கிளிம் வாழ்வின் மூன்றாம் தொகுதி: -தமிழ் இலக்கிய உலகை, முன்னிறுத்தி (8) - ஜோதிகுமார் -
அத்தியாயம் எட்டு!
கிளிம்மின், மாகாணத்தை நோக்கிய நகர்வு, முன்னரே குறித்தவாறு, மரீனாவால் ஏற்படுகின்றது.
தத்துவ தேடல் - வெறுமை நிறைந்த மனம் - வெளிறத் தொடங்கும் உணர்வுகள் - இந்த பின்னணியில் - மரீனா – என்ற மூவெழுத்து, இவை அவனுள் ஒரு பிடிப்பை ஏற்படுத்துகின்றன. அவளது, அறிவும் - அழகும் - ஸ்பரிசமும் - ஒரு தேவதையின் பாற்பட்டது என்றளவில் முடிவெய்துகிறான் கிளிம். இருந்தும் மர்மங்கள்…?
அவள், அவனை ஊடுருவி, அவனை எளிதாக இனங்கண்டு, அப்படியான தன் அபிப்பிராயத்தை, பின்வருமாறு, அவனிடம் நேரடியாகவே கேட்கின்றாள். “ஜார் நடைமுறைப்படுத்தும் இந்த ஜனநாயக ஏற்பாடுகள் - டூமா (பாராளுமன்றம்) போன்றவை, ‘அதிகாரங்களை எந்த வழியிலாவது பெற்றுக்கொள்ள ஏங்கும், எமது புத்திஜீவிகளுக்கு பொருத்தமானது…’ ஆனால் உனக்கு…?”– புன்னகைத்தவாறே, கேட்பாள், அவள்.
மரீனாவின் தனிப்பட்ட வழக்குரைஞனாக, அடி எடுத்து வைக்கும் கிளிம், காலப்போக்கில் அவளுடன் மிக அந்நியோன்யமாக, நெருக்கமாகப் பழக நேரிடுகிறது.
கிட்டத்தட்ட, மூன்று வருடங்கள் முடியும் தருவாயில், கிளிம்மின், நெற்றியில், ஆதரவாய் முத்தமிட்டு, அவனை வழியனுப்பி வைக்கும் அளவிற்கு அவர்கள் உறவு மேம்படுகின்றது.
இக்காலப்பகுதியில், அவளது தயவினால், கிளிம்மின் பொருளாதார நிலை மாத்திரமல்ல, அவனது பரிதவித்த – பிளவுண்ட – மனநிலை கூட ஒரு ஸ்தீரதன்மையை எட்டிப் பிடித்து விடுகின்றது.
அவள் தொடர்பில் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் ஓரளவுக்கு ஈர்க்கப்படும் கிளிம்மிடம் மீளமீள பிறக்கும் கேள்வி: யார் இவள்? இவ்வளவு ஆளுமையுடனும் நிதானத்துடனும் உலக நடப்புகளை – அவை இலக்கியம், அரசியல், தத்துவம், மனிதர்கள் - என்று எவையானாலும் சரி – அவை தொடர்பான பிரச்சினைகளால் ஒரு சிறிதேனும் நிலைகுலைந்து விடாமல் - அனைத்தையுமே, ஓர் சிறு புன்னகையுடன் சாவதானமாய் - எதிர் கொள்ளும் இந்த பெண் உண்மையில் யார்? இவளை நிலைநிறுத்தும் அந்த சக்தி எது? எந்த ஆயுதத்தின் துணைக்கொண்டு, இவள் இப்படியாய் வலம் வருகிறாள்…?