நான் ஒருத்திதான்
ஆனால் எனக்கு நூறு முகங்கள்
ராவணனின் முகங்களை விட எனக்கு அதிக முகம்
ஆறுமுகத்தின் முகங்களைவிட அதிகம்
என் நூறும் உங்களை கொஞ்சம் பார்க்கச் செய்யும்.
நான் திருமணமாகாதவர்,
திருமணம் செய்துகொள்ள தேவையான காசும் பணமும் என்னிடம் இல்லை
நான் சம்பாதிப்பதினை வைத்து
வாழ்க்கையை வயிற்று நடத்துகிற எனக்கு
எப்போது சீமந்தம் என்று என்னைப் பார்க்கிற போதெல்லாம்
ஒரு சக பின்னலாடைத் தொழிலாளி கேட்டுக்கொண்டே இருக்கிறார்
கேட்பது மட்டுமில்லை
கைகளை நீட்டி தொடவும் செய்கிறார்,
சீமந்ததிற்கு அவர் காரணமாக விரும்புவது போல பேசுகிறார்
எனக்கு பல புகைப்படங்களும் பாலியில் விஷயங்களும்
கைபேசியில் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன
அனுப்புவர் அவர்தான் என்று தெரியும் ..
ஆனால் எதற்காக, யாரிடம் கேட்பது, சொல்வது என்று தெரியவில்லை
எங்கள் அலுவலகத்தின் கழிப்பறையின் கதவுகளில் உள்புறத்தில்
எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகள் ,
பாலியல் உறுப்புகள் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள்
இவையெல்லாம் இன்னொரு வகையான தாக்குதலாக இருக்கிறது.
என் சூப்பர்வைசர் என்னை அழைத்து
பாராட்டுகிறார்.. முதுகில் தட்டுகிறார்
வார்த்தையில் கூட அவர் பாராட்டை தெரிவிக்கலாம் .
கம்பெனி நிர்வாகி அடிக்கடி கூப்பிடுறார்
என் மேல் விழும் மழை துளி சந்தோசப்படுத்தும்
அவரின் அச்சில் தெறிப்பு எரிச்சலூட்டுகிறது.
அவரும் என்னை வேறு மாடிக்கு அழைக்கிறார் .
ஒருநாள் தண்ணீர் அருந்திக் கொண்டிருக்கும்போது
மார்பகத்தைத் தொட்டு விட்டு சென்றவர் யார் என்று தெரியவில்லை
நான் பேருந்தில் ஏறும் போதும் இறங்கும் போதும்
என் மேலாடையை இழுக்கிறார்கள்
படுக்க எப்ப வர்ற என்று கேட்கிறார்கள் .
எனக்கு நூறு முகங்கள்
ராவண முகங்களை விட அதிகம்
ஆறு முகங்களை விட அதிகம்
குவாலிட்டி மேனேஜர் அறைக்குள்
என் சக தோழிகள் சென்று ரகசியமாக பேசுகிறார்கள்
என்ன ரகசியம் யாருக்கும் தெரியவில்லை
என்னை கூப்பிட்டு ஒரு நாள்
அவர் ரகசியம் பேசக் கூடும் என்பது பயமாக இருக்கிறது .
செல்வி ஏன் செத்துப் போனாள்
ஏன் தூக்கிலிட்டுக்கொண்டாள்
கர்ப்பத்திற்கு முன்... காரணம் இருக்கிறதா
அவளுடன் பழகிய சூப்பர்வைசர்
ஒத்துக் கொள்ள மறுத்துவிட்டார் என்பது மட்டும் தெரியும்
எல்லோருக்கும் சம்பளம் கொடுப்பது
பொதுவான இடமாகத்தான் இருக்கவேண்டும்
ஆனால் எனக்கு மட்டும்
ஏன் தனி இடங்களில் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை
நான் தனியாக நடக்கும் போதும் நிற்கும் போதும்
முதுகை தட்டுவது
கன்னம் அருகில் உதட்டைக் குவித்து
முத்தமிட பாவனை செய்வது சகஜமாகிவிட்டது சிலருக்கு.
திலகவதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்
பவர் டேபிள் காண்ட்ராக்டர் அவருடைய பார்வையில் படும்படி
அவர் சொல்கிற இடத்தில் வேலை செய்தால்
பட்டுப்போல் இருக்கலாம் என்கிறார்.
இதில் என்ன எதுகை மோனை
நாலாவது மாடியில் இருக்கும் இன்னொரு சூப்பர்வைசர்
கேமரா பதிவில் என்னை பார்த்துவிட்டு
சேலை விலகி உள்ளதை கேமரா காட்டி இருக்கிறது
மார்பகம் மாம்பழம் போல் இருக்கிறது
கையில் பிடிக்கலாம். உன்னை கட்டுகிறவன் அதிர்ஷ்டசாலி என்கிறான்
50 வயதான என் தோழிக்கு கூட இதே பாராட்டு இருக்கிறது
அவரைப் பார்த்து தொங்கும் பையாக மார்பகம் இருக்கிறது என்கிறான் ஒருவன்.
.” பலரும் பயன்படுத்தினால் இப்படியாகும்.
நான் பயன்படுத்தக்கூடாதா “ என்கிறான்.
துன்புறுத்தலால் வேலை போகும் என்ற பயம்
கூட இவர்களிடம் இல்லை
வேலை வேலை வேலை
வேலை இல்லா விட்டால் வயிறு காலியாகும்
அதை யாரும் கேட்பதில்லை
கவனத்தில் கொள்வதில்லை.
இதில் உள்ளூர்க்காரர்களும், வந்தேறிகளும் அடக்கம்.
நான் ஒடியாவிலிருந்து இடம் பெயர்ந்து வந்தத் தொழிலாளி
பெயர் ராணி.
ராஜபோகமாய் இருப்பேன் என்று அப்படி பெயர் வைத்திருப்பார்களா
வந்தாரை வாழ வைக்கும் ஊர்.
விருந்தோம்பலும் மரியாதையும்
என்னங்க என்று நெகிழ்வோடு அழைக்கும் ஊர்.
இந்த ஊரின் பெருமைகளை இவர்கள் அறியாதது
அறிவின்மையே.
உழைப்பு பெருமையைத் தரும் நேரத்தில்
ஊரின் பெருமைகளை யார் உணர்த்த..
2.
எனக்குப் பெயர் சுமங்கலி
நான் பணி புரியும் திட்டம்
சுமங்கலித் திட்டம், தாலிக்குத் தங்கம் திட்டம், கண்மணித்திட்டம்
இதை கண்டுபிடித்தவர் யார்
என்ஜீ ஓவா பெற்றோரா தாத்தா பாட்டியா
சுமங்கலித்திட்டமாம்.
என் கல்யாணத்திற்கு இவர்கள்
வைக்கும் பெயர் எப்படி இருக்கிறது.
3.
நான் கடத்தப்பட்டிருக்கிறேன்
எங்கு செல்வேன்
பாலியல் கூடாரத்திற்கு
பணி கூடாரத்திற்கு
என்ன பணி எனக்குத் தரப்படும்
பஞ்சாலை.. முறுக்கு சுடுவது பிச்சை எடுப்பது
நான் என் வேலையைத் தேர்வு செய்ய முடியாது
4.
நான் காணாமல் போனேன்
கடத்தப்பட்ட
அல்லது தொலைந்து போன நான் அடிமை
நவீன அடிமை
நூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு அடிமையின் விலை அதிகம்
இப்போது மிகவும் மலிவு வெறும்
90 டாலர் தான்
100 ஆண்டுகளுக்கு முன்னால் எவ்வளவு தெரியுமா
40 ஆயிரம் டாலர் .
அடிமைகள் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறார்கள்
கொத்தடைமைத்தனம் சுலபமாக வந்து விட்டது.
5.
நான் கடத்தப்பட்டு இருக்கிறேன்
ஊருக்கு உள்ளேயேயா
மாநிலம் கடந்தா
இல்லை வெளிநாட்டுக்கா
இன்னும் கொஞ்ச நேரத்தில் புரிந்துவிடும்
6.
நான் கொத்தடிமைத்தனத்லிருந்து
மீட்கப்பட்டு இருக்கிறேன்
மீட்கப்பட்ட கணக்கில் என் பெயர் வரவில்லை
யாரும் கடத்தப்படவில்லை என்றுதான்
அரசாங்கப் புள்ளிவிபரம் சொல்கிறது .
யாரும் மீட்கப்படவில்லை என்றுதான்
அரசாங்கப் புள்ளிவிபரம் சொல்கிறது
இதில் நான் மீட்கப்பட்டு இருப்பது
உண்மையா பொய்யா
இதில் கடத்தப்பட்டு இருப்பது
உண்மையா பொய்யா
7.
நான் மீட்கப்பட்டவள்
கல் உடைப்பு
ஒரு கொத்தடிமைத் தொழிலிருந்து மீட்கப்பட்டவள்
பின் எனக்கு
முக அலங்காரம்
உடையலங்காரம்
உடல் அலங்காரம்
பணிக்காக பயிற்சி தரப்பட்டது
எங்கள் ஊர் சின்ன ஊர்
மீட்கப்பட்டு இப்படி
இந்த அழகு பயிற்சி பெற்றவர்கள் 500 பேர் ஆகிவிட்டோம்
யாருக்கு யார் அழகு செய்ய
உன் புருவத்தை நான் செதுக்குகிறேன்
என் புருவத்தை நீ செதுக்கு
உன் முகத்தை நான் அழகு படுத்துகிறேன்
என் முகத்தை நீ அழகுபடுத்து என்றாகிவிட்டது
மீட்பு இப்படித்தான் வேறு வழி கிடைக்கும் வரைக்கும்.
8.
எலியை பிடிக்க வீட்டை கொளுத்து
அடிமைப் பட்டு இருக்கிறேன் என்று சொன்னதற்காக
மண்ணெண்யையை ஊற்றி விட்டுப் போகிறார்கள்
9.
கொடுமை
பஞ்சை தின்கிறோம்
மூச்சு திணருகிறது
மூக்கு பஞ்சை தின்கிறது
பஞ்சை தின்பதால் வரும் கூலியில்
வயிறு ஏதோ நிறைகிறது
மூக்கும் வயிறும் பஞ்சாகி போயிற்று
பஞ்சத்திற்கு பஞ்சு
10.
எங்கள் ஊர் ஒரு லட்சம் கோடி ரூபாய்
அந்நிய செலவாணி இலக்காக நகர்ந்துகொண்டிருக்கிறது
வெளிமாநில தொழிலாளர்கள் இங்கு வந்து
குறைந்த கூலிக்கு வேலை செய்கிறார்கள்
அந்த குறைந்த கூலி உள்ளூர்காரனான எனக்குக் கட்டுபடியாகாது
அல்லது தன்மானத்துக்கு இழுக்கு
வெளியேறுகிறேன்
என் சொந்த ஊரிலிருந்து
வந்தாரை வாழ வைத்த ஊரே என்னை வழி அனுப்பு
பிற மாநிலத் தொழிலாளர்களை வரவேற்று கொத்தடிமையாக்கு
11.
18 வயதிற்குள் அவள் அழகு இன்னும் மிச்சமிருக்கிறது
அதனால் பாலியல் நோய் வந்து முகத்தை வாட்டுகிறது
தப்பிக்க எனக்கு வழி தெரியவில்லை
என் மீது மண்ணெண்ணெய் ஊற்றி
தப்பித்துக்கொள்ள பலர் இருக்கிறார்கள்
12.
நான் பாலியல் தொழில் செய்கிறேன்
வேறு தொழில் செய்ய இயலவில்லை
இடம் கிடைக்கவில்லை
.தொழில் தெரியவில்லை
நானே ஒத்துக்கொண்டேன்
அப்புறம் எதற்கு என்னை கைது செய்கிறீர்கள்
13.
என் வயது 18 நான்
இந்த ஊரின் அழகி
பெயர் ஆளுக்கொருவராய்
எதுவும் வைத்துக் கொள்ளலாம்
எந்த மத்த்திற்கும் சம்மதமாய்
எனக்கு எனக்கு பாலியல் நோயை கொடுத்து விட்டுப்
போனவன் யார்
தேடியும் கிடைக்கவில்லை
அதனால் நான் இந்த நோயை பரப்புகிறேன்
அவனைப் பழிவாங்கும் விதமாய் பரப்புகிறேன்
ஒரு நாளைக்கு 8 முதல் 10 ஆண்களுக்கு பரப்புவேன் .
கோபம் கொஞ்சம் தணிந்தது ஆறு மாதத்திற்க்கு பின்னால்
அது 5 ஆகிவிட்டது
ஒரு ஆண்டுக்கு பின்னால் 3 ஆகிவிட்டது
என்னை யார் யாரோ சமாதானப்படுத்தினார்கள்
ஆனாலும் அருகில் நான் வர முடியவில்லை
அங்கேயே நிற்கிறேன் அல்லது செத்து தொலைக்கிறேன்.
ஆணுறைகள் வந்து போகின்றன.
சமாதானங்கள் நிதானமடைந்துள்ளன.
அல்லது சமாதியாகியுள்ளன.
என்ன சரிதானே .
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.