வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com
10
லாம்பு கொளுத்த இன்னும் நேரமிருந்தது. மேற்கு மூலையில் சூரியன் அழுந்திச் செல்ல, கிழக்கு மூலையிலிருந்து கிளம்பி மேலே பரந்துகொண்டிருந்தது இரவு. பகலைச் சந்திக்கும் புள்ளியை இரவு கடக்கும் கணம் அது. பார்த்துக்கொண்டே சங்கவியிருக்க இரவு புள்ளியைத் தாண்டிற்று ஒரு பாய்ச்சலாக. நிலா தோன்றியிருக்க வேண்டிய நேரம். ஆனால் அதன் சுவடுகூட தெரியாதபடி வானத்தை மேகம் மூடியிருந்தது. எந்த நாளுமில்லாத ஒரு இருண்ட திரைபோல் வானத்தில் அது தொங்கிக் கொண்டிருந்தது. மடியில் கார்த்திகாவை இருத்தி வைத்துக்கொண்டு சுவரில் சாய்ந்து ஒரு ஸ்தம்பிதத்தில்போல் மேற்குப் பார்த்தபடி இருந்தாள் சங்கவி.
மின்மினிகள் பறந்து இரவின் முழுமையைச் சொல்லிச் சென்றன.
மேலே இருளும், பூமியில் நிசப்தமும் நிரம்பி வழிந்தன.
எதிர் வீட்டுக்காரர் நல்ல சனங்கள். அவர்களும் போய்விட்டிருந்தனர். வீடு இருண்டு கிடந்தது. அம்மா, பாட்டி, அப்பா, தாமரையக்கா எல்லாரும் நல்லவர்கள். தாமரையக்காவின் தம்பி செழியனை ஆறு மாதங்களுக்கு முன் இயக்கம் வந்து தாய், தமக்கை, பாட்டி அத்தனை பேர் முன்னிலையிலும் வீட்டுக்கொருவர் என்ற கணக்கில் அவனைப் போருக்கு இழுத்துச் சென்றது. கையிலே துவக்கு இருக்கிறபோதும் எதிரியை அவன் சுடுவானாவென சந்தேகப்படும்படி அவனது முகம் அந்தளவு பிள்ளைமைத் தனத்தோடு இருந்திருந்தது. ஊரிலே நடப்பது தெரிந்திருந்த தாயும் தந்தையும் கல்யாணமொன்றைச் செய்துவைக்க அவனை நான்கு மாதங்களாகக் கெஞ்சினார்கள். வடிவான பெட்டை, பதினாறுதான் வயது, பொத்திப் பொத்தி வைத்து வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள் வீட்டிலே, அவளது ஒரு தமையனும், ஒரு தமக்கையும் இயக்கத்தில் இருப்பதால் போராளியாக வலுக்கட்டாயமாய் இயக்கத்தில் சேர்க்கிற பிரச்னையில்லாமல் இருக்கிறார்கள், அவளுக்கும் சம்மதமாயிருக்கிறதென என்ன அவர்கள் சொல்லவில்லை? தனக்கே பதினாறு வயதுதானாகிறது, ஓ.எல். எழுதியதும் ஏ.எல். படிக்கவேண்டும், கம்பஸ் போகவேண்டுமென்று விடாப்பிடியாக அவர்களது கெஞ்சல்களை செழியன் மறுதலித்திருந்தான். ஒவ்வொரு தெரிந்தவர் உறவினர் வீடாக கொஞ்சக் கொஞ்ச நாட்கள் ஒழித்தும் வைத்தார்கள். அவன் வீடு வந்திருந்த ஒருநாள் அதிகாலையில் வந்து அவனை இயக்கம் பிடித்துப் போய்விட்டது. அந்த வீட்டிலே மூன்று நாட்கள் விடாத அழுகையொலி கேட்டது. சோகம் மீறுகிற அளவில் அவனது தாய்க்கு ஒப்பாரியாகவே வந்தது. தாமரைதான், வில்லங்கமாய்க் கூட்டிப்போயிருந்தாலும், களத்தில் நிக்கப்போகிறவன்மேல் ஒப்பாரி வைக்கக்கூடாதென அவளை அடக்கிவைத்தாள். அப்போது அவள் கொஞ்சம் தெளிந்திருந்தாள். ஆனாலும் கண்ணீர் நிற்காதவளாகவே இருந்தாள். அதற்குள் சகலதையும் விட்டுவிட்டு அவர்கள் சொந்த மனை நீங்கிவிட்டார்கள்.
வெளிக்கிடுவதற்கு முன் தாமரையக்கா வந்து சங்கவியைக் கேட்டிருந்தாள். ‘சனமெல்லாம் ஓடிக்கொண்டிருக்கு, சங்கவி. நீயும் பாக்கிறாய்தான?’