- தாயகம் (கனடா) பத்திரிகையில் மணிவாணன் என்னும் பெயரில்தான் ஆரம்பத்தில் எழுதத்தொடங்கினேன். 'கணங்களும், குணங்களும்' என்னும் பெயரில் வெளியான சிறு நாவலே அவ்விதம் எழுதிய முதற் படைப்பு. அதன் பின்னர் சிறுகதைகள் சில (ஒரு விடிவும், ஒரு முடிவும், பொற்கூண்டுக்கிளிகள், ஒட்டகங்கள், மழையில் சில மனிதர்கள், இன்னுமொரு கதை) மணிவாணன் என்னும் பெயரில் தாயகம் பத்திரிகையில் வெளிவந்தன. இங்குள்ள 'பொற்கூண்டுக்கிளிகள்' கனடாவில் வசிக்கும் முதியவர்களின் வாழ்வு பற்றியது. இதுவரையில் வெளியான எனது தொகுப்புகள் எவற்றிலும் வெளிவரவில்லை. இச்சிறுகதை தாயகம் பத்திரிகையாக தொடங்கிய காலகட்டத்தில் எண்பதுகளின் இறுதியில் வெளியானது. சில திருத்தங்களுடன் இங்கு மீண்டும் வெளியாகின்றது. -
மகன் ராம்குமார், மருமகள் தமயந்தி, மகள் வதனா எல்லோரும் வேலைக்குப் போய்விட்டார்கள். இனி அவர்கள் மாலையில்தான் வருவார்கள். ராஜதுரையார் அது மட்டும் அப்பார்ட்மெண்டில் தனியாகத்தான் இருக்க வேண்டும். இந்தச் சமயத்தில் செல்லம்மா மட்டும் இருப்பாளென்றால் அவருக்குத்தான் எவ்வளவு துணையாக இருக்கும். ம்... மகராசி நேரத்தோடு போய்ச் சேர்ந்து விட்டா..
'இந்தப்பாழாய்ப்போன சிங்கள, தமிழ் பிரச்சினை மட்டும் இல்லையென்றால் .. உவங்கள் ஆமிக்காரன்ற கரைச்சல் மட்டும் இல்லையென்றால் அவர் கனடாவுக்கு விசிட் பண்ணிவிட்டுப் போயிருப்பார். இந்தப் பிரச்சினைகளுக்குள்ளும் அங்கென்றால் கந்தையா வாத்தி இருக்கின்றார் அரட்டையடிப்பதற்கு.. இல்லாவிட்டால் அது இதென்று பொழுது போய்விடும்.
என்ன மாதிரி உற்சாகமாக, துடிப்புடன் திரிந்துகொண்டிருந்தார். அந்தத் துடிப்பு, கம்பீரம் , உற்சாகம் எல்லாமே வடிந்து விட்டன. புதிய சூழல் எவ்வளவு தூரம் அவரை மாற்றி விட்டது. அங்கு அவருக்குச் செய்வதற்கு நிறைய வேலைகள் இருந்தன. ஆனால் இங்கு....
இங்கு இவருக்கு என்ன குறை?
அன்பான பிள்ளைகள், பண்பான மருமகள், வேளை வேளைக்குச் சாப்பாடு, எல்லாமே இலகுவான வகையில் செய்யும்படியான வசதிகள்..வருத்தமென்றால் 'ஓகிப்' இருக்கிறது. .. டாக்டர் இருக்கிறார்... டி.வி.யைத்திருப்பினால் வகை வகையான நிகழ்ச்சிகள்.. அடிக்கடி உடனுக்குடன் ஊர்ப்புதினங்களை அறியத்தமிழ்ப் பத்திரிகைகள்.. தொலைபேசிச் செய்திகள்....
அவருக்கென்ன குறை? என்ன அவருக்குத் தேவையென்றாலும் ராம்குமார் 'கார்ட்'டைக் கொடுத்து வாங்கித் தருகின்றான்.
படித்த படிப்புக்கேற்ற வேலைதான் கிடைக்காவிட்டாலும் பிள்ளைகள் கடுமையாக உழைக்கின்றார்கள். மகனும் மருமகளும் ஏதோ ஒரு வங்கியிலை 'டேட்டா என்றி ஒப்பரேட்டர்'களாக வேலை செய்கையில்.. மகளும் ஏதோ ஒரு 'இன்சூரன்ஸ்' கம்பனியிலை ஃபைலிங் கிளார்க்காக வேலை செய்கிறாள்...
அண்மையில்கூட கந்தையா வாத்தி கடிதம் போட்டிருந்தார்.
'ராசதுரை நீ கொடுத்து வைத்தவனப்பா... உனக்கென்ன கனடாவிலை ராஜபோக வாழ்க்கை... இங்கை பார் எங்கட வாழ்க்கை பங்கர்களுக்குள்ளும் அகதி முகாம்களிலுமாக...'
பாவம் கந்தையா வாத்தி.. அவருக்குக் கட்டாயம் ஒரு நூறு டொலராவது மகளிட்டைச் சொல்லி அனுப்ப வேண்டும்..
டெலிபோன் மணியடிக்கவே சிந்தனையிலிருந்து நனவுலகுக்கு வந்தார் ராஜதுரையார். யாரோ மேரியாம்.. கனடா ட்ரஸ்ட் மாஸ்டர் கார்ட் சம்பந்தமாக ராஜ்குமாருக்குப் போன் பண்ணியிருந்தாள். மாதக் கட்டுப்பணத்தை ராம்குமார் கட்ட மறந்து விட்டானாம். வந்ததும் போன் பண்ணச் சொன்னாள். நம்பரும் தந்தாள்.
இங்கை இது ஒரு நல்ல வசதி. கடன் நிறைய எடுத்தாலும் பிரச்சினையில்லை... கட்ட வழியில்லாட்டியு அரேஞ்மென்ட் செய்யலாம். மாதாமாதம் கட்டித்தீர்க்கலாம்.
மீண்டும் சோபாவிலை வந்தமர்ந்தபடியே சிந்தனையிலாழ்ந்து போனார் ராஜதுரையார். சிறிது நேரத்தில் சிந்திப்பதும் அலுப்பாகப்போகவே டி.வி.கொன்வேர்ட்டரை எடுத்துத் தட்டினார். ஒன்றில் கார்டூன்.. ஒன்றில் நியூஸ்.. இன்னுமொன்றில் மியூசிக் என்று.. அதுவும் அவருக்குத் திருப்தியைத் தரவில்லை. டிவியை ஓஃப் பண்ணிவிட்டு அப்பார்ட்மெண்டில் பல்கணிக்கு வந்து வெளியில் தெரிந்த காட்சிகளைப் பார்த்தார். விதம் விதமான தொடர்மாடிக் கட்டடங்கள்... வகை வகையான கார்கள்... பல்வேறு விதமான நிறங்களில் மனிதர்கள்... வெயில் எறித்துக்கொண்டுதானிருந்தது... அதே சமயம் உடம்பைத்துளைத்துக்கொண்டு குளிரும் பரவிக்கிடந்தது.. பல்கணியின் ஒரு மூலையில் கிடந்த பெட்டியில் கூடு கட்டியிருக்கும் புறாக்களைச் சிறிது நேரம் பார்த்தார்...
இதுவும் சிறிது நேரத்தில் சலித்துப் போகவே ராஜதுரையார் மீண்டும் உள்ளே வந்து சோபாவில் சாய்ந்தார். இப்படியான சமயங்களில் மன நிம்மதிக்காகப் படிக்கும் பகவத் கீதையை எடுத்துப் புரட்டினார். பாரதியார் தமிழாக்கம் செய்த பகவத் கீதை. ஐம்பத்தேழில் வெளிவந்த புத்தகத்தை அவர் கவனமாக வைத்திருந்தார்.
'தன்னைத்தான் உயர்த்திக் கொள்க.
தன்னைத்தான் இழிவுறுத்த வேண்டாம்.
தனக்குத்தானே நண்பன்.
தனக்குத் தானே பகைவன்.'
மனதுக்குச் சிறிது அமைதியாகவிருந்தது. ஆனால் அதுவும் சிறிது நேரத்தில் அலுத்துப் போய்விட்டது. கொட்டாவி வரவே கூடவே சோர்வும் களைப்பும் பரவின. சிறிது நேரம் அப்படியே சோபாவில் சாய்ந்து கண்களை மூடினார். விழ்த்தபோது மணி நண்பகலைத் தாண்டி விட்டது. கடிதங்கள் சில வந்திருந்தன. சில ராம்குமாருக்கு.. சில மருமகளுக்கு... கனடாவில் கடிதங்களுக்கு மட்டும் பஞ்சமில்லை... எங்கையிருந்துதான் அட்ரஸ் எடுக்கிறார்களோ.. கடிதம் கடிதமாகப் போட்டுத்தள்ளி விடுகின்றார்கள்...
மீண்டும் ஊர் நினைவு வந்தது.. சோளகக் காற்றில் தலை விரித்தாடும் பனைகள்... முற்றத்தில் கூடிக் கரையும் காக்கைகள்.. முருங்கையில் பாயும் அணிற் பிள்ளைகள்...
சண்டையில்லாமல் சமாதானமாக வாழ்வதற்கு எத்தனையோ வழிகள் இருக்கையில் எதுக்குத்தான் சண்டை பிடிக்கிறார்களோ...
சொன்னாப்போலை இன்றைக்கு ஜெகோவாவின் சாட்சிக்காரன் ஜோன் வாறதென்று சொன்னவன். வந்தால் அது வேறு தலையிடி... ஒரு மணித்தியாலத்துக்கு என்றாலும் தனிமையை விட அது கொஞ்சம் பரவாயில்லைதான்...
கோப்பி ஒன்று போட்டுக் குடித்தால் நல்லதுபோல் பட்டது. போட்டுக் குடித்தார். மீண்டும் சோபாவில் சாயந்தார். அமைதியைக் கிழித்துக்கொண்டு ஃபயர் அலார்ம் அடித்து ஓய்ந்தது. வந்த புதிதில் ராஜதுரையார் ஃபயர் அலார்ம் கேட்டதுமே நடுங்கிச் செத்து விடுவார்... ஆனால் இப்போது பழகிப் போய்விட்டது. என்றாலும் ஓநாய் வருகுது ஓநாய் வருகுது என்ற கதையாக ஃபயர் ஒரு நாளைக்கு உண்மையிலேயே வந்து விடுமோ என்ற பயமும் சிறிது இருக்கத்தான் செய்தது.
ஊரில் என்றால் அவர் யாரிடமு கையேந்தி நிற்கத்தேவையில்லை... வருகிற பென்சனே காணும்.. எல்லோரும் அவரைத்தான் எதிர்பார்த்து நின்றார்கள்... ஆனால் இங்கே.. ஒவ்வொன்றுக்கும் மகனை, மருமகளை, மகளை எதிர்ப்பார்க்க வேண்டியிருந்தது.. அபார்ட்மென்டை விட்டு இறங்கவே அவருக்குப் பயமாக இருந்தது. அறுபத்தைந்து இன்னமும் ஆகவில்லை. அதற்குள் ராஜதுரையார் நன்கு ஆடித்தான் போய்விட்டார்.
யாரோ கதவைத்தட்டினார்கள். திறந்தால் ஜெகோவாக்காரன் ஜோனும் கூடவே ஒரு வெள்ளைக்காரியும்.. அவர்களுடன் ஒரு மணித்தியாலம் கழிந்தது. அவர்கள் போகும்போது மணி நான்கை நெருங்கிக்கொண்டிருந்தது.
மீண்டும் ஒருவிதமான தளர்ச்சி... ஆயாசம் பரவியது... இன்னும் ஒரு மணி நேரத்தில் மருமகளும் , மகளும் வந்து விடுவார்கள்... ராம்குமார் வழக்கமாக ஆறுமணிக்குப் பிறகுதான் வருவான். சில நேரங்களில் அவர்களுடன் தமிழ் குரோசரி ஸ்டோரிற்குப் போகும் சந்தர்ப்பம் வரலாம்.. அது அவரது குறிப்பிடும்படியான அவுட்டிங்குகளிலொன்று...
கனடாவில் என்னதான் இல்லை? எல்லாமிருந்தன. எல்லாம் இல்லாமலுமிருந்தன. இவ்விதம் தனக்குத்தானே முணுமுணுத்துக்கொண்ட ராஜதுரையார் மீண்டும் சலித்தபடி வந்து சோபாவில் சாய்ந்துகொண்டார்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
******************