யுகமாய் எழுந்த பெருங்கனவொன்றை...
நீல மிடற்றில் செம்பட்டி சூடி,
நிகரில் சூதில் நிணக்கூழ் நயக்கும்,
ஆண்பாற் பேய்மகள் ஊழி விழுங்கிற்று!
யுகமே யுகமே எங்கெரியுற்றாய்!
வானிடை எகிறிப் பாய்ந்தெழு கொடியே,
வருபகை மடித்த மார்பெழு புகழே,
ஏனிடருற்றாய்! எங்கெரியுற்றாய்!
மூதின் முல்லைப் பெருங்கடல் அன்னாய்!
முள்ளிவாய்க்காற் சிறுமணற் கும்பிகாள்!
முடிவைக் கரைத்த நந்திக்கடலே!
மனத்துள் மண்ணை மகிழ்விற் சுமந்து,
களப்பெருஞ் சுரவழி நடைநின்றொழுகி,
நன்றென நின்றவர் நாடு பாடினர்.
காதம் நான்கின் வழிகளுந் தொலைய
கந்தகக் களிறால் எறிந்து வீழ்த்திக்
காடே ஆற்றாக் காடு பாடினை.
நெல்மணிச் சோறு, நெய்யெரி விளக்கு,
நேர்த்திச் சேவல், நெடுகுலை வாழை
படைத்துப் பரவும் கடவுளர் பரவேன்.
ஊழி யுகத்தின் மக்களைக் காண…
வெளியிடை இரைந்த காற்றைத் தேடினேன்,
காற்றில் எழுந்த அழுகுரல் தேடினேன்,
கருகிய மரத்து நிழற்கால் தேடினேன்,
நெடுங்கடல் அலையின் துயரிசை தேடினேன்,
நிலமிசை வீழ்ந்தவர் பூந்துகள் தேடினேன்,
கரத்திடை மண்ணில் கால்தடம் தேடினேன்.
கண்ணீர் மாலைப் படையலை விரித்து,
நெஞ்சின் வழியாய் நிலமிசைப் பரவினேன்…
‘மண்’ என்ற சொல் முன்நின்றவர்,
காய்ந்த என் மனத்துள் ‘கல்நின்றார்’.
* குறிப்பு: ‘நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே’ - புறம் 335:12
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
* நன்றி: ஓவியம் (உயிர்ப்பு.காம்)