வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com
அத்தியாயம் ஏழு!
கண்டி-கொழும்பு பெருவீதியில் பயணித்திருக்கக் கூடியவர்களுக்கு, கேகாலை தென்பட்டிருக்க முடியுமாயினும், நகரத்திலிருந்து உள்ளே சுமார் பதினைந்து கிமீ தொலைவிலிருந்த அரநாயக்க கிராமம் அந்தச் சாத்தியமும் அற்றிருந்தது. அதுவே ஒரு சிற்றரசாயிருந்த சரித்திரத்தைக் கொண்டிருந்தது. மண்படையும், அதன் மேல் கல் படையும், அதற்கு மேலே இன்னொரு மண்படையுமாய் அந்த மேட்டுப் பூமியின் நிலவியல் அமைந்திருந்ததில், சமாந்தரத்தில் அமைந்திருக்காத வீடுகளைக் கொண்டிருந்தது அது. அது ஒரு கூம்பு வடிவ அடுக்கு வீட்டுத் திட்ட குடியிருப்புப்போல தூரத்திய பார்வைக்குத் தென்பட்டது. நடுப்பகுதியிலிருந்த ஒரு வீட்டிலிருந்து பார்த்தால் பின்னாலிருந்த வீடுகள் மேலேயாய்த் தெரிய, முன்புறத்திலுள்ள வீடுகள் பள்ளத்தில் கிடப்பனவாய்த் தோன்றின. அவற்றின் கூரைகளும், முற்றத்தில் நடமாடும் மனிதர்களின் உருவங்களும்கூட துல்லியமாக காட்சிப்பட்டன. மேலேயுள்ள வீடுகளுக்குச் செல்ல அதற்கென அமைந்த வட்டப் பாதையிருந்தது. அப்பாதையில் அரை மணி நேரத்தில் செல்லும் ஒரு தூரத்தை, குறுக்கு வழியில் பத்தே நிமிஷங்களில் அடைந்துவிட முடியும். மழை பெய்யாத காலங்களில்தான் அது சாத்தியமாயிருந்தது. எங்கேயிருந்து வருகிறதெனத் தெரியாதபடி மழைகாலம் சகல இடங்களிலும் சிற்றாறுகளைத் தோற்றுவித்து, சேற்றுக் குட்டைகளை உண்டாக்கி குறுக்குப் பாதைகளை அழித்துவிடும். அப்போது அவை செந்நிற ஓடைகளாய் ஓடிக்கொண்டிருக்கும். அரநாயக்கவிலிருந்து அசுபினி நீர்வீழ்ச்சியைக் காணமுடியும். அது அரநாயக்க விரித்த காட்சிப் புலத்தின் இன்னொரு அழகு.
அருவிகளும், சிற்றோடைகளுமாய் அப்பிரதேசம் வளப்பமாக இருந்தது. வீதிகளின் ஓரமெங்கும் மரங்களின் சாமரை வீச்சு. நிலம் படர்ந்து கொழுத்த புல்லினம். நீர்க் குழிகளில் மதர்த்து வளர்ந்து மேலெழத் துடித்துநிற்கும் நீர்த் தாவரங்கள். கல்வேலிகளுள் குட்டி வேலிகளாய் பூஞ்செடிகள். மல்லிகை, நந்தியாவெட்டை, தேமா, சூரியகாந்தி என அச்செடிகளில் வாசம் தெறிக்கும் பூக்களின் சிரிப்பு. இடையிடை உயர்ந்து வளர்ந்த ரப்பர் மரக் காடுகள். இன்னும் தொட்டம் தொட்டமாய் பாகினி, கித்துல், புருத்தை ஆதிய மரங்களின் செறிவு. நீரும் நிலமும் செழிப்பின் ஆழத்தையும், காற்றும் வானும் பூக்களின் வாசத்தையும் அங்கே சுமந்திருந்தன.
அந்த அழகுகளின் பின்னாலேதான் அதன் அழுகுரல் இருந்தது.
துயரங்களில் வெடித்துதிர்ந்த கண்ணீரோடு முனங்கிக் கிடந்தபோது, அதை மனித குலத்தின் இயல்பெனவே நினைத்து அது அடங்கியிருந்தது. ஏனெனில் குழந்தை பிறந்ததும் அது கேட்ட முதல் குரல் அழுகையாகவே இருந்தது. பெரும்பாலும் அது எப்போதும் அழுதுகொண்டு இருந்ததையும்தான் தாய்மார் கண்டிருந்தனர். அதனால் வறுமையையும், துன்பத்தையும் மனித குலத்தின் இயல்பென அது கருதியிருந்தது. துன்பங்களும், துயரங்களும் அதை எப்போதும் சிரிக்க விடவில்லை. சிரிக்கும் மனிதர்களை அது கண்டிருந்தது. ஆனால் அது குறித்து எந்தவொரு வினாவையும் அது எழுப்பியதில்லை. அவர்கள் புத்தபகவானின் கருணை பெற்றவர்களென அது நம்பியது.
அதனால் தானும் அனுக்கிரகம் பெறவேண்டி அது கோயில்களும் விகாரைகளும் தாதுகோபுரங்களும் சென்றது. பிணியும் மனவீறலும் பிசாசுகளினாலேற்படுபவையென நம்பி அவற்றைக் கழிக்க மாந்திரீகங்களை நம்பிற்று. பகையாளிகளை அழிக்க பில்லி சூன்யமும் செய்துகொண்டது. ஆனால் வறுமை அங்கே நிலையாக இருந்தவகையில் பிசாசுகளும் அகலாதேயிருந்தன. திடீரென அந்தக் கிராமத்தில் ஒரு புதிய சிந்தனையலை அறுபதுகளின் இறுதியிலிருந்து அடிக்கவாரம்பித்தது. அது கிழக்கு ஐரோப்பாவிலும், லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் அடித்த அதே அலையாக இருந்தது. அதை தனியொரு மனிதர் செய்திருந்தார். ஐந்து உறுப்பினர்களைக்கொண்ட அவ்வியக்கத்தின் செயற்குழுவில் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்த அவரின் அபரிமிதமான ஆளுமையில் இயக்கம் பெருவளர்ச்சி கண்டது. யுவர்களும், யுவதிகளும் அவர் காட்டிய திசையில் கூடி அவரது கருத்துரை கேட்டார்கள். மலையசைந்ததுபோல் இறுகிய மனங்களும் மெல்ல அசையத் துவங்கின. தென்னிலங்கை, மலையகமென நாடளாவி எழுந்த எழுச்சியலையின் கீறுதான் அங்கே விழுந்திருந்ததும். ஆனாலும் தன் ரகசியத்தை எவ்வகையிலும் வெளியிட மறுத்த அதன் மலையும் காடும் சார்ந்த நிலவமைப்பு ஒரு கேந்திர முக்கியத்துவத்தை அதற்கு அளித்திருந்தது.
அரநாயக்க கிராமத்துக்கு வழக்கமாக வந்து போய்க்கொண்டிருந்த புத்த குருமாரின் வரத்து, இளைய தலைமுறையின் மத ஈடுபாடின்மையில் மெதுமெதுவாகக் குறைந்தது. ஆனால் யுவர்கள் யுவதிகளுடன் கூடிப்பேசும் வேறு பேர் வரத்தொடங்கினார்கள். அவர்களும் சீவரத்துக்குள் இருந்த சங்கப் பிக்குகளாகவே இருந்தனர். அவர்களின் உரையாடல் அதுவரை வந்து போய்க்கொண்டிருந்த பிக்குகளினதுபோலன்றி வித்தியாசமாக இருந்தது. தர்க்க, நியாயங்களின் அடிப்படையில் அவர்களது வாதமிருந்தது. முதலில் வந்தவர்கள் அரநாயக்கவின் வறுமையின் காரணத்தை, ‘குடும்பத்தின் வறுமை, கிராமத்தின் வறுமையது காரணம். கிராமத்தின் வறுமை, நாடு வறுமையாயிருப்பதின் காரணமாகும். நாடு வறுமையாயிருப்பதற்கு கொழும்பு செட்டித்தெருவிலும், நாலாம் குறுக்குத் தெருவிலும் பெருவணிகம் செய்யும் இந்திய வர்த்தகர்கள் ஒரு காரணம். யாழ்ப்பாணத்திலிருந்து வந்து பெரும்பெரும் அரசாங்க உத்தியோகங்களைக் கையகப்படுத்தி நிறைந்த ஊதியம் பெறும் யாழ்ப்பாணிகள் இன்னொன்று’ என விளக்கினார்கள்.
காலகாலமாகச் சொல்லப்பட்டுக்கொண்டு வந்த இதே காரணத்தை புதிய சிந்தனையாளர்கள் சொல்லவில்லையென்பதை கிராமங்களின் முதுசுகள் அவதானித்தாலும், அத் திட்டத்தில் அவர்களுக்கு நம்பிக்கை குறைவாகவேயிருந்தது. ஆனால் யுவர்களும் யுவதிகளும் இயக்கமுரைத்த புதிய சிந்தனைகளில் பெரிய நம்பிக்கையும், ஆதர்ஷமும் கொண்டிருந்தார்கள்.
இரகசியமான அரசியல் வகுப்புகளும், சிறுசிறு குழுக்களின் அமைப்பும், அவற்றிலிருந்து போராளிகளின் சேர்ப்பும் ஒருபுறமாய் நடந்தன. மறுபுறத்தில் ஆயுதப் பயிற்சியும், வெடிகுண்டுத் தயாரிப்புகளும் மும்முரத்தில் முடுக்கிவிடப்பட்டன.
புரட்சிக்கு 1971 ஏப்ரல் 4 என நாள் குறிக்கப்பட்டிருந்தது. ஆனால் எல்லா ஆயத்தங்களும் முடிக்கப்பெற்றிருந்த நிலையில், நெலுந்தெனிய என்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக வெடித்த ஒரு கைக்குண்டினால் சகல திட்டங்களும் தலைகீழாயின. சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸ் வெடிக்காத 58 குண்டுகளை கண்டுபிடித்தது. ஜனதா விமுக்தி பெரமுன தலைவர் ரோஹண விஜேவீர கைதுசெய்யப்பட்டு, சிறையுடைப்பின் சாத்தியங்களை தவிர்க்க. யாழ் கோட்டையில் காவல் வைக்கப்பட்டார். பல முக்கியஸ்தர்களும் சிறைப்பிடிக்கப்பட்டனர். அதனால் 1971 ஏப்ரல் 4ஆம் திகதி இரவு பதினொரு மணியளவில் முடுக்கிவிடப்பட்ட புரட்சி அவதியில் பிறந்ததாயிருந்தது. ஆயினும் வடக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களின் பொலிஸ் நிலையங்கள் பெரும்பாலும் தாக்கப்பட்டன. சில கைப்பற்றப்பட்டன. பல அழிக்கப்பட்டன.
இலங்கை அரசு ஸ்தம்பிதம் அடைந்தது.
பாகிஸ்தானிய, இந்திய படைகளின் நேரடித் தலையீடும், அரச படைகளின் வெறித்தனமான தாக்குதலும் அந்தப் புரட்சியை தோல்வியுற வைத்தன. பலர் காணாமல் போயினர். ஆயிரக்கணக்கான சிங்கள யுவர்களும் யுவதிகளும் படுகொலை செய்யப்பட்டார்கள். பதினையாயிரம் பேர் அவ்வாறு கொலைசெய்யப்பட்டதாக ஒரு கணிப்பீடு சொல்லிற்று. இருபதாயிரம் ஆண்களும் பெண்களும் கைதுசெய்யப்பட்டு மாதக்கணக்கில் சிறைவைக்கப்பட்டார்கள். தென்னிலங்கை பெரும் அழிச்சாட்டியத்தை சந்தித்தது. அரநாயக்க கிராமமும் தன்மீதிருந்த வறுமையின் சுமையோடு இழப்புகளின் வலியையும் சுமக்கவேண்டியதாயிற்று. எண்பதுகள் பிறந்தபோது நாட்டு அரசியலில் வெவ்வேறு காட்சிகள் தரிசனமாகின. அவை அரநாயக்கவிலும்.
குசுமவதி பிறந்த ஊர் அதுதான். அவளது வீடு ஒற்றை அறையும் அருகே ஒரு கூடமும், முன்னால் ஒரு திண்ணையும்கொண்ட சிறிய வீடு. கூடத்திலிருந்த ஒரு வாசல் குசினியைத் தொடுத்திருந்தது. இரண்டு பரப்பு அளவுகொண்ட அந்த நிலத்திற்கு எல்லை குறிக்க வேலியோ, எல்லைக் கல்லோ இருந்திருக்கவில்லை. முற்றத்துக்கு முன்னால் ஒரு குச்சு வேலி மட்டும். அது மலைக் கற்களினால் இடுப்பளவு உயர்த்துக்கு அடுக்கப்பட்டிருந்தது. பக்கங்களில் எங்கும் புதர் சூழ்ந்திருந்தது.
அரநாயக்கவைவிட்டு பெரும்பாலும் குசுமவதியின் காலடிகள் வேற்று மண் மிதித்ததில்லை. வீட்டினருகே வழிந்தோடிய நீரோடையும், இச்சைப்படி வளர்ந்த பலவர்ணக் காவும் அவள் மனம் பறக்க போதுமான வெளியாக இருந்தன. அவ்வாறு சிட்டுக் குருவிபோல் பறந்து திரிந்தவள்தான் அந்தக் குடும்பத்தைப்பற்றி முதன்முதலாக ஒருநாள் யோசித்தாள். அது வறுமை வந்த வழியை நினைப்பதற்கு ஏறக்குறைய சமமாயிருந்தது.
வீட்டில் சவண்டைக் காலில் தாண்டித் தாண்டி நடக்கும் அப்பச்சி இருந்தார். 1954ஆம் ஆண்டு இலங்கை அடங்கிலும் பெய்த பெருமழையில் வளவை கங்கை பெருக்கெடுத்து கேகாலையில் பெரிய மண்சரிவு ஏற்பட்டது. பலபேர் மண்மூடி மடிந்தார்கள். அரநாயக்கவில் இருந்த அவரது அம்மா, அப்பச்சி, இரண்டு சகோதர்களென குடும்பம் மொத்தமுமே அப் பெருமழையின் மண்சரிவில் இறந்துபோனது. அவரும் தலையில் காயம்பட்டிருந்து ஒருவாறு தப்பிப்பிழைத்தார். அந்தத் தாக்கம் அவர் வாழ்நாள் முழுக்க தொடர்ந்திருந்தது.
ஓ.எல். எழுதியதில் முதலாமவள் இரண்டு பாடங்களும், அதற்கடுத்த ஆண்டில் இரண்டாமவள் நான்கு பாடங்களும் சித்தியடைந்த இரண்டு அக்காக்கள் அவளுக்கு இருந்தனர். அவளுக்கும் இளையதாக ஊதாரியான ஒரு மல்லி. அவன் கேகாலையில் வேலைசெய்ய விருப்பமில்லையென்று கொழும்பு வேலையொன்றுக்காக தெரிந்தவர்களுக்குப் பின்னால் ;அலைந்துகொண்டிருந்தான். கித்துல் கள்ளில் ஆரம்பித்தவன் அப்போது அரக்கில் வந்து நின்றிருந்தான். பெண் சிநேகிதங்கள் தேடி அவன் எங்கேதான் அலையவில்லை? அதற்கும் கேகாலை வாய்ப்பான இடமாகவே இருந்தது. அவனுக்குக் கீழே கெட்டித்தனமாகப் படிக்கக்கூடிய நங்கி சுராங்கனி இருந்தாள். இவர்களையெல்லாம் அரசாங்கத்தின் உணவுப் பங்கீட்டு முத்திரையின் மூலமே வளர்த்தெடுத்தாள் அம்மா. அது உழைப்பவர் ஒருவர்கூட இல்லாத ஏழு பேர்கொண்ட பெருங்குடும்பம்.
கடைசியாகப் பிறந்த சுராங்கனி அப்படியொரு சிவப்பு நிறக் குழந்தையாக இருந்தாள். மாந்தளிர் அளவுக்கே யாரும் நிறமற்றிருந்த குடும்பத்தில், அப்படி ஒரு சிவப்பு அம்மா, சகோதரங்களுக்குள் வெகுத்த சந்தோஷத்தைப் பரவவிட்டது. ஆனால் வேலையேதுமற்று எப்போதும் திண்ணையில் ஊன்றுகோலைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு எல்லாரையும் றெக்கிளாஸ் பண்ணிக்கொண்டிருந்த அப்பச்சி மட்டும், ஹாரி என்கிற தேயிலைத் தோட்ட முதலாளி அடிக்கடி வந்து போகும் அடிவாரத்துக் பங்களாவைப் பார்த்து முகம் கறுத்திருந்தார். அம்மா அனுலவுக்கும் அவருக்கும் அங்கிருந்துதான் வார்த்தைகள் அடங்கிய புள்ளி துவங்கியது. வீட்டிலே பிள்ளைகளுக்கு மட்டுமில்லை, அண்டை அயல் பெரியவர்களுக்குமோ உறவினர்களுக்குமோ நிலைமை தெரிந்ததேதவிர, காரணம் புரிந்திருக்கவில்லை. இரண்டு பேர்மட்டும் அறிந்த அந்த இரகசியம், பத்து வருஷங்களாக தம் இடத்தை இம்மியும் விட்டு நகரவில்லை. அனுல வேலைக்கு மட்டுமல்ல, வெளியேகூட செல்லாமல் சமையலோடு அடங்கி இருந்துகொண்டிருந்தாள். இனி குழந்தை பிறக்க வாய்ப்பில்லையென ஹெட்டியாராய்ச்சி திருப்திப்படுவாரென நிம்மதி கண்டாள் அவள்.
அந்தளவில் குடும்பத்தின் வறுமை மேலும் இறுக்கம் கண்டது.
1971 ஏப்ரல் 4இன் புரட்சிக் காலத்தில் திடீரெனக் காணமல்போன பந்துல குருகே ஏறக்குறைய பதினேழு ஆண்டுகள் கழிந்திருந்த ஒருநாள் மறுபடி கேகாலையில் காணப்பட்டான். அவன் ரோஹணவின் நண்பனென்றும், ஜனதா விமுக்தி பெரமுனவின் சிறந்த பிரச்சாரகனென்றும் ஹெட்டியாராச்சி அடையாளம் கண்டார். தொடர்ந்து அவனது வருகை சிறிதுசிறிதாக அரநாயக்கவிலும் அதிகரித்தது. இளைஞர்கள் சதா அவனைச் சுற்றியபடி திரிந்துகொண்டிருந்தார்கள். அவன் அத்தனை காலம் எங்கிருந்தான், என்ன செய்தானென்ற கேள்வியெதுவும் யாருக்கும் தோன்றியிருக்கவில்லை. ஏனெனில் அவனைத் தெரிந்தவர்களாய் அப்போது பலர் அங்கே இல்லாதிருந்தார்கள்.
பின்தங்கிய இடங்களிலும், தொழிலாள விவசாய குடும்பங்களின் படித்த வாலிபர்களிடத்திலும் சென்று பேசினான் பந்துல. அவனது செய்தி திசையெங்கும் பரவியது. மேய்ப்பர் வருவாரென அவன் ஒவ்வொரு தடவையிலும் ஆணித்தரமாய்ச் சொல்லிக்கொண்டிருந்தான்.
குடும்பத்தின் நிவாரணத்துக்கு எதையாவது செய்தாகவேண்டும் என்றிருந்த குசுமவதி அயலிலுள்ள ஒரு ரப்பர், தென்னந் தோட்டத்தில் வேலைசெய்ய ஆரம்பித்தாள். அது பெரும்பாலும் வீட்டுத் தொழில்போல. எடுக்கிற ரப்பர் பால் அளவுக்கான கூலியை தோட்டக்காரர்களே நேரடியாகக் கொடுத்தார்கள். தென்னந்தோட்டத்தில் செய்யும் கூலிக்கு நாட்கணக்கான ஒரு சம்பளம் வரையறுக்கப்பட்டிருந்தது. அங்கே வேலைசெய்ய ஆரம்பித்த காலத்தில்தான் பந்துலவின் பிரச்சாரத்தைப்பற்றியும், அவன் நடத்தும் அரசியல் வகுப்புகள்பற்றியும் அவள் அறிந்தாள். சில அரசியல் வகுப்புகளுக்கு அவள் போகவும் செய்தாள்.
‘சுதந்திரத்தின் பின் புத்த சங்கங்களுக்கு பிக்குகளையும், கந்தளாய் கரும்புத் தோட்டத்தில் வேலைசெய்ய ராணுவமென்ற பெயரில் கூலிகளையும் கேகாலை அனுப்பிக்கொண்டிருந்தது. இப்போது கொழும்புக்கு ஆண் கடைச் சிப்பந்திகளையும், பெண் தையல்காரிகளையும் அனுப்புவதை மட்டுமே செய்துகொண்டிருக்கிறது. உயர்ந்த வேலைகளும், உயர்ந்த வாழ்க்கைத் தரமும் ஏகபோகமாக இருக்கிறது இந்தத் தேசத்தில். இந்தநிலை மாறியே ஆகவேண்டும்’ என குசுமவதி சென்றிருந்த முதல் வகுப்பில் பந்துல உரத்துப் பேசியிருந்தான்.
அதிலிருந்த உண்மை குசுமவதிக்குப் புரிந்தது.
அவனது பேச்சு நண்பர்களுடன் அறிவுஜீவித்தனமாய் இருப்பதை குசுமவதி நேரிலும் அவதானித்தாள். பந்துல தன் தலைவன்போல் தாடி வைத்திருந்தான். தலையில் சேகுவாராத் தொப்பி அணிந்திருந்தான். பார்வைக்கு ரோஹணபோலவே இருந்தான். வயது சற்று அதிகமெனினும் அதைக் கணக்கிலெடுக்கவேண்டாமென அவளது ஆசை அவளுக்குக் கட்டளையிட்டது. சொன்னவை மட்டுமல்ல, சொன்னவனும் மனத்தில் பதிய அவளது இரவுகள் இடைஞ்சல் பட்டவையாகிவிட்டன.
எதிர்பாராத ஒரு மழைக்கால அந்தியில் தூறலுக்கு ஒதுங்கியிருந்த ஒரு தெருவோர மரத்தடியில் அவர்களது முதல் நேரடிச் சந்திப்பு ஏற்பட்டது. அடித்த சின்னீர்த் தெறிப்பும், மழை கிளர்த்திய மென்குளிரும், பகல் கருகிவந்த அந்த அந்திவேளையும் இருவர் மனத்திலுமே உறைந்திருந்த இசையை மீட்கத் தொடங்கிவிட்டன. அது மனத்தை அவிழ்க்க உகந்த நேரமாயிருந்ததை அவர்கள் கண்டார்கள். வானம் மழைவிட ஆரம்பிக்க, மரம் அதைப் பெய்தபோது அவள் சிரித்துக்கொண்டே இன்னும் அடிமரத்தைச் சாய்ந்து ஒதுங்கினாள். அப்போது பந்துலவும் புன்னகைத்து, ‘மரம் குடையா, மேகமா?’ என்றதற்கு, யோசித்துவிட்டு, ‘குடைதான்’ என்று கூறி மறுபடி கலகலத்தாள் குசுமவதி.
அவன், ‘இந்தச் சிரிப்புத்தானே என்னை இரவு பகலாய்ச் சித்திரவதை செய்கிறது’ என்றான். அவள் தலையைச் சாய்த்து அவனைப் பார்தாள். அப்போது அச்சம் கொஞ்சம் தணிந்திருந்தது. அவள் சொன்னாள் தீர்மானமான குரலில், ‘என்னை சித்திரவதை செய்தால் நானும் செய்வேன்தான்’ என.
‘இப்படி மாறி மாறி சித்திரவதைப் படுத்துவது ஏன்? சமரசமாய்ப் போய்விடலாமே!’ சொல்லிவிட்டு அவள் முன்னே பதிலுக்கு ஏங்கியிருந்தான் பந்துல.
அவள் பதிலைச் சிரித்தாள். அவன் மறுநாளைய சந்திப்புக்கு நேரம் சொன்னான்.
பகலின் பொழுது கடமையிலும், இரவின் பொழுது காதலிலுமாய் இருவருக்கும் காலம் கழிந்துகொண்டிருந்தது.
கமுகுகளும், அன்னாசிகளும், வாழைகளும், மூங்கில்களும் இன்னும் என்னென்னவோ செடிகளும் மண்டி, பல்வேறு தாவரங்களும் கூடலாய் வளர்ந்திருந்த அந்த இடத்தில் ஒரு பவுர்ணமி நாள் முன்னிரவில் அவர்களது சந்திப்புக்கு திட்டமிருந்தது.
விஹாரையில் மணி முழங்கிக் கேட்டது.
றபானா ஒலித்தது.
விஹாரைக்கு வரும் வழியில் பாதை திரும்பி அவன் காத்திருக்கும் கூடலை அவள் நடுக்கத்தோடு அடைந்தாள்.
பந்துல அவளை நெஞ்சோடு சேர்த்தணைத்தான். பிறிஸ்ரல் மணம் கமழ்ந்த வெம்மூச்சுடன் முத்தங்களிட்டான்.
அவள் தயங்கி நெருக்கத்தை இளக்கினாள்.
‘காதலே முழுமையாயிருந்தாலும் காமமும் அதற்கு அவசியம். அதுபோலத்தான் காமமே முழுமையாய் இருக்கிற நேரத்தில் காதலும் கொஞ்சம் அவசியமாகும், குசும’ என்றான் அவன்.
‘நிறைய அனுபவமோ?’
‘ரண்டிலும் இல்லை.’
‘நம்பலாமா?’
‘இப்படி... நம்பவைக்கவா?’
‘இப்ப வேண்டாமே.’
‘உனக்கு இஷ்டமில்லையா?’
அவள் யோசித்துவிட்டு பதிலை முனகினாள். ‘வரும்போதில்லை...!’
காதலைப்போல் அவர்கள் தங்கள் ஆசைகளையும் அன்று பரிமாறினர்.
நாட்கள் சில கழிந்த பின், கொழும்பில் நடந்த ஒரு ஆலோசனைக் கூட்டத்திற்கு சென்ற பந்துல, இரண்டு நாட்களின் பின் திரும்பிவந்தபோது உற்சாகமாய்க் காணப்படவில்லை. அவள் காரணத்தை வற்புறுத்திக் கேட்டாள்.
‘செயற்குழுக் கூட்டத்தில் நடந்த விவாதம் காரண’மென்றான் அவன்.
‘அப்படி என்ன?’
‘83இன் இனக்கலவரம் குறித்து ஜே.வி.பி.யின் நிலைப்பாடு என்னவென நான் கேட்ட கேள்வியே விவாதத்திற்குக் காரணமாயிற்று. சிங்கள தேசியத்தை ஒப்புக்கொள்கிற நேரத்தில் இனத் துவேஷத்தை என்னால் ஒப்புக்கொள்ள முடியாதென்றேன் நான். கேகால பிராந்திய தலைவர் செனவிரத்ன இந்த விஷயத்தில் பெரமுனவின் முடிவை கேள்விப்படுத்த முடியாதென ஆக்ரோஷமாக வாதித்தான். என்னுடைய பழைய பகையாளி அவன். உன்மேல் ஒரு கண் வைத்திருப்பதும் எனக்குத் தெரியும். கடைசியில், சிங்கள தேசியம்… தமிழ்த் தேசியமென்று எதுவும் இல்லை… இருப்பது இலங்கைத் தேசியம்தான் என்பதுமாதிரியாக தலைவர் கூற, பிரச்னை ஒருவாறு ஓய்வுக்கு வந்தது.’
‘பிரச்சினை தீர்ந்துவிட்டதுதானே? பின்னும் நீங்களேன் துக்கமாக இருக்கவேண்டும்?’
‘இயக்கத்தின் உயர்மட்டத்தில் முன்புபோல் திறமையான ஆட்கள் இல்லையென்பதை அங்கேதான் கண்டேன், குசும. செனவிரத்ன போன்றவர்கள் இரட்டைநிலை எடுக்கக்கூடியவர்கள். அவர்களிடத்திலுள்ள அதிகாரம் இயக்கத்தையே அழித்துவிடும். அதுதான் என் கவலை.’
‘விரைவில் ரோகண சிறையிலிருந்து வந்துவிடுவாரெனச் சொன்னீர்களே, அவர் வரட்டும், எல்லாம் சரியாக அமையும், நீங்கள் கவலையை விடுங்கள்’ என்றாள் அவள்.
அப்போது வீட்டு நிலைமையில் அவளுக்கு முறுகல் ஏற்பட்டிருந்தது.
ஊன்றுகோலை அருகே வைத்துக்கொண்டு அவள் வீட்டில் நகர்ந்து திரியுமிடமெல்லாம் பார்வையால் பின்தொடர்ந்து கொண்டிருந்தார் அப்பச்சி. ஏன் அந்தமாதிரி அவர் பார்க்கிறாரென குசுமவதிக்கு தெரியவில்லை. பந்துலவுடனான தனது காதலையும், அவ்வப்போது நிகழும் இரவின் சந்திப்புக்களையும் தெரிந்திருப்பாரோவென அச்சம் வந்தது. ஆனால் அவர் வாயே திறக்காதவரையில் அவள் அதுபற்றி யோசிக்கவேண்டியதில்லை. அம்மாமட்டும் ஒருநாள் சொன்னாள்: ‘இனி நீ அந்த இரவெல்லாம் திரிந்து வகுப்பு… வகுப்புவென ஓடவேண்டாம். சிலவேளை நீ வர நடுச்சாமம் ஆகிவிடுகிறது. அது பிசாசு அலையும் நேரம், தெரியுமோ?’ அதற்கு குசும, ‘நான் அங்க போகாவிட்டால் அவர்கள் இங்கே வந்துவிடுவார்கள், பரவாயில்லையா?’ என்றாள். அம்மா கேட்டு திகைத்தாள். ‘நீ அங்க போறதே நல்லம்’ என அவள் கருதிவிட்டதுபோல் தெரிந்தது குசுமவதிக்கு.
அப்பச்சியின் பார்வை அப்படிச் சொல்லவில்லை. அவர் போகாதே என கண்களால் கட்டளையிட்டுக்கொண்டிருந்தார். ஒருவேளை எழுபத்தொன்றுக் கால நிலைமைபோல் ஏதாவது தோன்றி அவளுக்கேதாவது ஆபத்து நேர்ந்தால், அப்போது அவளது உழைப்பால் குடும்பம் கண்டுகொண்டிருக்கும் சுபீட்சம் இல்லாது போய்விடலாமென்பதையே அவர் யோசித்தார்போல் தெரிந்தது.
அப்போது 1987 முடிந்திருந்தது.
குடும்பத்தில் தின்ன, குடிக்கவிருந்த சிரமம் தீர்ந்திருந்தது. மட்டுமில்லை, மூத்தவளுக்கு திருமணம் நடந்த அடுத்த வருஷமே இரண்டாவது அக்காளுக்கும் திருமணம் முடிந்தது. ஒருநாள் குசுமவதி தாயாருக்குச் சொன்னாள், தான் பந்துலவை விரும்புவதாக. முரண்டுபிடிக்கிற மனநிலையோடிருந்த அப்பச்சி ஏனோ அதற்கு பேசாமலிருந்துவிட, பந்துல-குசுமவதி கல்யாணம் சிக்கனமாக சில நண்பர்கள் உறவினர்கள் முன்னிலையில் நடந்து முடிந்தது. கல்யாணத்திற்கு கொழும்பில் வேலையாயிருந்த மல்லி வந்திருந்தான். நங்கி, அம்மா, அப்பச்சி ஆகியோருடன் குசுமவதி அங்கேயே வாழ ஆரம்பித்தாள்.
1988ஆம் ஆண்டு குசுமவதிக்கு கல்யாணமான ஏழாம் மாதத்தில் அழகான பெண் குழந்தையொன்று பிறந்தது. அதற்கு யயானி என பெயர் வைத்தார்கள். முந்திப் பிறந்ததென ஊர் சொன்னது. சந்திப்பில் பிறந்ததென பந்துலவும் குசுமவதியும் நினைத்துக்கொண்டார்கள். அன்று ஊர் வந்திருந்த அவளது சின்ன வயது நண்பன் உக்கு பண்டார அவளைக் காண தன் தாயாருடன் வந்திருந்தான். அப்போது உக்கு ராணுவத்தில் பதவியுயர்வு பெற்று கேணலாக இருந்தான். வடக்கிலிருந்ததால் முன்புபோல் அடிக்கடி வீட்டுக்கு வரமுடியவில்லையென குறைப்பட்டான். அவனது அம்மாவும் அதையே சொன்னாள். ‘குசுமவுக்கு பந்துலவோடு திருமணம் நடந்திருக்காவிட்டால், உக்குவுக்கு அவளை பெண்கேட்கவிருந்தே’னென சொல்லிச் சிரித்தாள்.
பின்னாலே பந்துல குசுமவதியைக் கேட்டான்: ‘சிநேகிதனா?’
‘நல்ல சிநேகிதன்.’
‘படிக்கிற காலப் பழக்கமோ?’
‘அதற்கும் முந்தி. சின்ன வயதுக் காலத்திலேயிருந்து. அவனுடைய வீடு அடிவாரத்தில்தான் இருக்கிறது.’
மிக நல்ல நண்பனாக அன்றளவும் உக்கு இருந்துகொண்டிருக்கிறான். அவன் அப்போது ராணுவத்தில் இல்லை. ஒரே ஊர்க்காரனாக அறிமுகமாகியிருந்த சரத் முனசிங்கவையும் அவன்மூலம்தான் அவள் மீண்டும் சந்தித்தாள். அவனும் அப்போது தேரராக இல்லை. அவர்களது தொடர்பே அவளுக்கு எந்தக் கடினங்களையும் பிளந்து வாழும் மனோதைரியத்தை அளித்தது. அவ்வப்போது அங்கே வந்து போய்க்கொண்டிருந்தார்கள்.
என்னவொன்று, அவர்கள் அப்போது மறைந்து வாழ்பவர்களாயிருந்தார்கள். காலம் அவர்களை ஓடவோட விரட்டிக்கொண்டிருந்தது. மனந்தளராமல் அவர்களும் ஓடிக்கொண்டே இருந்தார்கள். அவர்களது கதைகள், அவளது பெருங்கதையின் வேறுவேறு பாகங்கள். அவர்களது ஓட்டம் நிற்கும் என எண்ணியபடி குசுமவதி சரிந்து படுத்தாள்.
[தொடரும்]