தமிழ் மொழிச் செயற்பாட்டகம் இன்று இலண்டனில் நடாத்திய எழுத்தாளர் மு,தளையசிங்கம் பற்றிய Zoom வழி இணையவெளிக் கருத்தரங்கில் நான் கலந்துகொள்ளவில்லை, ஆனால் இக்கருத்தரங்கில் இளம் எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணன் கூறிய கருத்தொன்றினைப் பற்றி, எழுத்தாளர் ஷோபா சக்தி முகநூற் பதிவொன்றினை இட்டிருந்ததை வாசிக்கும் சந்தர்ப்பமேற்பட்டது. அப்பதிவில் ஷோபாசக்தி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:
"டொமினிக் ஜீவா போன்ற வாழ்நாள் போராளி மீது விமர்சனம் வைக்கும்போது, ஒன்றுக்கு நான்கு தடவைகள் யோசித்துப் பேசுவதே நல்லது. அனோஜன் பாலகிருஷ்ணன் இன்றைய நிகழ்வில் 'டொமினிக் ஜீவாவுக்கு கைலாசபதி மீது அச்சம் இருந்தது' என்று சொன்னது தவறு. 'தமிழ் மொழிச் செயற்பாட்டகம்' மு.தளையசிங்கம் குறித்து நடத்திய இணையவழிக் கருத்தரங்கில் உரையாற்றிய அனோஜன் 'தளையசிங்கம் சாதியொழிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதால் தாக்குதலுக்குள்ளாகிய செய்தியை, ஜீவாவுக்கு கைலாசபதி மீதிருந்த அச்சம் காரணமாகவே மல்லிகை இதழில் வெளியிடவில்லை' எனச் சொன்னார். மு.தளையசிங்கத்தை மதிப்புறப் பேசுவதற்காக, ஜீவாவை மதிப்பிறக்கிப் பேச வேண்டிய அவசியம் கிடையாது. இது ஜீவா மீதான கடுமையான பழிச் சொல்! மல்லிகை இதழில் அப்போது ஏன் செய்தி வெளியிடவில்லை எனப் பதில் சொல்ல இப்போது நம்மிடையே ஜீவா இல்லை. "
இதில் அவர் அனோஜன் பாலகிருஷ்ணன் மல்லிகை ஆசிரியரான அமரர் டொமினிக் ஜீவா மீது பாரதூரமான குற்றச்சாட்டொன்றை வைத்திருந்ததைக் குறிப்பிட்டிருந்தார். அது: "அனோஜன் 'தளையசிங்கம் சாதியொழிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதால் தாக்குதலுக்குள்ளாகிய செய்தியை, ஜீவாவுக்கு கைலாசபதி மீதிருந்த அச்சம் காரணமாகவே மல்லிகை இதழில் வெளியிடவில்லை' எனச் சொன்னார்".
அனோஜன் பாலகிருஷ்ணன் விடயங்கள் பற்றிய ஆய்வுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்பதை மேற்படி அவரது கூற்று புலப்படுத்தியது. அத்துடன் அண்மையில் மறைந்த அமரர் டொமினிக் ஜீவா மீது இத்தகையதொரு குற்றச்சாட்டை வைத்ததன் மூலம் அவரை இறந்த பின்னும் அவமானப்படுத்தியுள்ளதாகவே நான் கருதுகின்றேன்.
மல்லிகையில் மு.த மறைந்தபோது அஞ்சலிக் கட்டுரைகள் வெளியிட்டவர் டொமினிக் ஜீவா அவர்கள். அத்துடன் மு.த பற்றி புங்குடுதீவில் நடந்த நினைவாஞ்சலிக் கூட்டத்திலும் கலந்துகொண்டு 'மு.த ஒரு நேர்மையாளன் என்று குறிப்பிட்டவர் ஜீவா அவர்கள். அவை எவற்றையும் குறிப்பிடாமல் ஜீவா மீது மல்லிகையில் மு.த கலந்துகொண்ட ஒரு சமூக, அரசியல் போராட்டம் பற்றிய செய்தியொன்றைப் போடவில்லையென்பதை எவ்விதம் முக்கியதொரு குற்றச்சாட்டாகக் கூறலாம்? எழுபதுகளில் தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலயப்பிரவேசங்களுக்காக எத்தனையோ போராட்டங்கள் நடைபெற்றன. அவற்றைப்பற்றியெல்லாம் ஆதரித்து மு.த எங்காவது எழுதியிருக்கின்றாரா என்று பதில் கேள்வியையும் கூடவே அவர் கேட்டிருக்க வேண்டும். எனக்குத் தெரிந்து எழுதியதாக நினைவில்லை. எழுதியிருந்தால் அவைபற்றி அறியத்தாருங்கள். அக்காலகட்டத்தில் மு.த சர்வோதய அமைப்பில் ஈடுபாடு காட்டி அவ்வழியில் சமூக, அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்தவர். முற்போக்கு எழுத்தாளர்களைக் கடுமையாகத் தாக்கிக்கொண்டிருந்தவர். ஜீவா அவர்களோ மார்க்சிய அடிப்படையில் சமூக, அரசியற் செயற்பாடுகளை முன்னெடுத்துக்கொண்டிருந்தவர். முற்போக்கு எழுத்தாளர்களின் அமைப்பில் செயற்பட்டுக்கொண்டிருந்தவர். எனவே மல்லிகையில் மு.த.வின் சமூக, அரசியற் செயற்பாடுகளைப்பற்றிய செய்திகள் வெளியாகவேண்டுமென்ற தேவையில்லை. வெளிவராவிட்டால் அது பெரியதொரு விடயமுமல்ல. ஆனால் மு.த மறைந்தபோது அவருக்கு அஞ்சலிக் கட்டுரைகள் வெளியிட்டு, நினவாஞ்சலிக் கூட்டத்தில் கலந்துகொண்டும் தன் அஞ்சலியைத் தெரிவித்தவர் ஜீவா அவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
மல்லிகை என்பது மாதாமாதம் வெளியாகுமொரு சஞ்சிகை. தினசரி வெளியாகுமொரு சஞ்சிகையல்ல. ஏப்ரல் 2 , 1973 எழுத்தாளர் மு.தளையசிங்கம் மறைந்தார். எனவே ஏப்ரல் மல்லிகையில் அவரைப்பற்றிய அஞ்சலிக் கட்டுரை வெளியாகும் சாத்தியமில்லை. மே 1973 மல்லிகையில் நிச்சயம் மறைந்த எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றி கட்டுரையேதாவது வர வேண்டும். அவ்விதம் வராவிட்டால் டொமினிக் ஜீவாவைக் குறை கூறலாம். ஆனால் மே 1973இல் மறைந்த எழுத்தாளர் மு.தளையசிங்கத்தைப்பற்றி இரண்டு அஞ்சலிக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அவை வருமாறு:
1. தளையசிங்கம் - சில நினைவுகள் - மு.புஷ்பராஜன்
2. சருகுகள் - கே.எஸ்.சிவகுமாரன்
இக்கட்டுரைகளை மல்லிகை சஞ்சிகையின் மு.த,வுக்கான அஞ்சலிக்கட்டுரைகளாகக் கருத வேண்டும். முற்போக்கு எழுத்தாளர்களை, தாழ்த்தப்பட்ட சமூகத்து எழுத்தாளர்களையெல்லாம் தனது 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' நூற் கட்டுரைகளில் மிகவும் பலமாக, கேவலமாகத் தாக்கியவர் மு.த. உண்மையில் அவரைப்பற்றிய அஞ்சலிக் கட்டுரைகள் எவற்றையும் மல்லிகையில் யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் ஜீவா அவர்கள் அவற்றையெல்லாம் மனத்தில் வைத்துப் பழி வாங்கும் குணம் கொண்டவரல்லர் என்பதைத்தான் மேற்படி மு.த பற்றிய அஞ்சலிக்கட்டுரைகள் புலப்படுத்துகின்றன.
மல்லிகையில் வெளியான மேற்படி அஞ்சலிக் கட்டுரைகள் இரண்டையும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். மல்லிகையில் மு.தளையசிங்கத்தின், மு.பொன்னம்பலத்தின் ஆக்கங்களையும் படித்த நினைவுண்டு. மீண்டும் மல்லிகை இதழ்களைப்பார்த்து அவற்றைப்பற்றிப் பின்னர் எழுதுவேன்.
கலை, இலக்கியத்திறனாய்வாளரான கே.எஸ்.சிவகுமாரன் தனது கட்டுரையில் பின்வருமாறு கூறியுள்ளார்: "புங்குடுதீவில் நடைபெற்ற மு.தளையசிங்கத்தின் நினைவாஞ்சலிக் கூட்டத்தில் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, விரிவுரையாளர் காசிநாதன் ஆகியோர் குறிப்பிட்டதுபோல் தளையசிங்கம் ஒரு நேர்மையாளன்'.
ஆக, மல்லிகையில் மு.த.வுக்காக அஞ்சலிக் கட்டுரைகளை வெளியிட்டதுடன், புங்குடுதீவில் நடைபெற்ற மு.த நினைவாஞ்சலிக் கூட்டத்திலும் கலந்துகொண்டு மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா மு.த.ஒரு நேர்மையாளன் என்று கூறியிருக்கின்றார். உண்மை இவ்வாறிருக்க எதற்காக வளரும் இளம் எழுத்தாளர் இவ்விதம் அமரர் ஜீவா மீது சேற்றை வாரியிறைத்திருக்கின்றார்? அவர் இன்னும் வளர வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.