முன்னுரை

பண்டைத் தமிழரின் வாழ்க்கை நிலையை எடுத்தியம்பும் இலக்கியக் காலக் கண்ணாடியாகத் திகழும் இலக்கியப் பாடல்கள் ஒவ்வொன்றும் மனிதனது வாழ்வின் பல்வேறு நிலையை வெளிக்காட்டுவதாகவும், தனி மனிதன் தன்னுடைய வாழ்விற்குத் தேவையான இனிய, இன்னாத செயல்களை அழகுற எடுத்தியம்பும் உயிரோட்டத்துடன் கூடிய இலக்கியமாக அமைகின்றது. இத்தகைய தன்மை கொண்ட இலக்கியமானது மனிதனோடு ஒன்றிணைந்து இயங்கும் நிலையைக் காணலாம். அக்காலத்தில் வாழ்ந்த மன்னர்கள், புலவர்கள், மக்கள் எல்லோரும் தனக்கென வாழாது பிறர்க்காக வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றியும், தன்னைத் தேடி வந்த புலவர்கள், விருந்தினர்கள் ஆகியோரை உபசரிக்கின்ற முறையையும் இலக்கியங்கள் பறைசாற்றும் நிலையைக் காணலாம். சங்க இலக்கியம் தமிழர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது என்பது மிகையாகாது. அவற்றுள் உணவு முறைகளைப் பற்றிய கருத்தினைத் தொகுக்கும் களமாக அமைகிறது.

தமிழர்களின் வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த சிறப்பிற்குரியது தொல்காப்பியம். பெண்களுக்குரிய சிறந்த பண்புகளில் ஒன்றாக விருந்தோம்பல் அமைந்தமையை,

“விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோர்மாண்புகள்” (தொல்.1102)

தொல்காப்பியர்சுட்டுகிறார்.

விருந்து

‘விருந்து’ என்ற சொல் புதுமை என்ற பொருளைத் தருகிறது. ‘ஓம்பல்’ என்ற சொல் பாதுகாத்தல், சிறப்புச் செய்தல் முதலிய பொருள்களில் வழங்கப்படுகிறது. எனவே, விருந்தோம்பல் என்ற சொல் தம் இல்லம் தேடி வரும் புதியவர்களுக்கு உணவு அளித்துச் சிறப்பு செய்த நிலமையைக் குறிக்கும்.

“வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலன்”    (குறள்-85)

வீட்டுக்கு வந்த விருந்தினரை முதலில் உணவு உண்ணச் செய்து மீத உணவை உண்பவர்களது நிலத்தில் விதைக்காமலே பயிர்விளையும் என்பதை கூறிய வள்ளுரின் வாக்கு சிந்திப்பதற்குரியதாகும்.

விருந்து போற்றல்

தமிழர்கள் நாகரித்திலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்கினார்கள். இல்லறத்தின் மாண்பு விருந்தோம்பலாகும். நம்மை நாடி வரும் விருந்தினரை இன்முகத்தோடு வரவேற்று உண்டி முதலியவைகளை அளித்து மிக்க அன்போடும் ஆர்வத்தோடும் அவர்களை உபசரிப்பது வாழ்க்கையில் தலைச்சிறந்த பண்பாகக் கருதப்படுகிறது.

விருந்தின் மூலம் தலைவன் தலைவியரிடையே ஏற்படும் ஊடலும் தீர்வதைக் காணமுடிகிறது. சங்க காலத்தில் அரசராலும், சமுதாய மக்களாலும், விருந்தோம்பப் பட்டவர்கள் முன்பின் அறியாதவர்களாக இருந்தனர்.

‘மன்னன் புறந்தர வரசிருந்தோம்பி’ (கலி-8)

என்ற வரிகள் அரசன் தன்னை நாடி வருகின்ற விருந்தினரைப் போற்றிப் பாதுகாத்தான் என்பது தெரிகிறது.

சிலப்பதிகாரத்தில் கோவலன் நீ என்னைப் பிரிந்திருந்தமையின் விருந்தினரைப் பேணும் வாய்ப்பை இழப்பாய் எனக் கண்ணகியிடம் கூறுவதனை,

‘விருந்தெதர்கோடலின் மறப்பல் விருந்தொடுபுக்க
பெருந்தோட் கணவரோடு உடனுறைவு மரீஇஒழுக்
கொடுபுணாந்து வடமீன் கற்பின் மனைஉறை மகளிர் (சிலம்பு.224)

என்பதனை அறியலாம். தமிழர்பண்பாட்டு நெறி அவர்தம் வாழ்க்கை முழுவதும் உயர்ந்த நிலையினதாக இருந்து வந்துள்ளது. அரசன் முதல் குடிமக்கள் வரை தமிழர்மாண்பு உயர்ந்த நிலையினதாகவே காணப்படுகிறது. நல்லறம் ஓம்புதல் இல்லற வாழ்க்கையில் இருந்ததைக் காணமுடிகிறது.

மக்களின் உணவு, உடை பழக்கவழக்கம் திருமணம் இறை நம்பிக்கைகள் பொழுது போக்குகள் போன்ற நடைமுறை வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டே பண்பாடானது அமைகின்றது. சங்க காலச்சமூகம் உயர்ந்த பண்பாட்டினைக் கொண்டிருந்தமையை அறியலாகிறது.

விருந்தோம்பலின் சிறப்பு

இல்வாழ்க்கையில் இணைந்து வாழும் கணவன், மனைவியரின் தலையாயப் பண்பு விருந்தோம்பல் ஆகும். நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டிலே திருமகளானவள் அகமலர்ந்து அவர்கள் வீட்டிலே வாசம் செய்வாள். மேலும் தன்னைக் காணவரும் விருந்தினரை நாள்தோறும் விருந்தோம்பல் செய்து போற்றுகின்றவனுடைய வாழ்க்கை என்றும் துன்பத்தால் வருந்தி கெட்டுப் போவதில்லை என்பதை வள்ளுவன்,

“வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவருந்து பாழ்படுதல் இன்று”    (குறள்.83)

என்ற விருந்தோம்பல் சிறப்பைத் தம் நூலானத் திருக்குறளின் வாயிலாக எடுத்துக்காட்டியுள்ளார்.

உணவு

இன்றைய வாழ்க்கைச் சூழலில் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படையாக அமையக்கூடிய ஒன்று உணவு ஆகும். மனிதனுக்கு மட்டுமின்றி பறவைகள், விலங்குகள் ஆகியவற்றிற்கும் இன்றியமையாததாக உணவு இருந்ததையும், இருப்பதையும் உணரலாம்.

ஆதி மனிதன் காய், கனி, மாமிசம் என உணவை உட்கொண்டான். பின்பு நிலத்திற்கேற்ப உணவு முறையானது அமைந்த போக்கினை அறியமுடிகிறது.

குறிஞ்சி - மலைநெல், திணை
முல்லை - வரகு,சாமை
மருதம் -செந்நெல்
நெய்தல் - மீன்,முதலை, சுறா, உப்பு விற்றுப் பெற்ற பொருள்
பாலை - பிறரிடம் இருந்து கவர்ந்த பொருட்கள்

நற்றிணையில் விருந்து

விருந்தினர் இரவு நேரத்தில் வந்தாலும் அதைத் துன்பமாகக் கருதாது நிலை

“அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பின்
மெல்லியற் குறுமகள் உறைவின் ஊரே” (நற்.142)

இரவு நேரத்தில் வீட்டின் வாயிற்கதவை அடைக்கும் முன்பு தம் வீட்டிற்க்கு யாரேனும் உறவினர்கள் வருகின்றார்களா? எனப் பார்த்து, இருப்பின் அவர்களை அழைத்துச் சென்று உபசரித்த நிலையினை நற்றிணைப் பாடல் விளக்குகிறது.

ஐங்குறுநூற்றில் விருந்து

தலைவனுடன் உடன்போக்கு சென்றுவிட்ட தலைவியானவள் மீண்டும் கணவன் மனைவியுமாகத் தம் இல்லம் வந்து விருந்துண்ண வேண்டும் என விரும்பும் செவிலித்தாயின் மன உணர்வினை,


“மறுஇல் தூவிச் சிறுகருங் காக்கை!
அன்புடை மரபின் நின் கிளையோடு ஆரப்

பச்சூன் பெய்த பைந் நிண வல்சி
. . .அம்சில் ஓதியை வரக் கரைந் தீமே ” (ஐங் - 391)

என்ற பாடல் வாயிலாக அறியமுடிகிறது. தலைவியானவள் தன் இல்லத்தாரை விட்டு தன் தலைவனோடு சென்ற தலைவியின் திருமணக் கோலத்தைக் காணும் வாய்ப்புக் கிட்டவில்லை எனினும், தலைவன் தம் மகளை அழைத்துக் கொண்டு விருந்தினராக வர வேண்டும் என விரும்பும் செவிலியின் எண்ணம் நிறைவேறும் வகையாக காக்கையைத் தன் வீட்டிடத்தே கரைய எண்ணுகிறாள். காக்கை கரைந்தால் இல்லத்திற்கு விருந்தினர்வருவர் என்ற குறிப்பிற்க்கு இது சான்றாக அமைகிறது.

அகநானூற்றில் விருந்து

விருந்தோம்பல் என்பது தன் இல்லிற்குப் புதிதாக வரும் நபர்களை வரவேற்று அவர்களது பசி தீர உணவு கொடுப்பது என்பது தமிழர்களின் பண்பாடு என்பதை, பரதவ மகளானவள் நெல்லினது அரிசிச் சோற்றில் அயிரை மீனை இட்டும் புளிக்கறியையும், கருவாட்டையும் உணவாக அளித்தால் என்பதை,

“உப்ப நொடை நெல்லின் முரல் வெண்சோறு
அயிரை சூழ்ந்த அம்புளிச் சொரிந்து

கொடுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்” (அகம் - 60)

என்ற பாடல் வாயிலாக மீனுக்குப் புளியிட்டு சமைத்த வழக்கம் இருந்தமையை அறியமுடிகிறது.

“ஒலி கழை நெல்லின் அரிசியொடு லுராங்கு
ஆன் நிலைப்பள்ளி அளைப் பெய்து அட்ட
வாய் நிணம் உருக்கிய வா அல்வெண்சோறு
புகர்அரைத் தேக்கின் அகல் இலைமாந்தும்” (அகம் - 107)

என்ற பாடல் வாயிலாக மூங்கில் அரிசியுடன் தயிர் இட்டு, இறைச்சி கூட்டி சமைத்த வெண்சோற்றை தேக்கிலையில் வைத்து தம் இல்லம் தேடி வந்தவருக்கு உண்ணக் கொடுத்த நிலையானது அறியமுடிகிறது.

கலித்தொகையில் விருந்து

பொருளீட்டச் சென்ற தலைவன் திரும்பும் இளவேனிற் காலம் வந்தமை அறிந்து தலைவன் திரும்ப வருவதை எண்ணி மகிழ்ந்து இளவேனிற்கு விருந்து படைப்பதை,

“இன்னுயிர் செய்யும் மருந்தாகிப் பின்னிய
காதலர் - எயிறு ஏய்க்கும் தண் அருவி நறுமுல்லைப்
-----துயர்அறு கிளவியொடு! அயர்ந்தீகம் வீருந்தே!” (கலி.31.15-20)

என்ற வரிகள் உணர்த்துகிறது. தலைவன் திரும்ப வரும் தருணம் மகிழ்ச்சி என்பதும் அதைத் தெரிவிக்கும் பொருளாக இளவேனிற் அமைந்தது என்பதும் அதற்கு விருந்து படைத்தல் வாயிலாக இயற்கைக்கும் விருந்தளித்த குணமானது இங்கு புலப்படுகிறது.

புறநானூற்றில் விருந்து

பண்டைய தமிழர்கள் கிடைத்தற்கரிய அமுதம் கிடைத்தாலும் அதை தான் மட்டும் உண்ணாது அனைவரும் பகிர்ந்து உண்ட நிலையினையை

“உண்டாலம்ம இவ்வுலகம்
இந்திரர்அமிழ்தம் இயைவதாயினும்
இனிதெனத் தமியார் உண்டலும் இலரே” (புறம்.182)

என்ற புறநானூற்றுப் பாடல் வரிகளின் வாயிலாக அறியலாம்.

மேலும், அதியமான் என்ற மன்னன் இரவலர்கள் ஒருநாள் சென்றாலும் இருநாள் சென்றாலும் பலநாள் சென்றாலும் முதல் நாள் போலவே இன்முகத்துடன் வரவேற்று விருந்தோம்பினான் என்பதை,

“ஒருநாள் செல்லலாம் இருநாள் செல்லலாம்
பன்னாள் பயின்று பலரோடு செல்லிலும்
தலைநாள் போன்றே விரும்பினன் மாதோ!” (புறம்.101)

என்ற புறப்பாட்டு விளங்குகிறது. பண்பாடு உடைய மக்கள் வாழ்வதாலேயே இவ்வுலகம் நிலைபெற்றுள்ளது என்பதை உணரமுடிகிறது.

திருக்குறளில் விருந்து

ஒருவன் தான் பெற்ற உணவைப் பழிக்கு அஞ்சிப் பகுத்து உண்ணும் பழக்கத்தைக் கொண்டிருப்பானேயானால், அவனது வாழ்க்கையில் எப்போதும் எக்குறையும் வராது என்பதனை,

“பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்” (குறள்.44)

என்ற குறளிள் வள்ளுவர்பகுத்துண்ணும் பாங்கு முறையினை விளக்குகிறார்.

நாலடியார்    

எளியோரிடத்து இனிமையாகப் பேசுவதும் புதிதாக வந்த அயலோரை விருந்தோம்புவதும், இரப்போர்க்கு இடுவதும், இயன்றவரை பிறருக்கு உதவுவதும் தமிழரின் பண்பாட்டுக் கூறுகளுள் குறிப்பிடத்தக்கவையாகும். விருந்தினர் வீட்டுக்கு வந்தால் இல்லறத்தார் இருக்கையை விட்டு எழுந்து வரவேற்றனர் என்பதை,

“இருக்கையெழலும் எதிர்செலவும் ஏனை விடுப்ப ஒழிதலோடின்ன
குடிப்பிறந்தோர்குன்றா வொழுக்கமாகக் கொண்டார்” (நாலடி.143)

நாலடியார் பாடல் வரிகள் விளக்குகிறது.

முடிவுரை

பண்டைய மக்களுக்கு சங்க இலக்கியம் விருந்தாக அமைந்த போதிலும், சங்க இலக்கிய நூலில் விருந்து பற்றிய செய்திகள் வாயிலாக உணவு முறையினையும், விருந்து முறையினையும், விருந்தோம்பல் நிலையினையும் உணரமுடிகிறது. உணவு மக்களுக்கு இன்றியமையாததாகவும், விருந்தோம்பல் மனித பண்புகளுள் ஒன்றாக விளங்கியமையும் அறியமுடிகிறது. மனிதனுக்கு மட்டுமின்றி பறவைகள், விலங்குகள் ஆகியவற்றிற்கும் இன்றியமையாததாக உணவு இருந்ததையும், இருப்பதையும் உணரலாம். ஆதி மனிதன் காய், கனி, மாமிசம் என உணவை உட்கொண்டான். பின்பு நிலத்திற்கேற்ப உணவு முறையானது அமைந்த போக்கினை அறியமுடிகிறது. எல்லா நேரங்களிலும் விருந்தினர்வருகையை இன்முகத்தோடு ஏற்று அவர்களை உபசரித்த குணங்களைக் காணமுடிகிறது. விருந்தில் புளி சேர்த்து சமைத்த முறையும், தயிரைப் பயன் படுத்தியதையும், விருந்தில் இறைச்சி இடம் பெற்றிருந்தமையும், இலையில் பரிமாறியதையும் அறிய முடிகிறது. மன்னனாக இருந்தாலும், மக்களாக இருந்தாலும் தன்னை நாடி வருபவர்களுக்கு முதலில் விருந்தளித்து அவர்களின் பசியைப் போக்கியத் திறமானது புலப்படுகிறது. மனிதனுக்கு மட்டுமின்றி, விலங்ககளுக்கும், இயற்கைக்கும் விருந்தளித்த சங்க மக்களின் பெருந்தகமை போற்றுதற்குரியதாகும்.

துணை நின்றவை

1.அகநானூறு – ச.வே சுப்பிரமணியன்,மணிவாசகர் பதிப்பகம்.
2. ஐங்குறுநூறு – ச.வே சுப்பிரமணியன்,மணிவாசகர் பதிப்பகம்.
3. கலித்தொகை – ச.வே சுப்பிரமணியன்,மணிவாசகர் பதிப்பகம்.
4. சிலப்பதிகாரம் – வேங்கடசாமி,சிலப்பதிகாரம் மூலமும் உரையும்.
5. திருக்குறள் – அடிகளார் பதிப்பு,இளம்புரணார் உரை.
6. தொல்காப்பியம் – தொல்காப்பியர்,கழக வெளியீடு.
7. நற்றிணை – ச.வே சுப்பிரமணியன்,மணிவாசகர் பதிப்பகம்.
8. நாலடியார் - ச.வே சுப்பிரமணியன்,மணிவாசகர் பதிப்பகம்.


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R