சாதியத்தின் இயல்பாக்கமும் டொமினிக் ஜீவாவின் ‘அச்சமும்’ - ராகவன், லண்டன் -
பதிவுகள் இணைய இதழ் மற்றும் முகநூலில் தொடரும் எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய விவாதங்களில் ,தன் கருத்துகளை இங்கு பகிர்ந்துகொள்கின்றார் இலண்டனில் வசிக்கும் சமூக, அரசியற் செயற்பாட்டாளரான ராகவன்.
சாதியச் சிந்தனையும் நடைமுறையும் மொழி , பண்பாட்டு வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளது. அது அனைத்து தளங்களிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழிற்படுகிறது. இந்தத் தொழிற்பாட்டின் பின்னணியில் சாதிய அதிகாரக் கட்டமைப்பு இயங்குகிறது. சாதிய அமைப்புக் கொண்ட சமூகங்களில் சாதிய சிந்தனை எவ்வாறு தொழிற்படுகிறது? அது எவ்வாறு இயல்பாக்கம் அடைந்திருக்கிறது? என்பதை அவதானிப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கு.
"சாதியம் என்பது வெறும் பாகுபாடு காட்டுதல் அல்ல. பாகுபாடு என்பது சாதியத்தைச் சட்டரீதியாக அணுகும் பக்கம் மட்டுமே. பாகுபாடு காட்டுதல், தீண்டாமை, மனிதவுரிமை மீறல்கள் போன்றவைக்கு அப்பால், மேலோட்டமாகப் பார்க்கையில் இயல்பாக்கம் அடைந்த சாதிய நடைமுறைகள் ஆபத்தற்றவை என்ற தோற்றப்பாட்டை அளிக்கின்றன" என்கிறார் பாலமுரளி நடராஜன் என்ற ஆய்வாளர்.
பண்பாட்டுத் தளத்தில் பார்க்கும் போது, மத ஆசாரங்கள் தொடங்கி கல்வி, இசை , நாடகம், வழிபாடு, சடங்குகள், அரசியல் , மொழி போன்ற பல்வேறு தளங்களிலும் தினசரி வாழ்க்கை நடைமுறைகளிலும் சாதியம் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழிற்படுகிறது. சாதியம் என்பது வாழ்முறையின் பிரிக்க முடியாத அங்கமாகி அரூபமாகத் தொழிற்படும் ஒரு நச்சுக்கிருமி. அத்துடன் ஆதிக்கசாதியைச் சேர்ந்தவரின் சாதி அந்தஸ்து ( caste privilege) என்பதும் முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது. தீண்டாமை, அக மணம், சாதிய வன்முறை போன்ற நேரடியான அடக்குமுறைகள் இலகுவாக அடையாளப்படுத்தக்கூடியவை. எனவே இயல்பாக்கம் பற்றியே இந்த கட்டுரை பேசுகிறது.