப்படியாக நேரடி ராணுவ பாவிப்புகளுக்கான நடைமுறைகளுக்கு மாத்திரம் உரித்தான ஒன்றாக மட்டுப்படுத்தப் போகின்றதா அல்லது உலகின் அரசியல் முடிவுகளையும் கட்டுப்படுத்தி அவற்றையும் நிர்ணயம் செய்ய போகின்றதா என்பதே கேள்வியாகின்றது.
III
புட்டினின் உரையை அல்லது மோடி – இம்ரான்கான் உரைகளை கூர்ந்து அவதானித்தால் அவை இன்று சர்வதேசத்தில் எட்டப்படும் அல்லது எட்டப்பட்டுக்கொண்டிருக்கும், நினைதுப்பார்க்க முடியாத முடிவுகள் எடுக்கப்படுவதும் அவை, இன்றைய அனைத்துலக சர்வதேச சட்டங்களுக்கு அல்லது விதிமுறைகளுக்கு எதிராகவே செயல்பட்டு உலக நாசத்தை நோக்கி உலகை இட்டு செல்லக் கூடியன என்பதும் தெரிய வருகின்றது.
குடியகல்வும் (அல்லது இடப்பெயர்வும்) இறப்பும் என்ற இரு விடயங்களும், இன்றைய சகாப்தத்தின் சர்வ லட்சணம் பொருந்திய, வடுக்கள் நிறைந்த இரு முகங்களாகின்றன. இவை, இன்றைய உக்ரைன், காஸா போன்ற விடயங்களில், இன்னும் ஆழமாக வெளிப்படுவதாக உள்ளன என்பதில் சந்தேகம் இல்லை. (இதுவரை உக்ரைனிலிருந்து அகதிகளாக இடம்பெயர்ந்தோரின் தொகையானது ஆறு மில்லியனை தாண்டும் என ஒரு பதிவு கூறும் அதேவேளை காசாவில் கொல்லப்பட்ட சிவிலியர் தொகை இருபதாயிரத்தை கடக்கின்றது என அப்பதிவு மேலும் கூறுகின்றது. இதில் சிறுவர் சிறுமியரின் தொகை ஐயாயிரத்தை கடக்கின்றது எனவும் மயக்க மருந்து தட்டுப்பாடு காரணமாக அங்கேமயக்கமருந்தின்றி, சிறுவர்கள் உடலில் மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சை கணக்கில் மாளாதவை என்றும் கூறப்படுகின்றது. நத்தார் தின பரிசளிப்பாக வான் வெளி தாக்குதலில், எழுபதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக விபரங்கள் கூறுகின்றன. காயப்பட்டோர் எண்ணிக்கை கணக்கில் அடங்குவதில்லை). இச்சூழலில் இம்முடிவுகள் யாரால் எடுக்கப்பட்டன எப்படி எடுக்கப்பட்டன என்பதும் உலகம் எதை நோக்கி நகர்கின்றது என்பதும் கேள்வியாகின்றன.
இது போலவே, உக்ரைனின், மின்ஸ்க் சமாதான ஒப்பந்தமானது, நேரத்தை பெற்றுக்கொள்ள செய்யப்பட்ட ஒரு ஏற்பாடு ஒன்றே தவிர சமாதானத்தையும் சௌபாக்கியத்தையும் பெற்றுக்கொள்ள செய்யப்பட்டவை அல்ல என்று முன்னை நாள் ஜெர்மனிய அதிபர் ஏஞ்சலோ மேர்கெலும் பிரான்சிய அதிபர் மக்ரோனும் கூட்டாக கூறுவதும் உக்ரைன் போரானது திட்டமிடப்பட்ட ரீதியில் கட்டவிழ்க்கப்பட்ட ஒன்றுதான் என்பதை நிரூபிக்கின்றது – காசா போன்றே! அதாவது, இம்முடிவுகள் யாரால், எப்படி எடுபடுகின்றன என்பதிலேயே செயற்கை புலமையின் மறைகர நகர்வும் உள்ளடங்குகின்றது.
சுருக்கமாக கூறினால், சர்வதேச சட்டதிட்டங்களை உதறித்தள்ளி அல்லது அவற்றைப் புறக்கணித்து எழக்கூடிய இவ்வகைப் போக்குகளில் செயற்கைப் புலமைகளின் பாத்திரம் எவ்விகிதாசாரமாகிறது என்பதே கேள்வியாகின்றது.
IV
ஆனால் மேலே குறித்தவாறு, செயற்கைப் புலமையின் ஆதிக்கமானது இன்று மேற்கத்திய நாடுகளின் ஏகபோக சொத்தாகக் காணப்படவில்லை என்பதிலேயே ஆதிக்க சக்தி தொடர்பிலான சந்தேகங்கள் மேலெழுகின்றன எனலாம். உதாரணமாக, செங்கடலில் ஹெளதீகளை, கொன்றொழிக்கும் மேற்கின் கூட்டுப்போர் நடவடிக்கைகளிலிருந்து பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகள் விலகி விட்டதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.(24.12.2023)
இது காசாவின் பின்னணியில், இஸ்ரேலின் வர்த்தக கப்பல்கள், ஹெளதீகளிடமிருந்து பாதுகாப்பாக எப்படி பயணங்ளை மேற்க்கொள்ளப்போகின்றன. தமது கப்பல்களை அது எப்படி காப்பாற்றிக் கொள்ளப் போகின்றது என்பது கேள்வியாகின்றது. சுருக்கமாகக் கூறினால் காசாவின் நகர்வு ஹமாஸைக் கொன்றொழிக்கும் திட்டத்துடன் களமிறக்கப்பட்டதாக இருக்கலாம். ஆனால் செங்கடலில் அதனது எதிர் முகத்தை விரிப்பதாக அது உள்ளது என்றே கூறலாம்.
அதாவது இஸ்ரேலின் கப்பல் பயணங்கள் காசா பின்ணணியில் முன்னரேயே தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது காசா தாக்குதலானது செங்கடலின் பின்ணனியில் ஆய்ந்திருக்கப்படல் வேண்டும் என்பதுவே கேள்விகளின் சாரம் ஆகின்றது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் நாகாசகி - ஹீரோசிமா போன்று தன்னிச்சையாக நடத்தப்படும் தாக்குதல்கள் போன்றில்லாமல், எதிர் எதிர்த் தளங்களிலிருந்து, எதிர் எதிர் சக்திகள் இன்று செயல்படுவதாகவே இருக்கின்றன. அதாவது செயற்கைப் புலமைகளின் கையாளுகையானது எதிரெதிர் தளங்களில் செயல்படுவது கணக்கிலிடப்படுகின்றதா என்பதுவே கேள்வியின் சாரமாகின்றது.
வேறு வார்த்தைகளில் கூறுவதனால், காசா என்ற போர் முனையின் விவகாரம் (உக்ரைனுக்கு அடுத்தபடியாக) செயற்கைப் புலமைகளினால் ஏற்ப்படுத்திய ஒன்றெனில் அதன் வெற்றியின் நிர்ணயம் அப்படி ஒன்றும் எளிதாக இருக்கப்போவதில்லை. எதிரெதிர் சக்திகள் தத்தமது செயற்கை புலமை நுட்பங்களை அவிழ்த்து விடவே செய்கின்றன. அதாவது, லப்ரோவ் கூறியவாறு, F-16 விமானங்கள், அணுகுண்டுகளை ஏந்திவருவதால், அவற்றை அவை குறித்த கணங்களில் வீசி ஏறிய முயல்வதும், ரஷ்ய செயற்கைப் புலமை ஏற்பாடுகளால், அவை நொடியில் கண்டுணர்வதோடு விடயங்கள் முடிவதில்லை. இதற்குப் பதிலடியாக எதிர் நகர்வுகளை ரஷ்யாவின் செயற்கைப் புலமைகள் மேற்கொள்ளும் என்பதிலேயே உலகுக்கான நாசங்கள் உள்ளடங்குகின்றன. அதாவது இவை ஒரு சங்கிலி தொடரான சம்பவங்களை அரங்கேறப் போகின்றன. இதனாலேயே, புட்டின் கூறும் உடன்படிக்கையின் அவசியமும் தோற்றம் பெறுகின்றது. தொண்டு கிழடுகள் இன்று அடுத்தடுத்ததாய் அதிரடி முடிவுகளை எடுப்பதும், நிகழ்வுகள் ஒரு தலைப்பட்சமாக, உலகைக் கவ்வி சர்வதேசச் சட்டங்களை, சர்வதேசக் கடப்பாடுகளை இன்று புறந்தள்வதும் செயற்கைப் புலமையின் அரசியல் பிரவேசத்தை எமக்கு காட்டுவதாக உள்ளது.
ஓர் உடன்படிக்கை இல்லாத பட்சத்தில், இவற்றின் வெற்றி தோல்வி என்பது ஒரு போர்முனையிலேயே நிரூபணம் ஆக வேண்டிய சமாச்சாரம் ஆகின்றது. இரண்டாம் உலக போரின் நாசங்களைப் போலவே இச்சூழ்நிலையிலேயே, ஒருபுறம், புட்டின் – மோடி – இம்ரான் போன்ற தலைவர்கள் செயற்கைப் புலமையானது தத்தமது நாடுகளுக்கு அன்னியமாகாத ஒன்றே என மறைமுகமாகக் கூறுகையில், அணு ஒப்பந்ததைப்போல் ஓர் ஒப்பந்தம் தேவையாக இருக்கின்றது, என்பது மறுக்க முடியாததாகின்றது. மறு புறத்தில், துவாரகாவின் உரை போன்ற உரைகள் அரங்கேறுவதும் தவிர்க்க முடியாததாக உள்ளது.
இது போலவே, மிக அண்மையில், இவ்வருட முடிவில், ரஷ்யா, உக்ரைன் மீது தொடுத்த 150க்கும் மேற்பட்ட ஏவுகனைட்ரோன் தாக்குதல், இவ்வருடத்தின் அதிஉயர் நட்டத்தையும் செலவீனத்தையும் காட்டுவதாயுள்ளது (127 கோடி டால்ர் அதாவது, 1, 273,2020,000 டாலர்கள் என மதிப்பிடப்படுகிறது) இப் பின்னணியில் AIயை களமிறக்குவது தவிர்க்க முடியாத நிகழ்வாகின்றது. மொத்தத்தில், அதிரடி முடிவுகள் ஒரு பக்கமாயும், சங்கிலி தொடர் தாக்கங்கள் மறுபுறமாயும், அமையப் பெறும் காலகட்டத்தில் செயல்கள், AIயின் உதவியால் கைமீறிப் போவதும் எதிர்பார்க்கக் கூடிய ஒன்றே.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.