
எழுத்தாளர்கள் ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா , சிவகாமி (தாயும் மகளுமாக ) இணைந்து எழுதிய, புகலிடத் தமிழ்க் குழந்தைகள் இலக்கியத்துக்கு, உலகத் தமிழ்க் குழந்தைகள் இலக்கியத்துக்கு வளம் சேர்க்குமொரு படைப்பாக வெளியாகியுள்ளது 'சிந்துவின் தைப்பொங்கல்'. முதலில் இந்நூல் ஏன் நல்லதொரு சிறுவர் நூல் என எனக்குத் தென்படுவதன் காரணத்தைக் கூறி விடுகின்றேன். சித்திரக்கதையாக வெளியாகியுள்ள இந்நூலில் குழந்தைகள் உள்ளங்களைக் கொள்ளைக்கொள்ளும் அனைத்து விடயங்களும் உள்ளன. குழந்தைகளை மிகவும் கவரும் மூன்று விடயங்கள். கதை, சித்திரம் , பாவிக்கப்பட்டுள்ள நிறங்கள். இம்மூன்றும் இந்நூலில் ஒன்றுக்கொன்று சளைக்காமல் அமைந்துள்ளன என்பதே இந்நூலின் முக்கிய சிறப்பு.
கதை
கதை சிறப்பாகப் பின்னப்பட்டுள்ளது. கதையில் தனது தாய், தகப்பனுடன் 'டொராண்டோ'வில் வசிக்கும் சிந்து என்னும் சிறுமி யாழ்ப்பாணம் சென்று தைப்பொங்கலைக் கொண்டாடுகின்றார். இந்தக் கதை குழந்தைகளுக்காக எழுதப்பட்டுள்ள கதை. உலகின் எங்கும் வாழும் தமிழ்க்குழந்தைகளும் பொங்கல் நிகழ்வைப் பற்றிய காரணங்களை, விளக்கங்களை அறிந்துகொள்ளும் வகையில் , அவர்களுக்குப் புரியும் எளிமை கலந்த சரளமான இனிய நடையில் எழுதப்பட்டுள்ள கதை.
இக்கதை தமிழிலும், ஆங்கிலத்திலும் கூறப்பட்டுள்ளதும் ஆரோக்கியமான விளைவினைத் தருமொரு விடயமாகவே தென்படுகின்றது. புகலிடத் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ்ப்பொங்கல் பற்றிய விளக்கங்களுடன் , அவர்களுடைய தாய், தந்தையரின் பிறந்த மண்ணின் சூழலையும் வெளிப்படுத்துகின்றது. சேவல் கூவலுடன் விடியும் காலை, கிணற்றுத் தண்ணீரை வாளி மூலம் அள்ளும் வழக்கம், தை மாதக் காலநிலை, அரிசிக்கோலம் , கும்பம் அமைக்கும் முறை, மண் பானையில் பொங்கல், வெடி கொளுத்துதல் , கதிரவனுக்குப் பொங்கலிட்டு வணங்குதலெனப் பல விடயங்களை இச்சித்திரைக்கதை நூல் சிறப்பாகவே வெளிப்படுத்துகின்றது.