எம்மவரை ஊக்குவிக்க வேண்டுமென்ற உந்துதல், எங்களின் கதை எப்படிச் சொல்லப்படுகின்றது என்பதை அறியும் ஆர்வம், நடிகர்கள் தெரிந்தவர்களாக இருத்தல், தெரிந்த இடங்களின் காட்சிப்படுத்தலைப் பார்ப்பதிலுள்ள பரபரப்பு - இப்படியான காரணங்களினால் இலங்கைத் தமிழர் பற்றிய அல்லது இலங்கைத் தமிழர் இயக்கும் படங்களை/நாடகங்களைப் பொதுவில் நான் தவறவிடுவதில்லை.
அவ்வகையிலேயே ரூபா என்ற இந்தத் திரைப்படத்தையும் ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்தேன். நடிகர்களின் நடிப்பு, உடல்மொழி, கமெரா யாவும் நன்றாக இருந்தன. உடல் ஆரோக்கியம் மிகவும் குன்றியிருப்பதால், குடி, புகை என்பவற்றை விட்டுவிடுவதும் ஒழுங்காக மருந்தெடுப்பதும் அவசியமென மருத்துவர் ஆலோசனை வழங்கும் ஒரு சூழலில் கதையின் நாயகனான அன்ரனி அறிமுகப்படுத்தப்படுகிறான். ஆனால், அந்த ஆலோசனையை அவன் சற்றும் பொருட்படுத்தவில்லை என்பதை அந்தக் காட்சியமைப்பும் தொடர் நிகழ்வுகளும் பார்வையாளர்களுக்கு நன்கு புலப்படுத்தின. மருத்துவர் என்ன சொன்னார் என விசாரிக்கும் மனைவியுடன் அந்த உரையாடலைப் பகிர்ந்துகொள்வதிலோ அல்லது குடி, புகை என்பவற்றை விட்டுவிடுவதிலோ, இரண்டு சிறிய பெண் பிள்ளைகளின் அப்பாவான அவனுக்கு எந்தவிதமான ஈடுபாடும் இருக்கவில்லை. அவ்வாறே குடும்பத்திலும் பெரிய ஈர்ப்பு எதையும் அவன் காட்டவில்லை. வசதியான, பெரிய வீட்டில் அவர்கள் வாழ்கிறார்கள், ஆனால் கடனால் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இப்படியான நிலையில் அவனின் barக்கு வரும் ரூபா என்ற ஓர் இளம் பெண்ணுடன் அவனுக்கு ஏற்படும் பழக்கம் காதலாகிறது. அதன்பின்பே அவள் ஒரு மாற்றுப்பாலினப் பெண் என்பது அவனுக்குத் தெரியவருகிறது (ஆனால் ரூபாவின் குரலும் தோற்றமும் அவள் ஒரு மாற்றுப்பாலினப் பெண் என்பதை அவள் படத்தில் அறிமுகம் ஆகும்போதே எங்களுக்குக் கூறிவிடுகிறது என்பது வேறுவிடயம்). முதலில் அந்த உண்மை அவளில் அவனுக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது. பின் அவனுக்கு அது ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அவனின் barக்குப் பொருள்கள் வாங்கவேண்டுமெனப் பொய்சொல்லி மனைவியின் கிரடிற் காட்டில் காசெடுத்து தாய்லாந்துக்குப் போய் அவள் செய்துகொள்ள விரும்பிய பால்மாற்றுச் சிகிச்சையை விரைவாகச் செய்யும்படி அவளுக்குப் பணம் வழங்கவும் அவன் முன்வருகிறான்.
மாற்றுப்பாலினருக்கு வீட்டில் பொதுவாக வரும் எதிர்ப்புப்போல ரூபா வீட்டிலும் நிகழ்ந்திருந்தது. அதனால் வீட்டைவிட்டு வெளியேறும் ரூபா வாழ்க்கையை ஓட்ட மிகவும் கஷ்டப்படுகிறாள். பாலியல் தொழில் செய்கிறாள், மாற்றுப்பாலினரில் வெறுப்பை உமிழ்பவர்களால் தாக்கப்படுகிறாள். இளம் பெண்ணுடன் அந்தனிக்கு ஏற்படும் இந்தக் காதலை ஊக்குவிக்கின்ற அவனின் சினேகிதன், அவள் ஒரு மாற்றுப்பாலினப் பெண் என அறிந்ததும், பெண் பிள்ளைகளைக் கொண்ட அவனுக்கு அந்த உறவு ஏற்றதில்லை, வேண்டுமானால் கியூபாவுக்குப் போய்வரலாம் என அவனுக்கு ஆலோசனை சொல்கிறான். அதாவது அவனின் பார்வையில் அந்தனி இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதில் ஒரு பிரச்சினையும் இருக்கவில்லை, ஆனால் அதுவொரு மாற்றுப்பாலினப் பெண்ணாக இருப்பதுதான் அவனுக்கு அசிங்கமாகத் தெரிகிறது. அதேபோல அந்தனிக்கும் ரூபாவுக்கும் இடையிலுள்ள உறவுபற்றி அறிந்த அவனின் மனைவி ஆம்பிளையோடை தொடர்பு வைத்திருக்கிறாயா, நீ gay ஆ எனக் கேட்டுக் கோபப்படுகிறாள். இப்படியாக மாற்றுப்பாலினப் பெண் ஒருவர் எதிர்நோக்கக்கூடிய தொல்லைகளையும், சமூகத்திலுள்ள வகைமாதிரிகளையும் இந்தத் திரைப்படம் வெளிக்கொண்டு வந்திருக்கின்றது.
இருப்பினும் அவை எல்லாவற்றையும் மேவி அந்தனியின் நேர்மையற்ற, பொறுப்பற்ற, சுயநலமே படத்தில் ஓங்கி நின்றதாக எனக்குத் தெரிந்தது. மாற்றுப்பாலினர் பற்றியதொரு விழிப்புணர்வுவைச் சமூகத்தில் கொண்டுவருவதுதான் படத்தின் நோக்கம் எனில் அந்த நோக்கம் துரதிஷ்டவசமாக நிறைவேறவில்லை என்பதே என் அபிப்பிராயமாகும்.
மனைவியிடம் இருக்கும் ஈர்ப்பு அகன்றுபோய் விட்ட ஒருவனுக்கு அவனது தேவைகளுக்கான வடிகாலாக ரூபா கிடைத்திருந்தாள், ஒருவரின் காதலை, அங்கீகாரத்தை எதிர்பார்த்து ஏங்கிய ரூபாவுக்கு அந்தனி கிடைத்திருந்தான் என்ற வகையில்தான் படம் நகர்ந்தது. அதாவது அவனின் மனைவி மட்டும் சிவனே என்று, இரண்டு பெண் குழந்தைகளுடனும் குடும்பச் சுமையுடனும் வாழவேண்டும். ஆனால் அவனின் தவிப்புக்கும், நிஜ உலகில் இருந்து தப்பித்தலுக்கும் வடிகால் ஒன்று தேவை எனக் கதை சென்றதாகவே ஒரு பார்வையாளராக நான் உணர்ந்தேன். ஆங்கிலப் படங்களுக்கு நிகராகப் படம் தயாரிக்கின்றோம் என்பதுபோல வளர்ந்தவர்கள் மட்டும் பார்க்கக்கூடிய காட்சிகள் தாராளமாகவும் தேவையற்றும் இதில் மலிந்துகிடந்தன. என் பார்வையில், அவற்றில் சிலவற்றை நேரடியாகக் காட்டவேண்டிய தேவை எதுவுமே இருந்திருக்கவில்லை.
மாரடைப்பினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவன் மயக்கத்திலிருந்து விழித்ததும், ரூபா வந்தவளோ என்றுதான் கேட்கிறான். அருகிலிருந்த பிள்ளைகளைப் பற்றி அக்கறைப்படவேயில்லை. முடிவில் அவன் இறந்துபோகிறான். பிள்ளைகளை இந்த உலகத்துக்குக் கொண்டுவந்திருக்கும் ஒரு தந்தைக்கு அந்தப் பிள்ளைகளைப் பற்றிய கரிசனையோ, பொறுப்போ கிடையாதா என்ற என் கோபம் என்னை அலைக்கழித்தது. (தன் உடல் நலத்தையும் நிதி நிலையையும் பாதுகாக்க/ பராமரிக்க முடியாத மனநலமற்ற ஒருவனாக அந்தப் பாத்திரம் காட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.)
இப்படியாக, லெனின் சிவம் இயக்கியிருக்கும், ஷோபா சக்தியின் கதையான ரூபா, மாற்றுப்பாலினர் ஒருவரின் கதை என்பதைவிட, பொறுப்பற்ற ஒரு குடும்பத்தலைவனின் கதையாகத்தான் எனக்குத் தெரிந்தது. அந்த அந்தனி பாத்திரம் பொறுப்புள்ளவனாக இருந்திருந்தாலாவது அவனது சலனம், எதிர்பாராத நேசம் என்பன சூழலின் பாதிப்பென விளங்கிக் கொஞ்சம் பரிதாபப்பட்டிருக்கலாம் எனத் தோன்றியது. கலை கலைக்காகவா அல்லது மக்களுக்காகவா என்பதில் வேறுபட்ட அபிப்பிராயங்கள் இருக்கலாம். கலை மூலம் மக்களுக்கு என்ன சொல்லப்படுகிறது என்பதே முக்கியமானதென நான் நினைக்கிறேன்.
அத்துடன் முடிவில் அந்தனிக்குப் பிடித்த நடனத்தை, அவன் கொடுத்த சலங்கையை அவனின் கல்லறையில் ரூபா விட்டுச்செல்வது அவர்களிடையே இருந்தது காமம் அல்ல காதல் என நிரூபிப்பதாக இருக்கலாம், அல்லது அவளின் வாழ்க்கையில் அவனுடனான அத்தியாயம் முடிந்து, புதியதொரு அத்தியாயம் ஆரம்பமாகிறது, அதற்கு அவள் தயாராகிறாள் எனப் பொருள்படலாம். இருப்பினும், நீண்ட காலம் குடும்ப வாழ்க்கை வாழ்ந்த பெண்ணையே துணைவனின் இறப்புக்குப் பின் அவளுக்குப் பிடித்த வாழ்க்கை வாழ்வதே அவளில் அவன் வைத்த அன்புக்கான கைமாறாக இருக்குமென்ற முற்போக்குச் சிந்தனையைச் சமூகத்தில் விளைவிப்பதற்குப் பலர் முயன்று கொண்டிருக்கும்போது, இது மீண்டுமொரு பத்தாம்பசலித்தனத்துக்கு வழிவகுக்கக்கூடாதே என்றொரு ஆதங்கம் எனக்கேற்பட்டது. மேலும், 2018 இல் வெளிவந்திருக்கும் இந்தப் படம் ரொறன்ரோவில் நிகழும் ஒரு கதையைக் காட்டுவதாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், OHIP இன் கீழ் இங்கு 2016 முதல் பால்மாற்றுச் சிகிச்சையை செய்யமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.