குரு அரவிந்தனின் சிறுகதைகள் பன்முகப்பார்வை - முனைவர் சகோ. ஜா. அருள் சுனிலா, பெரியகுளம், தேனி. தமிழ்நாடு. -
குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி - 3 (2025) இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை.
முன்னுரைகுரு அரவிந்தனின் தாயகக் கனவுடன், சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும், பனிச் சறுக்கல், நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம் ஆகிய நான்கு கதைகளில் இடம் பெறும் கருத்துக்கள் பன்முக நோக்கில் திறனாய்வுக்கு உட்படுவதாக அமைகிறது.
வாழ்வியல் விழுமியங்கள்
படைப்பாளர்களின் முக்கிய நோக்கம் படைப்பு வழியாக மனித வாழ்வியலை வடித்தெடுப்பதே ஆகும். விழுமியம் என்பதற்கு மதிப்பு, சிறப்பு, உயர்வு போன்ற பொருள்களையே அகராதிகள் தருகின்றன. குரு அரவிந்தனின் சிறுகதைகளிலும் வாழ்வியல் விழுமியங்கள் முக்கிய இடம் பெறுகின்றன.
காதலும் அன்பும்
‘தாயகக் கனவுடன்’ சிறுகதையில் தன் அத்தை மகள் பிரியா மேல் ஏற்பட்ட காதல் உணர்வை அப்பா தனது மகளுக்குக் கூறுவதிலிந்து இளம் வயதில் ஏற்படும் அன்பும் பாசமும் காலங்கள் கடந்தாலும் நிலைத்து நிற்பதை அறிய முடிகிறது. ‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் நிக்கோலாஸ் மற்றும் கலிஸ்ராவின் காதல் கதை, கதைக்கு உயிரூட்டம் அளிப்பதாக உள்ளது.
“உயிரோடு அவள் அருகே இருந்தபோதே அவர் தனது அன்பைக், காதலை மனப்பூர்வமாகப் பலவிதமான முறையில் அவளிடம் வெளிக்காட்டியிருந்தார். மேலை நாடுகளில் புரிந்துணர்வோடு ஒருவருக்கொருவர் துணையாகக் கடைசிவரை வாழ்வதென்பது ஆச்சரியமானதுதான், அப்படியான புரிந்துணர்வுள்ள ஒரு வாழ்க்கையைத்தான் அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள்” என்பதன் மூலம் மேலைநாட்டினரின் குடும்ப வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் மத்தியிலும், இணைந்து வாமும் குடும்பத்தினரின் மேன்மையையும், நோய்நொடியிலும் இறுதிவரை அன்புடனும் பாசத்துடனும் அரவணைத்துப் பாதுகாக்கும் உறவின் உன்னத நிலைகளை ஆசிரியர் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.